Follow by Email

Tuesday, 9 April 2013

சிந்திக்க சில நிமிடம்!!
வா நண்பனே....உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும். ஒருமையில் அழைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்று நினைக்காதே. உரிமையில் அழைக்கிறேன் வா.  வந்து உட்கார்.

நிச்சயம் தமிழ் சினிமா பார்த்திருப்பே. கதாநாயகன் கதாநாயகியை அவமானப்படுத்துவான். வாடி போடி.. என்றெல்லாம் பேசுவான். 

கையை பிடித்து இழுப்பான். பொது இடத்தில் வைத்து கன்னத்தில் பளார்ன்னு அறைவான். 

சேத்துலே பிடிச்சு தள்ளுவான். கதாநாயகி என்ன பண்ணும்? வீட்டிலே போய். கட்டிலில் படுத்துகிட்டு யோசிக்கும். தனக்குத்தானே சிரிச்சிக்கும். கனவு காணும். பாட்டு பாடும்.

ஏன் தெரியுமா?

கதாநாயகனை பிடிச்சிருக்கு.  அதனால அவன் செய்றதை ரசிக்கும். 

ஆனால் வில்லன் என்னை கல்யாணம் செய்துக்கிறியான்னுதான்  கேட்பான். காரி துப்பி, செருப்பை கழட்டி காட்டும்.

ஏன்?

அவனை பிடிக்கலை. அவ்வளவுதான்.  இந்த கதை எதுக்கு தெரியுமா? உன்னை பலர் வில்லனாக நினைத்து ஒதுக்கி இருக்கலாம். நான் கதாநாயகி மாதிரி.  உன்னை நேசிக்கிறேன். வா... கொஞ்சம் பேசுவோம்.

நீ ...யார்? உன்னை சுற்றி இருக்கும் ஜனசமுத்திரத்தில் நீ யார்? வக்கீலா? டாக்டரா? இஞ்சினியரா? அரசு ஊழியரா? அதிகாரியா? எழுத்தாளரா? தொழிலதிபரா?

ஏன் மௌனம். பேசாமல் இருக்கும் காரணம் என்ன? ஓகே.. நீ பதில் பதில் சொல்லாவிட்டாலும் எனக்கு தெரியும் நீ யார் என்று. உன்னை பற்றிய மதிப்பிடு எனக்கு இருக்கிறது.

முன் சொல்லிய எந்த பணியிலும் இல்லை நீ.   வழி மாறி சென்றவன். வழி தவறி நிற்ப்பவன். சமூகத்தின்   பார்வையில் நீ திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன், சரிதானே.


பரவாயில்லை. இப்போதும் உன்னை நேசிக்கிறேன்.  சொல்..!!

உனது வயது என்ன? முதுமையை எட்டவில்லை என்று உன்முகம் சொல்கிறது.

அனேகமாக ஆதிசங்கரர் வயதை விட அதிகம் இருக்காது. அல்லது இயேசு நாதர் வயதை எட்டி பிடித்திருப்பாய்.

ஒரு வேளை... விவேகானந்தர் வயது கூட இருக்கலாம்.  இல்லை இல்லை மிஞ்சி போனால் பாட்டுக்கொரு புலவன்  பாரதியின்  வயதாக இருக்குமா?

அல்லது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வயதாகவும் இருக்கலாம்.

இவர்களை எல்லாம் ஏன் நினைவு படுத்தினேன் தெரியுமா?  உன் வயதில் சரித்திரம் படைத்து விட்டார்கள். சகாப்தமாய் வாழ்ந்தும் போய் விட்டார்கள்.


சரி...நீ...பூலோகத்திற்கு வந்ததின் காரணம் என்ன? உன் பிறப்பின் அர்த்தம் தெரியுமா உனக்கு? நிச்சயம் ஜனத்தொகையின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வந்தவன் வந்தவன் இல்லை.

வாழ தகுதியற்றவன் என்று யாரும் வசைபாட வந்தவன் இல்லை. உன் பிறப்பிற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது.  அது தெரியுமா உனக்கு?

நீ யார் பெத்த பிள்ளை? உன் குலப் பெருமை என்ன? உன் பாரம்பரியம் என்ன? பரம்பரை என்ன? யோசித்து பார்த்தாயா?

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை 
சான்றோன் எனக் கேட்டத் தாய். என்கிறது குறள்.

பொருள் என்ன தெரியுமா?

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து கண்ணும் கருத்துமாய் வளர்த்த உன் தாய்க்கு, உன்னை நாலு பேர் நல்லவன்னு சொன்னால், நீ பூமிக்கு வருவதற்காக பட்ட பிரசவ  வலிகள் கூட மறைந்து போகுமாம்.


சொல் நண்பனே... நீ என்ன செய்கிறாய் என்று தெரிந்தால் உன்னை தாய் பெருமையாக நினைப்பாளா?

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை 
என்னோற்றான் கொல் எனும் சொல், என்கிறது இன்னொரு குறள்.

அதாவது தகப்பனுக்கு மகன் செய்யும் உதவி என்ன தெரியுமா? இவனை மகனாக பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்திருப்பாரான்னு, மற்றவர்கள் பேசுகிற மாதிரி வாழனுமாம். அர்த்தம் இதுதான். நீ இப்போது அப்படித்தான் வாழ்கிறாயா?
நீ இழந்தது எதை?

சுய கவுரவத்தை. சுயமரியாதையை, தன்மானத்தை, குலப்பெருமையை.

என்ன விலைக் கொடுத்து இதை எல்லாம் ஈடு செய்யப்போகிறாய். சொல்..!!

. நான் பெரிய வழிப்பறி திருடன் என்று வாய் கூசாமல் சொல்ல முடியுமா?

சொன்னால் உலகம் உன்னை ஏற்றுக் கொள்ளுமா? அடடா..எப்பேர்பட்ட புண்ணியவான்...கண்ணியவான் என்று வாழ்த்துமா?

மற்றவர்கள் பார்வையில் ஒரு அற்ப புழுவாய், அருவெறுக்க தக்கவனாய் வாழ முடியும் என்று நம்புகிறாயா? உனக்கென முகவரி வேண்டாமா?

சரி..நீ காதலிக்கிறாயா?

உன் உள்ளம் கவர்ந்தவளிடம் என்ன சொல்வாய்?

நான் திருடுவதில் பெரிய பெஷலிஸ்ட்.  இந்த திருட்டு தொழிலை வச்சு உன்னை கடைசி வரைக்கும்  கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என்று சொல்வாயா?

சொன்னால் ஏற்றுக்கொள்வாளா?

உனக்கு மணமாகி விட்டதா? உன் வேலையை பற்றி விபரம்  உன் மனைவிக்கு தெரியுமா? என் புருஷன் திருட போயிருக்கார் என்று மற்றவர்களிடம் பெருமையாக பேச முடியுமா?

தேனே, திரவியமே, தெள்ளமுதே, சக்கரையே, மானே, மரிக்கொழுந்தே, மஞ்சள் நிற அற்புதமே என்று தோள் மீதும், மார் மீதும் அள்ளி கொஞ்சுகிறாயே... அந்த பிள்ளையிடம், மகனே நான் பெரிய திருடன் என்று சொல்ல துணிவிருக்கிறதா?

அதை விடு. உனக்குள் ஒருவன் இருக்கிறானே.. மனசாட்சி.  அது என்றாவது ஒருநாள் உன்னை கேட்டது இல்லையா?

பதற பதற, கதற, கதற திருடிக்கிட்டு வருகிறாயே என்று உன் மனசாட்சி சுட்டதில்லையா?

உன் செயல் உனக்கு மன நிறைவை தருகிறதா? நான் ரொம்ப கவுரவமானவன் என்ற பெருமையை தருகிறதா?

சொல்.. நண்பனே.. சொல்..உன் செயலுக்கு பின்னால் எத்தனை பேருடைய கண்ணீர் இருக்கிறது தெரியுமா? எத்தனை பேருடைய சாபம் இருக்கிறது தெரியுமா?

ஏன் ஊர் வாயில் விழுறே. ஒரு நாள் இல்லை ஒரு நாள்..யாருடைய சொல்லாவது பலித்து விட்டால் என்ன செய்வது. இது  உனக்கு தகுமா?  வேண்டாம் விட்டுவிடு. மனிதனாக மாறு. நெஞ்சை நிமிர்த்தி நில்.

உனக்குள் ஒரு கண்ணதாசன் ஒளிந்திருக்கலாம், இளையராஜா  மறைந்திருக்கலாம். டாட்டா பிர்லா கூட வெளிப்படாமல் இருக்கலாம். தேடு ..தேடிப்பார். வாழு ...வாழும்கலையை  கற்றுக்கொள்.

நான் இன்னாரது மகன் என்று உரக்க சொல். என் குலப்பெருமை இது என்று மற்றவர்களுக்கு சுட்டிக்காட்டு.

 நான் இன்ன வேலை பார்க்கிறேன் என்று கவுரவமாய் சொல்லிப்பார்.

நாணயமானவன், நேர்மையானவன் என்று புரியவை. சமூகம்  உன்னை வாழ்த்தவில்லை   என்றாலும் தாழ்த்தி பேசாது.

அப்படி மாறினால்.. இப்போது போல், அப்போதும் அதிகம் நேசிப்பேன். யோசி நண்பனே. மாத்தி யோசி.உங்கள் பார்வைக்கு சில பதிவுகள் 


1 comment:

  1. சரியாகச் சொன்னீர்கள்... குறள்களோடு நல்லதொரு பகிர்வு...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete