Follow by Email

Friday, 28 June 2013

இலங்கையில் கடை விரிக்கும் காவித்தீவிரவாதம்


 அது திறந்தவெளி அரங்கம். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் சிறு மைதானம் நிரம்பி வழிகிறது. காவிதரித்த புத்த பிக்குகள் அமைதியாய் வீற்றிருக்க, அதற்கு பின்னால் மக்கள் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். அத்தனைபேர் பார்வையும் மேடையை நோக்கி குவிந்திருக்கிறது.

இதோ மேடைக்கு வருக்கிறார் ஒரு புத்த பிக்கு. பூசின மாதிரி உடம்பு, புன்னகை தவழும் உதடுகள்தெய்வகளை சுமந்த முகம், குரலில் கூட மென்மையை குழைத்துஅரங்கம் அதிர சொல்கிறார்.

பிச்சு, பிச்சூனி...உபாசிக...உபாசிகாவனி.....பின்வத்துணி என்கிறார் சிங்களத்தில்.

அதாவது, புத்தர் வழிநடக்கும் பிக்குகளே ( ஆண் ) பிச்சூனிகளே ( பெண் ) தவமேற்றும் உபாசர்களே ( ஆண் ) உபாசிகாவனி ( பெண் ) புண்ணிய ஆத்மாக்களே ( பொது மக்கள் ) என்று பொருள்.மேலும் தொடர்கிறார். புத்தரின் அன்பு வழி போதனை, அறவழி செயல், நன்னடத்தை, தனிமனித ஒழுக்கம் பற்றி அவர் பேச்சு களைகட்டுகிறது. குழுமி  இருந்தவர்கள் மெய்மறந்து அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உரை முடிந்ததுகூட்டம்  கலைந்தது, திரைவிலகியது, சற்று நேரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். இப்போது முகத்தில் இறுக்கம், குரலில் கடுமை தொனிக்க இப்படி வருகிறது வார்த்தை.

இந்தியாவினால் பலவந்தமாக ஏற்படுத்தப்பட்டு, மக்களின் பணத்தை அழிக்கும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை வடக்கில் மாத்திரமல்ல, எந்த மாகாணத்திலும் நடத்தக் கூடாது.

போருக்கு முன்னர், வடக்கில் வாழ்ந்த சிங்கள மக்களை அங்கு மீள்குடியேற்றாது தேர்தலை நடத்துவது சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.

காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், பிரபாகரன் மேற்கொண்ட பாதிப்புகளுக்கு மேலான பாதிப்புகள் ஏற்படும்,  இதனை மத்திய அரசாங்கத்தினால் கூட தடுக்க முடியாது போகும்.


இத்தோடு நிற்கவில்லை அந்த ஆவேசம், இந்தியா நோக்கி திரும்புகிறது. கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக ஐந்தாயிரம்  பேரை அழைத்துச் சென்று அந்த தீவில் குடியேற போகிறோம் என்றும்  அதிரடி சரவெடிகளை கொளுத்தி போடுகிறார் இராவணா சக்தி அமைப்பின்  இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்.

ராவண சக்தி இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தினால், உள்ளூர் முஸ்லிம்களை குறி வைக்கிறது பலசேனா. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசினால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புத்த புக்குகளின் நடவடிக்கை உலகிற்கு உணர்த்துகிறது.


இனவெறி துவேஷ குற்றசாட்டில் இருந்து இன்னும் இலங்கை விடுபடவில்லை.  சொந்த நாட்டு மக்களையே சூரையாடி சுடுகாட்டிற்கு அனுப்பிய குற்றம், இன்னும் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. இந்நிலையில் இன்னொரு துவேஷ நெருப்பு வளருவது இலங்கைக்கு ஆபத்து. ஆனால் தமிழர்களை கொன்று தனிபெருமை தேடிக்கொண்ட ராஜபக்ஷே அதை உணர்ந்தவராக இல்லை.

அமெரிக்க அதிபர்ன்னா பெரிய கொக்கா? ஒபாமாவே... உன்னை எச்சரிக்கிறேன். திருந்து...! இல்லாவிட்டால் திருத்துவோம் என்று,  தெரு முனை பிரச்சாரத்தில் வீரம் காட்டும் உள்ளூர் பேச்சாளர்கள் மாதிரி, தன் மந்திரி பிரதானிகள் பேசுவதை கண்டும் காணாமல் மௌனமாக இருக்கிறார் ராஜபட்ஷே.

ராவண சக்தி முழுக்க முழுக்க இந்திய எதிர்ப்பு நிலையை கையில் எடுத்திருக்கிறது. ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரதம் இருந்தால், தமிழ் படங்களை தடை செய் என்று மகஜரோடு  போகிறார்கள்.

இலங்கைக்கு ஆதரவாக இல்லையா, இந்திய பொருள்களை இலங்கையில் இறக்க விடமாட்டோம் என்று கடுப்பு காட்டுகிறார் அதன் தலைவர். இந்திய பொறியாளர்களுக்கு இலங்கையில் என்ன வேலை, வெளியே அனுப்பு என்று தொழிற்சங்க தலைவர் மாதிரி ஏகத்திற்கும் எரிந்து விழுகிறார்.


இலங்கை இந்தியாவிற்கு பணிந்து போகிறது என்று ஆளும் அரசாங்கத்தையே குற்றம் சாட்டுகிறார். உண்மையில் கோத்தபாய ராஜபக்சேயின் ஆசிர்வாதமும், ராஜபக்ஷேவின் மனசாட்சி என்றும் வர்ணிக்கப்படுவதுதான் ராவணசக்தி.

இலங்கையை பொறுத்தவரை மதம் பிடித்தாட்டுவது ஒன்றும் புதிதல்ல. 2002 ல் நார்வேயின் முயற்சியின்  பேரில் நடைமுறைப் படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக களத்தில் குதித்தது சிஹல உறுமய, ஜாதிக ஹெல உறுமய என்ற இரு அமைப்புகள்.

உள்ளூர் கிளர்ச்சியாளர்களான ஜே.வி.பி யை அரசு களையெடுக்க தொடங்கிய போது, அரசுக்கு ஆதரவாக களமிறங்கியது தேசம் பிரேமி என்ற பௌத்த இயக்கம்.இன்று,   யுத்த சுவடு இன்னும் மாறவில்லை. செத்த பிணங்களின் மேல் செயலிழந்து தவிக்கிறது தமிழினம். வறுமை, வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பற்ற சூழலில் சொந்த வீடுகளையும், விவசாய நிலங்களையும் சூரையாடுவதை தட்டிக் கேட்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தமிழினம். 

இந்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது   மாதிரி இனவெறி பிடித்து கிளம்பி இருக்கிறது பொதுபல சேனா மற்றும் ராவணசக்தி.

அரச குலத்தில் பிறந்தும் அதை துறந்து ஞானம் தேடி போன புத்தரின் பாதையை பின்பற்றுவதாய் நடிக்கும்  புத்த பிக்குகள், அரசியல் வெறி பிடித்து அலைகிறார்கள். இலங்கையில் பௌத்த ஆட்சிமுறையை அமுல்படுத்தும் நோக்கத்தில், ஆட்சியாளர்களை கையில் வைத்துக் கொண்டு ஆட்கடத்தல், கொலைமிரட்டல், எச்சரிக்கை என்று காவி தாண்டவம் கடைவிரித்திருக்கிறது.

இதை சுட்டிக் கட்டினால் ஊடகங்கள் தாக்கப்படுகின்றன. தாக்குதல் நடத்தும் புத்த பிக்குகள் மீது சட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. குற்ற வழக்குகளை பதிவதும் இலை. பெயரளவு விசாரணை, பெருமளவு உபசரிப்பு என்ற ரீதியில் கனிவு காட்டுகிறது காவல்துறை.


இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முதல் நெருப்பை கொளுத்திப் போட்டது பொதுபலசேனா.  அது ஹலால் சான்றிதழ். முஸ்லிம் உணவுவகைகளில் பன்றி கொழுப்பில் தயாரிக்கப்படும் உணவு பொருள்களை பௌத்தர்கள் தலையில் கட்ட முயல்வது தவறு என்று தான் முதல் முழக்கம் ஆரம்பமானது. 

அது வழிமாறி,  வழிப்பட்டு ஸ்தலங்களை  தாக்குவது, வியாபார நிறுவனக்களை சூரையாடுவது என்று திசைமாறிப் போகிறது.

புத்தம் சரணம் கட்சாமி என்று சமத்துவம் பேசிய பிக்குகள் பேட்டை ரவுடிகள் மாதிரி ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்வது கேவலத்தின் உச்சக்கட்டம்.

கடைசியாக கட்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறது ராவணசேனா.  இப்போது பௌத்த அமைப்புகள் ஆடிக்கொண்டிருப்பது ஆபத்தான ஆட்டம் என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுத்தால் குட்டி நாடு இலங்கை, உலக நாடுகளால் தட்டி வைக்கப்படுவது நிச்சயம்.


Wednesday, 26 June 2013

உங்களைச் சுற்றி உளவாளிகள் - உஷார்


கசக்கிப் போட்ட கதம்பம் மாதிரி கட்டிலில் கிடக்கிறாள் நிஷா. அவளுக்கு பக்கத்தில் கலைந்த தலைமுடி, அழுக்கேறிய சட்டை, மழிக்கப்படாத தாடி, சிகெரட் புகைகளுக்கு மத்தியில் வெறிச்சிட்ட பார்வையும், வெளிறிய முகத்தோடும்  இருப்பது, நிஷாவின் கணவன் அஷ்வின்.
இது கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல, நிஜம்கட்டுரைக்காக பெயர் மாற்றப்பட்டவர்கள். ஸ்ரீரங்கம் நகரின் மையப்பகுதியில் தனி வீட்டில் தம்பதிகளாக வாழ்பவர்கள்முப்பதை தொட இன்னும் மூன்று மாதம் இருக்கிறது அஷ்வினுக்குஇருபத்தாறில் இருக்கிறாள் நிஷா.
சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த    இவர்கள் வாழ்க்கையில் விழுந்த ஒரு இடி, ஒட்டு மொத்தமாக புரட்டிப்போட்டு விட்டது வாழ்க்கையை..
அந்த இடி....!
இணையதளத்தில் வெளியான இவர்களின் கட்டிலறை காட்சி. அதன் விளைவு என்ன தெரியுமா? இதோ கந்தல் துணியாய் கட்டிலில் கிடக்கும் நிஷா, மூன்று நாட்களுக்கு முன்பு, தற்கொலைக்கு முயன்று, கடைசி நேரத்தில் அஷ்வினால் கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு பிறகு, மறு பிறப்பெடுத்து வந்திருக்கிறாள்.
விஷயம் இதுதான்.
அஷ்வின் நிஷா மனமொத்த தம்பதிகள். இருவரும் படித்தவர்கள், பட்டதாரிகள்வேறு வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிபவர்கள். நல்ல வருமானம், வசதி குறையாத வாழ்க்கைத்தரம், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட தம்பதிகள். சந்தோசத்திற்கு குறைவிருக்குமா என்ன?
யார் கண் பட்டதோ, விதி வேறு ரூபத்தில் விளையாடியது. இவர்களின் அன்றாட அந்தரங்க படுக்கையறை காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு, ஒரு ஆபாச இணையதளத்தில் வெளிவந்து விட்டது.
தங்களை தாங்களே படம் பிடித்து இணையத்தில் வெளியிடும் வியாதி பிடித்தவர்கள் அல்லஆர்வத்தாலும், அறியாமையாலும், சிறுபிள்ளை தனமாக படம் பிடித்து, தாங்களே பார்த்துக் ரசிக்கும்  அறிவீலிகளும் அல்ல.   ஆனாலும் எப்படியோ இவர்களின் அந்தரங்க படம் வெளிவந்து விட்டது.
இந்த தகவல் கூட, நியூசிலாந்தில் இருக்கும் கல்லூரித்தோழன் ஆகாஷ் சொல்லித்தான் தெரிந்தது.   அதுவும் முட்டாள், ஸ்டுப்பிட், மடையா என்ற ஏக வசனங்களுக்கு பிறகு, கேவலமா இருக்கு, பாவம் நிஷா... அவளையும் சேர்த்து அப்லோடு செய்து அசிங்கப்படுத்தி   இருக்கே என்று திட்டிவிட்டு வைத்து விட்டான் போனை.
ஆகாஷ்,  அஷ்வின்    மெயிலுக்கு  அனுப்பிய லிங்கையை கிளிக் செய்தபோது, அப்பட்டமாய் இவர்கள் படுக்கையறை காட்சிகள். எந்த ஒட்டு வேலையும் இல்லை. தடயவியல்துறைக்கு அனுப்பி வைத்தாலும், இது அஷ்வின் நிஷா தம்பதிகள்தான் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்கள்.
இந்நிகழ்வுக்கு பிறகு ஒட்டு மொத்தமாக முடங்கிப் போனது இவர்கள் வாழ்க்கை. பள்ளிக்கு நீண்ட விடுப்பு, உண்ண மறந்து, உறங்க மறந்து, உலகமே தங்களைப் பார்த்து கேலியாக சிரிக்குமே என்று தாங்களாகவே போட்டுக்கொண்ட விருப்ப வேலிதான் வீட்டுச் சிறை.
ஆனால் ஆகாஷ் பெரும் முயற்சி செய்து, வீடியோவை வெளியிட்ட இணையதளத்தை மெயில் மூலம் தொடர்பு கொண்டபோது, வீடியோவை நீக்க 50,000 அமெரிக்க டாலர் கேட்டது அதிர்ச்சியின் உச்சகட்டம்.
இந்த தகவல்தான் நிஷாவை தற்கொலை வரை தள்ளிச் சென்றது. ஆனாலும் ஆகாஷின் இடைவிடாத போராட்டம், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கைகளுக்கு பிறகு வீடியோவை நீக்கி இருக்கிறது அந்த இணையதளம்.
படுக்கையறை படம் பிடிக்கப்பட்டது எப்படி என்ற கோணத்தில் ஜன்னல், வென்டிலேட்டர் முதல், சகல இடங்களும் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்த போது டியூப் லைட் பிரேமில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது ஒரு கையடக்க சைனாகேமரா.
இதை யார் செய்திருக்க முடியும்? இதற்கு பெரிய துப்பறியும் ஆற்றல் எல்லாம் தேவையில்லை. வழக்கமாக பிளம்பர், எலெக்ட்ரிக்  வேலைகளை செய்து தரும் கயவனின் கைவரிசைதான் இது.
தங்களின் எதிர்காலம், குடும்ப கௌரவம் என்ற நோக்கில், வெறும் மிரட்டலோடு தப்பிச் சென்றுக்கிறான் அந்த அயோக்கியன்இவர்களை படம் பிடித்துக் காட்டி பரபரப்பாக்குவது என் நோக்கம் அல்ல. இது போல் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற விழிப்புர்ணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
கடந்த ஆண்டு இறுதியில் கேரளாவில் ஒரு பாத்ரூமுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட கேமரா பற்றிய செய்தி வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.காலம் மாறியிருக்கிறது. தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. உள்ளங்கைக்குள்  ஒளித்து வைத்துக் கொண்டு ஒற்று பார்க்கிற அளவிற்கு, மலிவு விலை சாதனங்கள் வந்து  விட்டன. அடுத்தவரின் அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம், பணம் பறிக்க அல்லது பழிவாங்க என்று பல நிலைகளில் இதுபோன்ற சாதங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறதுவீட்டுக்குள் நடமாடும் வெளியார்கள் விஷயத்தில் கூடுதல்  கவனம் தேவைஅது  பக்கத்து வீட்டு பையனாக கூட இருக்கலாம், தவறில்லை.


ரிப்பேர் வேலை செய்யவரும் நபர்களை கூடவே இருந்து கண்காணிக்க வேண்டும். வழக்கமாக வருகிற பையன், நம்ம ஆறுமுகத்து மகன் என்கிற ரீதியில் அதீத நம்பிக்கை வேண்டவே வேண்டாம்


ஆடைகளை களையவேண்டிய அவசியம் இருக்கும்  லெட்ரின், பாத்ரூம் மற்றும் பெட்ரூம் போன்றவற்றில் வேலைகள் நடக்கும் போது உடன் இருந்து கவனிக்க தவறக்கூடாது.
சுற்றுலா செல்லும் இளம் தம்பதிகள், தங்கும் இடங்களை  தரமாக பார்த்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம். இது உள்ளூர், வெளியூர், வெளிநாடு அனைத்திற்கும் பொருந்தும்.
இதுவரை பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டிருந்தால் இனியும் அப்படி  இருக்காதீங்க. அதுதான் உங்களுக்கு நல்லது.


அந்த ஒரு நிமிடம்- வீடியோ

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது. ஒரு நிமிட தாமதம் ஒரு உயிர் பிரிய நேரலாம், 

ஒரு நிமிட தாமதம் பயணம் செய்ய வேண்டிய பஸ்ஸை தவற விடலாம், இப்படி பல இழப்புகளை அந்த ஒரு நிமிடம் செய்துவிடும். 

இன்று இணையதளம் இல்லாமல் உலகம் இயங்காது. பேஸ்புக், டிவிட்டர், மெயில், விடியோ, பிளாக் என்று பலர் இணையதளங்களில் முழ்கி கிடக்கிறார்கள். 

ஒரு வினாடியில் உலகம் முழுவதும் நடக்கும் இணையதள செயல்பாடு என்ன என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.
Tuesday, 25 June 2013

மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?


மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது. 

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள்.உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்?

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! 

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். 

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.. பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

நன்றி : சி. என். என் 

வேதம் கண்ட விஞ்ஞானம்!!!

தொடரும் .....!!

Monday, 24 June 2013

நெஞ்சைத் தொடும் நிஜம்!!

செங்கோட்டை ஸ்ரீராம்
சென்னையில் இப்போதெல்லாம் ஒரு விபரீதத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! 

வர்த்தக நகர்! வர்த்தக வளாகங்கள், கடைகள் அவ்வப்போது புதிதாய் முளைக்கின்றன. அதிகாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் ஹோமத்துக்கான திரவியங்களோடு, சில பல வைதீகர்கள் நாய்களின் குரைத்தலையும் பொருட்படுத்தாமல் அல்லது பயத்தில் உறைந்தபடி.. செல்வதைப் பார்த்திருக்கிறேன். 

அப்படியே சில ஹோமங்களில் கலந்து கொண்டு இவர்கள் அடிக்கும் கூத்துகளையும் பார்த்து வருகிறேன். 

காசு ஆசை யாரை விட்டது!? யாகம் செய்யும் கர்த்தாவை மகிழ்விப்பது ஒன்றே யாகத்தின் பிரதான நோக்கமாம்! அது சாஸ்த்ரமாம். கர்த்தா எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி..! எந்த நிலையில் எந்தக் கோலத்தில் இருப்பவராக இருந்தாலும் சரி! (மேற்கொண்டு விவரிக்க இயலவில்லை..!) அந்த கர்த்தாவை ஆசனத்தில் அமர வைத்து, அவர் கையிலேயே தர்ப்பையைக் கொடுத்து, சங்கல்பம் என்ற பெயரில் ஏதேதோ சொல்லி, அவர் கையிலேயே பூவைக் கொடுத்து, மஞ்சள் பிள்ளையாருக்கு போடச் சொல்லி, மணி அடிக்கச் சொல்லி, (இதெல்லாம் பரவாயில்லை... ஓரளவுக்கு ஏற்கலாம்). 

அடுத்து உடனேயே ஹோம குண்டத்தில் கற்பூரத்தைக் கொளுத்திப் போட்டு, நாலு சுள்ளிகளைப் போட்டு, மூல மந்திரத்தை 108 ஆவர்த்தி என்ற பெயரில் நாலு பசங்களைக் கூட வைத்துக் கொண்டு ஆளுக்கு 28 சொல்லுங்கடான்னு கணக்கு வைத்துக் கொண்டு, அவர்கள் மூலமந்திரம் சொல்லச் சொல்ல, இங்கே கர்த்தாவே அக்னியில் ஹோம திரவியத்தை நேரடியாகச் சேர்க்கச் செய்கிறார்கள்...!!! இது அடுத்த சில வருடங்களில் எங்கே போய் முடியுமோ?! சட்டம் படித்தவன் சட்டத்தை மீறுகிறான்! வன்முறையில் இறங்குகிறான். வேதம் படித்தவன் விதி விலக்குகளைத்தான் முதலில் கையாள்கிறான்...!!! 

சாஸ்திரத்தில் எங்காவது ஓட்டை இருக்கிறதா, பிராயச் சித்தம் இருக்கிறதா என்று தேடுகிறான்.

ஒருமுறை இப்படி ஒரு ஹோமத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோது, காலை 5 மணிக்கு வந்து 5.15க்குள் மண்டலம் அமைத்து, 5.40க்குள் கர்த்தாவே நேரடியாக ஹோம குண்டத்தில் சுள்ளிகளைப் போடத் தொடங்கிவிட்டார். 

மெதுவாக என்ன ஸ்வாமி ஜயாதி ஹோமம் ஆயிடுத்தான்னு கேட்டேன்! ஒரு முறை முறைத்தார். எல்லாம் ஆயிடுத்துன்னார்! பூர்வ பாகம்னேன்! முடிஞ்சாச்சே! நீர் கவனிக்கலையான்னார்~... 

வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை! 

ஸ்ரீரங்கத்துக்கு முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன் வந்தார். வழக்கமான இரண்டு பட்டாச்சாரியர்கள் (பெயர் சொல்ல விரும்பவில்லை) பூரண கும்ப மரியாதை கொடுத்தார்கள். 

அவர்களிடம் ஸ்ரீசூக்தம் சொல்லச் சொன்னார் முதல்வர். அவர்கள் விழித்தார்கள். 

அம்மையாருக்கு கோபம்! உங்களை யார் இங்கே நியமித்தது? என்று! நாங்கள் பரம்பரை ஸ்தானீகர்கள் என்றார்கள் அவர்கள்! அப்படி என்றால் ஸ்ரீசூக்தம் கூட தெரியாமல் உங்களை எப்படி நியமித்தார்கள் என்றார். 

விஷயம் அங்கிருந்த பெரியவரிடம் போனது. அவர் சொன்னார்.. இவர்கள் பெருமாள் திருவடி கைங்கர்யம் செய்பவர்கள். இவர்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை! அதெல்லாம் சந்நிதிக்கு வெளியே இருக்கும் கோஷ்டியில் சொல்வார்கள், அல்லது அதற்கு தனியாக வேறு சிலர் இருப்பார்கள் என்றார். விஷயம் அத்தோடு முடிந்துபோனது. 

இதெல்லாம் எதற்காக என்றால்... எந்தத் தொழிலுக்குப் போனாலும், ஒன்று முழுதாகப் படித்திருக்க வேண்டும், அல்லது அனுபவத்தாலாவது படிக்க வேண்டும், அல்லது அந்தத் தொழிலுக்குப் போன பின்னாவது தன்னை அதற்குத் தகுதியுள்ளவர் ஆக்கிக் கொள்ள வேண்டும்..! 

இவை எதுவும் இல்லாமல் வைதீகத்துக்கு வந்துவிடுபவர்களால் தர்மம் குலைகிறது! சாஸ்திரக் கலப்பு; சாஸ்திரக் குழப்பம் ஏற்படுகிறது! நோக்கம் போல் எதையாவது சொல்லிவிட்டுச் செல்பவர்களால் சனாதன தர்மத்துக்கு குறைவுதான் ஏற்படுகிறது. 

இன்னோர் அதிர்ச்சிச் செய்தியும் அடியேன் காதில் விழுந்தது. 

திருவரங்கம் பெரிய கோவிலில் இந்த முறை கடும் தண்ணீர்ப் பஞ்சம். நந்த வனம் தொடங்கி நீர் இன்மையால் நொந்த மனம் அதிகம். கோயிலில் பக்தர்கள் சிலர் கேட்டார்கள். 

செயலில் ஊக்கம் கொண்டிருக்க வேண்டிய செயல் அதிகாரி உறக்கம் கொண்டு, நன்கொடையாளரைப் பிடித்து வாருங்கள் என அன்புக் கட்டளை இட்டார். இதனை சிரமேற்கொண்ட சிலர், பணம் திரட்டி ஆழ்துளை பம்பு போட்டார்கள்.

ஆச்சு... கோயில் மடப்பள்ளியும் வறட்சி கண்டது. மடப்பள்ளி கிணற்றில் நீர் இல்லை! வற்றிய கிணற்றில் ஆழ்துளைபோட எண்ணினார்கள். பிளாஸ்டிக் பம்பு ஆயிற்றே! பெருமாள் தளிகைக்கு ஏற்க முடியாதே என்று உதடு பிதுக்கினார்கள் சில பௌராணிகர்கள் (பழைமைவாதிகள்). 

இந்த நேரத்தில் ஒருவர் மடப்பள்ளி பக்கம் சென்றார். மடப்பள்ளிக்குள் யாரையும் நுழைய விட மாட்டார்களே! வேறு வழியின்றி உள்ளே விட்டார்கள். 

மடப்பள்ளி சுவர் ஓரங்களில் ஆங்காங்கே பான் மசாலா பாக்கு சுவைத்து துப்பிய கறைகள் தெரிந்துள்ளன. அது இருக்கும் லட்சணம் கண்டு தலைசுற்றி மயக்கம் வராத குறையாக வெளியே வந்தார் அந்த நபர். 

இப்படி எல்லாம் மடப்பள்ளியை வைத்திருந்தால், அரங்கன் கோயில் எப்படி தெய்வீகத்துடன், சாந்நியத்துடன் திகழும்.!?

அதுதான் வேண்டிக் கொண்டது நடக்கவில்லையோ? ஹே அரங்கநாதா? எப்போது மாறும் இந்நிலைமை?!

இப்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது, வடக்கே பீகாரில் இப்படித்தான் சுவர் ஓரங்களில் காறித்துப்புகிறவர், பான் மசாலா பாக்கு போட்டு துப்புகிறவர்கள் சுவர்களை அலங்கோலம் செய்யாமல் இருக்க, டைல்ஸ் பதிக்கப்பட்ட ஹனுமான் உருவத்தை சுவர் ஓரங்களில் பதித்து விட்டிருக்கிறார்கள்!

ஒழுக்கம் பேண வேண்டியவர்கள் இப்படி எல்லாம் இருந்தால், பிறகு இந்தக் காலத்தைப் பற்றிச் சொல்வானேன்! 

அண்மையில்... மயிலையில் ஒரு (அரைகுறை) வைதீகரின் பையனுக்கு பெண் பார்த்தார்கள். அந்தப் பையனுக்கு வைதீகம் தெரியாது என்றாலும், நீண்ட தேடலுக்குப் பின்னர் ஒரு பெண் அமைந்தார். 

நிச்சயமும் செய்தார்கள். திடீரென ஒரு நாள் அந்தப் பெண் நட்பு வட்டாரங்களுடன் அமர்ந்து அசைவம் உண்பதை பையன் பார்த்தான்! அதிர்ச்சி அடைந்தவன், நேராக அம்மாவிடம் சென்று அழுதான். திருமணம் வேண்டாம் என்றான். இப்போது அது தொங்கலில்! 

ஏன் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு வைதீகக் குடும்பங்களில்!? 

இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. இருந்தாலும் ஓரிரண்டைப் பதிவு செய்தேன். 

இந்த இடத்தில், படித்த ஒரு சுவையான விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும்.!
வைதிக தர்ம வர்த்தனீ 1965ம் ஆண்டு இதழ் ஒன்றில், ஹாஸ்யம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த சிறிய துணுக்கு இது....

=====
சமயோசித புத்தி
-----
ஆறு பூனை அல்லவா வரவேண்டும்? 

ஒருவர் சிராத்தம் செய்து 6 பிண்டங்களை வைத்துப் பிண்ட பூஜை நடந்தது. அவர் செல்லமாக வளர்த்து வந்த பூனை அடக்கமாகப் பிண்டத்தினருகே அமர்ந்திருந்தது. அது திடீரெனப் பாய்ந்து ஒரு பிண்டத்தைப் புஜித்து விட்டது. 

கர்த்தா பரம துக்கத்துடன் கேட்டார்... வாத்யாரே என்ன செய்வது? சிராத்தம் நஷ்டமா? மறுபடியும் சிராத்தம் செய்ய வேண்டுமா? என்றார்.

சமயோசித புத்தியுள்ள வாத்தியார் கூறினார்... ஐயா தாங்கள் சிரத்தையுடன் சிராத்தம் செய்யப் பிண்டத்த்ம் வைத்தீர்களல்லவா? அதனால் சந்தோஷமடைந்த பித்ருக்கள் நேரில் வந்து பிண்டத்தை சாப்பிட்டார்கள். ஆதலால் சிராத்தம் நஷ்டமில்லை! மறுபடி செய்ய வேண்டாம்

கர்த்தா: அப்படி சாஸ்திரமிருக்கிறதோ?

வாத்யார்: சாஸ்த்ரமா? வேதமே கூறுகிறதே! சாஸ்த்ரம் வேறு வேண்டுமா?

ஷண்மார்ஜாலீயே ஜுஹோதி ஷட்வாரிதவ:
ரிதவ: கலுவை தேவா: பிதர:|| என்கிறதே வேதம்!
இதைக் கேட்ட கர்த்தா சந்தோஷம் அடைந்தார். 

வாத்யார் இப்படி வேதம் அறியாத கர்த்தாவை ஏமாற்றியது, பிரும்மாவாக இருந்த சாஸ்திரிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர், வாத்யாரே.. ஆனால் ஆறு பிண்டங்களை ஆறு பூனைகள் அல்லவோ வந்து புஜிக்க வேண்டும். ஒரு பிண்டத்தை ஒரு பூனை தானே புஜித்தது?! என்றார்.

வாத்யார்: ஓய். உமக்குத் தெரிந்த லட்சணம் இவ்வளவுதானா? இது அப்பா சிராத்தம் அல்லவா? அவர்தானே முக்கியம் இதில்?!

பிரும்மா: அதுசரி.. மற்றவர் சிராத்தத்தில் இப்படி பூனை வருவதுமில்லையே! புஜிப்பதும் இல்லையே!

வாத்யார்: கர்த்தாவுக்கு பூனையிடமும் பிதாவிடமும் அபரிமிதமான அன்பு. அதனால்தான் பிதா பூனையாக வந்தார்.புஜித்தார். உமக்கு சூட்சும தர்மம் தெரியாது! 

இப்படி வாத்யார் கூறியதைக் கேட்டு விஷயம் தெரியாத கர்த்தா படு சந்தோஷப் பட்டார். 

-----
இந்தத் துணுக்கில் சொன்ன ஷண்மார்ஜாலீயே என்றதில், மார்ஜாலம் என்பதன் பொருள் பூனை என்பது. மார்ஜாலீயம் என்பது யாகத்தில் ஒரு இடத்துக்குப் பெயர். இவை இரண்டையும் போட்டுக் குழப்பி வாத்யார் எப்படி ஏமாற்றினார் என்பது தெர்கிறது.

சிராத்த காலத்தில் பூனை வரக்கூடாது. அவ்வளவு ஏன்..? பூனையை வைத்துக் கொண்டு, பூனைக்கு எதிரே அமர்ந்து நாம் உணவு உண்ணக் கூடாது என்கிறது சாஸ்திரம், 

ஆனால், லௌகீகத்துக்கு மாறிவிட்ட பிராமணக் குடும்பங்களில் இன்று பூனையும் நாயும் வளர்ப்பு பிராணிகள். இதுபோன்ற வளர்ப்பு பிராணிகளை வீடுகளில் வளர்ப்பதற்கு சாஸ்திரம் தடை விதிக்கிறது. ஆனால், நாம்தான் சட்டத்தை மீறுபவர்களாயிற்றே! உலகாயதப் படிப்பு ஏறிவிட்டால்... சட்டமாவது.. ஒண்ணாவது?!

நாய்க்காக உருகுவது, பூனைக்காக மருகுவது இதை எல்லாம் பிராமணக் குடும்பங்கள் விட்டுவிட்டு, இயல்பான, தர்மசாஸ்திரத்துக்குட்பட்ட நல்ல வாழ்க்கையை வாழப் பழக வேண்டும்! அப்போதுதான் இயற்கைப் பேரழிவுகள், சீரழிவுகள், வறட்சி இல்லாமல், சுபிட்ச மழை இருக்கும். லோக க்ஷேமம் வஹாம்யஹம் என்பதற்கு அர்த்தம் இருக்கும்!