Follow by Email

Monday, 24 February 2014

சனி நல்லவரா கெட்டவரா?

வேதாளமும் வேதியனும்
     
 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக்கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. 

“அ ஹோய்.. வாரும் பிள்ளாய் வேதியனே!   உன்னைப் பார்க்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது!   எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காத உன் திடமனதை பாராட்டி, உனக்கு ஒரு கதை சொல்கிறேன். கேட்டுக் கொண்டே வா.! 

நான் முன்பே சொன்னது போல் சூரியனுக்கு பிள்ளைகளாக பிறந்தவர்கள் யமனும் சனிபகவானும் . இதில் யமன் நேரில் வந்து நின்றாலும் பயப்படாதவர்கள் கூட சனிபகவான் என்றால் பயப்படுவார்கள். ஒன்பது கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறார்.

கிரகங்களில் ஈஸ்வரன் என்ற பட்டப்பெயரையும் சேர்த்து அழைக்கப்படும் பெருமை பெற்றவர் சனி பகவான் ஒருவரே. 

சனி பகவானுக்கு ஒரு கால் ஊனம். அது எப்படி வந்தது என்றால்..
  
ஒரு முறை கயிலாயத்தில் ஒரு விழா. விநாயகருக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. அவ் வைபவத்திற்கு அனைத்து தெய்வங்களும் வந்திருந்தனர். அப்போது விநாயகருக்கு வேழ முகம் இல்லை. முருகனைப் போன்ற முகம். 

அவ்விழாவிற்கு தானும் செல்ல வேண்டும்¢ என ஒரு குழந்தை  அடம் பிடித்தது. தாயார் சாயா தேவியோ குழந்தையின் மகிமையை அறிந்தவள். குழந்தைக்கு சமாதானம் சொல்லி போக விடாமல் தடுத்தாள். 

அம்மா நான் யாரையும் அருகில் சென்று பார்க்கவில்லை. தூரத்தில் ஒரு ஓராமாய் நின்று பிறந்த நாள் விழாவைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று கெஞ்சியது.

இரக்கப்பட்ட தாய் அனுமதியளிக்கிறாள்.

கயிலை மலையின் மீது குழந்தை மெல்ல மெல்ல ஏறி வருகிறது.  உமையொருபாகன் தனது ஞானக் கண்ணால் கண்டு கொள்கிறார். உடனே உமையிடம், தேவி கயிலை மலை மீது ஒரு குழந்தை தவழ்ந்து வந்துகொண்டிருக்கிறது, அதன் பார்வை பொல்லாதது, என்வே விநாயகன் மீது அக்குழந்தையின் பார்வை படாதவாறு விநாயகரைப் பாதுகாத்துக் கொள் என்கிறார்.

பார்வதிக்கு உடனே ரோஷம் வந்து விட்டது.  “என் மடியில் உட்கார்ந்திருக்கும் போது என் குழந்தைக்கு எந்த தீங்கும் வராது. அந்தக் குழந்தையால்  என் மகனுக்கு எந்த பாதிப்பும் வராது’  என்று பதில் சொல்கிறாள்.

தவழ்ந்து வந்த குழந்தை விழா நடக்கும் மேடைக்கருகே வந்து விட்டது.  எல்லோர் பார்வையும் அக்குழந்தையின் மீது பட்டது. தேவர்கள் அனைவரும் , என்ன நடக்குமோ என்று பயந்து நடுங்கினர்.  

அக்குழந்தையின் பார்வையோ விநாயகர் மீதே இருந்தது.  அணிமணிகள் அணிந்து சர்வ அலங்காரத்துடன் சிரித்த முகமாய் இருக்கும்  கணேசரது முகத்தை குழந்தை கூர்ந்து கவனித்தது.

அந்த நொடியில் அச்சம்பவம் நடந்தது. விநாயகர் மயங்கி விழுந்தார் அவரது தலை குழைந்து காணாமல் போய்விட்டது. 

பார்வதி பதறிப்போனாள்.  கணேசனின் நிலையைக் கண்டு கதறினார்.  அய்யோ ஈஸ்வரர் சொன்னதை கேட்காமல் போய்விட்டேனே என்று கலங்கினார். அவரது சோகம் கோபமாய் மாறியது . இதற்கு காரணமான குழந்தையை கோபத்துடன் பார்த்தாள். 

‘நீ இங்கே வந்ததால்தானே என் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டது.  நீ இனி எங்கும் செல்ல முடியாதவாறு உன் கால்கள்  முடமாகட்டும் என்று சபித்தாள்’

ஈசன் , பைரவரை அழைத்தார். பைரவா ‘நீ வெளியே சென்று வடக்கு நோக்கிப் படுத்திருப்பவர் யாராயிருந்தாலும் அவரது தலையைக் கொய்து வா’  என்று ஆணையிட்டார்.

பைரவன் வெளியே சென்று வடக்கு நோக்கிப் படுத்திருந்த யானைக் குட்டியின் தலையை வெட்டி வந்து ஈசனிடம் கொடுத்தார். 

ஈசன் அத்தலையை விநாயகரின் உடலோடு ஒட்டினார்.

இதற்கிடையில் கால்கள் பாதிக்கப்பட்ட குழந்தை விந்தி விந்தி நடந்து கொண்டே தன் இருப்பிடம் திரும்பியது.

சாயாதேவி நடந்ததை உணர்ந்து கொ£ண்டாள். பெற்ற வயிறு பற்றி எரிந்தது.   

விழாவுக்கு வந்த மகனுக்கு உணவுக் கூட கொடுக்காமல்   சாபமிட்ட, அவளது மகனின் வயிறு பெருத்துப் போகட்டும் என்று சாபமிடுகிறாள். விநாயகரின் வயிறு பெருத்துப் போகிறது.

விநாயகரின் அழகிய முகம் மறைவதற்கும், பானை வயிறு ஏற்பட்டதற்கும் சனி பகவானே காரணமாகும். 
  
சனி பகவானி¢ன் பார்வை பட்டு தொல்லைப்பட்டவர்கள் ஏராளம். 

இலங்கை வேந்தன் இராவணனின் கதை முடிவதற்கும் சனியின் பார்வையே காரணமாகும்.

பரமேஸ்வரனிடம் , யாரும் தன்னை வெல்ல முடியாத அளவில் வரம் பெற்ற இரவாணன் தேவர்களை அடிமைப்படுத்தினான் , நவக்கிரகங்களையும் கொண்டு வந்து தன் சிம்மாசனத்திற்கு செல்லும் படிக்கட்டுகளாக அமைத்து வைத்து அவர்கள் மீதேறி நடந்து சென்றான். 

நரரதர் ராவணனைச் சந்திக்க   வருகிறார்.  அவரிடம் தன் பெருமையைப் பற்றி பேசி கர்வப்படுகிறான் ராவணன்.

ராவணா!  உன் புகழினை , வலிமையை இந்த உலகே அறியும். நவக்கிரகங்களையும் வென்று படிக்கட்டுக்களாய் அமைத்துக் கொண்டாய்.  உனது படிக்கட்டுகளில் படுத்திருப்பவர்களி¢ல் சனி பகவான் ஈஸ்வரன் பட்டம் பெற்றவன், உனது புகழை அவன் பார்க்க வேண்டும், அவனைத் திருப்பிப் போடு என்கிறார் நாரதர்.

சனி பகவானைத் திருப்பிப் போடுகிறான் இராவணன்.  இராவணனின் முகத்தை உற்றுக் கவனிக்கிறார் சனி. 

அப்போது அண்ணா! என்று   ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்கிறான் இரவாணன். மூக்கறுபட்டு இரத்தம் வழிய சூர்ப்பனகை வந்து கொண்டிருக்கிறாள்.

சனியின் பார்வை சரியாக வேலைச் செய்கிறது என்று எண்ணிக்கொள்கிறார் நாரதர்.

இப்படி வலிமைமிக்க இராவணனின் அழிவிற்கு காரணமாகிறார் சனிபகவான்.
வேதியா! அரிச்சந்திரன் கதை தெரியுமா உனக்கு ?   காசி நகரத்து அரசனாய் இருந்தவன்.  நேர்மைக்குப் பெயர் போனவன்.   மக்களுக்கு நல்லாட்சி தந்தவன்.  அவன் ஜாதகத்தில் சனியின் பார்வைபடுகிறது.  

விதி மாமுனி விஸ்வாமித்திரர் உருவத்தில் வந்து சேர்கிறது   சொன்ன  சொல் காத்திட வேண்டும்  என்பதற்காக , விஸ்வாமித்திரரிடம் நாடுநகரத்தையும், இழந்து கொடுக்க வேண்டிய பணத்திற்காக , தன் மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசனையும் அடிமையாய் விற்று, தானும் ஒரு ஒரு புலையனிடம் வெட்டியானாய் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவதல்லாமல். தன்மனைவியையே வெட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகிறான்.  சொல்லொண்ணா துன்பம் அடைகிறான். அவன் இத்துன்பம் அடைய சனி பகவானே காரணமாகிறார்.

நளன் தமயந்தி கதை தெரியுமா?

நிடத நாட்டு மன்னன் நளன் . அவனிடம்  குடும்பினி தேசத்து அரசிளங்குமரியான தமயந்தியின் அழகினைப் பற்றி ஹம்சப் பறவை சொல்கிறது. அதே ஹமசம் தமயந்தியிடமும் ,உனக்கு ஏற்ற ஆணழகன் நளன்தான் என்று கூறுகிறது.

தமயந்தின் மேல் எமன், சனி போன்ற இந்திரன் , கலிபுருஷன், துவாப்பரன் தெய்வங்களும் ஆசைகொள்கின்றனர். 

ஆனால் நளனும் தமயந்தியும் திருமணம் புரிந்து கொள்கின்றனர்.  நளனைப் பற்ற சரியான சந்தர்ப்பம் எதிர்நோக்கியிருக்கிறார் சனி.

ஒரு முறை இறைவழிபாட்டிற்கு சென்ற நளன் தன் குதிகால்கள் சரியாக நனையாமல்  குளித்துவிட்டு ,வழிபாட்டிற்குச் சென்று விடுகிறான். இதுவே சரியான காரணம் என்று  உடனே நளனை பிடித்துக் கொள்கிறார் சனி.

நளனுக்கு கெடுதல்கள் நேருகின்றன. புஷ்கரனுடனான ,சூதாட்டத்தில் தன் இராச்சியத்தை இழந்து தன் மனைவியுடன¢  கானகத்திற்குச் செல்கிறான்.  அங்கே தமயந்தியைப் பிரிகிறான்.  பிறகு அவன் காப்பாற்றிய கார்க்கோடகன் என்ற  அரவமே அவனைத்  தீண்ட  உருவம் கறுமையடைந்து மாறிப்போகிறான். கோசல அரசன் ரிதுபாலன் என்பவனிம் சமையற்காரனாக பணிபுரிகிறான்.  

இறுதியில் தமயந்தியுடன் இணைந்தாலும், நேர்மையான அரசன் துன்புறுவதற்கு சனிபகவான் காரணமாக இருக்கிறார்.

சனி ஒரு முறை சிவபெருமானையே  பீடிப்பதற்காக செல்லும் போது அவர் ஒரு குளத்தின் தாமரைத் தண்டில் மறைந்து கொள்ள நேரிடுகிறது. அதே போல் திருமாலும் சனிக்கு பயந்து மறைந்து கொள்கிறார். 

குழந்தையாய் இருந்த காலத்தில் சனியால் அவதிப்பட்டார் விநாயகர். ஆனால்  அதன்பின் விநாயகரைப் பிடிக்க முடியவில்லை. அதே போல் ஆஞ்சநேயரையும் சனியால் பிடிக்க முடியவில்லை என்று கதைகள் கூறுகின்றன.  

‘வேதியா!  சூரியனின் குமாரனும், நவக்கிரகங்களில் ஒருவனாகவும் விளங்குகின்ற சனிபகவான் ஏனிப்படி அனைவரையும் ஆட்டிப்படைக்கிறார்.  சனி பகவான் நல்லவரா கெட்டவரா?   இந்தக் கேள்விக்குறிய பதில் உனக்குத் தெரிந்திருந்தும் நீ சொல்லாமல் மௌனமாக இருந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறும்’, என்று கூறுகிறது வேதாளம்.

வேதாளமே!  

ஒரு மனிதனின் இப்பிறவியை நிர்ணயம் செய்வது சென்ற பிறப்பில் அவன் செய்த நல்வினையும் தீவினையும் என்கிறது இந்து மதம்.

சென்ற பிறவியின் வினைகளின்படி இப்பிறவியில் அவன் அனுபவிக்க வேண்டிய வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப , அமைந்திருக்கும் கிரக நிலையில், அந்த நேரத்தில், அதற்கேற்ற குடும்பப் பின்னணியில்  பிறவி யெடுக்கிறது   உயிர்.   

மனிதப் பிறவி மட்டுமன்றி கீழான பிறவியும் எடுக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

எனவே வாழ்க்கையில் ஒருவன் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களை கிரகங்களோ, ஏனையவரோ முடிவு செய்வதில்லை . அவனே முடிவு செய்து கொள்கிறான். 

தீதும் நன்றும் பிறர் தர வாரா’  என்று இதைத்தான் சொல்கிறார்கள்.

கிரகங்கள் எப்போதும் அதற்குடைய இயற்கைத் தன்மையில் இருக்கின்றன. நம்முடைய நேரப்படியே பலன்கள்  நடைபெறுகின்றன.

கடலோரத்தில் பிறந்தால் மீன்பிடிப்போம், வனத்தில் பிறந்தால் வேட்டையாடுவோம்,  சமவெளியில் பிறந்தால் விவசாயம் செய்வோம், பாலைவனத்தில் பிறந்தால் ஒட்டகம் மேய்ப்போம். நிலங்கள் அதன் இயற்கைத் தன்மையுடன்  எப்போதும் இருக்கின்றன. நாம் எங்கே பிறக்கிறோமோ அதன்படி நம் தொழில் அமைவதைப் போல     நமது வினைகளை அனுபவிக்கும் சூழநிலைக்கேற்பவே நம்  பிறவி அமைகிறது.   

 நம் பிறந்த நேரத்தில்  நிலவுகின்ற கிரகங்களின்   அமைப்புப்படி , பலன்கள்  விளைகிறது. 

கஜமுகாசுரன் என்ற அசுரன் தவமிருந்து, தான் மனிதர்களாலும், தெய்வங்களாலும், விலங்குகளாலும், கொல்லப்படக்கூடாது என்றும், எந்த ஆயுதங்களும் தன் உயிரை பறிக்கக்கூடாது  என்று இறைவனிடம் வரம் வாங்குகிறான்.  

எனவே அவனை அழிக்க ஒரு படைப்பு தேவைப்பட்டது. அதற்காக அவதரத்தவர் விநாயகர்.  யானைமுகமுடைய விநாயகர் , தன் தந்தததை உடைத்து கஜமுகாசுரனை அழிக்கிறார்.

எனவே எனவே விநாயகருக்கு  வேழ முகம் அமைவதற்கு காரணமாகி,  கஜமுகாசுரனின் அழிவிற்கு முக்கிய காரணகர்த்தா ஆகிறார் சனி பகவான் என்பது நமக்கு விளங்குகிறது.  இதில் சனி மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் நல்லதையே செய்துள்ளார் என்பது தெரிகிறது.

அரிச்சந்திரனின் விதிப்படி அரிச்சந்திரனின் குடும்பத்திற்கு கஷ்டத்தைக் கொடுத்தாலும் ,விளைவு அவர்களுக்கு நன்மையாகவே முடிகிறது.  அரிச்சந்திரனின் புகழ் காலங்கள் கடந்தும் பேசப்படுவதற்கும்  அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களும் ,உறுதியான மன நிலை¬யும் காரணமாகும் , இதன் பிறகு இழந்த நாடு நகரத்தையும்  சனி பகவானின் அருளால் பெற்று மகிழ்கிறார்.

நளன் தமயந்தியின் பிறப்புக்கும் அவர்களின் முன் ஜென்மமே காரணமாகும்.  முற்பிறவியில் காட்டுவாசிகளின் தலைவனாக வாழ்ந்த நளனும், அவன் மனைவியும் வழிதவறிவந்த ஒரு சிவனடியாரின் உயிரைக் காக்க தன்னுயிரை தியாகம் செய்தவர்களாவர்.

அதனாலேயே  அரசகுடுமபத்தில் பிறக்க நேர்ந்தது. இருப்பினும் அவர்களின் ஊழ்வினையின் காரணமாய்  சனி பகவானின் பார்வையில்  படநேர்ந்தது. இருப்பினும் சனி அவர்களுக்கு நல்லதையே செய்தார் என்பது  முடிவு சுபமாய¢ அமைவதி¤லிருந்து புரிகிறது. பரத்வாஜரின்  அருளாசிபடி, நளன் சனி பகவானுக்கு திருநள்ளாறில் ஒரு குளம் வெட்டி வழிபட்டு  இழந்த செல்வங்களையெல்லாம் பெற்று மகிழ்ந்தார் என்று  புராணக்கதையொன்று  கூறுகிறது.
 சனி பகவான்  12 ராசிகளையும் சுற்றிவர  முப்பது ஆண்டுகள் ஆகிறது.  எனவே  மனிதனுடைய வாழ்நாள் காலத்தில்  சனிபகவானுடைய பார்வையிலிருந்து  யாரும்   தப்ப முடியாது என்பது மட்டும் உண்மை. ஆனாலும் அவரை வணங்கி வழிபடும் போது   அவர் மனமிறங்கி தன் பார்வையை தணித்துக் கொள்வார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

  தனக்கு உண்டான கடமையைச் செய்யும் ஒருவரை அந்தக் கடமையின் தன்மை எதுவாகயிருந்தாலும்,   சாஸ்திரங்கள் குறை கூறுவதில்லை.

இந்தக் கருத்தையே  “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே”  என்று ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் வலியுறுத்துகிறார்.

வாழ்க்கை இன்பமாகவே அமைந்து விட்டால் ஒரு மனிதன் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமேயில்லை.  அவன் ஆன்மா தெளிவடைவதுமில்லை. இன்ப துன்பத்தை அனுபவித்து, அதிலிருந்து  விடுபடும்போதே , இந்த வாழ்க்கையைப் பற்றிய  தெளிவான சிந்தனை ஒரு மனிதனுக்கு உண்டாகிறது. அவன் மனம் பக்குவமடைகிறது. 

‘எனவே வேதாளமே!

மனித மனம் பக்குவப்பட்டு, பரம்பொருளை நெருங்க காரணமாய் இருக்கும் சனீஸ்வரன் நல்லவரே! என்பதே உன் கேள்விக்கான என் பதிலாகும்.  

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டு¢¢ம் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.
   

புலிகளின் இன்னொரு முகம் -19

வசீகரனிடமிருந்து மீண்டும் விபரீதம் எதுவும் எனக்கு ஏற்படவில்லை. “ஐயா தப்பீட்டியள்” எனச் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து அகன்றுவிட்டான். தயாபரனின் விசாரணை தொடர்ந்தது.

ஆனாலும் உண்மையான விசாரணை இன்னமும் ஆரம்பமாகவில்லை. அங்கு சென்றபின்னர்தான் புலிகளின் விசாரணை முறைகளை அறிந்துகொள்ள முடிந்தது. முதலில் அவர்கள் ஒருவரின் குடும்பப் பின்னணியை முழுமையாக அறிந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.

அதாவது என்னுடைய பெயர், தாய் தந்தையரின் பெயர்கள், சகோதரர்களின் பெயர்கள், அவர்களின் துணைவர்கள் மற்றும் பிள்ளைகளின் பெயர்கள், பிள்ளைகள் திருமணம் செய்திருந்தால் அந்த விபரங்கள், தாய் தந்தையரின் சகோதரர்களின் பெயர்கள், அவர்களது துணைவர்கள் பிள்ளைகளின் பெயர்கள் என அது நீண்டுகொண்டே போகும்.

அதுமாத்திரமின்றி, நான் பிறந்ததிலிருந்து வாழ்ந்த இடங்கள், படித்த இடங்கள், செய்த வேலைகள், நெருங்கிய நண்பர்கள், திருமணம் செய்திருந்தால் மனைவியின் பிள்ளைகளின் பெயர் மற்றும் விபரங்கள், மனைவியின் குடும்ப அங்கத்தவர்களின் விபரங்கள் என்பனவும் விசாணையில் தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் ஏதாவது அரசியல் கட்சிகள் அல்லது இயக்கங்களில் அங்கம் வகித்திருந்தால் அந்த விபரங்கள், வேறு பொது விடயங்களிலான ஈடுபாடுகள் எனப் பல விடயங்களைப் புலிகளின் விசாரணையாளர்கள் ஒவ்வொரு கைதியிடமும் முழுமையாக விசாரித்துப் பதிவு செய்து கொள்வர். அதன்படி என்னிடமும் பூரண விபரங்கள் பெறப்பட்டன. இந்த விசாரணையே இரண்டு மூன்று தினங்கள் நீடித்தன.

விசாரணைகளின் போது தயாபரன் என்னிடம் ஓரளவு கண்ணியமாக நடந்துகொண்டான். முதல்நாள் விசாரணை நடந்து நான் சிறைச்சாலைக்குள் சென்றபோது, இரவு குற்றுயிரும் குறையுயிருமாக இரவு தூக்கிச் செல்லப்பட்ட அந்த புளொட் இயக்க வாலிபன் மரணமடைந்துவிட்டதாக சக கைதிகள் குசுகுசுத்ததை அவதானித்தேன். 

அவரது உடல் அந்த முகாம் இருந்த வளவுக்குள்ளேயே புதைக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் பேசிக்கொண்டனர். அவ்வாறு முன்பும் விசாரணைகளின்போது கொல்லப்பட்ட பலரின் உடல்கள் அந்த வளவுக்குள்ளேயே புதைக்கப்பட்டுள்ளதாகக் கைதிகள் கூறினர்.

இந்தக் தகவல்களில் எவ்வளவு தூரம் உண்மையுள்ளது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், விசாரணைகளின் போது பலர் இறப்பது அடிக்கடி நிகழ்ந்து வந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. உதாரணமாக நான் அங்கு ஒரு கைதியாகச் சென்றபின்னர் கூட, பளைப் பகுதியிலுள்ள சின்னத்தாளையடி என்ற கிராமத்தில் நடந்த ஒரு இளம் ஆசிரியையின் கொலை சம்பந்தமாக சிலர் புலிகளால் கைதுசெய்யப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். 

விசாரணையின் முடிவில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே, அவர்களில் ஒருவரான எனக்கு நன்கு தெரிந்த இயக்கச்சி மல்வில் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரம் என்ற நெடிய திடகாத்திரமான இளைஞர் விசாரணைகளின் போதே அடித்துக் கொல்லப்பட்டார்!

புலிகளின் கைதிகளாக இருப்பவர்களில் பலா இவ்வாறு சட்டத்துக்குப் புறம்பாக, மிலேச்சத்தனமான முறையில் கொல்லப்பட்டு வந்துள்ளதை, அவர்களின் பல சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகள் அறிவர். 

அவர்கள் கூறுவதுபோல, அவ்வாறு கொல்லப்பட்ட பலரின் உடல்கள் அந்த முகாம் வளவுகளுக்குள்ளேயே புதைக்கட்டுமிருக்கலாம். இதுபற்றி அரசாங்கம் எவ்வளவு அக்கறையுடன் ஆய்வுகளை மேற்கொள்கின்றதோ தெரியவில்லை.

பொதுவாகவே அரச இராணுவத்தினர் ஒரு பகுதியிலிருந்து புலிகளை விரட்டிய பின்னர், அங்கிருந்த புலிகளின் முகாம் கட்டிடங்களைத் தகர்ப்பதிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளதை அறிய முடிகிறது. உதாரணமாக இங்கு இரண்டொன்றைக் குறிப்பிடலாம்.

1995 அக்டோபர் 30ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளை இராணுவம் விரட்டிய பின்னர், எம்மைப் புலிகள் தடுத்து வைத்திருந்த ஆனைக்கோட்டையிலிருந்த Tank 2 என்ற முகாம் பகுதியை நானும், என்னுடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த ஒரு ஓய்வுபெற்ற அதிபரும் சென்று பார்வையிட்டோம். ஆனால் அங்கு முகாம் ஒன்று இருந்ததிற்கான அடையாளமே தெரியாதபடி, இராணுவத்தினர் அந்தக் கட்டிடத்தைத் தகர்த்து வெறும் கற்குவியலாக்கியிருந்தனர்.

அதேபோல வரணி எருவன் பகுதியிலிருந்த ‘மேல்வீடு’ எனப் புலிகளால் அழைக்கப்பட்ட பகுதியையும் சென்று பார்வையிட்டோம். அதுவும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. அத்துடன் சாவகச்சேரி கல்வயல் பகுதியில் புலிகள் வன்னிக்குத் தப்பியோடுவதற்கு முன்னர், பிரபாகரன் தங்கியிருந்ததென அக்கிராம மக்களால் தகவல் தரப்பட்ட மிகுந்த பலமான பாதுகாப்புடன் கட்டப்பட்டிருந்த நிலக்கீழ் வீடொன்றையும் எமது நண்பர்கள் சிலர் சென்று ஆராய்ந்தபோது, அதுவும் இராணுவத்தால் சேதமாக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.

புலிகளின் சித்திரவதை முகாம்கள் இருந்த இந்த வளவுகள் முறைப்படி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு, அங்கு மரணமடைந்தவர்களின் உடல்கள் ஏதாவது புதைக்கப்பட்டுள்ளனவா என ஆராய வேண்டியது அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத கடமைகளில் ஒன்று. அதைச் செய்வதற்குத் தேவையான தகவல்களை, இப்பொழுது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான புலி உறுப்பினர்களிடமிருந்தே அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும். 

அதேநேரத்தில் இலங்கையில் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி ஓயாது அறிக்கை வெளியிடும் சர்வதேச மற்றும் மனித உரிமை அமைப்புகள், புலிகளினால் கைதுசெய்யப்பட்டுக் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான மக்கள் பற்றியும் அக்கறை செலுத்தினால், அவர்களது மனித உரிமைப் பணிகள் பக்கச்சார்பின்றி அமையும். (துணுக்காயில் இருந்த புலிகளின் வதை முகாமில் வைக்கப்பட்டிருந்த 4,000 கைதிகளில் நூற்றுக்கும் குறைவானோரே விடுவிக்கப்பட்டனர். மிகுதியானோருக்கு என்ன நடந்தது என்பதைப் பின்னைய தொடர்களில் பார்ப்போம்)

எனது விசாரணையின் இரண்டாம் நாள், தயாபரன் நான் இருப்பதற்காக ஒரு இரும்பு நாற்காலியை வரவழைத்துத் தந்தான். அங்கு இருந்த சுமார் 15 வரையிலான விசாரணைக் குடில்களில் ஏககாலத்தில் விசாரணைகள் நடைபெறும். ஒருவரின் விசாரணைகளின் விபரங்கள் மற்றவருக்குக் கேட்காவிடினும், எதேச்சையாக அவர்களைப் பார்க்க முடியும். 

இடையிடையே கைதிகள் மீது விசாரணையாளர்கள் தாக்குதல் நடாத்தும்போது, அவர்களின் அபயக் குரல்களைக் கேட்கவும் முடியும். ஆனால் எல்லாக் கைதிகளும் விசாரணைகளின்போது, முன்னால் உள்ள நிலத்தில்தான் குந்தியிருக்க வேண்டும். கால்களில் இரும்புச் சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்தால், சௌகரியமாக உட்கார முடியாமல் மரண அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

அந்த வகையில் நான் ‘கொடுத்து வைத்தவன்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் எனது விசாரணையாளன் தயாபரன் எனக்கு ஒரு நாற்காலி உபயம் செய்திருக்கிறான். காலில் சங்கிலிகளுடன் அவதிப்பட்ட எனக்கு அது ஒரு பெரும் ஆறுதலாக இருந்தது. அதுமாத்திரமின்றி காலையிலோ மாலையிலோ என்னை விசாரணை செய்யும் நேரத்தில் அவனுக்கு தேநீh வந்தால,; ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் எனக்கும் சிறிது தேநீர் வாங்கித் தந்தான்.

இதுவரை நடந்த விசாரணைகளில் தயாபரன் என்மீது வன்முறையை செயலளவிலோ சொல்லளவிலோ பிரயோகிக்கவில்லை. இது அவர்களது வழமைக்கு மாறாக இருந்தது. அத்துடன் இது புயலுக்கு முன்னர் தோன்றும் அமைதியோ என்ற அச்சமும் ஏற்பட்டது. ஆனால் அடிக்கடி அவன் என்னிடம், “இஞ்சை நீங்கள் ஒண்டையும் ஒளிக்கக்கூடாது. எல்லாத்தையும் ஒளிக்காமல் சொல்ல வேணும். 

அப்பிடி நடந்தியள் எண்டால் உங்கடை விசாரணை கெதியாய் முடிஞ்சு, கெதியாய் வீட்டை போகலாம். இல்லையெண்டால் வில்லங்கத்திலை மாட்டிறதோடை, கனகாலம் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்” என எச்சரிக்கை செய்து வந்தான். இந்தப் பீடிகையும் எனக்குள் பலவித அச்சங்களை உருவாக்கி வந்தது.

1991 டிசம்பர் 26ம் திகதி என்னைக் கைதுசெய்ததிலிருந்து கடந்த 6 நாட்களாக தயாபரன் என்னிடம் நடாத்தி வந்த ஆரம்பகட்ட விசாரணைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது போலத் தோன்றியது. காலையில் 9 மணியளவில் விசாரணைக்குப் போவதும், பின்னர் மதிய உணவுக்காக 1 மணி அளவில் திரும்பி வந்து, மீண்டும் 2 மணியளவில் விசாரணைக்குச் சென்று 5 மணி அளவில் அன்றைய விசாரணை முடிந்து திரும்பி வருவதுமாக தினசரி வாழ்க்கை கழிந்து வந்தது.

இந்த நாட்களில் விசாரணையில் கேட்கப்படும் கேள்விகள் ஒரு பக்கமும், வீட்டைப் பற்றிய கவலைகள் ஒரு புறமுமாக மன உளைச்சல் அதிகரித்துச் சென்றது. அன்றைய அந்தச் சூழ்நிலையில் ஏற்பட்ட உணர்வுகளை, 19 வருடங்களின் பின்னர் இன்று எழுதும் போது உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவது இயலாத காரியம்தான். 

சில விடயங்களை அனுபவபூர்வமாகத்தான் உணர முடியும். அவற்றில் சிலவற்றை எழுத்தில் ஓரளவு வெளிப்படுத்த முடியும். இன்னும் சிலவற்றை திரைப்படம் போன்றவற்றில்தான் அழுத்தமாக வெளிக்கொணர இயலும். ஆனால் ஒருவருடைய இந்த மாதிரியான துன்பியல் அனுபவங்களை எவ்வாறு வெளிப்படுத்த முடியும் என்பதற்கு, நிரந்தரமான நிலையான அளவுகோல்கள் எவையும் இருப்பதாக அறுதியிட்டுக் கூறிவிட முடியாது என்பதே உண்மை.

என்னைப் பொறுத்தவரை, நான் ஆனைக்கோட்டையிலுள்ள புலிகளின் வதை முகாம் ஒன்றில் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனது குடும்பத்தினருக்கோ நான் எங்கிருக்கிறேன் என்பது எந்தக் காரணத்தைக் கொண்டும் தெரிவதற்கு வாய்பில்லை. 

அதமாத்திரமில்லாமல், நான் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதுகூட அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. நான் இங்கு எனக்குப் புலிகள் தரும் உடல் உள சித்திரவதைகளைத்தான் தாங்குகின்றேன். எனது வீட்டுக்காரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் என்னையிட்டு ஒவ்வொரு நிமிடமும் நிச்சயம் வேதனை அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

இரவு நேரங்களில் தூக்கத்தைத் தொலைத்து வெகுநாட்களாகிவிட்டன. தூங்கும் சொற்ப நேரத்தில்கூட பல கெட்ட கனவுகள் வந்து போயின. தூங்காத நேரங்களில் சிறுபராயம் முதல் நிகழ்ந்த சம்பவங்கள் மனதில் வந்து போயின. இரவில் கைதிகள் தூங்காமல் இருக்கக்கூடாது என்று கருதியோ என்னவோ, தினசரி காலையிலும் மாலையிலும் நடக்கும் கைதிகள் கணக்கெடுப்பு முடிந்த பின்னர், இரவு வேளைகளில் ஒவ்வொரு கைதிக்கும் கட்டாயப்படுத்தி இரண்டு இரண்டு ‘பிறிற்ரோன்’ குளிகைகள் தரப்பட்டன. 

அங்கிருந்த புலி உறுப்பினர்களில் ஒருவனான மெய்யப்பன் என்பவனே இந்தக் குளிகைகளை கைதிகளுக்குத் தினசரி வழங்குவான். அவனை கைதிகள் தமக்குள் கிண்டலாக ‘டாக்டா மெய்யப்பன்’ என்று அழைத்து, அந்தத் துன்பத்திலும் இன்பம் கண்டனர்.

இன்று 1992ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி. அதாவது புத்தாண்டு தினம். வெளியே எப்படியோ, உள்ளேயிருக்கும் எங்களைப் பொறுத்தவரை, வழமை போலவே இன்றைய காலையும் விடிந்தது. வழமை போல இன்றும் விசாரணைகள் தொடரும். சில விசாரணையாளர்கள் ‘கைவிசேடமாக’ அடிதடியுடன் விசாரணைகளை ஆரம்பிக்கவும் கூடும். எனது விசாரணைகூட இனி யுத்த காண்டத்தில் பிரவேசிக்கக்கூடும்.

களைகட்டாத புத்தாண்டுக் காலை நேரத்தில், வெளியில் தாம் இருந்த காலத்து புத்தாண்டு வேளைகளை நினைத்து கைதிகள் இரை மீட்பது அவர்களது முகபாவனையில் தெரிந்தது.

இந்த நேரத்தில் புலி உறுப்பினன் ஒருவன் வந்து, காந்தி என்னை அழைப்பதாகக் கூறி, என்னை வெளியே எடுப்பதற்கு சிறைக் கதவைத் திறந்தான்.

தொடரும்

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

புலிகளின் இன்னொரு முகம் -18

வதை முகாமின் உள்ளேயிருந்து மரண ஓலத்துடன் ஒருவர் வெளியே தூக்கிச் செல்லப்படுவதைப் பார்க்க எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. வதை முகாமில் உள்ளவர்கள், அந்த அகால வேளையில் ஏற்பட்ட மரண கூச்சலால் தூங்காமல் விழித்துக்கொண்டு இருந்தனர். 

நான் அங்கிருந்தவர்களின் முகபாவங்களை அவதானித்தேன். அவர்களது முகங்களில் ஒரு அனுதாப அலை வீசியதைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அவர்கள் என்னைப் போல் அதிர்ச்சி அடைந்தவர்களாகத் தெரியவில்லை. அதை என்னால் ஓரளவு விளங்கிக் கொள்ள முடிந்தது.

நான் இந்த ‘வீட்டுக்கு’ புதிதாக ;குடி’ வந்தவன். அங்கிருக்கும் மற்ற எல்லோரும் பழைய ‘குடியிருப்பாளர்கள்!’. இந்த மாதிரியான காட்சிகளை அவர்கள் பல தடவை கண்டு, அவர்களது மனங்கள் மரத்துப் போயிருக்கலாம். யார் கண்டது? நாளை எனது மனமும்கூட அவ்வாறு மரத்துப் போகக்கூடும்.

நான் எனது இருப்பிடத்தில் அமர்ந்து எனது மனதை ஆசுவாசப்படுத்த முயன்றேன். ஆனால் மனது ஒரு நிலையில் அமைதி கொள்ளாது தவித்துக்கொண்டு இருந்தது. ஒரு மனித உயிர், அதே மனித உருவில் உள்ள சில மிருகங்களால் கடித்துக் குதறப்பட்டிருப்பதை, என் வாழ்நாளில் இப்பொழுதுதான் மிக அருகில் இருந்து கண்கூடாகப் பார்க்கிறேன்.

எனக்கு அருகில் இருந்த பெரியவர் எனது முகபாவங்களை அவதானித்துவிட்டு, ‘இது இங்கை சர்வசாதாரணம். போகப்போகப் புரிந்து கொள்வீர்கள்’ என்பது போல என்னைப் பார்க்கின்றார்.

“என்ன நடந்தது?” என அவரிடம் மெல்ல வினவினேன்.

அவர் பயத்துடன் அங்குமிங்கும் பார்த்துவிட்டு, “இதுகளை இஞ்சை கதைக்கிறது ஆபத்து” எனச் சொன்னார். பின்னர் ஏதோ யோசித்தவராக என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “புளொட் இயக்கப் பொடியன் எண்டு கேள்வி. 

விசாரணையிலை நல்லா அடிச்சுப்போட்டாங்கள் போலை கிடக்கு. ஆள் தப்பிறது கஸ்டம்.” இரகசியமாகச் சொல்லிவிட்டு அவர் அமைதியாகிவிட்டார். பின்னர் அவர் விடியும்வரை என்னுடன் எதுவும் கதைக்கவில்லை. தூங்கினாரா அல்லது என்னைப்போல விடியும்வரை அந்தச் சம்பவத்தை எண்ணி மனம் கலங்கி விழித்துக் கொண்டிருந்தாரா எனத் தெரியவில்லை.

ஆனால் வதை முகாமில் படுத்திருந்தவர்களில் பெரும்பாலோர் அன்றிரவு தூங்கவில்லை என்பதை, அவர்கள் இரண்டு மூன்று பேராக படுத்த வண்ணமே குசுகுசுத்ததை வைத்து அவதானிக்க முடிந்தது. அது வாயிற்காப்போனுக்கும் ‘மணந்து’, அவன் வாசல்வரை வந்து ஒருமுறை அதட்டி எச்சரித்துவிட்டுச் சென்றான்.

காலையில் வழமைபோல சில ‘கப்’ தண்ணீரில் காலைக்கடன்களை முடித்த பின்னர், காலை ஆகாரத்துக்காக எல்லோரும் வாசலைப் பார்த்த வண்ணம் இருந்தனர். காலை ஒன்பது மணியாகியும், சாப்பாடு கொண்டு வருபவர்களின் தலைக்கறுப்பைக் காண முடியவில்லை. எல்லோருடைய வயிறுகளும் புகைச்சல் எடுக்கத் தொடங்கிவிட்டது.

கைதிகளுக்குச் சாப்பாடு வருதோ இல்லையோ, தமது விசாரணைகளைத் தொடர்ந்து நடாத்தி, தமிழர்களின் சுதந்திர தேசத்தை மனித மண்டையோட்டுக் குவியலின் மீது கட்டியெழுப்புவதற்காகத் துடிக்கும் தமது தலைவனுக்காக, அல்லும் பகலும் கைகளில் பல விதமான சித்திரவதைக் கருவிகளுடன் காத்திருக்கும் புலனாய்வுப் பிரிவு விசாரணையாளர்கள் ஓய்ந்திருக்கத் தயாராகவில்லை என்பதை, சிறை வாசலில் அவர்களது பிரசன்னங்கள் கட்டியம் கூறிக்கொண்டிருந்தது.

அவர்களில் ஒருவன் எனது பெயரையும் எனது கைதி இலக்கத்தையும் சொல்லி வாசலில் வந்து நின்று அழைத்தான். நான் வாசலுக்குச் சென்று அவனுடன் புறப்பட்டேன். 

கையில் பைல் ஒன்றுடன் காணப்பட்ட அவன், நேற்றைய தினம் என்னை விசாரித்த வசீகரன் என்பவன் அல்ல. அத்துடன் இவனது கைகளில் தடிகளோ தென்னம்பாளைகளோ எதுவும் காணப்படவும் இல்லை. சில வேளைகளில் விசாரிக்கும் இடத்தில் வைத்திருப்பானோ என்னவோ?

அவன் என்னை அங்குள்ள விசாரணைக் குடில் ஒன்றுக்கு அழைத்துச் சென்றான். உள்ளே சென்று மேசையின் பின்னால் உள்ள கதிரையில் அமர்ந்துகொண்டு, அவனுக்கு முன்னால் உள்ள மண் தரையில் என்னை அமரும்படி கூறினான். 

நான் அமர்ந்ததும,; தனது பெயர் தயாபரன் என்று கூறினான். நான் அவனை அவதானித்துப் பார்த்தேன். அங்கு நான் கண்ட மற்றைய புலிகளைவிட இவனது முகபாவம் சற்று மாறுபாடாக இருப்பதாகப்பட்டது. ஆனால் என்னதான் சில வேறுபாடுகள் இருந்தாலும், எல்லாமே வரிப்புலிகள்தான். இந்தப் புலிகள் பசித்தாலும் புல்லைத் தின்னப் போவதில்லை.

மனிதர்களின் குணங்கள் பிறப்பால் உருவாவதில்லை. அவை வளர்ப்பால் வருபவை எனச் சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலும் எம்மைப்போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களின் கருத்து அதுதான். ஆனால் பிறப்பால் ஒருவரின் கருத்து உருவாகின்றது என்றும், அந்த ‘பிறவிக்குணம்’ தான் ஒருவருடைய போக்கைத் தீர்மானிக்கிறது என்றும், நமது சமுதாயத்தில் அநேகமான மக்கள் கருதுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்தப் புலிகள் எந்த அடிப்படையிலான குணாம்சத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி முக்கியமானது.

இந்தப் புலிகள் வௌ;வேறு காரணங்கள் காரணமாகவே இயக்கத்தில் சேருகிறார்கள். (நான் புலிகளின் குகையில் ஒன்றாக அவர்களுடன் வாழ்ந்ததில் ஏற்பட்டஅனுபவத்தின்படி பார்த்தால், அவர்களில் ஒரு சிலர் மட்டுமே – அண்ணளவாக 10 வீதத்தினர் மட்டுமே, அவர்களது தமிழீழ இலட்சியத்துக்காக இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள். அது பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்) 

அவர்களில் சிலர் மக்கள் நம்பும் பிறவிக் குணத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களது வளர்ப்பு முறையே பிரதானமாக அவர்களது சிந்தனை, செயல்பாடு என எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. 

அந்த வகையில் பார்த்தால், இந்தப் புலிகளின் வளர்ப்பு முறையே பின்னர் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கின்றது. அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாக நடந்து கொள்வதற்கு அவர்களுக்குத் தரப்படும் உளப் பயிற்சியே பிரதான காரணமாகும். 

பொதுவாகவே எந்தவொரு இராணுவத்துக்கும், சாதாரண மக்களிலிருந்து வேறுபட்ட உளப் பயிற்சி வழங்கப்படுவது வழமை. அதில் முக்கியமானது, அவர்களுக்கு வழங்கப்படும்  உத்தரவுகளுக்குக்; கீழ்ப்படிய வேண்டும் என்ற பயிற்சியாகும். அது இல்லாவிட்டால், ஒரு இராணுவ (அரசு) தலைமையால் எதையும் நிறைவேற்ற முடியாது.

அகிம்மை பேசிய காந்தி கூட, இதில் மரபுரீதியாகத்தான் செயல்பட்டுள்ளார். இந்தியாவில், பிரிட்டிசாருக்கு எதிரான கிளர்ச்சியில் (சிப்பாய் கலகம்) ஈடுபட்ட இந்திய இராணுவத்தினருக்கு, பிரிட்டிஸ் அரசு தண்டனை வழங்கியபோது காந்தி அதை ஆதரித்தார். 

அது பற்றி ‘லீ மொண்டே’ என்ற பிரெஞ்சுப் பத்திரிகை அவரிடம் வினவிய போது, “இன்று நான் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கண்டிக்காமல் இருந்தால், நாளை நான் ஆட்சிக்கு வந்த பின்னரும் இது போன்ற கிளர்ச்சிகள் ஏற்பட்டால் அதை நான் கண்டிக்க முடியாதல்லவா?” என அவர் பதில் வினா எழுப்பினார்.

எனவே புலிகளைப் பொறுத்தவரை, உத்தரவுகளை நிறைவேற்றுவது என்பது தலையாய பிரச்சினையாகும். அதுவும் ஒரு தனி மனிதனைச் சுற்றி, தனிமனித வழிபாட்டு ரீதியாக வளர்க்கப்பட்ட ஒர் இயக்கத்தில், குருட்டு விசுவாசத்தின் அளவைக் கணக்கிட முடியாது. 

ஆனால் புலிகளின் தலைமை தனது உறுப்பினர்களுக்கு அதுமட்டுமின்றி, வேறு பல முக்கியமான பயிற்சிகளையும் திட்டமிட்டு வழங்குவது, கிரமமான நடைமுறையாகும். அதாவது மனிதர்களை எவ்வாறு வெறுக்கப் பழகுவது என்பதுதான் அது.

ஒரு புலி உறுப்பினன் புதிதாகச் சேர்க்கப்பட்டதும் அவனுக்கு முதலில் ஊட்டப்படுவது அரச எதிர்ப்பும் சிங்கள இன எதிர்ப்பும்தான். ( சில சந்தர்ப்பங்களில் முஸ்லீம் - மலையக மக்கள் எதிர்ப்பும்) பின்னர் குடும்பப் பாசத்திலிருந்து விடுதலையும் எதிர்ப்பும். அவன் படிப்படியாக தாய், தந்தை, சகோதரர், உற்றம் சுற்றம் என்ற பாசத்தளைகளிலிருந்து விடுவிக்கப்படுவதுடன், அவர்களை அந்நியர்களாகப் பார்க்கும் நிலைக்கும் தள்ளப்படுவான். தேவையானால் அவன் அவர்களுக்கு எதிராகவும் செயற்படுவதற்குத் தயார்படுத்தப்படுவான்.

இதற்கு அடுத்த கட்டமாக, தனது சொந்த இனமான தமிழ் மக்களையே வெறுக்கும் ஒருவனாக மாற்றப்பட்டு, பின்னர் பொதுவாக மனித இனத்தையே வெறுப்பவனாக, அவர்களை சந்தேகிப்பவனாக உருமாற்றப்படுவான். இயக்கத்திலிருக்கும் சக தோழனை சந்தேகிப்பதும், அவனை வேவு பார்ப்பதும்கூட அவனுக்கு வழங்கப்படும் பயிற்சி முறைகளில் உள்ளடங்கியவை. 

பொதுமக்களுக்கு மேல் அதிகாரம் செலுத்துவதற்காகவே அவன் படைக்கப்பட்டதாக ஒரு பிம்பம் அவனது மனதை நிறைக்கும் வகையில், அவன் புதிய வார்ப்பில் இடப்படுவான். அவன் மதிக்கும் வணங்கும் நேசிக்கும் ஒரேயொரு நபர் அவனது தலைவன் (பிரபாகரன்) மட்டுமே. இவ்வாறுதான் ஒரு சாதாரண தமிழ் சிறுவன், புலிப் பாசிஸ்ட்டாக உருவாக்கப்படுகிறான்.

இந்த வகையில் வளர்க்கப்பட்ட புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கைகளிலேயே நான் இப்பொழுது அகப்பட்டிருக்கிறேன். இவர்களிடம் மனித நேயம், இரக்கம், வயதுக்குரிய மரியாதை, பண்பாடு எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது எனக்குத் தெரியும். இவர்களின் கைகளில் சிக்கிச் சிதைவடைந்து போகாமல் தவிர்ப்பதே, எனது இப்போதைய ஒரே கவலை. 

அவர்களைத் திசைதிருப்பவும், நம்ப வைக்கவும் வேணுமானால், சில நேரங்களில் உண்மை பேச வேண்டும். அதன் மூலம் அவர்களின் என்மீதான நம்பகத் தன்மையைப் பயன்படுத்தி, சில விடயங்களில் பொய் சொல்ல வேண்டும். சில வேளைகளில் அப்பாவியாகவும், சமயங்களில் அதி பிரசங்கித்தனமாகவும் கூட வேசம் கட்ட வேண்டும்.

இப்போதைக்கு இந்த தயாபரன் என்ற பையன் (எனது விசாரணையாளன்) ஓரளவு பண்பானவன் போலத் தோன்றுகிறது. ஆனால் புலிகளின் வரலாற்றில் எதையும் நம்ப முடியாது. கூடப் படுத்திருந்தவனையே நள்ளிரவில் சுட்டுக் கொன்றவனை தலைவனாகக் கொண்ட ஓர் இயக்கமல்லவா இது? ஆனாலும் ஏதோவொரு காரணத்துக்காக ‘தென்னம்பாளை’ வசீகரனை மாற்றிவிட்டு, காந்தி இந்த தயாபரனைப் போட்டது சற்று நிம்மதியைக் கொடுத்தது.

தயாபரன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, “உங்களை ஏன் பிடிச்சது எண்டு தெரியுமா?” என்பதே. உண்மையில் எனக்கு அதற்கான பதில் என்னவென்று தெரியாது. வேண்டுமானால் ‘நான் அவர்களின் அரசியல் எதிரி’ எனப் பொதுவான ஒரு காரணத்தைப் பதிலாகக் கூறலாம். 

ஏனெனில் அவர்களது பார்வையில், குறிப்பான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை மட்டுமின்றி, தம்முடன் கருத்து முரண்பாடு கொண்டிருந்தவர்களையும் அவர்கள் கைதுசெய்த காலமது. என்னைச் கைதுசெய்ததற்கான காரணம் எனக்குத் தெரியாவிட்டாலும், இந்தத் தயாபரனுக்கும் அவனது தலைவர்களுக்கும் நிட்சயம் தெரிந்திருக்கும். 

இன்னும் சொல்லப்போனால், எமது தமிழ் மகாஜனங்களுக்கும் கூட அது தெரிந்திருக்கும். ஏனெனில் அவர்கள்தான், புலிகள் யாரையாவது கைது செய்தால் அல்லது கொலை செய்தால், “பொடியள் காரணமில்லாமல் ஒரு நாளும் அப்பிடிச் செய்யமாட்டாங்கள். இவர் என்னவோ அவங்களுக்கெதிராக வில்லங்கமான வேலை செய்திருக்கோணும்” என அன்றிலிருந்து இன்று வரை நற்சாட்சிப் பத்திரம் வழங்கி வருபவர்கள்.

“எனக்குத் தெரியேல்லை” எனப் பதிலளித்தேன். அவனது முகத்தில் நக்கல் நளினம் எதையும் காணவில்லை. உண்மையில் ஏதோ பாரதூரமாக யோசிப்பது போலத் தோன்றினான். பின்னர் “நீங்கள் உங்களைப் பிடிக்க வந்த ஆட்களிட்டைக் கேட்கல்லையா?” என வினவினான். 

அதற்கு நான் “கேட்டனான், ஆனால் ஒரு சின்ன விசாரணை எண்டுதான் சொல்லிச்சினம். நான் திரும்பவும் கேட்டபோது, ‘உங்களை விசாரிக்கிற ஆட்கள் சொல்லுவினம்’ எண்டு சொல்லிச்சினம்” என தயாபரனுக்கு பதிலளித்தேன். உண்மையில் என்னைக் கைதுசெய்த போது காரணம் எதுவும் சொல்லாததையிட்டு அவன் ஆச்சரியப்படுகிறானா அல்லது அவர்களது நடைமுறை (காரணம் சொல்லாத) தெரிந்திருந்தும் நடிக்கிறானா எனத் தெரியவில்லை.

“என்ன மச்சான் என்ரை ஆளை நீ பிடிச்சிட்டாய் போலை கிடக்கு” என்ற குரல் திடீரென எனக்குப் பின்னால் கேட்கத் திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்னால் வசீகரன் ஒரு விசமச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான். வழமைபோலவே அவனது கையில் காய்ந்த தென்னம்பாளையொன்று இருந்தது.

தொடரும்

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

Friday, 14 February 2014

புலிகளின் இன்னொரு முகம் -17

காந்தி திரும்பவும் எமது அச்சகப் பொருட்களைப் பற்றி கேள்வி எழுப்புவதனால், அதை அவன் எப்படியும் கைப்பற்றி விடுவது எனத் திட்டம் தீட்டியுள்ளான் எனப் புரிந்து கொண்டேன். 

பொதுவாகப் புலிகள் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் எனத் தீhமானித்தால், அதை என்ன விலை கொடுத்தும் சாதித்துவிடுவார்கள் என எனக்குத் தெரியும். எனவே இந்த விடயத்தில் பொய் ஏதாவது சொல்லப்போனால், அது எனக்குத்தான் ‘வில்லங்கமாக’ முடியும் என எண்ணினேன். 

அத்துடன் அச்சகப் பொருட்களை வைத்திருப்பது, புலிகளின் அகராதியைப் பொறுத்த வரையிலும்கூட சட்டவிரோதமானது அல்ல என்பதால், ஒளிவுமறைவின்றி  அவனது கேள்விக்குச் சாதாரணமாகப் பதிலளித்தேன்.

“அந்தப் பொருட்கள் முகமாலையில் இருக்கின்றன” எனக் கூறினேன்.

“என்ன முகமாலையிலா?” என ஆச்சரியப்பட்டு வினாவெழுப்பிய அவன், “அங்கை ஏன் கொண்டுபோய் வைச்சிருக்கிறாய்?” எனக் கேட்டடான்.

“கொடிகாமத்தில் ஒரு ‘பிரஸ்’ (Press) போடுவதற்காக, அங்கு ஒரு சிநேகித ஆளின் வீட்டிலை கொண்டுபோய் வைச்சிருக்கிறேன்” எனக் கூறினேன்.

அவன் கண்களை உருட்டி என்னைப் பார்த்தான். பின்னர் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்துவிட்டு, “ எல்லாரும் நல்லாச் சுத்தப்பழகீட்டியள்” எனச் சொன்னான்.

நான், “உண்மையாகத்தான் அங்கை பிரஸ் போடலாம் என யோசிச்சனான்” எனக் கூறினேன்.

“இஞ்சை எவ்வளவோ இடமெல்லாம் கிடக்க, அந்தக் குழைக்காட்டுக்குள்ளை கொண்டுபோய் போடுறத்துக்கு ஏதோ திட்டம் இருக்கு. அதை என்னெண்டு சொல்லு. இல்லாட்டில் இந்தப் பொல்லுக்குத்தான் வேலை குடுப்பன்” என அவன் என்னை மிரட்டினான். அத்துடன் அந்தப் பொல்லையும் தூக்கி, அதனால்  எனது தோளில் தட்டிக் கொண்டிருந்தான்.

“அப்பிடி ஒரு திட்டமும் இல்லை. யாழ்ப்பாணத்தில் எக்கச்சக்கமான பிரசுகள் இருக்கு. அதோடை வேலையாக்களைப் பிடிக்கிறதும் கஸ்டம். சம்பளமும் கூட. அதோடை யாழ்ப்பாணத்துக்கு அடுத்ததாக சாவச்சேரியிலைதான் ஒரு பிரஸ் இருக்கு. அதுக்கங்காலை கிளிநொச்சி வரையும் ஒரு பிரசும் இல்லை. அதனாலைதான் கொடிகாமத்திலை போட எண்ணினனான். 

அதோடை முகமாலையிலை நான் பிரஸ் சாமான் வைச்சிருக்கிற வீட்டுக்காரப் பொடியன் நல்லாப் பிரஸ் வேலை தெரிஞ்சவர். எனக்கு நல்ல நம்பிக்கையானவர்” என விளக்கினேன்.

ஆனால் அவன் மீண்டும் சிரித்துவிட்டு, “காரணங்கள் நல்லா யோசிச்சுத்தான் வைச்சிருக்கிறாய். உதை வேறையாருமெண்டால் நம்புவினம். நாங்கள் உங்களைப்போலை ஆயிரக்கணக்கான ஆக்களைக் கரைச்சுக் குடிச்சனாங்கள். எங்களுக்கு முந்தி ஐயர்மார் காது குத்தினவை. பிறகு பத்தர்மார் காது குத்தினவை. 

இப்ப புதிசாக உங்களைப் போலை ஆக்கள் காது குத்த வெளிக்கிட்டிருக்கறியள். உது நடக்காது. நீ எங்களுக்குப் பயந்துதான் அங்கை கொண்டுபோய் சாமானை வைச்சிருக்கிறாய். ஆனா இப்ப ஆப்பிட்டுப் போனாய். அதுதான் சமாளிக்கப் பார்க்கிறாய்” என அவன் பிரசங்கம் செய்தான்.

நான் அதற்கு, “ நான் ஒண்டும் ஒளிக்கல்லை. வைச்சிருக்கிற இடத்தைச் சொல்லிறன் தானே?” என்றேன்.

“பொத்தடா வாயை! களவும் செய்துபோட்டு, கதையும் விடுறாய்” எனச் சொல்லிக்கொண்டே, எனது தோளில் அந்தக் கொட்டனால் ஓங்கி ஒரு அடி விட்டான். அந்த அடி தோள் எலும்பில் பட்டு ‘நாதம்’ எழுப்பியது. நான் அதன்பின்னர் எதுவும் பேசாது அமைதியாக இருந்தேன்.

அதன்பின்னர் அவன், “முகமாலையிலை சாமான் வைச்சிருக்கிற இடம் உனக்கு நல்லாத் தெரியும் தானே?” என்று என்னிடம் வினவினான். 

நான் “ஓம்” என்று சொல்லித் தலையாட்டினேன்.

பின்னர் அவன் அங்கிருந்த ஒருவனை அழைத்து, “இவனை உள்ளை கொண்டுபோய் விடு” என உத்தரவிட்டான். மீண்டும் நான் சிறைக்குள் சென்றேன். உள்ளிருந்த அனைவரும் என் முகத்தை உற்றுப் பார்த்ததுடன், உடற் பகுதிகளையும் ஆராயத் தொடங்கினர். ஆனால் எனது இருப்பிடத்தில் அமர்ந்துகொண்ட நான் வேறு சிந்தனையில் ஆழ்ந்தேன். 

அதாவது ‘எம்மிடம் அச்சகப் பொருட்கள் இருக்கிறது என்பதை இவங்களுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?’ என எண்ணினேன். ஏனெனில் நாம் அச்சகம் போடும் எண்ணத்துடன் சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் அந்தப் பொருட்களை இந்தியாவிலிருந்து கொண்டு வந்திருந்தாலும், அது கைகூடும்வரை அதை இரகசியமாகவே வைத்திருந்தோம்.

இந்திய அமைதிப்படை அங்கு நிலை கொண்டிருந்த காலத்தில், அவர்களுக்கு புலிகளுடன் மோதல் ஆரம்பகாகப் போகின்றது என்பதை ஊகித்திருந்த நாம், இந்திய இராணுவத்தால் எமது புத்தகக்கடைகளுக்கும் அச்சகப் பொருட்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் எனக் கருதி, (எதிர்பார்த்தபடியே யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்னாலிருந்த எனது கடை யுத்தத்தின் ஆரம்ப நாட்களிலேயே இந்திய இராணுவத்தின் பீரங்கித்தாக்குதலில் சுக்கு நூறாகியது) அச்சகப் பொருட்களை இடம் மாற்றியிருந்தேன்.

புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் யுத்தம் ஆரம்பிப்பதற்குச் சில நாட்கள் இருக்கையில், நண்பர் ஒருவரின் உதவியுடன் மாட்டு வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்திய நான், எனது நண்பருக்கும் எனக்கும் தெரிந்த யாழ்ப்பாணக் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் நாவலர் வீதியில் இருந்த அவரது வீட்டில் எமது அச்சகப் பொருட்களைக் கொண்டு சென்று வைத்தோம். 

அந்த ஆசிரியர் யாழ்ப்பாணக் கல்லூரியை நடாத்திய கிறிஸ்தவ மிசனில் முக்கிய பொறுப்புகளை வகித்ததால், மிசனுக்குச் சொந்தமான சில அச்சகப் பொருட்கள் ஏற்கெனவே அவர் வீட்டில் இருந்தன. 

அந்தப் பொருட்களுக்கு மத்தியில் எமது பொருட்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. (எமது வேண்டுகோளை தனது கடமையாக ஏற்று, அச்சமின்றி உதவி புரிந்த அந்த அற்புதமான ஆசிரியரின் உதவியை என்றென்றும் மறக்க முடியாது)

1990ல் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையிலான யுத்தம் பிரேமதாச – புலிகள் உடன்படிக்கையின் மூலம் நிறுத்தப்பட்டு, இந்திய இராணுவத்திடமிருந்து புலிகள் ‘பிணை’ எடுக்கப்பட்டு, இந்திய இராணுவம் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், மீண்டும் ஒரு மாட்டு வண்டி மூலம் எமது அச்சகப் பொருட்களைப் புத்தகக்கடைக்கு எடுத்து வந்து வைத்திருந்தேன். இந்த நிலைமையில் இப்பொருட்கள் இருப்பதை புலிகளுக்கு யார் சொல்லியிருப்பார்கள் என்பதை ஆழமாக யோசித்தேன்.

சில மாதங்களுக்கு முன்னர் புலிகளின் பத்திரிகையான ‘ஈழநாதம்’ தினசரியின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் தற்செயலாக என்னைச் சந்தித்தபோது, “என்ன பெரிய பிரஸ் ஒண்டு போடுறதுக்கு எக்கச்சக்கமான சாமான்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவந்து வைச்சிருக்கிறியளாம்?” என வினவியிருந்தார். 

அவர் முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த ஒருவராவார். பின்னர் அவர் பொலிசாருடன் சந்தேகத்துக்கிடமான சில தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார். பின்னர் அவர் பல்வேறு இயக்கங்களுக்கும் சுத்தியடித்துவிட்டு, புலிகள் ஆதிக்கம் பெற்றதும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். (யாழ்ப்பாணம் 1995 ஒக்ரோபர் 30ம் திகதி  புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் ஈ.பி.டி.பி கட்சியினருடன் ஒட்டிக்கொண்டதாக அறிய வந்தது)

ஆனால் அவர் எம்முடன் நெருக்கமான தொடர்புகள் எதுவும் கொண்டிருக்காததால், அவருக்கு நாம் அச்சகம் தொடங்குவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருப்பதை வேறு யாரோதான் சொல்லியிருக்க வேண்டும். 

அந்தத் தகவல் கிடைத்ததும், புலிகளிடம் ‘நல்ல’ பெயர் எடுப்பதற்காக, எமது அச்சகப் பொருட்களைக் கைப்பற்ற வேண்டும் என அவர் ஆலோசனை சொல்லியிருப்பார் என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அவருக்கு இந்தத் தகவல் எப்படிக் கிடைத்தது என்பது முக்கியமான ஒரு விடயம்.

அவருக்கோ அல்லது நேரடியாகப் புலிகளுக்கோ எமது அச்சகம் பற்றிய தகவல் எவ்வாறு கிடைத்திருக்கும் என்பது பற்றிப் பின்னர் எமக்கு ஏற்பட்ட ஊகம் திட்டவட்டமானது என நிரூபிப்பதற்குப் போதிய சான்றுகள் இல்லாவிடினும், தர்க்கரீதியாக அந்த முடிவை அடைவதில் சில காரணிகள் உள்ளன. பெரும்பாலும் அதுதான் நடந்திருக்க வாய்ப்புண்டு.

அதாவது நாம் அச்சகம் ஒன்றைத் தொடங்க இருக்கும் விடயம் எமது நெருக்கமான தோழர்கள் தவிர்த்து, எம்முடன் அரசியல் ரீதியாக முரண்பட்ட ஒருவருக்கும் தெரிந்திருந்தது. 

கந்தர்மடத்தைச் சேர்ந்த அவர் அடிக்கடி எமக்கு அருகிலிருந்த ஒரு புத்தகக்கடைக்கு வந்து செல்பவர். அந்தப் புத்தகக்கடையை நடாத்தியவர்கள் எம்முடன் முரண்பாடு கொண்ட அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவர்கள். 

அவர்கள் எமது தோழர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகித்து வந்ததால், நாமும் அவர்களும் பேசிக்கொள்வதில்லை. ஆனால் அவர்களில் இந்த ஒருவர் மட்டும் இடையிடையே எமது புத்தகக்கடைக்கு வந்து எம்முடன் கதைத்து எமது அரசியல் நிலைப்பாடுகளை அறிய முயற்சி செய்வார். (எம்மை உளவு பார்க்கிறோம் என்ற எண்ணத்தில் போலும்!)

அந்த அரசியல் கட்சியினர் தம்மை இடதுசாரிகள் என்று சொல்லிக்கொண்ட போதிலும், புலிகளை ஆதரிப்பவர்கள். இலங்கையிலுள்ள அனைத்து இடதுசாரிக் (கலாநிதி விக்கிரமபாகு கருணரத்ன நீங்கலாக) கட்சிகளும் புலிகளை சந்தேகத்துக்கு இடமின்றி பாசிசவாதிகள் எனக் கருத்துக் கொண்டிருக்கையில், இவர்கள் மட்டும் புலிகளை தேசிய விடுதலைவாதிகள் எனச் சொல்லி வந்தவர்கள். 

புலிகள் மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும், மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் வகை தொகையின்றி நரவேட்டையாடி வந்த நேரத்தில், அதைப்பற்றி எதுவும் பேசாது, அரசாங்கத்தின் ஒடுக்குமுறையைப்பற்றி மட்டும் பேசி வந்தவர்கள்.

அவர்களது இந்த சோரம்போதலுக்கு பிரதியுபகாரமாக, புலிகள் தமது ஆதிக்க காலத்தில் இந்தக் கட்சியினரை மட்டும் யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாகச் செயற்பட அனுமதித்திருந்தனர். அவர்கள் அரசியல் ரீதியாகப் புலிகளை ஆதரித்தது மட்டுமின்றி, நடைமுறைரீதியாகவும் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்பதற்குப் போதிய சான்றுகள் உண்டு. (அது தனியாக ஆராயப்பட வேண்டிய ஒன்று)

அந்தக் கட்சியினரின் புத்தகக்கடைக்கு வந்து போகும் அந்தக் கந்தர்மட நபர், எதிர்பாராதவிதமாக எமது அச்சக முயற்சிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டதுண்டு. ஒருமுறை எமது அச்சகத்துக்காக எழுத்து பெட்டிகள் வைக்கும் தாங்கிகள் கொண்டுவரப்பட்டு, அதை நாம் உள்ளே எடுத்துச்சென்ற போது, அவர் அழையா விருந்தாளியாக எமக்குப் பின்னால் திடீரென உள்ளே நுழைந்து, மரப்பெட்டிகளில் அடுக்கி வைத்திருந்த அச்சகப் பொருட்களைப் பார்த்துவிட்டார். 

பின்னர் அதுபற்றி விசாரித்துத் தெரிந்தும் கொண்டார். அவர் அதைப் பார்த்துவிட்டுப் போன சில நாட்களில் அவர்கள் அணியிலுள்ள அரியாலையைச் சேர்ந்த இன்னொருவர்,  நாம் அச்சகம் தொடங்கவிருப்பதாகத் தான் கேள்விப்பட்டதாக என்னிடம் கூறினார்.

எனவே எமது அரசியல் ரீதியான விரோதிகளும், புலிகளுடன் கூடிக்குலாவியவர்களுமான அவர்களுக்கு நாம் அச்சகம் தொடங்குவது தெரிந்துவிட்டதால், நிட்சயம் அவர்கள் மூலம் புலிகளுக்கு அந்தத் தகவல் தெரிந்துவிடும் என்பது எமக்கும் தெரியும். எனவே நாம் அந்த அச்சகப் பொருட்களை அங்கிருந்து முகமாலைக்கு இடம் மாற்றியதுக்கான காரணங்களில் அதுவும் ஒன்று.

நாம் இந்தப் பொருட்களை ஒரேநாளில் முகமாலைக்கு இடமாற்றாமல், படிப்படியாகவே இடமாற்றினோம். முகமாலையைச் சேர்ந்த எனது நண்பரும் அவரது மைத்துனரும் சுமார் இரண்டு மாதங்களாக சைக்கிள்களில் அந்தப் பொருட்களை கட்டம் கட்டமாக இடம் மாற்றினர். 

என்னைக் கைதுசெய்யப்பட்ட தினத்தன்றுதான், அவர்கள் கடைசிக்கட்டமாக அந்தப் பொருட்களை எடுத்துச் சென்றனர். எதிர்பாராதவிதமாக அன்றைய தினமும் அந்த கந்தர்மட நபர் அங்கு வந்ததுடன், நாம் அச்சகப் பொருட்களை இடமாற்றுவதையும் அவதானித்துவிட்டுச் சென்றார். 

எனவே இத்தகைய சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் மூலமாகவே இந்த விடயம் புலிகளுக்கு எட்டியிருக்கலாம் என்ற சந்தேகம், எமக்கு இன்றுவரையும் உண்டு.

எனது சிந்தனைகளில் இந்த விடயம் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில், காந்தியும் அவனது சகாக்களும் அந்த அச்சகப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தமை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 

இரவானதும் அவர்களில் சிலர் சிறைக்கு வந்து என்னை வெளியே அழைத்து, முன்னர் நான் இங்கு வரும்போது உடுத்துவந்த வெள்ளைச் சாரத்தையும் சேர்ட்டையும் தந்து, அவற்றை அணிந்து கொள்ளச் சொன்னபோது, என்னை விடுதலை செய்யப் போகிறார்களோ என்ற ஒரு சிறு நப்பாசைதான் எனக்கு முதலில் உண்டானது. 

அதன்பின்னர், அவர்கள் எனது கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிவிட்டு, ஒரு வாகனத்தில் முன்பக்கம் ஏற்றிக் கொண்டனர். எனக்கு இருபக்கமும் காந்தியும் உதயனும் உட்கார்ந்து கொண்டனர். வாகனத்தின் பின்னால் துணைக்காக ஐந்தாறு புலிகள் ஏறிக்கொண்டனர். 

எங்கே போகிறோம் என்பதை அவர்கள் எனக்குத் தெரிவிக்கவில்லை. ஆனால் எனக்குள் இது சம்பந்தமாக ஒர் ஊகம் இருந்தது. எமது வாகனம் இரவின் அந்தகாரத்தை ஊடறுத்துக்கொண்டு, சுமார் ஒரு மணித்தியாலம் ஓடிய பின்னர், எங்கேயோ நின்றது. 

எனது கண்களை மூடிக் கட்டப்பட்டிருந்த கறுப்புத் துணிகள் அகற்றப்பட்டன. எமது வாகனம் முகமாலைச் சந்தியில் கண்டி வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு முன்னால் நின்றிருப்பது தெரிந்தது.

நான் பல தடவைகள் வந்து சென்ற அந்த இடத்தைப் பார்த்த போது, பழைய நினைவுகள் மனதில் தோன்றி அந்த இனிமையான நாட்களுக்கு என்னை இட்டுச் சென்றன.

காந்தி என்னைப் பார்த்து, “எந்தப் பக்கம் போக வேணும்” எனக் கேட்டான். 

நான் அவனிடம், “தெற்குப் பக்கமாகப் போக வேணும்” என்று சொல்லவிட்டு, கைகளை அந்தப் பக்கம் காட்டினேன்.

வாகனம் புகையிரதப்பாதையைக் கடந்து தெற்கு நோக்கிய கிரவல் பாதையில் குலங்குpக் குலுங்கிப் பயணிக்கத் தொடங்கியது. மழை பெய்திருந்தபடியால், வீதியின் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்தப் பாதையில் சிறிது தூரத்தில் புலிகளின் பெண்கள் அணியின் ஒரு முகாம் இருப்பது எனக்குத் தெரியும். 

அந்த முகாமின் முன்னே நாம் பயணித்த வாகனம் சென்றபோது, சில பெண் புலிகள் துப்பாக்கிகளுடன் முன்னே வந்து எமது வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். உடனும் பின்னால் இருந்து பயணித்துக்கொண்டிருந்த புலி உறுப்பினன் ஒருவன் துள்ளிக்குதித்து ஓடிவந்து, அந்தப் பெண் புலிகளிடம் வாகனத்தில் பயணிப்பது யார் (காந்தி) என்பதை விளக்கியதும், அவர்கள் மரியாதையுடன் விலகிக் nஅகாண்டனர்.

அதன்பின்னர் நான் வழிகாட்ட, வாகனம் எமது அச்சகப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னால் போய் நின்றது. காந்தியின் உத்தரவுக்கிணங்க நான் வீட்டுக்காரரின் பெயர் சொல்லி அழைத்தேன். 

வந்திருப்பது நான்தான் என அறிமுகப்படுத்தி அழைத்ததால், அந்த வீட்டுக்காரர் ‘இந்த அகால வேளையில் என்னத்துக்காக வந்திருக்கிறார்?’ என்ற பதைப்புடன், நித்திரையைவிட்டு எழுந்தோடி வந்தார். ஆனால் புலிகள் அவரை என்னை அணுக அனுமதிக்கவில்லை. 

என்னுடன் சுதந்திரமாகக் கதைக்கவும் விடவில்லை. அவர்கள் சொல்லித்தந்தபடி அச்சகப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தைக் காட்டும்படி அவரிடம் நான் கூறினேன்.

அதன்பின்னர் அந்த வீட்டுக்காரரிடம் பெற்ற சாக்குகளின் உதவியுடன், மிகக் கனதியான அந்தப் பொருட்களை அவர்கள் தூக்கி வந்து வாகனத்தில் ஏற்றினர். அதில் சில பொருட்கள் புலிகளின் கண்களில் படாது தப்பிவிட்டதாகவும், அவற்றை அந்த வீட்டுக்காரர் சில மண் பானைகளில் போட்டு (அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்து விக்கிரகங்களை இவ்வாறு பானைகளுக்குள் ஒளித்து வைத்து தமிழ் மக்கள் வணங்கியமை நினைவுக்கு வந்தது) நீணடகாலமாக மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்ததாகவும் பின்னர் அறிந்து கொண்டேன். அதன் தற்போதைய நிலை எனக்குத் தெரியவில்லை.

அதன்பின்னர் அந்த வாகனம் ‘கொழுத்த வேட்டை’யுடன் சிறைச்சாலை வளாகம் நோக்கிப் பயணித்தது. இவ்வாறு அரும்பாடுபட்டு, உயரிய நோக்கங்களுக்காக நாம் வாங்கியிருந்த, பெறுமதிமிக்க (அன்றைய நிலையில் அதன் பெறுமதி 15 இலட்சம் ரூபா வரை இருக்கும்) அந்த அச்சுச் சாதனங்கள், இந்தக் கொள்ளைக்காரப் புலிகளால் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த எழுத்துக்களே பின்னர் புலிகளால் வெளியிடப்பட்டு வந்த ‘ஈழநாதம்’ தினசரியில் பல்வேறு அழகு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டன என அறிந்தேன்.

நான் சிறைக்குத் திரும்பி வந்து, எனது சிறை உடுப்புக்கு மாறி, உள்ளே சென்றபோது, உள்ளேயிருந்த சிறிய அறைக்குள்ளிலிருந்து ஒரு கைதி மிகவும் பெருத்த குரலில் ஓலமிட்டு அழுவது கேட்டது. 

அவர் அடிக்கடி “ஐயோ என்னைச் சுட்டுக் கொல்லுங்கோ” என கூக்குரலிட்டு அழுதுகொண்டிருந்தார். அதைக் கேட்க எனக்கு பெரும் அதிர்ச்சியாகவும், பயமாகவும், அந்தரமாகவும் இருந்தது. சிறிது நேரத்தில் சில புலிகள் சிறையைத் திறந்து உள்ளே வந்து, சில கைதிகளின் உதவியுடன் அந்த ‘சீவனை’த் தூக்கிக்கொண்டு வெளியே போயினர்.

என்னே கொடுமை! அவரது வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும், இரத்தம் இரத்தமாக வடிந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

தொடரும்.

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்