எனக்கு ஆங்கிலம் தெரியாது. நான் அழகாக இல்லை.
நான் அதிகம் படிக்கவில்லை.
நான் ஏழையாக இருக்கிறேன்.
நான்கு பேருக்கு முன்னால் என்னால் தைரியமாக பேச முடியவில்லை என்று ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது.
இந்த தாழ்வு மனப்பான்மை ஒருவருடைய தன்னம்பிக்கையை அழித்து விடுகிறது.
எந்த முயற்சியும் செய்யாமல் வாழ்க்கையில் இருக்கிற நிலையையே ஏற்றுக் கொண்டு கடைசி வரை அதே நிலையில் வாழ்ந்து விட்டு போகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.
இந்த தாழ்வு மனப்பான்மை என்ற கூட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தால் தான் உங்களால் பறக்க முடியும்.
ஆஹா நமக்கு பறக்கவும் தெரிகிறது என்பதே உங்களுக்கு தெரியும். இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. அதே போல் முட்டாள் என்பவரும் இல்லை. முயற்சி செய்து பாருங்கள், முடியாது என்று நினைக்காதீர்கள்.
ஒரு சின்ன குழந்தை ஆங்கிலம் பேசுகிறது. சிறுவன் கார் ஓட்டுகிறான். நம்மால் முடியாதா என்று யோசித்து பாருங்கள். விமானம் ஓட்டுபவன் என்ன தேவலோகத்தில் இருந்தா வந்தான் பயிற்சிதான் காரணம்.
அம்பானி பிறக்கும் போது மில்லியனராக இல்லை. நாம் பணக்காரராக இல்லையே, இந்த மும்பை தொழில் அதிபர்களுடன் நாம் போட்டி போடமுடியுமா என்று அவர் நினைத்திருந்தால் இன்று உலகின் முதல் நிலை பணக்காரர்களின் வரிசையில் அவர் குடும்பம் இருக்க முடியாது.
இரண்டே செட் துணியோடும் ஒரு தகரப் பெட்டியோடும் தான் பஸ் ஏறி பம்பாய் வந்தாராம்.
நம்மால் முடியுமா என்ற பயமே பலரின் முன்னேற்றத்தை தடுத்து விடுகிறது. எதையும் நமக்கு சாதகமாக நினைத்து கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று மணிகணக்கில் சரளமாய் மேடையேறி பேசுகிறவர்கள் முதல் மேடையில் முதல் வரிக்கு மேல் பேச முடியாமல் நா குழறி வேர்த்து விறுவிறுத்து தான் போயிருப்பார்கள்.
முயற்சி இருந்தால் இங்கு எதுவுமே சாத்தியம். நம்மாலும் முடியும். விவேகானந்தர் அமெரிக்கா போனபோது ஆங்கிலத்தில் நாம்மால் மேடையேறி பேச முடியுமா என்ற எண்ணம் இருந்ததாம்.
ஆனால் அவரது தியானம், யோகத்தால் இயற்கையாகவே அவருக்கு மனோதிடம் இருந்தது.
நியுயார்க்கில் உலக ஆன்மீக மகாசபையில் அவர் பேசும் போது எல்லோரும் பேசிய பின், கடைசியாகத்தான் அவரை அழைத்தார்களாம். அதன் பின் அவர் பேசிய எல்லா மேடையிலும் அவர்தான் முக்கிய பேச்சாளாராக இருந்தாராம்.
முதலில் தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியில் வரவேண்டும். நம்மை சுதந்திர மனிதனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு எந்த செயலை செய்ய நினைக்கிறோமோ அதைபற்றிய ஆய்வினை செய்ய வேண்டும். இது நம் முயற்ச்சிக்கு உட்பட்டது. முயன்றால் வெற்றி பெறலாம்.
நாம் எதிலும் குறைந்து போய்விடவில்லை. எதிரில் இருப்பவரை விட நாம் எதிலும் தாழ்ந்தவரில்லை.
நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. தெளிவாய் சிந்திக்கும் அறிவு இருக்கிறது. அதுபோதும் வெற்றி கொள்ள.
பெரியோருக்கு மரியாதை தரலாம். மேலதிகாரிக்கு வணக்கம் சொல்லலாம். ஆன்மீகவாதிகளின் காலில் விழலாம். இது அவரவர் நிலைக்கு காட்டும் மரியாதை. ஆனாலும் உங்கள் தனிதன்மையில் நீங்கள் உயர்ந்தவர்தான். இதை நீங்கள் உணர்ந்தால் நீங்கள் வெற்றியாளர்.
/// உங்கள் தனித்தன்மையில் நீங்கள் உயர்ந்தவர் தான்...///
ReplyDeleteஉணர வேண்டிய வரிகள்...
வாழ்த்துக்கள்...