ads

Sunday, 21 April 2013

திருப்பதி ஏழுமலையான் பரமசிவனே!



ஏடு கொண்டல வாட வெங்கட்ரமணா.... கோவிந்தா... கோவிந்தா ...

கோஷம்   விண்ணை பிளக்கிறது.

அந்த அற்புத உருவத்தை கண்ணால் கண்டாலே அடியவரின் துன்பம் யாவும், தூசாய்   பறக்கிறது. அனுதினமும் கல்யாண கோலமாய், அந்த சந்நிதானம் அடைய கூட்டம் அலைமோதுகிறது. 

உண்மையில் சங்கட ஹரனான வேங்கடரமணன் யார்? பிரம்மனா? சிவனா? திருமாலா?அம்பிகையா? முருகனா?

இந்த கேள்வி இன்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக பலரால் கேட்கப்பட்டு இது என் தெய்வம் என்று அவரவர்களால் கொண்டாடப்படுகிறது.

ஏழுமலையான் வடிவமென்பது எந்த வைணவ ஆகமத்திலும் மகாவிஷ்ணுவை குறித்து விளக்கப்படும் பல்வேறு வடிவங்களிலும் கூறப்படாத தனி வடிவம்.

மேலிரண்டு கைகளில் இயல்பாக சங்கு சக்கரம் காணப்படுவதில்லை.( அவை அலங்காரத்தின் போது போருத்தப்படுபவையே)

அபிஷேக காலங்களில் அணித்து அலங்காரங்களையும் நீக்கிவிட்டு பார்க்கும் போது அவனது பூரண அழகு கொப்பளிக்கும் திருவுருவம் புலப்படும்.



லிங்காரமாக  விளங்கும் ஜடாமகுட தலைமுடி.

அழகே உருவான அற்புத திருமுகம். நாமத்தால் மறையாத கருணை பொழியும் கண்கள். மதுரமான அதரம், தோடுடைய நெடிய செவிகள், அலைபுரளும்   சடை. நீண்ட நெடிய உருவம். கடி மார்பில் படரும் முப்புரினூல் வைஜயந்தி, கௌஸ்துபம், மார்பில் ஸ்ரீவஸ்தம்.

கைகளில் விளையாடும் நாகாபரன்கள், யோக போக முத்திரை காட்டும் மேலிரண்டு கைகள். கீழ் வலக்கை வராத முத்திரையாக திருவடியை காட்ட, இடக்கை கட்டிய விலம்பிதமாக தொடை மேல் இருக்கிறது.

இப்படி ஒரு ஆஜானுபாஹுவான வடிவத்தின் இடையோ, மிககுறுகி மேல்லிடையாக காட்சி தருகிறது.



சரணடைந்தவரை காக்கும் திருவடிகளோ கம்பீரமான தண்டையும், லாவண்யமான கொலுசும், மெட்டியும் அணிந்து வேங்கடவனின் அழகுருவத்தை தாங்கி நிற்கிறது.

இவன் யார்?

இவன் விஷ்ணு மட்டும்தானா?

இவனை பரமேஸ்வரனாக கொள்ளவும் வலுவான காரணங்கள் இருக்கிறதே.

ஏழுமலையான் பரமசிவனே!

வெங்கடேஸ்வரன்.. வெங்கடேசன் என்ற பெயரே கூறுமே ஈசன், ஈஸ்வரன் என்று. நெடிதுயர்ந்து நிற்கும் வெங்கடேஸ்வரனின் திருவுருவத்தை காண்போம்.

ஈசனுக்கே உரியது பாம்பு. ஏழுமலை தெய்வத்தின் கைகளிலும் கம்பீரமாய் நாகாபாரணம்.

மற்ற தெய்வங்களுக்கு எல்லாம் அலைபுரளும் அழகிய அளகபாரம் இருக்க துய்ய செஞ்சடை, சடைமுடி, பிரதான சிவபரம்பொருள் ஏற்றது. திருமலை தெய்வத்தின் சிரத்திலும் நீள் சடையான ஜடா மகுடமே.

அறியாமல் வில்வத்தை பறித்து போட்ட வேடனுக்கு முக்தி கொடுத்தவன் சங்கரன். வில்வம் பரமனுக்கு அவ்வளவு பிரியமானது.

திருமலையில் (திருமாலுக்கு மார்கழி மாதமான ) தனுர் மாத வழிபாட்டில்  (துளசியை விட) வில்வ தளம் கொண்டே அர்ச்சனை நடக்கிறதே....

சிவராத்திரி காலத்தில் சேஷ்திர பாலகர்களுக்கு அபிஷேக  வழிபாடுகள் இன்னும் நடைபெறத்தான் செய்கிறது.

வேங்கட நாதனை வேதாந்த கூத்தனை  
வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தியை 
வேங்கடமென்றே விரகறியாதவர் தாங்களில் 
லாருயிர் தாமறியாரே என்கிறார் திருமூலர்.

த்வாதசலிங்க ஸ்தோத்திரம் செய்த ஆதிசங்கரர் ஸ்ரீசைல மல்லிகார்ஜுன சிவனை பாடும்போது ...

ஸ்ரீசைல ச்ருங்கே விவிதப் ரசங்கே சேஷாத்திரி ச்ருங்கேபி சதா வசந்தம்...

(பற்பல மலைத்தொடர்களை கொண்ட ஸ்ரீசைலத்தில் அல்லது சேஷாத்திரி மலையின் உச்சியில் எப்போதும் குடி கொண்டவனே.) என்று சிலேடை போல் பாடுகிறார்.


சிவன் தான் என்று முடிவாக சொல்லிவிடவும் முடியாது. அதேசமயம் அம்பிகையே என்று சொல்லவும் தோன்றுகிறது.

திருமலைவாசன் அம்பிகையே.

கோவிந்தனுக்கு உரிய வாகனம் பெரிய திருவடியான கருடன். திருமலை ஆலையமெங்கும் நாராயணனுக்குரிய கருட சின்னம் காணப்படவில்லையே.

அம்பிக்கைக்குரிய கம்பீரமான சிம்ம வாகனமே எங்கும் வீற்றிருக்குறது.

விக்கிரகத்தை கூர்ந்து பாத்தோமானால் அம்பிக்கைக்கே ( பெண்ணுக்கே) உரிய கொடி இடையே காணப்படும். பின்புறம் நீண்ட தலைமுடியும் பின்னங்கால் வரை தொங்கும் அழகான   பின்னலும்   கூட உண்டே.

திருவடிகளில் மெட்டி, தண்டை, கொலுசு என்று அவளுக்குரிய அனைத்துமே இருக்கிறது. திருமலை ப்ரம்மோற்சவ விழ நடைபெறுவது அம்பிக்கைக்குரிய சரத் நவராத்திரி காலத்தில் தான் என்பது மற்றோர் சிறப்பு.

கோவிந்த ரூபினி என்று இதைத்தான் லலிதா சஹஸ்ரநாமம் சூசனையாக   புகழ்கிறதோ?

அபிஷேகத்தின் போது ஸ்ரீ சூக்த பாராயணம் கேட்கிறதே...

வெள்ளிகிழமைகளில் ஏழுமலையானுக்கு அன்பிக்கைக்கே உரிய மஞ்சளால் அல்லவா அபிஷேகம் நடைபெறுகிறது. படவையாலேயே அலங்காரம் வேறு.




காஞ்சி மாமுனிவர் மஹா பெரியவர் ஒரு முறை திருப்பதி விஜயம் செய்த போது,

இங்கே எழுந்தருளி இருக்கும் வெங்கடேச பெருமான் சர்வமும் ஆனவர். எனக்கு அம்பாளாகவே தோன்றுகிறார். புடவை உடுத்தல், வெள்ளிகிழமை திருமஞ்சனம், நவராத்திரி உற்ச்சவம், யாளி பிம்பங்கள் இவையெல்லாம் என் எண்ணத்தை பிரதிபலிக்கின்றன என்றார்.

தன்னுடன் எந்த தெய்வமும் அருகில் இல்லாமல் தனியாக நிற்பதின் காரணம், தானே அனைத்துக்கும் காரணமான பராசக்தியாகவே இருப்பதால் தானோ.

தானே தேவியாக இருக்கும் போது எப்படி மற்றொரு தேவியை உடன் வைத்திருக்க முடியும்.

திருமலையில் நித்யமும் பெருகிவரும் செழிப்புக்கும், மக்கள் கூட்டத்திற்கும், ஏழுமலையான் சாந்தியத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரமே என்று கூறுகிறார்களே....

எழுமளியானுக்கு பாலாஜி என்ற பெயர் இருக்கிறதே. இந்த பெயர் வந்ததே திருமலை தெய்வம் பாலா திரிபுர சுந்தரியாக இருப்பதால் தான் என்று கூறி வணக்கும் பலரும் இருக்கிறார்களே....

அதனால் சந்தேகமேயில்லை.. அம்பிகையே தான்.

ஆனால் அப்படியும் அறுதியிட்டு கூறிவிட முடியாது. வேங்கட மலையில் வாழ்பவன் கந்தனே என்றும் காரணக்களை அடுக்கலாம்.

திருமலை தெய்வம் திருமுருகனே.

வெங்கடாத்திரி மலை சுப்பிரமணிய வாச ஸ்தலமாகவே சிவரகசியம் என்னும் புராதன நூல் போற்றுகிறது.

வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாமல் பழனி, செந்தூர், பரகுன்றம் என்று முருகவேல் ஆலயங்களில் மட்டுமே காணப்படும் முடியிறக்கும் வழிபாடு இங்கு மட்டும்தானே நடைபெறுகிறது.

அருணகிரி பெருமான் வெந்த குரமார குக சேந்த மயூரா வடவேங்கட மாமலையில் உறைவோனே என்கிறார்.

பால தேவராயர் சிவகிரி கையிலை திருப்பதி வேலூர் என்றும்...

பண்டுதான் தங்கியிருந்த வேங்கட மலை என்று கந்தபுராணமும் குறிப்பிடும்.




சுவாமி என்று எல்லா தெய்வங்களையும் பொதுவில் குறிப்பிட்டாலும் சுவாமி என்ற அருட்பதம் முருகனுக்கே உரியது.சுவாமி என்றால் குரமாரசாமியே என்பார் காஞ்சிமுனிவர்.

திருமலை கோவிலின் தீர்த்தத்தின் பெயர் சுவாமி புஷ்கரிணியே தான்.

ஸ்ரீ முத்துசுவாமி தீச்சிதர் தன சுபிரமன்யேன ராக்ஷிதொஹம் என்ற சுருதியில் வெங்கடேஸ்வர நாமருபேன என்றே பாடுகிறார் என்றால் இவன் முருகன் தானே.

அப்படியானால் ஏழுமலை தெய்வம் யார்தான் இவன். நாம் மட்டுமல்ல நீ யாரென்று தெரியவில்லையே .. நீ சிவனா..விஷ்ணுவா..அம்பிகையா.. என்று தியாகராஜா சுவாமிகளே வியந்து கேட்கிறார்.

வைணவத்தின் முடி மன்னர்களான ஆழ்வார்கள் கூட மற்ற எல்லா இடத்திலேயும் திருமாலையே போற்றிய போதும், நாராயணனாக மட்டும் காணவில்லை.

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் 
சூழரவும் பொன்னானும் தோன்றுமால் சூடும் 
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு 
இரண்டுருவும் ஒன்றாக இணைந்து.

என்று ஹரிஹர அபேத மூர்த்தியாகவே கண்டார்கள்.

திருப்பதி வெங்கடேசனுக்கு உரிய சிறப்பான சகஷ்கர நாமமும், அதிசயிக்க வகையில் பாதி நாமங்கள் பரந்தாமனுக்கும் மீதி நாமங்கள் பரமனுக்கும் பொருந்துகின்றன.

திருப்பதி திம்மப்பனிடம் தீராக்காதல் கொண்ட அன்னமையா என்று அழைக்கப்படும் அன்னமாச்சாரியார் இந்த கேள்விக்கெல்லாம் பதிலாக முடிவை காட்டி பாடி விட்டார்.

எந்த மாத்ரமுன எவ்வறு தலசின அந்த மாத்ரமே நீவு என்று...

வைஷணவர்கள் உன்னை அன்புடன் விஷ்ணு என நினைப்பார்கள்.

வேதாந்திகள் உன்னை பரபிரம்மம் என்பார்கள்.

சைவர்களான பக்தர்களுக்கு நீயே சிவபெருமான்.

கபாலிக குலத்திற்கு பைரவனாக இருக்கிறாய்.

சாக்தரோ நீ சக்தியின் வடிவம் என்றே எண்ணுவார்கள்.

அனைத்தும் கடந்த பரம் பொருள்தானே எல்லாமுமாகவும்  இருக்க முடியும்.


வி. அரவிந்த ஸுப்பிரமண்யம் 


1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...