1993ம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. பின்னர் இது பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல் என்று விசாரனையில் தெரிய வந்தது. இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர். மேல் முறையிட்டு வழக்கில் சென்ற மாதம் , 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதாவது சஞ்சய்தத்திற்கு வழங்கப்பட்டிருந்த, ஆறு ஆண்டு சிறை தண்டனை, ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. உண்மையில் நீதிமன்றத்தால் அவருக்கு கருணை காட்டப்பட்டது.
அவர் ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்ததால், மீதமுள்ள, மூன்றரை ஆண்டுகளை, சிறையில் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த மாதம், 21ம் தேதிக்குள் ( ஏப்ரல் 21), அவர் கோர்ட்டில் சரணடைந்து, தண்டனையை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
சரணடைய கால அவகாசம் கொடுக்கப்பட்டது கூட ஒரு சலுகையே.
இந்நிலையில் அவரது விசிறிகள் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
அவர் குண்டு வைக்க கூட போகாத காரணத்தால் அவர் நிரபிராதி. அப்பாவி. அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று பாலிவுட் நட்சத்திரங்களும், சில அரசியல் கட்சி பிரபலங்களும், பிரஸ் கவுன்சில் தலைவர், மார்க்கண்டேய கட்ஜுவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று சஞ்சய்தத்திற்கு ஆதரவாக பல பிரபலங்கள்,தலைவர்கள் ஏன் அவ்வளவு கரிசனமாக பேசுகிறார்கள் என்றால் அவருடைய தந்தை நடிகர் மட்டுமல்ல சமுக தொண்டு செய்வதிலும் ஆர்வமாக இருந்தார்.
அவரை பாராளுமன்றத்திற்கு மும்பையில் இருந்து மூன்று முறை தொடர்ந்து மக்கள் தேர்வு செய்தனர். அவருடைய மகன் என்ற காரணத்தினால் மன்னிக்க வேண்டுமாம்.
ஐயோ... குய்யோ என்று கூப்பாடு போடுகிறவர்கள் ஒன்றை உணர மறுக்கிறார்கள். சட்டம் அனைவருக்கும் சமம். இதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை பணக்காரன், பிரபலம் என்றெல்லாம் பார்க்ககூடாது.
ஒருவன் செய்த தவறுக்கு அவனேதான் தண்டனை பெறவேண்டும். அவன் குடும்ப பாரம்பரியத்தை இதிலே நுழைத்து சமுதாயத்தின் கருணையைப் பெற முயற்சிக்கக் கூடாது. இது தானே முறை. நியாயம். தர்மம், சட்டம்.
ஒருவன் தவறு செய்தான். அவன் செய்த தவறுக்கு தண்டனை என்கிற அளவிலேதான் இதனைப் பார்க்கவேண்டுமே தவிர அதனை விடுத்து ஒரு தவறான முன்னுதாரணத்திற்கு வழி வகுக்கக் கூடாது என்பதை இந்த மேதாவிகள் உணர மறுக்கிறார்கள்.
சஞ்சய் தத் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கள் அனைத்தும் நீதிமன்றங்களால் தீர விசாரிக்கப்பட்டு, குற்றம் நிருபிக்க பட்ட வகையில் தான் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி வைத்து இருந்தது மட்டுமல்ல .தீவிரவாதிகளுக்கு அடைக்கலமும் கொடுத்துள்ளார். பிரபலமான தனி நபரை விட நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம் எனபதை யாரும் உணரவில்லை.
நாட்டை கூறு போட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கும் போலிருக்கிறது.
குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்மானிக்கப் பட்டு சஞ்சய் தத்துக்கு கொடுக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டால் அது தவறான முன் உதாரணம் ஆகி விடும்.
குற்றவாளியே நான் மன்னிப்பு கோரப்போவதில்லை. நீதிமன்ற தீர்ப்பை ஏற்று விரைவில் சரணடைவேன் என்று சொல்லி விட்டார்.
பின் எதற்காக ஒப்பாரி வைகிறார்கள். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. பொட்டிகள் எதுவும் கை மாறி இருக்குமா என்பதையும் விசாரிக்க வேண்டும் போல் இருக்கிறது.
நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும், அதை பற்றி பேசுகிறவர்களை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்ய வேண்டும். அதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.
No comments:
Post a Comment