ads

Saturday, 13 April 2013

காசியில் கருடன் பறக்காது..பல்லி கத்தாது ஏன்?


அயோத்தியே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு நோக்கினாலும் தோரணங்கள், மகிழ்ச்சி ஆராவாரங்கள், ஆனந்த   களிப்புடன் சிரிப்புகள்.

இருக்காதா பின்னே?

ராமனுக்கு முடிசூட்டு விழா. நாடிழந்து காட்டிற்கு சென்றவன். காட்டில் மனைவியை பிரிந்து மனத்துயரில் ஆழ்ந்தவன். 

வலிமை மிகுந்த ராவணனை வென்று, இதோ இந்த கணம் வெற்றி செய்தியோடு நாடு திரும்பி இருக்கிறான். தவறிப்போன மணி மகுடம், அவனை அலங்கரிக்கப் போகிறது.

ஆனாலும் அறிவிற்சிறந்த பெரியோர்களுக்கும், முனிவர்களுக்கும் சிறு மனக்குறை.

தவறிழைத்தான் ராவணன்.  அதனால் தண்டனை பெற்றான். ஆனாலும் வாழும் காலத்தே சிவபூஜையை சிறப்புற செய்தான். வேத  ஆகமங்களை சரிவர செய்தான். பிராமண குணத்தோடு வாழ்ந்தான்.

அவனை கொன்றதால் வரும் பாவம், பிரம்மகத்தியாக வந்து ராமனை பீடித்துக் கொள்ளுமே. அதை தவிர்க்க வேண்டுமானால் ஆத்ம லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபாடு செய்வதே சரியாக இருக்கும் என்றே நினைத்தனர்.

நினைத்ததோடு நில்லாமல் ராமனுக்கு அறிவுறித்தினர். பெரியோர் சொல்லை ராமன் மீறாது உண்டா?

உடனே ஏற்றுக் கொண்டான். ஆனால் ஆத்மலிங்கம் இருக்குமிடம் காசி.

உடனே போய் எடுத்து வரவேண்டுமானால் அனுமனை விட சிறந்தவர் யார்?



ராமன் கட்டளையை ஏற்று அனுமன் காசிக்கு போகிறான். கங்கையில் நீராடி, பின் காசி விஸ்வநாதரை தரிசித்து, பின் அங்கிருந்து ஆத்ம லிங்கத்தை எடுத்துக் கொண்டு விண்ணில் பறந்து வருகிறான்.

அனுமனின் இந்த செயல் ஒருவருக்கு மட்டும் பிடிக்கவில்லை. கடும் கோவத்தை ஏற்படுத்தியது. அவர்  காலபைரவர். காசியே  என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. என்னிடம் அனுமதி பெறாமல் ஆத்மலிங்கத்தை அனுமன் எடுத்து போகிறான் என்றால் அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

அழைத்தார்  வாயு தேவனை.

சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டு போகிறான் அனுமன். அதனால் அவன் போகும் பாதையில் கடும் புயலாய் வீசு.

அழைத்தார் சூரியனை.

அஞ்சனை மைந்தனுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதனால் அவன் போகும் பாதையில் உஷ்ணமாக தகி.

அழைத்தார் கங்கையை.

காற்றின் வேகமும், சூரிய வெப்பமும் தாங்காமல் தரையில் இறங்குவான் அனுமான்.அங்கே அவன் கரை தாண்ட முடியாமல் வெள்ளப் பிரவாகம் எடுத்து ஓடு.

எல்லாம் நல்லபடியாக நடந்தது. வாயு புத்திரனுக்கு எதிராக வாயு பகவான் பலமான காற்றாய் வீசினான்.

சூரியன் தன் பங்குக்கு வெப்பக் கோலமாய் தகித்தார். திடீரென்று மாறுப்பட்ட காலசூழலால் கடும் தாகம் எடுத்தது அனுமனுக்கு. அப்போது ஆர்ப்பரித்து செல்லும் கங்கையை பார்த்தார்.

ஆகா தண்ணீர் இருக்கிறது. குடித்து தாகத்தை தனித்துக் கொள்ளலாம் என்று தரையில்  இறங்குகிறார்.

அங்கே காலபைரவர் காத்திருந்தார்  மாடு மேய்க்கும் சிறுவன் வடிவத்தில்.

எதற்கு?

இருகையால் லிங்கத்தை வைத்துக் கொண்டு எப்படி தண்ணீர் அருந்துவான். அப்போது லிங்கத்தை வைத்துக் கொள்ள வழி தேடுவான் அதற்காக.

பைரவர் கணக்கு தப்பவில்லை. குழந்தாய்... நான் கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு வருகிறேன். அதுவரை இந்த  லிங்கத்தை தரையில் வைக்காமல் கைகளில் வைத்துக் கொள்.

தண்ணீர் அருந்த சென்றவருக்கு தாகம் தணிந்தது. ஆனால் சிறுவனாக வந்த பைரவர் லிங்கத்தை கிழே வைத்து விட்டு மறைந்து விட்டார்.

ஆத்ம லிங்கத்தை கிழே வைத்தால் பின் அதை எடுக்க முடியாது. மலைகளை பெயர்த்து எடுக்கும் ஆற்றல் மிகுந்த அனுமனால் கூட, லிங்கத்தை அசைக்க முடியவில்லை.

திடுக்கிட்டான் அனுமன்.

அப்போது அசரீரி கேட்கிறது. அனுமா... நல்ல முகூர்த்தத்தில் என்னை வைத்து விட்ட காரணத்தால் நான் இங்கேயே இருக்கிறேன். அதனால் நீ விரைந்து சென்று வேறு ஆத்ம லிங்கத்தை எடுத்து வா....

ராமன் கட்டளையிட்டால் வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல் விரைந்து செய்து முடிக்கிற அனுமனுக்கு, இந்த தடை பெரும் கோவத்தை எற்படுத்தியதாகவும், அதனால் அவ்விடம் வனமாக போகட்டும் என்று சபித்ததாகவும் கூட சொல்கிறார்கள்.

அடுத்த கணமே முன்னை விட வேகமாக விண்ணில் பறந்து போகிறான். இதோ காசிக்கு வந்து விட்டான்.

மீண்டும் ஆரம்பமானது பைரவர் திருவிளையாடல்.



திரும்பிய பக்கமெல்லாம் கங்கை கரையில் லிங்கமாக இருந்தது. இதில் எது ஆத்மலிங்கம் என்று கண்டு பிடிக்க முடியாமல் திணறினான் அனுமன்.

அப்போது ஒரு லிங்கத்திற்கு மேலே கருடன் பறந்தது. அதுவாக இருக்குமா என்று அனுமன் யோசிக்கும் போது பல்லி கத்தியது.

அதை வைத்து ஆத்ம லிங்கம் என்று எடுக்க போகும் போது பைரவர் தோன்றினார். அனுமனை தடுத்தார்.

இந்த சுழலை கண்ட முனிவர்கள் அங்கே விரைந்தார்கள். பைரவா.. அனுமன் அறியாமல்  செய்த பிழையை பொருத்தருள வேண்டும்.

ராமனின் பொருட்டு ஆத்ம லிங்கத்தை கொண்டு போக வந்திருக்கிறான். அதனால் அவனுக்கு வழி விடுங்கள்.

அப்போது காலபைரவரை தெரிந்து கொண்ட அனுமன் தன்னை  மன்னித்து அருளும் படி வேண்டுகிறான். பைரவரும் பொறுத்தார். அனுமன் லிங்கத்தோடு புறப்பட்டான்.

ஆனால் ஆத்ம லிங்கத்தை காட்டி  கொடுத்த கருடனுக்கு காசிக்குள் நுழைய தடை விதித்தார்.

உடனே பல்லி தன் பிழையை பொறுத்து அருளும் படி வேண்டியது. நீ காசியில் வசிக்கலாம். ஆனால் கத்தக் கூடாது என்று கட்டளையிட்டார்.

அதனால் தான் இன்றும் காசியில் கருடன் பறப்பதில்லை  . பல்லி கத்துவதில்லை.


3 comments:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...