தமிழீழ மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்கள்மீது இனப் படுகொலை புரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் அனைத்துலக விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு, போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
தமிழீழ மக்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற முதன்மைக் கோரிக்கைகளுடன் தொடரும் தமிழக மாணவாகளது போராட்டம் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களை மட்டுமல்ல, சிங்கள ஆட்சியாளர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக மாணவர்களது உறுதியான, அர்ப்பணிப்பு மிக்க போராட்டங்கள் தமிழக மக்கள் மத்தியில் தமிழீழம் குறித்த விழிப்புணர்ச்சியினை உச்ச நிலைக்கு உயர்த்தியுள்ளது.
தமிழக மாணவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக, பல்வேறு தளங்களிலும் போராட்டங்கள் பெருகி வருகின்றன. தமிழகத்தின் குக் கிராமங்களுக்கும் இந்தப் போராட்டம் விரிந்து செல்கின்றது. இன்று, திரைப்பட நடிகர் – நடிகைகளையும் இந்தப் போராட்டம் களத்தில் இறக்கியுள்ளது.
தமிழீழம் விடுதலை பெறாதுவிடின் தமிழகம் அமைதி கொள்ளாது என்பது நிச்சயமான நிலையில், இந்திய – சிங்கள ஆட்சியாளர்கள் அதனை முறியடிப்பதற்கான அத்தனை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
தமிழக மக்களது தமிழீழம் சார்ந்த உணர்வினையும், எழுச்சியினையும் முறியடிப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் தம்மால் பயிற்றுவிக்கப்பட்ட பல தமிழ் உளவாளிகளை இராமேஸ்வரம் ஊடாக தமிழகத்தில் தரையிறக்கி வருகின்றது.
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக இந்த இளைஞர்கள் அகதி என்ற போர்வையில் தமிழ் நாட்டினை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு மாகாண வட்டாரத் தமிழ் பேசுவதையும் இவர்கள் வழங்கிய தொலைக்காட்சி நேர்காணலில் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
தமிழக மக்களது போராட்டங்கள் இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமான பல விழைவுகளை ஏற்படுத்தி வருவதாக இவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும், இவர்கள் சிங்கள இராணுவ உளவுப் பிரிவால் ஏதோ தீய நோக்கத்திற்காகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என்றே நம்பப்படுகின்றது.
மிகப் பெரிய திட்டமிடலுடன் சிங்கள அரசால் தமிழகத்தில் களம் இறக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிங்கள அரசின் இந்தச் சதி முயற்சிக்கு இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களும் உடந்தையாக இருக்கும் பட்சத்தில், தமிழகத்தில் தமிழ் மக்களைக் குழப்பும் வகையிலான வன்முறைச் சம்பவங்கள் இவர்களால் தோற்றுவிக்கப்படலாம். அல்லது, அமைதியான மாணவர் போராட்டங்களில் குழப்பங்களையும் வன்முறைகளையும் தோற்றுவிக்க முயலலாம். அதனைச் சாட்டாக வைத்து, மாணவர் போராட்டங்களைத் தடை செய்வதற்கு முயற்சி செய்யலாம்.
இது வெறும் ஊகங்களின் அடிப்படையிலான சந்தேகங்கள் அல்ல. தமிழ் மக்களை அடக்குவதற்கு சிங்கள – இந்திய ஆட்சியாளர்கள் எதையும் செய்வார்கள் என்பதை நாம் கடந்து வந்த பாதை நன்றாகவே கற்றுத் தந்துள்ளது.
தேசியத் தலைவர் அவர்களது காலடியிலேயே கருணா என்ற கருநாகத்தை உருவாக்கிய சிங்கள ஆட்சியாளர்கள் தமிழகத்தில் நடைபெறும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பார்வையாளராக நின்று ரசிக்கப் போவதில்லை.
புலம்பெயர் தமிழர்களது மீள் எழுச்சியை நிர்மூலம் ஆக்கும் சிங்கள முயற்சியில் பிரான்சின் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் பரிதி சுட்டுக் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை இனப் படுகொலை செய்து பெற்ற வெற்றி கைநழுவிப் போவதற்கு சிங்கள தேசம் அவ்வளவு இலகுவில் விட்டுவிடாது.
- இசைப்பிரியா
No comments:
Post a Comment