Follow by Email

Wednesday, 17 April 2013

அம்மா பிரதமர் ஆவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது.!!
அடுத்த ஆண்டு நடக்க உள்ளது நாடாளுமன்ற தேர்தல். தேர்தல் வருகிறது வெல்லப்போவது யாரு? என்ற கேள்வி படித்தவர் முதல் பாமரன் வரை இருக்கவே செய்யும்.

அதற்கு தீனி போடுவது போல், பல நிறுவங்கள் களத்தில் குதிக்கும். 

நாங்கள் நாடு முழுவது பயணம் செய்து 4,444 பேரிடம் மாதிரி வாக்கெடுப்பு நடத்தினோம். அதன் அடிப்படையில் இந்த கட்சி பதவி இழந்து அந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்கிற ரீதியில் செய்திகள் வெளியாகும். 

சில சமயம் இது உண்மையாகி இருக்கிறது. பல சமயம் தோல்வியில் முடிந்திருக்கிறது. இருந்தாலும் இந்த ஜோசியத்திற்கு ஒரு மதிப்பு இருக்கவே செய்கிறது.டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஒரு கருத்து கணிப்பு நடத்தி இருக்கிறது. 

கருத்து கணிப்பு சொல்லும் விஷயம் என்ன தெரியுமா? 

பிரதான தேசிய கட்சிகளுக்கு வேப்பெண்ணெய் பலகாரத்தில் விருந்து வச்ச மாதிரி கசப்பான செய்திதான் அது.

அதாவது      எதிர் வரும்     நாடாளுமற்ற     தேர்தலில் பா.ஜ.க.   கூட்டணிக்கும் பெரும்பான்மை     கிடைக்க போவதில்லை, ஆட்சியில்   இருக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும்  பெரும்பான்மை கிடைக்க போவதில்லை என்று புளியை கரைத்திருக்கிறது டைம்ஸ் நவ் டி வி.  

அதுமட்டுமல்ல, ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்கா விட்டால்,  அடுத்து என்ன.... மாநில கட்சிகளிடம் தான் மண்டி போட வேண்டும்  என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.

அந்த செல்வாக்கு மிக்க மாநில கட்சிகள் எது தெரியுமா?

தமிழகத்தில் அ.தி.மு.க. அடுத்து ,  முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்று அடுத்த குண்டையும் வீசி இருக்கிறது.

என்னது அ.தி.மு.க. வா? 

நம்புங்க தலைவா? நம்புங்க. 

ஒரு புறம் கடுமையான மின் தட்டுப்பாடு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, ஒட்டுமொத்த அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வு.

மந்திரி பெயரை மக்கள் நினைவுக்கு வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு வாரா வாரம் மந்திரிசபை மாற்றம், அதிகாரிகள் மாற்றம் என அதிருப்திகள் ஒரு புறம் விடாது கருப்பு என்று துரத்திக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டி அம்மா அலை அடிக்கிறது.

அலை அடிக்க என்ன காரணம்?

இலங்கை விவகாரத்தில் மாணவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு  அரசு எடுத்த நடவடிக்கை,  காவிரி விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பு,  இது இரண்டும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே நல்ல பெயர் கிடைக்க கதவை திறந்துள்ளது.

கடந்த முறை  வெறும் 9 இடங்களில் வென்ற அ.தி.மு.க,  இந்த முறை 27 இடங்களில் வெற்றி பெரும் என்று அம்மா பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி  கொடுத்திருக்கிறது நவ் டி வி.

ஐயோ.. அப்போ தி மு க?

பிசாசு மாதிரி பின் தொடர்வது 2ஜி.   அதை தொடர்ந்து காத்து கருப்பாக இருப்பது இலங்கை விவகாரம்.

இலங்கை விவகாரத்தில் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரசுடன் கடைசி வரை இருந்து விட்டு வெளியேறிய தி.மு.க.வை மக்கள் மறக்க, மன்னிக்க தயாராக இல்லை என்கிறது கருத்து கணிப்பு.

கடந்த முறை கிடைத்த 18 இடங்களில் பாதியாவது கிடைத்தால், கலைஞர் நம்பாத கடவுள் பாக்கியம்.

கடவுளே... அப்போ காங்கிரஸ்?

தமிழ்நாட்டை மறந்துட வேண்டியதுதான். ஒரு சீட் கூட கிடைக்காது என்கிறது கணிப்பு.

இது தற்போதைய நிலைமை.

தேர்தல் வருவதற்குள் காங்கிரஸ் மற்றும் தி மு க எதையாவது செய்து நல்ல பெயர் வாங்கினால் இது மாறலாம் என்கிறது அதே கணிப்பு.

இது ஒன்றும் முடிவல்ல, இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு உருப்படியா எதையாவது செய்யுங்க. நல்ல பெயர் வாங்கலாம்.

இல்லாவிட்டால்,  அம்மாவின் முரட்டு பக்தர்கள் சொல்வது போல்,  அம்மா பிரதமர் ஆவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது.இதையும் படிங்க

கலகலக்குது காங்கிரஸ் பேஸ்புக்!! அடடா!!


No comments:

Post a Comment