Follow by Email

Monday, 31 December 2012

நண்பரை தேடி!


இது 20 வருடத்துக்கு முந்தைய கதை. 

அப்போது பார்த்தது.  என் அன்பு நண்பர் சுந்தரமூர்த்தி. வேதாரணியம் வடக்கு மட விளாகத்தில் குடி இருந்தவர். 

இப்போது சென்னையில் இருக்கிறார் என்று தெரியும். ஆனால் அவர் தொடர்பு முகவரி மற்றும் போன் நம்பர் இல்லை. 

முதலில் தாமரை மாத இதழில் வேலை செய்தார். பின் நக்கீரனில் பணியாற்றினார். அதன் பிறகு அவரை பற்றிய விவரம் தெரிய வில்லை. 

இந்த இனிய புத்தாண்டில் அவரை தொடர்பு கொள்ள முடியுமா என்று ஆவலோடு இருக்கிறேன். 

ஒரு வேளை அவர் இந்த செய்தியை படிக்க நேர்ந்தாலும் சரி, அல்லது அவரை தொடர்பில் இருக்கும் நண்பர்கள் அவருக்கு தகவல் சொன்னாலும் சரி.. மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். 

என் வலை பக்கத்தில் செய்தியாக அனுப்பினால் மகிழ்வேன். நன்றி 

நம்பிக்கையுடன். 

கிருஷ்ணதாசன் என்கிற ஸ்ரீகிருஷ்ணன் 

2013 ல் என்ன செய்யபோகிறோம்.


அப்பாடா.. தப்பிச்சிட்டோம். பயமுறுத்திக்கொண்டிருந்த 2012 ம் வருடத்தை ஒருவாறாக வழி அனுப்பி வைத்து விட்டு, வெற்றிகரமாக 2013ம் ஆண்டுக்குள் நுழைந்து விட்டோம். நிம்மதி பெருமுச்சு விடதொன்றுகிறது. 

2012 டிசம்பர் 21இல் உலகம் அழியப்போகிறது என்ற செய்தி உலக மக்களை அதிகமாகவே அச்சுருத்திக்கொண்டிருந்தது.

அதோடு அழியும் அழியாது என்ற வாதங்களும் ஜோசியமும் பரபரப்பை ஏற்ப்படுத்தி கொண்டிருந்தது. 

ஆனாலும் எதைபற்றியும் கவலைப்படாமல் வாழக்கையை எப்போதும் போல் ஒட்டிக் கொண்டிருந்தவர்களும் இருந்தார்கள். 

வழக்கம் போல் அடுத்தவரின் பணத்தை வழிப்பறி செய்தவர்கள், வழிப்பறி செய்து கொண்டு தான் இருந்தார்கள். கொலை செய்பவர்களும், வன்முறையில் ஈடுபடுபவர்களும் கருமமே கண்ணாக இருந்தார்கள்.

ஒருகால் இந்த செய்தி உண்மையாகவே ஆகி இருந்தால் என்னதான் ஆகி இருப்போம்.


செத்து சாம்பலாய் அல்லது தண்ணீருக்குள் மூழ்கி புதைந்தல்லவா போயிருப்போம். நாம் சேமித்து பாதுகாத்து வைத்திருக்கும் நம் உடமைகளும் நம்முடன் சமாதி அல்லவா ஆகி இருக்கும்.

செத்து போகப்போகிறோம் என்று நாள் குறித்தால் கூட ஏதும் நல்ல காரியம் செய்ய மட்டும் பலருக்கு மனம் வருவதில்லை. பெட்டியில் வைத்து பூட்டிய பணத்தை எண்ணி எண்ணி பார்த்து விட்டு செத்து போகிறவர்களும் உண்டு.

சரி போகட்டும் விடுங்கள்.

எல்லோரும் ஒரு நாள் போய் சேரத்தான் போகிறோம். எப்படியோ 2012 கண்டத்தை தாண்டி விட்டோம். ஆனாலும் இந்த பூமிக்கு அழிவு ஏற்ப்படுத்தும் காரியங்களை ஒட்டு மொத்த உலக ஜனங்களும் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.


காடுகளை அழிப்பது முதல், பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவது வரை, நீர் நிலைகளில் ஆலைகளின் கழிவுகளை திறந்து விடுவது முதல், கப்பல்களில் கொண்டு போய் கடலில் கழிவுகளை கொட்டுவது வரை,  நாம் செய்கிற எல்லா செயல்களுமே பூமிக்கு சாவுமணி அடித்துக்கொண்டிருக்கிறது. 

 தொழிற்ச்சாலைகளின் பெருக்கம், புகை எல்லாமே இந்த பூமிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் சவக்குழி வெட்டும் வேலையை சரியாய் செய்து கொண்டிருக்கின்றன.

நாடு, இன, மத, ஏழை, பணக்காரன் வேறுபாடுகளை களைந்து, இந்த விஷயத்தில் மட்டும் கை கோர்த்துக் கொள்வதில் உலக மனிதன் பரந்த மனப்பான்மையோடு நடந்து கொள்கிறான். 


ஆற்று மணலை அள்ளி நிலத்தடி நீரை வற்ற செய்வதில் பெரும் போட்டியே நடக்கிறது. என்ன ஆகப்போகிறதோ... !

சரி... 2013 பிறக்கிறது 

உங்கள் பேரன்களும் பேத்திகளும், உங்கள் அடுத்த கட்ட தலைமுறைகளும் வாழையடி வாழையாய்  வாழப்போகும் இந்த பூமியை பாதுகாக்க நீங்கள் செய்யப்போவது என்ன?

மதிவாணன்

2013எத்தனை எத்தனை
அனுமானங்கள்
அத்தனையும் பொய்த்து போய்
புத்தாண்டில் மீண்டும்
புதிதாய் பிறந்தோம்

பூமியின் அருமையை அனைவருக்கும்
உணரவைத்து
பூமிக்கு வந்த
அந்த கண்டம் விலகியது.
சூரிய குடும்பமும் தப்பியது.

இது இறைவன்
மனிதர்களுக்கு தந்த இன்னொரு வாய்ப்பு
அனைத்து உயிர்களுக்கும் மறு பிறப்பு

இனி புதிதாய் வாழ்வோம்
பூமியை நேசிப்போம்
இயற்கையை பூசிப்போம்

பூமியில் வாழும் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணித்துளியும்
மனிதனாய் வாழ்வோம்
மனித நேயம் கொள்வோம்

கோவத்தை களைந்து குப்பையில் வீசுவோம்
அன்பெனும் உடையை அணிந்து கொள்வோம்
போட்டி
பொறாமை
பூசல்கள்
இல்லாமல் பூமியை சுத்தமாய் வைப்போம்

சண்டை சச்சரவு
சத்தங்கள் இல்லாமல்
உலகில் அமைதியை விதைப்போம்

பாசம் என்னும் பசுமையை வளர்ப்போம்
வாழ்க்கையை மட்டும் அல்ல
வாழ மடி தந்த பூமியையும்
வசந்தமாய் மாற்றி அமைப்போம்

என்றும்....
என்றென்றும்.....

மதிவாணன் 

Sunday, 30 December 2012

விதியை வெல்ல முடியுமா?


புதுமைகளுக்கு பெயர் போன மனித மனம், இப்போது புதுமையான சிந்தனைக்கு வந்திருக்கிறது. 

என்னவோ?

நல்ல நேரம் பார்த்து டெலிவரி.

புரியலையே...?

அட... ஞான சூனியம்... பிள்ளை  பிறந்த  பிறகு  நேரம் காலம்  எப்படி இருக்குன்னு ஜோசியம் கேட்கிறதை விட, பொறக்கிற நேரத்தையே நல்ல நேரமா பார்த்து பிறக்க வச்சுட்டா...!

கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால்.. மழைபேரும், மகப்பேறும் அந்த மகேசன் அறிந்த ரகசியம்ன்னு சொல்வாங்கலேப்பா...

அது அந்த  காலம். இது  கம்புட்டர் யுகம்.  ஆபரேசன்  செய்றதுக்கு  டாக்டரை பிடிச்சுட்டா.... சரியாப் போய்டும்.

அடடா.. நூதன வழியா இருக்கே. 

நூதன வழியிலை.  இதுதான் எதார்த்த  உண்மை. 

அந்த கிரகம் அங்கே இருக்கு அதனால அது நடக்கும். இந்த கிரகம் இங்கே இருக்கு அதனாலே இது நடக்கும்னு ஜோசியர் குண்டு போட முடியாது. 

அதோட.. நல்ல யோக நேரத்திலே குழந்தை பிறந்திட்டா... நம்ம கஷ்டம் நம்ம பிள்ளைங்களுக்கு வராது....எப்படி? 

அது என்னவோப்பா... ராவணன் மட்டும்தான் அப்படி பிள்ளை பெத்துகிட்டதா படிச்சிருக்கேன்.

ஓ... புராண காலத்திலேயே இது நடைமுறைக்கு வந்திட்டா.. எப்படி...கொஞ்சம் விளக்கமா சொல்லு.

ராவணனை  தெரியும். பரமசிவனுக்கு ரொம்ப பிடித்தவன். அவன் இசை மீட்ட தொடங்கினால், அவர் அந்த இசையில் மயங்கி போகிற அளவிற்கு அற்புதமா வாசிப்பானாம்.

ராவணம் பிறப்பில் அரக்கர் இனத்தில் பிறந்து இருந்தாலும் வாழும் முறையில் ஒரு பிராமணத்தனம் அவனிடம் இருக்குமாம். அத்தனை வேதமும் அவனுக்கு அத்துபடி.


தர்க்க சாஸ்திரம் முதல், தர்ம்ம சாஸ்திரம் வரை அறிந்தவன். இவ்வளவு பெருமை வாய்ந்த ராவணன் தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று நினைக்கிறான்.

இதில் ஒன்றும் தவறில்லையே.

தவறில்லைதான். அந்த நேரத்தில் அவன் அரசவையில் சில ஆலோசனை சொன்னார்கள்.

ராவணா.... என்னதான் நாம் சக்தி பெற்று பலசாலிகளாக இருந்தாலும்,  இந்த பாழாய்ப்போன நவகிரகங்கள் தான் ஆயுளையும், ஆரோக்கியத்தையும், அவன் எதிர்காலத்தையும் நிர்ணணயம் செய்கின்றன.

அதனால் நம் நாட்டின் குலக்கொழுந்து பிறக்கும் நேரத்தை நாம் சரியாக தீர்மானிக்க வேண்டும்.


நீங்களும் நானுமாக இருந்திருந்தால் நல்ல ஜோசியரை தேடிப்போய் நேரம் குறித்து கேட்டிருப்போம். ஆனால் ராவணன் என்ன செய்தான் தெரியுமா? நவகிரங்களை குண்டு கட்டாய் தூக்கி வரசொன்னான்.  அனைத்து கிரகங்களும் அங்கே ஆஜர்.

படுபாவி என்ன செய்யப்போகிறானோ என்று பயத்தில் நடுங்கி கொண்டிருந்தன கிரகங்கள்.


நவகிரக நாயகர்களே... நான் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன். அவன் அகில உலகத்திலும் இல்லாத ஒரு பலசாலியாக இருக்க வேண்டும்.

அவன் என்னிலும் பலம் வாய்ந்தவானாக இருக்க வேண்டும். அதனால் அப்படி ஒரு குழந்தை பிறக்க நீங்கள் எப்படி? எந்த எந்த இடத்தில் ஜாதக நிலையில் இருக்க வேண்டுமோ, அந்த நிலையில் நீங்கள் இருக்க வேண்டும். சரியா?

பயந்து போய் கிடந்த கிரகங்கள்..உடனே அதற்கு சம்மதம் சொன்னது.

சரி.. இன்றே கர்ப்பதானம் செய்யப்போகிறேன். நீங்கள் தயாராக இருங்கள் என்று சொன்ன ராவணன்... அந்தபுரம் நோக்கிப்போனான்.

பாய்ந்து போன கிரகங்கள் பதிலேதும் சொல்லவில்லை. மறுத்து பேசினால் மாட்டிக்கொள்வோம் என்பது தெரியும்.

ராவணன் சென்ற பிறகு கூடிப் பேசின கிரகங்கள்.  ராவணன் அந்தப்புரம் சென்று விட்டான். இன்னும் சற்று நேரத்தில் மண்டோதரி கருவுறப்போகிறாள்.

அப்படி கருவில் உருவாகும் குழந்தைதான் சர்வ வல்லமை பெற்றவனாக பிறக்க வேண்டும் என்கிறான்.

இந்த லோகத்தில் இவன் ஒருவனையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. இவனை விட பலசாலி மகன் பிறந்து விட்டால், நம்கதி அதோகதி தான். என்ன செய்வது என்று ஒருவருக்குள் ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

அப்போது சனிபகவான் ஒரு யோசனை செய்தார். ராவணன்.. நம்மை பற்றி மட்டுமே யோசித்திருக்கிறான். என் மகன்தான் அகால மரணத்திற்கு காரணம் என்பதை அவன் மறந்து விட்டான்.

அதனால் அவனுக்கு தெரியாமல் பிறக்கபோகும் குழந்தையின் ஆயுள் பாவத்தில் என் மைந்தன் மாந்தியை நிற்க சொல்லி விட்டால், பின் அவனை நாம் அழித்து விடலாம்.


நல்ல யோசனை என்று எல்லாகிரகங்களும் ஒப்புக்கொண்டன. மண்டோதரி கருவுற்ற நேரத்தில் மாந்தி ஆயுள் பாவத்தில் நின்றதால் இந்திரஜித் அற்பாயுள் ஜாதகத்தில் பிறந்தான்.

ஆக.....சர்வ வல்லமை பெற்ற ராவனையே ஏமாற்றிய கிரகங்கள் சாமானிய மனிதனுக்கு வழிவிடுமா?

நல்ல கேள்வி.

இப்போ... ஒரு மனிதனுக்கு தேவைகள் ஆயிரம் இருக்கு. முதலில் நல்ல ஆயுளோடு பிறக்க வேண்டும். ஆயுள் மட்டும் இருந்தால் பத்தாது ஆரோக்கியமும் சிறக்க வேண்டும். கல்வியில் முதிர்ச்சி வேண்டும். அதற்கேற்ற நல்ல வேலை வேண்டும்.


அழகான மனைவி வேணும். அறிவோட நல்ல பிள்ளைகள் பிறக்கணும். வீடு வேணும், வாகனம் வேணும், அப்பறம் பிக்கல் புடுங்கல் இல்லாத வாழ்க்கை வேண்டும்.

சரிதான்.

இதை எல்லாவற்றையும் தருவது கிரகங்கள். ஒன்றை தருகிற கிரகங்கள் ஒன்றை தராமல் ஏமாற்றி விடுகின்றன.  இதுதான் எல்லாருடைய  வாழ்க்கையிலும்  நடக்கும்.


இதுவும் சரிதான்.

என்ன சரிதான் பொரிதான்னு  சொல்லிக்கிட்டு இருக்கே.

இல்லைப்பா.. நீ சொல்றது உண்மை தானே. அதான் சரின்னு சொன்னேன்.

ஓகே... இப்போ சொல்லு... சுழலும் கிரகங்கள் தங்கள் இடத்தில் இடத்தில் இருந்து மாறப்போவதில்லை.


அன்பான அப்பா அம்மா உறவு, நல்ல வேலை, வசதி வாய்ப்பு என்ற கோணத்தில் ஒரு லக்னத்தை  முடிவு செய்தால், மறுபுறம் கடன், எதிரிகள் தொல்லை, எதிர்பாராத கண்டங்கள் தரும் கிரக அமைப்பு இருக்கலாம்.

நல்ல மனைவி குழந்தைகள் எதிர்காலம் என்ற கோணத்தில் பிறப்பு நேரத்ததை முடிவு செய்தால், வசதிகள் குறைவு, பிதிர் பகை என்று வேறு ஏதாவது குற்றம் அந்த ஜாதகத்தில் அமையலாம்.

அட...இது கூட சரிதான்.

இது கூட அல்ல..... இதுதான் சரி.   ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை ஜோதிடன் முடிவு செய்ய முடியாது.

அப்படி ஜோதிடன் முடிவு செய்கிறான் என்று நினைத்தால் அந்த குழந்தை எந்த மாதிரியான ஜாதக அமைப்பில் பிறக்க வேண்டும் என்ற விதி அமைப்பு இருக்கிறதோ,  அந்த அமைப்பில் தான் பிறக்கும். இதில் ஒன்றும் மாற்றம் இல்லை.  அதுதான் விதி.


Friday, 28 December 2012

பிள்ளை வரம் தரும் மன்மதன் தேங்காய்!

தாரகன்!

அரக்கர் குலத்து வாரிசு. அவன் முன்னோர்கள் எல்லாம் விண்ணையும், மண்ணையும் கட்டி ஆண்ட போது, வாரிசுக்கு மட்டும் அந்த ஆசை வராமலா போகும். 

வந்தது.

பொதுவாக எண்ணியதை பெற என்ன வழி? 

இறைவனை சரணாகதி அடைவது. ஆனால் அரக்கர் இனத்தை பொறுத்தவரை அறிவு வேறு விதமாக வேலை செய்யும். கெஞ்சி கூத்தாடுகிற ரகமெல்லாம் இல்லை. நேரடியாக தவம்தான். 

கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு தவம் செய்து, இறைவனே மனம் இளகி தந்தேன் வரம் என்று சொல்லும் வரை ஓயவே மாட்டார்கள். அந்த வகையில் தாரகனும் தவம் செய்ய ஆரம்பித்தான்.

யாரை நோக்கி?

பிரம்மதேவனை நோக்கி.

காலங்கள் உருண்டோடியது.  தாரகனின் தவவலிமை எட்டுக்கண் விட்டெரிக்க ஆரம்பித்து. உடம்பில் இருந்து எழுந்த உஷ்ணம் தேவலோகத்தையும் வாட்டி எடுத்தது.

ஓன்று கூடினார்கள் தேவர்கள். தாரகனின் தவம் அடுத்து வரப்போகும் ஆபத்தை விளக்குகிறது. உடன் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று மந்திராலோசனை நடத்தினார்கள். ஒரு தெளிவு பிறந்தது.

அபாயம் என்றால் அரவணைத்து பாதுகாப்பு அளிப்பது மும்முர்த்திகள் தானே? அவர்களிடமே முறையிடலாம் என்று முடிவாயிற்று. முதலில் நினைவுக்கு வந்தவர் சிவபெருமான்.

ஆனால் அவர் நிஷ்டையில் அமர்ந்து நெடுங்காலம் ஆயிற்று. அடுத்து யார் என்று யோசித்ததில் பிரம்மா தேவனிடமே சென்று சொல்வது என்று முடிவாயிற்று.

கோரிக்கை மனுக்களோடு கொடிபிடிக்காத குறையாக பிரம்மனின் கோட்டையை நோக்கி ஊர்வலம் போனார்கள் தேவர்கள். வந்தவர்களை அமர சொல்லி என்ன என்று கேட்டார் பிரம்மதேவன்.

பிரம்மதேவா... அரக்கன் தாரகன் கடும் தவம் புரிகிறான். அங்கிருந்து எழும் தீ சுவாலைகள் தேவலோகத்தையே எரித்து சாம்பலாக்கிவிடும் போலிருக்கிறது. அவன் தவத்திற்கு ஒரு முடிவு கட்டி எங்களை காத்தருள வேண்டும்.

தன்னை நோக்கி தவம் செய்பவனை எப்படி தண்டிப்பது. முதலில் வரம் தருவதுதான் முறை. தவறு  செய்தால் பின்னர் தண்டிக்கலாம் என்று எண்ணியவர், தாரகன் முன் தோன்றினார்.

தாரகா...  உன் தவத்தை மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்.

பிரபு....தாங்கள் படைத்த உயிர்களிலேயே அதிக பலம் கொண்டவனாக நான் வாழ வேண்டும்.

சரி..

எனக்கு மரணம் என்று வந்தால் சிவனின் புத்திரனால் வரவேண்டும். அதுவும் பாலகனாக இருக்க வேண்டும். அவன் சாரதியாக வந்தால் மட்டுமே எனக்கு மரணம் ஏற்பட வேண்டும்.

இப்படி ஒரு வரம் கேட்க காரணமே... உலகத்திலே பலம் பெற்றவனாக வரம் பெற்ற பிறகு, ஒரு பொடிப்பயல் வந்து நம்மை வெல்ல முடியாது என்கிற தைரியம்தான்.

ஆரம்பம் என்று வந்து விட்டால் முடிவு என்பது வராமலாப் போகும். வரும் என்பதை உணர்ந்த பிரம்மன் தந்தேன் வரம் என்று தந்துவிட்டு போய்விட்டார்.

அடுத்து என்ன.... வழக்கம் போல் வம்புதான்.அரக்கர்கள் பிறவி குணமே சின்னதை கொடுத்து பெரியதை விலைக்கு வாங்குவதுதானே.

அந்த வகையில் வலிய வம்புக்கு சென்றான். தொடை நடுங்கிய தேவர்களும் தொண்டுழியம் புரிந்தார்கள் தாரகனுக்கு.

நம்ம ஜோதிட சூரியன் சந்திரன் கூட இதற்க்கு விதிவிலக்கல்ல.  தேவேந்திரன் தன் அரியாசனத்தை காத்துக் கொள்ள மாதம் தோறும் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான்.

காலங்கள் உருண்டோடியது. குட்ட குட்ட குனிந்துக்கொண்டிருந்த தேவர்களுக்கு சட்டென யோசனை பிடிபட்டது. எத்தனை காலம்தான் இப்படி அடிமை சேவகம் புரிவது என்று ஓன்று கூடிய தேவர்கள் சென்று பார்த்தது பிரம்மனை.

அவர்தானே வரத்தை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கியது. யோசித்த பிரம்மன் பின் வருமாறு கூறினார்.

வரத்தை கொடுத்த நானே அவன் வாழ்நாளை முடித்து வைக்க முடியாது.  எனக்கு இறப்பென்று வந்தால்  சிவனின் அம்சம்தான் என்னை கொல்ல வேண்டும் என்ற வரத்தை பெற்றிருக்கிறான். அதனால் இதற்கு சிவன் தான் தீர்வு காண முடியும்.

சரி... சிவனை அணுகி முறையிடலாம் என்றால் அவர் நிஷ்டையில் அமர்ந்து நெடுங்காலம் ஆயிற்று. பார்வதி தேவியோ பக்கத்தில் அமர்ந்து பணிவிடை செய்து வருகிறாள். எப்படி போய் நம் குறைகளை சொல்வது.

திகைத்த தேவர்களுக்கு ஒரு யோசனையை கூறினார் பிரம்மன். அதன் அடிப்படையில் தேவேந்திரன் மன்மதனை அழைத்தார்.

மன்மதா.. தாரகனை அழிக்க சிவனின் வழியாக ஒரு புத்திரன் பிறக்கவேண்டும். ஆனால் சிவனோ உலக சிந்தனையே இல்லாமல் ஆழ்ந்த தவத்தில் ஆழ்ந்துவிட்டார்.

அதனால் அங்கு சென்று அவர் தவத்தை கலைத்து காமத்தை ஊட்டினால் ஒரு வழி பிறக்கும்.

கட்டளையை ஏற்றுக்கொண்ட காமன் தன் சக நண்பன் வசந்தனோடு, சிவபெருமான் தவம் செய்யும் இடத்திற்கு சென்றான். கூடவே ரதி.


அவ்விடத்திற்கு வந்ததும் வசந்தன் தன் வேலையை ஆரம்பித்தான். அவ்வளவுதான்..... அதுவரை சுட்டெரித்துக்கொண்டிருந்த கோடை வெயில் குளிர்ந்தது. கார்மேகங்கள் வானமெங்கும் சூழ்ந்தது. மரம் செடி கொடிகள் எல்லாம் துளிர்த்து பூக்க தொடங்கின.

குயில்கள் கூவியது . வண்டுகள் ரீங்காரமிட்டது. இளம் தென்றல் காற்று பூவின் நறுமணத்தை சுமந்து கொண்டு தவழ்ந்தது.

அந்த சுழல் எப்பேர்பட்ட ஆண்மகனையும், பெண்ணையும் காமம் கொள்ள வைத்துவிடும். மன்மதனும்  ரதியோடு கூடல் நடத்தியபடி கரும்பு வில்லால் சிவனை தீண்டினான்.

நடக்கும் சம்பவங்கள் எதையும் அறியாத பார்வதி குளத்திற்கு சென்று நீராடி, புத்தாடை உடுத்தி தண்ணீர் கொண்டு கொண்டிருந்தாள். திடீரென மாறிப்போன கால சுழல் அம்பாள் மனதிலும் ஆசையை வளர்த்தது.

மன்மததின் வில்லடிபட்ட சிவன் கண் விழித்தார். அருகில் ரதியும் மன்மதனும் ஆற தழுவியபடி ஆனந்த நடனம் புரிந்தனர்.

அதை கவித்த என்பெருமான் நிமிர்ந்து பார்க்க, எதிரே புத்தாடை உடுத்தி புதுக்கொலத்தில் வந்த பார்வதியை பார்த்ததும், ஒரு கணம் மனம் சலனப்பட்டுப் போனது.

ஒருகணம்தான்,  சுதாகரித்துக்கொண்ட சிவன் மன்மதா .. நீ என்னை கூட விட்டு வைக்க வில்லையா? என்று கோவமாய் பார்க்க நெற்றிக்கண்ணில் இருந்து எழுந்த பொறி மன்மதனை எரித்து சாம்பலாகியது.

இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக கிராமங்களில் காமன் தகன பண்டிகை ஆண்டு தோறும் பங்குனி மாதம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இவ்விழாவின் சிறப்பம்சமே... தேங்காய் பெறுவதுதான்.


திருவிழாவின் துவக்க நாளில் ஆழமாக குழி தோண்டி உள்ளே நன்கு முற்றிய தேங்காயை வைத்து பின் மணலை மூடிவிடுவார்கள்.

அந்த இடத்தில் கரும்பு ஒன்றை நட்டு வைத்து, கரும்பையே மன்மதனாக பாவித்து பூஜைகள் நடைபெறும்.

பதினைந்து நாட்கள் பூஜையின் நிறைவில் கரும்பு உருவில் இருக்கும் மன்மதனை ஓலைகளால் சுற்றிலும் மூடுவார்கள்.

பின்னர் சிவனின் நெற்றியில் இருந்து தீபிழம்பு வந்து மன்மதனை நினைவு கூறும் விதமாக பட்டாசு துணை கொண்டு காமன் எரி ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


பின்னர் மூன்றாம் நாள் மன்மதன் உயர்பித்து எழுந்தததை நினைவு கூறும் விதமாக புதைத்து வைக்கப்பட்ட தேங்காயை வெளியில்  எடுத்து பூஜைகள் செய்யப்படுகிறது.

பின்னர் அந்த தேங்காயை பிள்ளை இல்லாத பெண்டீர் முழு தேங்காயையும் சாப்பிட்டால் தடைப்பட்ட  புத்திரபேறு கிட்டும் என்பது ஐதீகம்.

இத் திருவிழாவின் போது இத்தேங்காயை பெற,  பிள்ளை இல்லாத பலர் முயற்சிப்பது உண்டு. ஒரே சமயத்தில் பலர் தேங்காயை கேட்டால் திருவோலை சீட்டு மூலம் தேங்காய் வழங்கப்படுகிறது.

அவர்களும் நம்பிக்கையோடு தேங்காயை வாங்கி செல்கிறார்கள். இதில் குறிப்பிட வேண்டிய அம்சமே... இப்படி தேங்காயை பெற்றவர்களுக்கு மறு ஆண்டு காமன் பண்டிகை வருவதற்குள் குழந்தை பாக்கியம் கிட்டி விடுவதுதான். என்னே மன்மதனின் திருவருள்.


Thursday, 27 December 2012

பாலியல் வன்முறைக்கு தீர்வுதான் என்ன?


ஊழலுக்கு அடுத்தபடியாக ஊடகங்களில் அதிகம் உலாவரும் செய்தி பாலியல் வன்கொடுமை. 

இந்தியா மீண்டும் ஒரு முறை அவமானத்தை சந்தித்திருக்கிறது. கட்டுப்பாடு என்றால் என்ன விலை என்று கேட்கும் அமெரிக்கா, திருவாய் மலர்ந்து,  தன் நாட்டு மக்களுக்கும், உலகத்திற்கும் முத்தாய்ப்பாய்  ஒரு செய்தி சொன்னது. 

பெண்கள் யாரும்  தனியாக இந்தியா செல்லவேண்டாம். இதை விட வெட்கக்கேடு வேறு உண்டா?

தாய்மைக்கு முதலிடம் தரும் இந்தியாவில்,  தனியாக ஒரு பெண் செல்லவேண்டாம்  என்று சொல்கிற நிலை வருகிறது என்றால், இதைவிட கொடுமை வேறு என்னவாக இருக்கமுடியும்.

கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருப்பது டெல்லி என்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் பதிவான குற்றங்கள் 453.

மும்பையில் 221 வழக்குகளும், பெங்களூரில்97 வழக்குகளும், சென்னையில் 76 வழக்குகளும் ஹைதராபாத்தில் 59 வழக்குகளும், கொல்கத்தாவில்46 வழக்குகளும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

இது சும்மா பேப்பர் கணக்கு. ஆனால் மூடி மறைக்கப்பட்ட குற்றங்கள் எத்தனை இருக்கும்?

வயதின்  தன்மை, குடும்ப கௌரவம், பாதிக்கப்பட்ட  பெண்ணின் எதிர்காலம் என்ற நோக்கில் கண்டுக்கொள்ளாமல்  விடப்பட்ட சம்பவங்கள் அல்லது குற்றங்கள் எத்தனை எத்தனை!

காலம் காலமாக பெண்களை ஒரு போகப் பொருளாக  மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட ஆணாதிக்க சமுகம், பலவீனமான பெண்கள் மீது இது போன்ற வன்செயல்களை நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இதை ஒரு தனி நபர் வாழ்வியல் பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது. ஒரு சமூகத்தின் நன்மதிப்பும் , தேசத்தின் கவுரவமும் இதில் அடக்கம்.

குற்றசாட்டு  எழுந்ததும் கொந்தளிப்பதும், அறிக்கைகள் விடுவதும், வீதிக்கு வீதீ கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதால்  மட்டும் குற்றங்கள் குறைந்து விடப்பவதிலை.

தப்பு செய்தவர்கள் புத்தனாக மாறி புது அவதாரம் எடுக்கப் போவதும்  போவதில்லை.

இதற்கு தீர்வுதான் என்ன?

பலகாலமாக சொல்லப்படும் வார்த்தைதான் இது. சட்டங்கள் மாறவேண்டும். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிற மாதிரியான அரசியலமைப்பு சட்டங்களை மாற்றி அமைக்கப்பட  வேண்டும்.

மாட்டிக்கொண்டால் தப்ப முடியாது என்ற நிலை இருந்தால் ஊழல் இந்த அளவிற்கு மலிந்திருக்குமா?  அரசியல்வாதிகள் ஊழல் பெருச்சாளிகளாய் உலா வந்திருக்க முடியுமா?

அரசு அதிகாரிகளின் கை நீண்டிருக்குமா? கடத்தல், வன்முறைகள் பெருகி இருக்குமா? பாலியல் குற்றங்கள் மலிந்திருக்குமா? இருக்காது.

சட்டங்கள் மாறவேண்டும். குறிப்பாக ஊழலுக்கும், வன்முறைக்கும், தீவிரவாதத்திற்கும், பாலியல் குற்றங்களுக்கும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.அது தூங்கிக்கொண்டிராமல் நடைமுறைக்கு வரவேண்டும்.  வந்தால் நாடு உருப்படும்.

குறிப்பாக பாலியல் குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியும், மருத்துவ அறிக்கையும் தான் தேவை.

குற்றம் நிருபிக்கப்பட்டால் உடனே தண்டனை தர வேண்டும். கீழ்கோர்ட், மேல்கோர்ட், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று வழக்கை இழுத்தடிக்காமல், இறுதி தீர்ப்பை சொல்லும் நீதிமன்றங்களாக அது இருக்க வேண்டும்.

வழக்கு பதிவு செய்த 100 வது நாளில் தண்டனை தருகிறநிலை வரவேண்டும். இது குற்றங்கள் நடந்த பிறகு செய்யவேண்டிய நடைமுறை. அதற்கு முன் செய்யவேண்டியது என்ன?

மாறிப்போன மனித மன கோணல்களுக்கு மருந்துதான் என்ன?

இன்று நாடு வளர்ந்திருக்கிறது. மக்கள் வளர்ந்திருக்கிறார்கள். அறிவு பெருகி இருக்கிறது. அதே அளவு வக்கிர புத்திகளும் வளர்ந்திருக்கிறது.

இந்த  வளர்ச்சிக்கு ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும். அறிவார்ந்த செய்திகளை கொண்டு செல்கிற இதே ஊடகத்துறை,  வக்கிரபுத்திக்கு வடிகாலாய் இருக்கிறதே என்ன செய்ய?

துண்டும் இல்லாமல் துணியும் இல்லாமல் நடிக்கும் நடிகைகள் ஒருபுறம், அதை அட்டைப்படங்களில் வெளிச்சம் போட்டு காட்டும் பத்திரிகைகள் மறுபுறம், தகாத உறவு கதைகளையும், வீடியோக்களையும் உலாவ விடும் இணையதளங்கள்   இன்னொருபுறம் என்று வக்கிரபுத்திக்கு தூபம் போடுகின்றன.

இதை தடுக்க அரசுகள் என்ன முயற்சி செய்யப்போகிறது?

இது அரசாங்கம் மட்டுமே கவனிக்க  வேண்டிய ஒன்றல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் பொறுப்புகள்  வர வேண்டும். சமுக சிந்தனை வரவேண்டும். தன் வீட்டிலும் பிள்ளைகள் இருக்கிறார்கள், பெண்கள் இருக்கிறார்கள் என்ற மனநிலை வரவேண்டும்.

வருமா?

ஆசையே  துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்  ஜக்கிவாசுதேவ் . இன்னும் ஒரு படி மேலே போய், ஓசோ சொன்னார்.  அசைகளை அடக்கி வைக்காதே. அதை அனுபவித்துவிடு. அது பெண்ணாசையாக இருந்தாலும் சரி.

ஏன்?  என்ன காரணம்?  அப்படி சொன்னார்?

உனக்கு பெண்ணாசை வருகிறது என்றால் தவறில்லை. வரட்டும் வந்தால் அதற்கென இருக்கும் பெண்களை தேடிப்போ. அதை அடக்கி வைத்தால் பிறகு நல்ல பெண்களை நீ நாசம் செய்ய நினைப்பாய்.

இது சத்திய வார்த்தை.

இது ஒன்றும் வழி தவறி செல்ல சொல்லப்படும் வார்த்தைகள் இல்லை இவை. நீ கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத காமுகனாக இருந்தால் இந்த வழியை தேர்ந்தெடு என்று அர்த்தம்.   பொட்டில் அறைந்த மாதிரி... போ... போய் தொலை என்று சொல்கிற வார்த்தை இது.

நாம் யார்? கலவியலை கூட உலகத்திற்கு கற்று தந்தவர்களின் வழியில் வந்தவர்கள்தான்.

கோவில் கோபுரங்களில் ஆண் பெண் உறவு சிற்பங்களை செதுக்கி வைத்து கூட, அறியாமையை போக்கத்தான்.

தவறான வக்கிர புத்தியை மாணவர்கள் வளர்த்துக்கொள்வதை விட, உளவியல் மற்றும் உடலியல் கல்வியை நடைமுறைக்கு கொண்டு வரலாம்.

பரஸ்பரம் உடல் மதிப்பு, சுகாதாராம் என்பது முக்கியம். விருப்பம் என்பது கவனிக்க வேண்டிய  ஓன்று என்பதை பாடபதிவுகளில் சொல்லித்தரலாம்.

கட்டிய மனைவியாக  இருந்தாலும் விருப்பம் இல்லாமல் தொட்டால், கற்பழிப்புக்கு சமம் என்கிறார்கள்  மனநல நிபுணர்கள்.   இதை கற்றுத்தரலாம். இதை உணர்ந்தவர்கள் எத்தனை பேர். பெரியோர்கள் பலருக்கே இது இன்னும் புரியவில்லையே?

அடுத்து!

உண்மையை சொல்லப்போனால் குற்றங்கள் நடப்பதற்கு ஆண்களை   மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. குற்றங்கள் நடக்காமல் தடுக்க பெண்களுக்கு பங்கில்லையா?

இன்று பல இளம் பெண்கள் எப்படி உடுத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.

அழகை கூட்டிக்காட்ட  வேண்டிய ஆடைகள், அங்கத்தை திறந்து காட்ட பயன் படுகிறது. பொது இடங்களுக்கு வரும் போது எப்படி உடுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா.

கும்பிட வைப்பதும் ஆடை, கூப்பிட வைப்பதும் ஆடை தான் என்பதை மறந்து விடவேண்டாம்.

Wednesday, 26 December 2012

மகாமேரு மகிமை -3

மகாமேரு முதல் பகுதியை படிக்க இந்த இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மகாமேரு இரண்டாம்  பகுதியை படிக்க இந்த இந்த லிங்கை கிளிக் செய்யவும் அது இதுதான். 

பரபிரம்மா ....இவர்தான் கோலங்களாய் சுழலும்  கோள்களையே உற்பத்தி செய்தவர். ஆதியில் அனாதியாய் தோன்றியவர். மூவர்கள் என்று போற்றப்படும் மூலங்களுக்கு எல்லாம் முன்னுரை எழுதியவர்.

பரபிரம்மா...!!

பர என்றால் எல்லாவற்றிற்றுக்கும் அப்பாற்பட்டது என்று பொருள். பிரம்மம் என்றால்  உற்பத்தி என்று பொருள். இவர் விஸ்வகர்மா என்று போற்றப்படுகிறார்.

ஐந்து முகங்களும் பத்து கரங்களுடன் தோன்றியவர். இவர்தான் முழு முதல் கடவுள். இவரின் ஐந்து முகங்களை சத்யோஜாத, வாமதேவ, அகோர, தத்புருஷ, ஈசானம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஐந்து முகங்களும் மேற்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு திசைகளையும், ஈசான முகம் மேல்திசையை குறிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.


இவரோடு தோன்றிய பெண்தான் விஸ்வகர்மினி என்கின்ற காயத்ரி. இவர்கள் ஒன்றிணைத்து பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், இந்திரன், சூரியன் என்ற ஐந்து தேவர்களை ஈன்றனர்.


இவர்களுக்கு துணையாக சரஸ்வதி, லட்சமி, பார்வதி, இந்திராணி, சவிதாதேவி என்ற ஐந்து பெண்களை ஈன்று உடன்பிறப்புகளான இவர்களை உருமாற்றம் செய்து உணர்வுகளை மாற்றி கணவன் மனைவியாக  மாற்றியதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் மூலம்தான் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் சக்திகள் இயக்கப்படுகிறது. இவர்களிடம்தான் ரிக், யசூர், சாம, அதர்வண, பிரணவ என்னும் ஐந்து வேதங்கள் அடக்கம்.

ரிக், யசூர், சாம, அதர்வண என்பது நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் பிரணவ என்பது வேத சூத்திரம் இது பிரம்மாவிற்கு உரியது. இது உற்பத்தி தொழிலை செய்யும் சூச்சுமங்கள்  அடங்கியது.

மூச்சு தொடர்பான ரகசியம் பொதிந்தது. இப்படிதான் போகிறது முதல் தகவல். ஆனால் ஆதியில் அனாதியாய் தோன்றியவர் சிவன்.

இவர்தான் மற்ற திருஷ்டி கர்த்தாக்களை உருவாக்கியவர். ஐந்து முகங்களை கொண்டவர். அந்த முகங்கள்தான் சத்யோஜாத, வாமதேவ, அகோர, தத்புருஷ, ஈசானம் என்று அழைக்க படுகிறது.


சத்யோஜாத என்பது அழகிய இளம்பாலகனாய் இருந்து அருள் புரிகிறார். அந்த முகத்தை மனதில் வைத்து பூசித்தால் சிவ பதவி கிடைக்கும்.

கொடிய விஷம் கொண்ட பாம்பை தன் சடைமுடியில் வைத்து கொண்டு அருள்பாலிக்கும் உருவம்தான் வாமதேவ.


இந்த திருவுருவை மனதில் வைத்து பூசிப்பவர்களுக்கு பிறப்பு, இறப்பு என்ற இரு வினைகளும் அற்று சிவனின் திருவடிகளில் ஐக்கியமாகிறார்கள்


தனது சடைமுடியில் இளம்பிறை சந்திரனை அணிந்து பொன்னிறத்தில் அருள் பாலிக்கும் முகம் தான் தத்புருஷம். இந்த அழகிய முகத்துடன்தான் காட்சி தந்து காயதிரியை உண்டாக்கி அவருக்கு அளித்தார். இந்த காத்ரியை பூஜிப்பவர்களுக்கு நரக வாசமே கிடையாது.


ஈசனின் தத்புருஷ முகத்தை மனதில் கொண்டு பூஜிப்பவர்களுக்கு கயிலாயத்தில்  இடம் கிடைக்கும்.முக்கண்ணுடனும், தீச்சுடருடனும், காட்சியளிக்கும் முகத்திற்கு அகோர ரூபம் என்று பெயர். அத்தகைய முகத்தை மனதில் கொண்டு பூஜிப்பவர்களுக்கு சகல பாவங்களும் நீங்கி நற்கதி கிடைக்கும்.

ஈசான தோற்றத்தில் காட்சியளிக்கும் சிவபெருமான் சடையிலே பிறைசந்திரன், நெற்றிக்கண், கடைவாயில் கோரைப்பற்கள், இருபுறமும் இரு தேவியரை கொண்ட ரூபத்தில் காட்சியளிக்கிறார்.


அந்த ரூபத்தில் தான் ஈசன் ஆலகால விஷத்தை உட்கொண்டார்.  ஆக உலகத்தை தோற்றிவைத்தவரும் இவர்தான்.மற்ற திருஷ்டி கர்த்தாக்களை உருவாக்கியவரும் இவர்தான். இரண்டாவது தகவல் இது.


தொடரும்

Tuesday, 25 December 2012

அட.. ஆமாவா...!!


இந்தநோசியா ருபியாவில் விநாயகர் படம் போட்டு 1998 இல் வெளியானது.


இப்போது அமெரிக்காவில் நம் ஹிந்து கடவுள்களின் உருவங்கள் கொண்ட தபால் தலைகள் வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளது. 


இதன் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.அமெரிக்க அஞ்சல்துறை மட்டுமல்லாது,       தனியார்துறையும் தபால் தலைகள் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு அனுமதிக்கப்பட்ட யு. எஸ். ஏ போஸ்டேஜ் டாட் காம் நிறுவனம் அட்லாண்டாவில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமானது. 

இந்நிறுவனம் ஹிந்து கடவுள் தபால் தலைகளை அச்சிட்டு வெளியிடுகிறது.  அவை வழக்கமான தபால் தலைகளை போலவே இவற்றையும் தபால்களை அனுப்ப பயன்படுத்தலாம். 

பிஸிபோஸ்டேஜ் என்ற நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் தபால் தலைகள்  விலை சென்ட் மட்டுமே.

இதையும் படியுங்க !


நம்புங்கள்.  பிரான்சில் 2.5 மில்லியன் நபருக்கு எழுத, படிக்க தெரியாது: என்கிறது ஒரு ஆய்வு  தகவல்!


பிரான்சில் அந்நாட்டு  மக்களின் மொழியறிவு திறன் குறித்து புள்ளிவிபரம் மற்றும் பொருளாதார ஆய்வுகளின் தேசிய நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வுக்காக 18 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட நபர்களிடம் நடத்திய ஆய்வில், 7 சதவிகித மக்களுக்கு எழுத, படிக்க தெரியாது என்று  குறிப்பிட்டு  அதிரவைத்துள்ளது. .

இதற்கு முன்பு கடந்த 2004ஆம் ஆண்டு  நடத்திய ஆய்வில், 9 சதவிகிதம் பேர் எழுத, படிக்க தெரியாமல் இருந்தனர் என்பது  குறிப்பிடதக்கது

Monday, 24 December 2012

வதந்திகளுக்கு யார் பொறுப்பு?


ஒருவர் தன் நண்பரை பார்க்க சென்றிருந்தார். வந்த வேலை முடிந்தது. கிளம்பும்முன் அந்த நண்பரிடம் கேட்டார்..ஏம்பா... இப்படி வீட்டு ஓரத்திலே குப்பைகளை போட்டு வச்சிருக்கே. பாம்பு, பூச்சிகள் வந்து வந்து சேர்ந்திடும். உடனே அப்பறப்படுத்துன்னு சொன்னார். 

இதை காதில் வாங்கி கொண்டே ரோட்டில் போன ஒரு ஆசாமி டீ கடைக்கு போனார். அங்கே டீ குடித்துக்கொண்டே பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னார். 

நம்ம தெற்கு தெரு முனிசாமி வீட்டிலே மொரட்டு நாகப்பாம்பு வந்துடுச்சாம். ஆளுவச்சு தேடிக்கிட்டு தேடிகிட்டு இருக்காங்க என்றார். 

அந்த டீ குடித்துக் கொண்டிருந்த ஆசாமி தன் விட்டுக்கு போற வழியில் இன்னொரு நபரை பார்த்தார். 

அவரிடம் உனக்கு சேதி தெரியுமா? பழனியாண்டி மச்சான் முனுசாமி இருக்காருல்ல அவர் வீட்டுல பத்து  நாகப்பாம்பு  அடிச்சாங்களாம். அடிக்க அடிக்க வந்துகிட்டே இருந்திச்சாம். கேட்கவே பயமா இருக்குப்பா என்றார். 

இதை கேட்ட அந்த நபர் ...அடுத்து இரண்டு கிலோமிட்டார் துரம் சென்றதும் வேறு ஒருவரிடம் சொன்னார்... அடேய்.. முத்துபேட்டை  மாரியம்மன் கோவில் பக்கத்திலே இருக்கிற ஒரு வீட்டுலே  அஞ்சுதலை கருநாகம் படம் எடுத்து ஆடிச்சாம். அங்கே இதே பேச்சுதான். 

சாதாரண குப்பை கதை எப்படி ரெக்கை முளைத்து அஞ்சுதலை நாகமாக மாறியதோ,  அந்த மாதிரி இப்போதேல்லாம் பொய்யும் புரளியும் சர்வசாதாரணமாக உலாவருகிறது. 

யார் எதற்காக .. இப்படி புரளிகளை பரப்பி விடுகிறார்கள் என்றே தெரியவில்லை.

நீங்கள் அடிக்கடி சந்தித்த ஒரு அனுபவம் இருக்கும். வெங்கடாஜலபதி மகிமை என்ற பிட்டு நோட்டிஸ்.

ஒரு பக்தர் வெங்கடாஜலபதி   மகிமையால் தீராத நோய் தீர்ந்து  பூரண குணமானார். அதற்கு  நன்றி கடனாக பிட்டு நோட்டிஸ் போட்டு வெளியிட்டார்.

அந்த நோட்டிசை அவர் நண்பர் 1000 காப்பிகள் பிரிண்ட் செய்து மீண்டும் வெளியிட்டார். அவருக்கு இருந்த கடன் தொல்லை ஒழிந்தது.

நீங்களும் 1000 பிரிண்ட் போட்டு இந்த மகிமையை வெளியிட்டால் உங்கள் பிரச்சனைகள் தீரும்.

இதை ஏளனமாக பேசிய ஒருவர் கார் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் உள்ளார்..... இப்படி பொய் செய்திகளை தாங்கி வரும் துண்டு பிரசுரங்கள் மக்கள் மத்தியில் அவ்வப்போது உலாவரும்.


அப்படித்தான் இப்போது மாயன் காலண்டர் வந்தது. உலகம் அழியப்போகிறது என்ற திடுக்கிடும் செய்தியை தாங்கியபடி.

முன்பெல்லாம் இணையதளங்களில் வரும் செய்திகள் உண்மையாக இருக்கும் என்ற நிலை மாறி, இணையதளங்கள் என்றாலே புருடா செய்திகளை வெளியிடும் சாதனமாக மாறி விட்டது. 

பத்திரிகை, ரேடியோ, டெலிவிசன் மாதிரி செய்திகளை சொல்லும் இணையதளங்கள் கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்கும் ஒரு சென்சார் தேவையோ என்று யோசிக்க வைக்கிறது.

ஒரே செய்தி வேறு வேறு வரி வடிவங்களில் வரும்போது அட உண்மையாக இருக்குமோ என்று மக்கள் பீல் பண்ண ஆரம்பித்து விடுகிறார்கள். இதுதான் இந்த பொய் செய்திகளின் வெற்றி. 


அறிவியலை காரணம் காட்டி சிலர் அக்கப்போர் செய்கிறார்கள் என்றால், இன்னும் சிலர் ஆன்மிகத்தை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.

இந்த வருட பிறப்பு சரியில்லை. வருஷத்தின் நிறம் கருப்பாக இருப்பதால்,  ஆண்களுக்கு ஆகாத வருஷம். அதனால் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைக்க வேண்டும் என்று ஒரு குண்டு.

இது நல்லதங்காள் பிறந்த வருஷமாக இருப்பதால், அக்காள் தங்கை உள்ளவர்கள் தங்கள் அக்காள் தங்கைக்கு பச்சை கலர் சேலை எடுத்து தரவேண்டும்.  என்று ஒரு புது கரடி.

சிவன் நஞ்சுண்ட திதியில் புது மாதம் பிறந்திருப்பதால் பெண்களின் மாங்கல்யத்திற்கு  ஆபத்து.

அதனால் சுமங்கலி பெண்கள் மஞ்சள் சேலை உடுத்த வேண்டும் என்று கட்டளை.

இப்படி ஆயிரம் புரளிகள்  அவ்வப்போது வருகிறது. இதை உண்மை என்று நம்பும் ஒரு அப்பாவி கூட்டம், அதை அப்படியே  பின்பற்றுகிறது. அதனால் பலருக்கு பல வகையில்  லாபம்.


தங்கம் வாங்க சொல்லும் அட்சய திருதியிலேயே எனக்கு உடன்பாடு இல்லை.  எங்கேயும் இல்லாத செய்தி எப்படி இத்தனை பிரபலம் ஆனது என்றே தெரியவில்லை. இருந்தாலும் வாங்குவது தங்கம் தானே வாங்கட்டும் என்று மனம் சமாதானம் ஆகிறது.

நண்பர்களே எந்த செய்தியாக இருந்தாலும் உடனே நம்பி விடாதீர்கள். சிலர் தங்கள் சுய லாபத்திற்காகவும், வெறும் விளம்பர நோக்கத்திலும் வதந்திகளை பரப்புவதை  வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

என் புளுகு அவ்வளவுதான் என் அப்பன் புளுகு கப்பலில் வருது என்று சொன்ன மாதிரி எதையாவது உளறி கொட்டுகிறார்கள்.  அந்த செய்திகளை ஒதுக்கி தள்ளுங்கள்.

செய்தி ஊடகமாக திகழும் இணையதள நண்பர்களே இது போன்ற பரபரப்பு செய்திகளை வெளியிடும் முன், சரியான செய்தியா என்று உறுதிபடுத்திக்கொண்டு வெளியிடுங்கள்.

நாம் ஏமாற்றுகிறராகவும் இருக்க வேண்டாம். ஏமாறுகிறராகவும் இருக்க வேண்டாம்.


கும்கி திரை விமர்சனம்காட்டில் இருந்து கிராமங்களுக்குள் வந்து பயிர்களை துவம்சம் செய்யும் யானையை விரட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் யானைக்கு பெயர்தான் கும்கி. 

அப்படி வரவழைக்ப்படும் ஒரு யானை… அதன் யானைப் பாகனுக்கு வந்த இடத்தில் ஏற்படும் காதல் பற்றி சொல்லியிருக்கிறது கும்கி.

ஆதிகாடு என்னும் மலைவாழ் கிராமத்தில் வருடம் தோறும் நெல் அறுவடை செய்யும்  நேரத்தில்  காட்டு யானை ஒன்று வந்து பயிர்களை துவம்சம் செய்து விடுகிறது.


அரசாங்கத்தின் உதவியும் இல்லாத நிலையில் அந்த ஊர் பெரியவர்கள், அந்த காட்டு யானையை விரட்டுவதற்காக கும்கி யானையை அழைத்து வரச் சொல்லுகிறார்கள். 

முதல் சிக்கல் அங்கேதான் ஆரம்பமாகிறது. கும்கி யானையின் பாகன் மகள் விஷம்  குடித்து விட்டாள் என்கிற நிலையில் உடனே போக முடியாத நிலை.

தன் யானையை காட்டு இலாக்கா அதிகாரியிடம் இருந்து காப்பாற்றிய இடைதரகருக்கு உதவி செய்யவும், கும்கி யானை வரும் வரைக்கும் சமாளிக்கவும் தன் யானையை அந்த கிராமத்திற்கு கொண்டு செல்கிறார் விக்ரம் பிரபு.

விக்ரம் பிரபுவின் யானை...... கோயில், திருமணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும்  யானை.


போன இடத்தில்   மலைவாழ் பெண் லஷ்மி மேனனை பார்க்கிறார். அப்பறம் என்ன பாழாய் போன காதல் வந்து தொலைக்கிறது.

கும்கி யானை வர தயாரான  பிறகும் . காதலிக்காக தொடர்ந்து அங்கேயே இருப்பது என்று முடிவு செய்கிறார் விக்ரம் பிரபு. அது மட்டும் அல்ல கும்கி யானை பாகனை அழைத்து தனது யானையை கும்கி யானையாக மாற்றுவதற்கான பயிற்சியை ஆரம்பிக்கிறார்.

விக்ரம் பிரபு  தனது யானையை கும்கி யானையாக மாற்றினாரா? காட்டுயானையை துரத்தி அந்த கிராமத்து மக்களைக் காப்பாற்றினாரா? இவைகளுக்கு மத்தியில் விக்ரம் பிரபுவின் காதல் என்னவாகிறது என்பது தான்   க்ளைமேக்ஸ்.


படம் ஆரம்பம் முதல் படம் முடியும் வரை விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை. எந்த இடத்திலும் தொய்வே இல்லாமல் கொண்டு சென்ற பிரபு சாலமனுக்கு வாழ்த்து சொல்லவேண்டும்.

படத்தின் ஹீரோ விக்ரம் பிரபுதான் என்றாலும் அந்த இடத்தை ஆக்கிரமித்து கொள்வது மாணிக்கமாக வரும்  அந்த யானைதான்.

நெல் அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் மாணிக்கத்திற்கு மதம் பிடிக்க போகிறது என்று சொல்லும் போது, உச்சகட்ட அதிர்ச்சியை தருகிறது.

அந்த நிலையிலும் காட்டு யானையும் சண்டை போட்டு வெற்றி பெரும் போது அப்பாடா  என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.

தம்பி ராமையா வரும் காட்சிகளை எல்லாம் காமெடியாக நகர்கிறது . அவர் படத்திற்கு பெரிய பலமான தூன்.


விக்ரம் பிரபு கதாபாத்திரத்திற்கு ஏற்ற நல்ல தேர்வு. யானை காலடியில் படுத்திருப்பது, தந்தங்களை பிடித்துக்கொண்டு பயிற்சி செய்வது என்று கொஞ்சம் கூட பயம் இல்லாமல் செமையாக நடித்திருக்கிறார்.

விக்ரம் பிரபுவுக்கு இது முதல் படம். முதல் படம் என்று சொல்கிற மாதிரி இல்லாமல் யானை பாகன் பொம்மனாகவே அவர் தெரிவதை மறுப்பதற்கில்லை.  சிவாஜி குடும்ப வாரிசு அப்படித்தான் இருக்கும். 

லஷ்மி மேனன், படத்தின் முக்கியமான கதாபாத்திரம்  இவருடையது. குறைந்த அளவே வாய்ப்பாக இருந்தாலும் வெளுத்து வாங்குகிறார். பிரமாதம்.

பெரிய மேக்கப் இல்லை, இருந்தாலும் அந்த நூல் புடவையிலும் அழகு ராச்சசியாகவே லட்சுமி மேனன்.    ஒரு மலைகிராமப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். அந்தக் கண்கள், உதடுகள் ஏக இம்சை செய்கின்றன! 

தம்பி ராமையாவுக்கும் ஒரு சபாஷ். மாப்ளே மாப்ளே என இவர் விக்ரம் பிரபுவை சுற்றி வரும் ஒவ்வொரு காட்சியும் கலக்கல்  காமடி. 

அதுவும் இவரை விக்ரம் பிரபு வேண்டும் என்றே உசுப்பேற்றுகிற  இடங்கள், அதனால் மனம் நொந்து தம்பி ராமையா தனக்குத் தானே பேசிக் கொள்ளுகிற காட்சிகளில் தியேட்டர் கலகலக்கிறது.

படம் ஓகே தான். வேறு வித்தியாசமான முடிவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் போது முடிவு வேறு விதமாக இருக்கிறது.

சரி... பார்க்க வேண்டிய படம்தான். பார்க்கலாம்.Saturday, 22 December 2012

கண்ணதாசன் கவிதை
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்...
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் ...
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்...
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் ....
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன் ....
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் ....
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் .....
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன் ...
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன் ....
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் ...
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

சொர்க்கத்தின் திறப்பு விழா!!

பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மன் வனவாச காலத்தின் போது. ஒரு காட்டுப் பாதை வழியாக நடந்து சென்றாராம். 

அப்போது அவரை தாண்டி ஒரு குதிரை விரைந்து செல்கிறது. அந்த குதிரையின் மேல் ஒரு இளம் வயது வாலிபனும், அவனுக்கு அருகில் இளம்வயது பெண்ணும் இருப்பதை தருமன் பார்க்கிறான். 

அவனுக்கு வேறுபாடாக எதுவும் தோன்றவில்லை. காட்டுப்பாதை வழியே நடந்து கொண்டிருந்தான்.

கொஞ்ச தூரம் சென்றதும், ஒரு வயதான மூதாட்டி தட்டு தடுமாறி, தலையில் சிறு மூட்டை முடிச்சுகளுடன் நடந்து வந்தாள்.

இயற்கையாகவே இளகிய மனம் கொண்ட தருமன், அந்த மூதாட்டியை அணுகி தாயே.... இந்த தள்ளாத வயதில் தனித்து வருவதின் காரணம் என்ன? உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா? இருந்தால் அவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்கலாமே...என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாராம்.

அதற்கு அந்த மூதாட்டி ஐயா... நான் பக்கத்து கிராமத்தில் இருந்து வருகிறேன்.  அங்கு கடும் பஞ்சம். அதனால் பிழைப்பு தேடி அயலூர் சென்றுக் கொண்டிருக்கிறோம்.

எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனும் அவன் துணையாலும் சற்று முன்னர்தான் இதே பாதையில் குதிரையில் சென்று விட்டார்கள். நான் நடந்து போகிறேன் என்றாள்.

அடக் கடவுளே ...அந்திம காலத்தில் இப்படி நடக்க விட்டுவிட்டு குதிரையில் போய் விட்டானா....என்ன கொடுமை என்று யோசிக்கும் போது, வானத்தில் இருந்து அசரீதி கேட்டதாம் தருமா...கலியுகம் பிறந்து விட்டது. இது செவி வழி செய்திதான். 


இது இருக்கட்டும் இதே நேரத்தில் அல்லது கலியுக காலகட்டத்தில்  வைகுண்டத்தில் என்ன நடந்தது தெரியுமா? வைகுண்டத்தின் கதவை இழுத்து மூடினார்கள்.

ஏன்...என்ன காரணம்? வைகுண்ட கதவை மூடும் அளவிற்கு தைரியசாலிகள் யார்?

ஜெயா.. விஜயர்கள்தான் அவர்கள். அவர்களை தைரியசாலிகள் என்று சொல்வதை விட, காவல் பணியில் இருந்தவர்கள் தங்கள் கடமையை செய்தார்கள் என்று சொல்லலாம்.

வைகுண்டம் என்பது பாவங்கள் இல்லாமல் பரிசுத்தமாக வாழ்பவர்கள் மட்டுமே இருக்கக்கூடிய இடம்.

ஒரு சந்தேகம்?

என்னவோ?

சிவலோகம் என்றும், அங்கு செல்பவர்கள் சிவோலோக பதவி எய்கிறார்கள் என்றும், வைகுண்டம் என்றும் அங்கு செல்பவர்கள் வைகுண்ட பதவி எய்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இது இரண்டும் இல்லாமல் சொர்க்கம்  நரகம் என்றும் சொல்கிறார்களே என்ன அது?

சிவன் வழி செல்பவர்களை சைவம் என்கிறோம். பெருமாளை துதிப்பவர்களை வைணவர் என்கிறோம்.

இதில் எந்த பிரிவில் ஆழமான நம்பிக்கை இருக்கிறதோ, அதன் அடிப்படையில்,  இறப்புக்கு பிறகு சிவலோகம் செல்வார் என்றும், வைகுண்டம் செல்வார் என்றும் சொல்வது வழக்கமாகி விட்டது.

சொற்கள் வேறாக இருந்தாலும் சொர்க்கம் என்பது ஒன்றுதான். அவர் கொண்ட  நம்பிக்கையின் அடிப்படையில் சிவன் அல்லது பெருமாளின் திவ்ய தரிசனம் பெற்ற பிறகு செல்லும் இடம் சொர்க்கம்.


சரி நாம் விஷயத்திற்கு  வருவோம்.  ஜெய விஜயர்கள் வைகுண்ட கதவை மூடினார்கள் இல்லையா? அதை கவனித்த திருமால் திருவாய் மலர்ந்து ஜெய விஜயர்களே... வைகுண்ட கதவை மூடியதின் காரணம் என்ன என்றார்.


ஐயனே.. கலியுகம் பிறந்து விட்டது. இனி புண்ணிய ஆத்மாக்களின் எண்ணிக்கை பூலோகத்தில் குறைந்து விடும். பாவாத்மாக்களின் எண்ணிக்கை பல்கி பெருகி விடும்.

பொய்யும் களவும், பூசலும் துவேசமும், ஏய்த்து பிழைப்பவர்களுமாய் மானிடர்கள் இருப்பார்கள். பதி தர்ம வழியில் இருந்து ஆணும் பெண்ணும் மாறுவார்கள். கொலை, கொள்ளை கூடிப்போகும்.

மக்களை நல்வழிப் படுத்த வேண்டிய அரச தர்மங்கள் அழியும். சட்ட திட்டங்கள் மீறப்படும். எனவே இங்கு யாரும் வரப்போவதில்லை. அதனால் வைகுண்ட கதவை மூடினோம்.

ஜெயவிஜயர்களே.. கலியுகத்தில் சுயநலம் பெருகும் என்றாலும் பக்தியும் பெருகும்.

வாழ்க்கையில்  விரக்தி கொண்டோருக்கு பற்றிக்கொள்ள  பக்தி ஒன்றே வழி.  அப்படி பக்தி செலுத்துவோருக்கு முக்தி கிடைக்க மார்கழி மாதம்  வளர்பிறை ஏகாதசி அன்று என்னை சேவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வைகுண்ட பதவி நிச்சயம் உண்டு என்றார்.

வைணவ  புராணங்கள் வேறு சில தகவல்களையும் சொல்கிறது.


கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு  முன்பு வைகுண்டம் செல்வோர் யாரும் இல்லாததால் கதவுகள் மூடி   கிடந்ததாகவும், நம்மாழ்வாருக்காக கதவு திறக்கப்பட... எனக்கு மட்டும் திறந்தால் பத்தாது. என்னை தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைவருக்கும் இந்த கதவு திறக்கப் பட வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டினார் என்றும், அப்படி வேண்டிய நாள்தான் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி  திதி என்றும், அன்று தான் வைகுண்ட எகாதசியாக சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது என்றும் சொல்வார்கள்.


மாதத்தில் இரண்டு, வருடத்தில் 24 முதல் 25 ஏகாதசிகள் வரும். அதில் ஆனி மாதம் வரும் ஏகாதசியை சயன ஏகாதசி என்றும், அக்காலத்தில் திருமால் படுத்த நிலையிலும், கார்த்திகை மாதம் வரும் ஏகாதசியை உத்தான ஏகாதசி என்றும், அக்காலத்தில் பெருமாள் உட்கார்ந்த நிலையிலும், மார்க்கழி மாதம் வரும் ஏகாதசியில் நின்ற   நிலையிலும் பெருமாள்  அருள் புரிவார், அதற்கு  வைகுண்ட ஏகாதசி என்றும் பெயர். 


இந்நாளில் விரதம் இருந்து பெருமாளை சேவிப்பவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் நிச்சயம் உண்டு.

Friday, 21 December 2012

திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா?


பலமாத உழைப்பு, பலரின் கூட்டு முயற்சி, கோடிகளை முதலீடு செய்து தயாரிப்பு செலவு என்று ஒவ்வொரு திரைப்படமும் எடுக்கப்படுகிறது. அது எந்த மொழி படமாக இருந்தாலும் இது பொருந்தும். 

அப்படி எடுக்கப்படும் திரைப்படம் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது, படத்தின் கதைக்களம், திரைக்கதை அமைப்பு, நடிப்பு, தொழில்நுட்பம், இசை, பாடல்,  இப்படி பல காரணங்கள் இருக்கும். 

நமக்கு அது பிரச்சனை இல்லை. ஆனால் இப்படி பலரின் உழைப்பை கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம் திரைக்கு வந்த சில நாட்களில் கள்ள சந்தைக்கு  வருகிறதே எப்படி? 

என்னதான் சட்ட திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டாலும், காவல்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், முற்றிலும் ஒழிக்க முடியவில்லையே என்ன காரணம்?  இது எல்லாம் திரைத்துறை ஜாம்பவான்கள் பேசி பேசி கலைத்து போன ஒரு விஷயம்.


தீவிரமான  ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும், சில பெரிய நடிகர்களுக்கு, எப்படியும் தன் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தியேட்டருக்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். 

ஆனால் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களின் கதி, அதில் முதலீடு செய்த தயாரிப்பாளரின் நிலைதான் கேள்விக்குறியாகி விடுகிறது.

இதை பற்றி  நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும், படத்தை  விநியோக உரிமை பெற்றவர்கள் மட்டுமே கவலை பட வேண்டிய விஷயம் என்று நம்மால் ஒதுங்கி போக முடியவில்லை. யார் எக்கேடு கெட்டுப்போனால்  நமக்கென்ன என்று இருக்க முடியவில்லை. .


ஒரு திருட்டு VCD வாங்கப்படுகிறது என்றால், அந்த படத்தை அந்த வீட்டில் உள்ள உறுப்பினர்கள்  மட்டும் பார்ப்பதாக வைத்து கொண்டால் கூட, குறைந்தது ஐந்து நபர்கள் தியேட்டருக்கு வருவது நின்று விடும். 

இது போல் எத்தனை லட்சம் CD க்கள் விற்கப்படும். எத்தனை லட்சம் பேர் தியேட்டருக்கு வராமல் போகிறார்கள். 

அதனால் ஏற்படும் வருமான இழப்பு எவ்வளவு? பல நல்ல படங்கள் திரைக்கு வந்தும் கூட, தொழில் நுட்ப ரீதியில் சிறந்த படங்கள் கூட, வெகு விரைவில் தியேட்டரை விட்டு வெளியே போகிறது என்றால் திருட்டு CD க்களே காரணம்.

இது ஒன்றும் புது செய்தி அல்ல. அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் ஒரு ரசிகன் தியேட்டருக்கு வராமால் போகிறான் என்றால் அதற்கு என்ன காரணம்? இதை பற்றி  திரைத்துறை சங்கங்கள் என்றாவது யோசித்திருக்குமா?

யோசித்திருந்தால் சினிமா கட்டணம் இந்த அளவிற்கு உயர்ந்து  இருக்காது. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பட்ஜெட் போட்டே வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

வீட்டு செலவு, மளிகை சாமான், எதிர்பாராத மருத்துவ செலவு, உறவினர்களின் சுபகாரியங்களுக்கு ஆகும் செலவு ,பிள்ளைகளின் படிப்பு, பெட்ரோல் இப்படி ஆயிரம் தேவைகளை பூர்த்தி செய்ய போராடும் போது, சினிமா செலவு என்பது கண்ணை கட்டுகிற சமாச்சாரம். 

தாய் தந்தை, கணவன் மனைவி, இரு குழந்தைகள் உள்ள சிறு குடும்பம் தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்க  வேண்டும்  என்றால், மாதத்தில் இரண்டு படங்கள் பார்க்க வேண்டும் என்றால்கூட  குறைந்தது 1000 ரூபாய் வேண்டும். பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்ப்பது என்றால் அது வேறு.


ஆக பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மக்கள் வேறு வழியில்லாமல் திருட்டு CD களுக்கு போகிறார்கள். வெறும் முப்பது ரூபாயில் ஒட்டு மொத்த குடும்பமும் வீட்டில் இருந்தே படத்தை பார்த்து விடலாம் என்கிற யோசனையில்.

இதை பற்றி தியேட்டர் உரிமையாளர்களும், சினிமா நிர்வாகிகளும் தான் யோசிக்க வேண்டும்.

போகட்டும்....நாம் விஷயத்திற்கு வருவோம்.


இதுநாள் வரை திருட்டு CD விற்கும் கடைகளின் மீது நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள். ஆனால் இந்த CD க்கள் எங்கே இருந்து வருகிறது என்பது தெரியுமா? இதன் பூர்வீகம், தாய்நாடு எங்கே இருக்கிறது என்பது தெரியுமா?

மலேசியா... தான் அது.

தமிழகத்தை பொருத்தவரை சினிமா ரசிகர்கள் என்பது ஒரு வெறிபிடித்த கூட்டம்  கட்டவுட்டில் ஆரம்பித்து, நடிகரின் கட்டவுட்டுக்கு பாலாபிழேகம் வரை செய்வார்கள்.

இதே போன்ற மனநிலை மலேசிய ரசிகர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்கள் ரசிகர் மன்றம் வைத்து கொண்டு அலைவதில்லை.

மாறாக எந்த தமிழ் சினிமா வந்தாலும் பார்த்துவிடுவார்கள். எந்த நடிகர் கலை நிகழ்ச்சி நடத்தினாலும் பார்த்து விடுவார்கள்.  அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு உண்டு.

அதே மலேசியாவில் தான்  திரைக்கு வந்த இரண்டாவது நாளில் அந்த படத்தின் CD க்கள் ஒப்பன் மார்க்கெட்டாக விற்க ஆரம்பித்து விடுகிறார்கள்  அங்குள்ள கடைகார்கள்.

வெறும் பத்து வெள்ளிக்கு மூன்று நான்கு படத்தை இணைத்து விற்பனை செய்கிறார்கள். அது மட்டும் அல்ல, அந்த படத்தின் நல்ல பிரிண்ட் வேண்டும் என்றால் கூட, அதே பத்து வெள்ளிக்கு தனி படமாக எல்லா CD விற்பனை கடைகளிலும் கிடைக்கிறது.


இங்கிருந்துதான் கள்ளத்தனமாக தமிழ்நாட்டுக்குள் புது திரைப்பட CD க்கள் வருகிறது.  இது திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு தெரியுமா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் இப்படி திருட்டு CD க்கள் வருவதை  முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் படத்தின் வசூலை பாதிக்காத வகையில் செய்ய முடியும்.

எப்படி? என்ன செய்யாலாம்?

படத்தை வெளியிடு செய்யும் போது, உலகம் முழுவதும் என்று வெளியிடு செய்யாமால், தழிழ்நாட்டில் குறைந்தது 50 நாட்கள் ஓடிய பிறகு வெளி நாட்டில் வெளியிடு செய்தால், கள்ள CD க்களின் வரத்து குறைந்து விடும்.

அதற்குள் தியேட்டருக்கு சென்று படம்  பார்ப்பவர்களின் கூட்டம் குறையாது. அதற்கு சினிமா கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

திரைத்துறையை சேர்ந்தவர்கள் யோசிப்பார்களா?

Wednesday, 19 December 2012

நீ தானே என் பொன்வசந்தம் - விமர்சனம்


கெளதம்மேனன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மென்மையான காதல் படம், நீதானே என் பொன்வசந்தம். 

வருண் ( ஜீவா ) நித்யா ( சமந்தா ) இவர்களுக்கு இடையே ஏற்படும் காதல், நான்கு நிலைகளை கடக்கிறது. 

இந்த நான்கு நிலைகளிலும் சிறு சிறு சண்டையால் பிரிந்து போகிறார்கள். பின் ஓன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதை சொல்வது தான் நீதானே என் பொன்வசந்தம்.

நீ தானே என் பொன் வசந்த்தம்


முதலில் சிறு வயது காதல். இதை காதல் என்று சொல்வது தவறு. நட்பு என்பதே சரி. தன்னோடு விளையாட வரவில்லை என்கிற சிறு வருத்தத்தில் அந்த நட்பு முடிகிறது. பின் இவர்கள் பள்ளி பருவத்தில் சந்திக்கின்றனர். இது இரண்டாம் நிலை பருவம் காதல்..

நீ தானே என் பொன் வசந்த்தம்

பழைய வருத்தம் இருந்தாலும் ஒதுக்கி விட்டு காதலிக்கிறார்கள். அந்த பள்ளி பருவ காதலில் சமந்தாவும் ஜீவாவும் கதாபாத்திரமாகவே மாறி போய் இருக்கிறார்கள். 

பத்தாம் வகுப்பு மாணவியாக வரும் சமந்தா உருவ அமைப்பில் ஒன்றிப்போவது மட்டும் அல்ல, அந்த வயது குறும்புத்தனமும், அலைபாயும் கண்களும், துள்ளி துள்ளி ஓடும் சந்தோசமும், எல்லையற்ற உற்ச்சாகமும் அடடா... படம் முடிந்த பிறகும் கண்ணுக்குள் நிற்கிறார். 

சக மாணவன் தீபக்கை சமந்தா தொட்டுப் பேச, அந்த வயது காதலர்களுக்கே வரும் வருத்தம் ஜீவாவை வருத்தம் கொள்ளசெய்கிறது.

நீ தானே என் பொன் வசந்த்தம்

என்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமால் சமந்தாவிடம் பேச, அந்த நண்பன் நான் கிளாசுக்கு போறேன் என்று நாசுக்காக விலகவும்... நீ ரொம்ப டீசண்டா... ஓவரா ஆக்ட் பண்ணாதே என்று ஜீவா கோவிப்பத்தும், அந்த காரணமே அப்போது அவர்கள் பிரிவிற்கு காரணமாக மாறுகிறது. 

பின் கல்லூரிகள் கலந்து கொள்ளும் விழாவில் மீண்டும் சந்திப்பு. பழைய பகையை மறந்து மீண்டும் காதலிக்கிறார்கள்.  இது மூன்றாம் நிலை  பருவ காதல்

நீ தானே என் பொன் வசந்த்தம்

இந்நிலையில் தன் அண்ணனுக்கு பெண் பார்க்க போன இடத்தில், தங்கள் குடும்ப சூழலை சொல்லி பெண் கொடுக்க மறுத்த தகவலால், நல்லா படித்து நிறைய சம்பளத்தில் வேலை செய்ய வேண்டும் என்று வைராக்கியத்தில் CAT எக்ஸ்சாம் எழுதி பாஸாகிறார்.  

MBA படிக்க கேரளா போகவேண்டிய நிலையில் தன்னையும்  அழைத்து போக சொல்லி சமந்தா வற்ப்புறுத்த ஜீவா மறுக்க, மீண்டும் சண்டை.. காதலர்கள் பிரிகிறார்கள்.

நீ தானே என் பொன் வசந்த்தம்

கல்லூரி படிப்பு முடிந்து வரும் ஜீவா, தன் பள்ளி தோழர்களின் உதவியோடு சமந்தா இருக்கும் இடத்தை தேடிபோகிறார். 

ஆனால் பழைய கோவத்தை காட்டும் சமந்தா தன்னை நேசிக்க வில்லை என்ற முடிவுக்கு வருகிறார் ஜீவா, அதனால்  வீட்டில் பார்க்கும் பொண்ணுக்கு தலையாட்டி வைக்க, தகவல் தெரிந்த சமந்தா தன் அக்காவிடம் நான் சொதப்பிட்டேன் என்று உடைந்து அழும் போது, கல் மனனமும் கரையும். 

சமந்தாவிற்குள் இந்தனை ஆழமான நடிப்பு இருக்கிறது என்பதை கண்டுபிடித்த கெளதமிற்கு பாராட்டுக்கள். அதோடு பல இடங்களில் வெறும் வசனங்களால்  காட்சியை சொல்வதும் கெளதம் மனதில் நிற்கிறார்.

நீ தானே என் பொன் வசந்த்தம்

தன் படத்தில் சில வினாடி வந்து போகும் பாத்திரமாக இருந்தாலும் அழகாக காட்டும் கெளதம்,  இந்த படத்திலும் தொடர்கிறார். 

குறிப்பாக சந்தானம் கலக்கல் காமடி நடத்தி இருக்கிறார்.  அவர் வரும் போது எல்லாம் தியேட்டர் அதிர்கிறது. 

படத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை. ஆனால் பின்னணி இசைதான் சுமார். எப்போதுமே ராஜாவின் இசை கதாபாத்திரங்களோடு இணைந்து பயணிக்கும்.  ஆனால் இந்த படத்தில் அது இல்லை. ஏன்.. ஒரு வேலை அவர் இசை அமைக்க வில்லையோ.


பள்ளி கல்லூரி பருவ காதல் என்றதும், ஒரு முட்டு சுவர், அதில் நாலைந்து  உருப்படாத மாணவர்கள், பெண்களை கிண்டல் செய்வது, அதனால் சண்டை வருவது என்று வழக்கமான தமிழ் சினிமா போல்  இல்லாமல் இயக்கிய கெளதம் பாராட்டுக்கு உரியவர்.

தேவை இல்லாமல் எந்த காட்சியையும் திணிக்க வில்லை இயக்குனர். அதோடு ஜீவா  தன் திருமணத்தை நிறுத்தி விட்டு, சமந்தாவை தேடி வரும் போது, அந்த பக்க களோபரத்தை காட்டாமல் தவிர்த்தது சிறப்பு.

மொத்தத்தில் ....அந்த படம் மாதிரி இல்லை, இந்த படம் மாதிரி இல்லை என்று சொல்வதை விட இந்த படம் எப்படி என்றால்... அழகான கவிதை.