Follow by Email

Thursday, 29 November 2012

தெரியுமா உங்களுக்கு?


கதவு மூடிய பிறகு ஆலயத்திற்கு முன்பு நின்று சாமியை வணங்குதல் கூடாது. 

சாமிக்கு அலங்காரம் செய்வதற்காக திரை போட்டு இருந்தாலும், அந்த நேரத்தில் வணங்குதல்  தவறு.

கற்ப்பூர தீபமாக இருந்தாலும், சாமிக்கு காட்டிய திருவிளக்கு தீபமாக இருந்தாலும், அதை வணங்கும் போது, கரங்களை தீபத்திற்கு வெளிப்புறம் இருந்து குவித்து, கையில் கரி படாமல் வணங்க வேண்டும்.

சுப காரியங்கள் செய்யும் போது ஒரு கோடு கோலம் போடக்கூடாது.அசுப   காரியங்கள் செய்யும் போது இரட்டை   கோடு கோலம் போடக்கூடாது

துளசி மாடத்திற்கு பூஜை செய்யும் போது வேறு செடியில் இருந்து தான் தளங்களை பறிக்க வேண்டும்.

கோவில் மண்டபத்தில் படுத்து உறங்க கூடாது. அது குருமார்களாக இருந்தாலும் சரி. அப்படி உறங்கினால் அடுத்த பிறவியில்   மலை பாம்பாக  பிறப்பார்களாம்.  தர்மசாஸ்திரம் சொல்கிறது.


அதிகாலை சூரிய உதயத்திற்கு சற்று முன்பும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று சற்று முன்பும் விளக்கு ஏற்ற வேண்டும்.

இல்லறததொடர்பு இல்லாமல் தனித்து தூங்கி எழுந்த பின் முகம் கழுவி, தூங்க செல்லும் முன்,  குளித்த உடன், வெளியில் புறப்படும் முன், சூரியன் உதிக்கும் போது, சூரியன் மறையும் போது, நல்ல காரியம் துவக்கும் முன், சாப்பிடுவதற்கு முன்பும் விபூதி அணியலாம்.

ஆலயத்தில் வணங்கும் போது இறைவனின் இடப்புறத்தில் பெண்களும், வலப்புறத்தில் ஆண்களும் நின்று வணங்க வேண்டும்.

Wednesday, 28 November 2012

பைரவர் நிர்வாணம் ஏன்?
பைரவரை பற்றி மிக விரிவாக பேசப்போகும் தொடர் இது. 

அகில உலகையே காத்து ரட்சிக்கும் சிவனின் அம்சம் இவர். முதலில் இவரின் திரு உருவ தோற்றம் பற்றி பார்ப்போம். 

இவர் நான்கு கரங்கள் கொண்டவர். சில அம்சம்களில் இரு கரங்கள் உண்டு. கரங்கள் அனைத்திலும் ஆயுதம் தாங்கிய இவர் ஆடை அணிவதில்லை. 

காரணம் என்ன?  கபாலிகர் தங்கள் இஷ்ட தெய்வமாக பைரவரை வணங்குவதால், அவர் ஆடை இல்லாமல் இருக்கிறார். அது மட்டும்மல்ல எட்டு திக்குகளையும் ஆடையாக அணிந்து கொண்டதால்,தனியாக ஆடைகளை  அணிவதில்லை.

இருக்கட்டும் , யாரிந்த கபாலிகள்.

தற்காலத்தில் அகோரிகள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். நிர்வாண சாமியார்கள்.நரபலிக்கு அஞ்சாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. 

இவர்கள் தங்கள் இஷ்ட தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வழிப்பட்டது பைரவரை.

ஹிந்து மதத்தை பொறுத்தவரை இன்றளவும் கடைபிடிக்கும் ஒரே அம்சம் இதுதான். இறைவனை வேறுப்படுத்தி பார்ப்பதில்லை. தங்களில் ஒருவராக பார்ப்பவர்கள்.

தாங்கள் உண்ணும் உணவையே இறைவனுக்கு படைத்து மகிழ்பவர்கள். தாங்கள் உடுத்தும் ஆடைகளையே அணிவித்து மகிழ்பவர்கள்.


அதனால்தானோ என்னவோ தெய்வங்கள் பெரும் சக்தி படைத்தவர்களாக  விளங்கிய போதும், சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்.

மனித வாழ்க்கையில் வரும் சண்டை, சச்சரவு, பூசல், குடும்ப பிரிவு, விரோதம் எல்லாமே இறைவன் மற்றும் இறைவியின் வாழ்விலும் நடந்திருக்கிறது.

அந்த வகையில் கபாலிகர் என்னும் அகோரிகள் தங்கள் பண்பாடு, கலாச்சாரத்தையே இறைவனுக்கு அறிமுக படுத்தி இருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ பைரவர் நிர்வாண நிலையில் இருக்கிறார்.


Monday, 26 November 2012

கவலைக்கு மருந்து


வாழ்க்கை வாழ்வதற்கே 

கடவுள் மனிதனை படைத்து நல்லபடியாக வாழ்ந்து வா என்றுதான் அனுப்பி வைக்கிறான்.  நாம்தான் நந்தவனத்து ஆண்டியாக வாழ்க்கையை  போட்டு உடைத்து விடுகிறோம். 

கவலை மூட்டைகளை சுமந்துக் கொண்டு வாழ்க்கையை சுமையாக்கி விடுகிறோம். 

எது நடந்தாலும்,  நாம் அந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்கிறபோது, எது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்கும் என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டு, சந்தோசஷமாக எதிர்கொள்வதில் என்ன நஷ்டம்.

பீஷ்மர் போர்முனையில் கூட சந்தோஷமாக இருந்தாராம். சாவின் விளிம்பிலும் அனைவருக்கும் நீதி சொல்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்கிறார்.

சண்டையின் போது சிரிக்க தெரிந்தவன் எதிரியை கொஞ்சம் கொஞ்சமாக வெல்கிறான் என்கிறது உளவியல்.

சந்தோசமான மனநிலையை வளர்த்துக் கொண்டால் கவலைகளை வென்று விடலாம். காலையில் எழுந்திருக்கும் போதே உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக என்ற சந்தோசத்தோடு எழுந்திரியுங்கள். உண்மையில் அந்தநாள் உங்களுக்கு உற்ச்சாகமாகவே அமையும்.

இந்த உலகில் பிரச்சனை இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. பில்கேட்ஸ்க்கு கூட பிரச்சனைகள் இருக்கிறது. அவர் கம்பெனிமேல் நிறைய வழக்குகள் போடப்பட்டு நடக்கிறது.

அவர் எப்போதும் தன்னை நம்பர் ஒன்னாகவே வைத்திருக்க போராட வேண்டி இருக்கிறது.

ஆனாலும் அவர் பிரச்சனைகளை பற்றியே நினைத்து கொண்டிருந்தால் அவரால் வெற்றி பெறவே முடியாது. 

பல கஷ்டங்கள் நாமே உருவாக்கி கொண்டதுதான்.  நம்மால் அவற்றை போக்கி கொள்ளவும் முடியும். அதில் புதைந்து போகவும் முடியும். புதைந்து போன மனிதன் புலம்பிதான் திரிவான். ஆனால் சிந்திக்க தெரிந்த மனிதன் சிரித்துத்தான் வாழ்வான். 

கவலைக்கு மருந்து


சிரிக்க திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடும் என்கிறார் கவிபேரசு.  சிரிபொலி கேட்கும் வீட்டின் திண்ணையில் மரணம் உட்காருவதே இல்லை. 

ஒவ்வொரு சிரிப்பிலும் சில மில்லிமீட்டர் உயிர் நீளக்கூடும். மரணத்தை தள்ளிப்போடும் மார்க்கம் தான் சிரிப்பு என்கிறார் அவர். 

கவலைக்கு மருந்து

ஒரு ஜென் ஞானி இறக்கும் தருவாயில் இருந்தார். சுற்றிலும் சீடர்கள் சோகமாக நின்றுக் கொண்டிருந்தனர். அவரது தலைமாட்டில் நிற்கும் சீடரை பார்க்கிறார் ஞானி. சீடர் வெளியே ஓடுகிறார். குருவிற்கு பிடித்த இனிப்பு பலகாரத்தை  வாங்கி  வருகிறார்.  

குருவுக்கு சந்தோசம். அதை ஆசையோடு வாங்கி சாப்பிடுகிறார்.  பின் அந்த சீடரை அருகில் அழைக்கிறார். கடைசியாக உபதேசம் செய்யத்தான் அழைக்கிறார் என்று நினைத்த சீடர் அருகில் சென்று குனிகிறார்.

குருவின் உதடுகள் மெல்ல அசைகின்றன. ஆஹா என்ன ருசி. சொல்லிவிட்டு முகத்தில் அந்த இறுதி சிரிப்புடன் கண்களை மூடுகிறார்.

சீடருக்கு குருவின் உபதேசம் புரிகிறது. வாழ்வின் கடைசி நிமிடம் வரை வாழ்க்கையை ருசிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பதே அந்த உபதேசம். வாழ்க்கை ஒரு சந்தோஷ சாகரம். இதை தெரிந்து கொண்டவன் முத்தெடுக்கிறான். தெரியாதவன் மூச்சு திணறுகிறான்.

உங்கள் புன்னகை தான் மற்றவரை உங்களை நோக்கி இழுத்து வரும். புலம்பல்கள் அல்ல.

-மதிவாணன் 

Sunday, 25 November 2012

மதமும் மனிதனும்

ப. முத்துகுமாரசாமி, சென்னை

சிந்திக்கும் திறன் மனிதனுக்கு தரப்பட்டிருக்கிறது. ஆன்மீகத்தின் தொடர்பு இல்லாமல் போனால் மனிதனது வாழ்க்கை நல்ல நோக்கம் கொண்டதாக இருக்க முடியாது. 

உண்பதும், வாழ்வதும், உறங்குவதும், மனிதனுக்கும், மிருகத்திற்கும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் மிருகத்திற்கு ஆன்மிகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் அறிவு கிடையாது. 

ஆகையால் தனது புத்திசாலித்தனத்தினால் எதையும் தீர்மானம் செய்யும் மனிதன் படைப்புகளின் மகுடம் என்றழைக்கப்படுகிறான். 

அவனது சிந்தனையும் வார்த்தைகளும், செயல்களும் ஒரே மாதிரியாய் இருக்க வேண்டும். தனக்குள் மத நல்லிணக்க மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது நேர்மையான வாழ்வுக்கு வழிவகுப்பது திண்ணம்.

நமக்கு நேரும் சிக்கல்களை எதிர்கொண்டு அவைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை சுட்டிக் காட்டி மனிதனுக்கு உதவுவது மதம்.

உயர்ந்த மனிதனாக தன்னை உருவாக்கிக் கொள்ள பலவகையான சந்தர்ப்பங்கள் அவனுக்கு தரப்பட்டிருக்கிறது. அவனை உயர்ந்த நிலைக்கு  உயர்த்தி உண்மை என்ற உலகத்திற்கு மதம் தான் அழைத்து செல்கிறது.

பரம்பரையாக நிலவும் நன்னெறிகளை கடைப்பிடித்து ஒரு நாகரீகமான வாழ்க்கை பாதையில் செல்ல காலம் காலமாய் மதம் தான் மனிதனை  ஊக்குவிக்கிறது.

மதத்தை இழந்து விட்ட சமுதாயம் நாளடைவில் பண்பாடற்ற சூழ்நிலைக்கு தாழ்ந்து போகிறது.


மதம் மனிதனுக்கு விழிப்புணர்வை தந்து பல்வேறு கருத்துக்கள் கொண்ட மனிதர்களை ஒன்றிணைத்து, தோழமையுடன் ஒருங்கிணைத்து சிந்தித்து செயல்பட வைக்கிறது.

பண்பாட்டு பிணைப்புக்களை இழந்து விட்டால் எந்த நாடாக இருந்தாலும் அங்கே வாழும் மக்கள் பலவகையான துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.

ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சிக்கு ஆன்மீகம் வழிகாட்டியாய் விளங்கினால் அந்த நாட்டின் வளங்கள் பெருகும். மதம் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே திகழவேண்டும்.
ராமாயணம் மகாபாரதம் ஒரு ஒப்பிடு


ராமாயணம் மகாபாரதம் என்கிற இரண்டு இதிகாசங்களும், நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இவற்றில் இருந்து நாம் பெற்றுக் கொள்ளும் படிப்பிங்கள் ஏராளம்.

முறையற்ற பெண்ணாசையும், அதீத மண்ணாசையும் கூடாது என்பதை இந்த பெரும் காவியங்கள் வழியாக அறிந்தாலும், மனித வாழ்க்கைக்கு அடிப்படியை இருக்க வேண்டிய பல உன்னத நெறிகளை அவை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. 

சந்தேகமற இந்த இரண்டுமே நமது இரு கண்ணாய் திகழ்கின்றன என்பது உண்மை.


விதுர நீதியையும், பீஷ்ம நீதியையும், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கீதை உபதேசங்களையும் மகாபாரதம் தன்னகத்தே கொண்டிருந்தாலும், மனித நேயத்தை, அன்பின் உச்சத்தை எடுத்து காட்டும் காவியமாய் ராமாயணம் திகழ்கிறது. 

ஒரு குடும்பத்தில் நிகழும் அண்ணன் தம்பி பாசம், நட்பு, கணவன் மனைவி உறவின் புனிதம், தந்தை மகன் நேசம், தனி மனித ஒழுக்கம், பக்தி இவற்றை எல்லாம் எடுத்துக் காட்டும் உன்னத சித்திரமாய் ராமாயணம் அமைந்திருக்கிறது.


மகாபாரத்தில் கண்ணன் என்ற ஒரு மாபெரும் பாத்திரம், கதை முழுவதும் உலாவி, நமை வியக்க வைத்தாலும், ராமன் என்னும் மா மனிதன் தன் உயர்வான குணத்தின் மூலம், நம் உள்ளங்களில் ஒட்டி கொள்கிறான். 

நினைத்து  நினைத்து வியப்படையும், பெருமிதம் கொள்ளும் மகாபுருஷனாக உயர்ந்து நிற்கும் ராமன் பாத்திரம் போற்றப்படக்கூடிய பாத்திரம் மட்டும் அல்ல.  நாமும் பின்பற்ற வேண்டிய பாத்திரமாகும். 

அண்ணன் தம்பியின் சகோதர பாசத்தை ராமாயணத்தை போல் மகாபாரத்தில் காணமுடியவில்லை.

தன் ராஜ்ஜியத்தையே தம்பிக்காக விட்டு கொடுத்து விட்டு, தன் மனைவியுடன் கானகம் வருகிறான் ஒருவன்.

தன்னுடைய சகோதர்களுக்காக ஐந்தடி நிலம் கூட தரமுடியாதென தன் உடன் பிறப்புக்கள் அனைவரின் உயிர்களையும் பலிக்கொடுக்கிறான் ஒருவன்.

வேடனான குகனையும், எதிரியின் தம்பி விபிஷணனையும் தன் சகோதரனாக ஏற்றுக் கொண்டு பாசத்தை பொழிகிறான்  ராமன்.

அனுமனை தன் மைந்தனாகவே அங்கிகரிக்கிறான். ஜடாயு என்ற பறவையை  தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றுகிறான். இறுதி சடங்கு செய்கிறான்.அன்பினால் பறந்து விரிகிறது ராமனின் இதயம்.

மகாபாரத்தில் இதன் சகோதர பாசம் சற்று குறைவாகவே சித்தரிக்கப் படுகிறது. தன் மூத்த சகோதரனான தர்மனை, அர்ச்சுனனும், பீமனுமே எதிர்த்து பேசும் சம்பவங்கள் மகாபாரத்தில் இடம் பெறுகின்றன.

இறுதிவரை அண்ணனின் நிழல் போல் நின்று அண்ணனின் சொல் மீறாமல் நடக்கும் லச்சுமணன் இங்கே நம்மை வியக்க வைக்கிறான். அண்ணன் கானகம் புறப்படும் முன் அவனுக்கு முன்னர் புறப்பட்டு தயாராகிறான்.

அண்ணனின் வாயில் இருந்து ஒரு ஆணை வந்தால் போதும், வில்லில் இருந்து புறப்படும் அம்பை போல் விரைந்து அதை நிறைவேற்றி வைக்கிறான். ராமனே பல இடங்களில் லச்சுமணனை வியந்து பாராட்டுகிறான்.

ராமனின் ஒரு தம்பி இப்படி இருக்க, இன்னொரு தம்பியோ தன் தாயின் வரத்தினால் ராமன் ராஜ்ஜியத்தை துறந்து கானகம் சென்றுவிட்டானென்று கேள்விப் பட்டு பதறி துடித்து ஓடி வருகிறான். 

அண்ணனின் காலில் விழுந்து, திரும்ப வந்து ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மன்றாடுகிறான். ராமன் அவனை சமாதானப் படுத்தி திருப்பி அனுப்பும் போது, ராமனின் பாதுகைகளை பெற்றுக்கொண்டு அவற்றை தன் சிரசில் சுமந்து கொண்டு அயோத்தி திரும்புகிறான். 

அதை அரியணையில்  வைத்து நாட்டை நிர்வாகம் செய்கிறான். ராமன் திரும்ப வரும்வரை ஒரு துறவியை போல் வாழ்கிறான். பாசத்திற்கு முன் ராஜ்ஜியம் பதவி எதுவுமே பெரிதில்லை என நிரூபிக்கிறான். 

ராமனோ இதற்கு ஒரு படி மேலாக நின்று, தன் தம்பிகளின் மேல் பாசம் பொழிவதல்லாமல், குகனையும் கட்டி தழுவி நாங்கள் நான்கு பேர், உன்னையும் சேர்த்து இப்போது ஐந்து பேர் என்று தன் தம்பியின் ஸ்தானத்தை குகனுக்கு தந்ததும், கல்லாய் சமைந்திருந்த அகலிகையின் மேல் கால் வைத்து அன்னை என்று அழைத்து தாயின் ஸ்தானத்தை தந்ததும், அனுமனையும், சுக்கிரிவனையும்  கட்டி தழுவி நட்பு பாராட்டியதும், அங்கதன் மேல் அன்பு காட்டியதும், விபிஷனனையும் தங்களில் ஒருவனாய் ஏற்றுக்கொண்டதும், சபரியின் நேசத்தை அங்கிகரித்ததும், ராமனை அன்பின் இலக்கணமாய் காட்டுகிறது. 

தாயினும் சாலப் பரிந்து என்று இறைவனின் அன்பைப்பற்றி கூறுவார் அப்பர் பெருமான். 

அதைப்போல ராமனின் அன்பு தாயன்பை விட மேலானதாகவே இராமாயண காப்பியத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. 

இந்த இரண்டு இதிகாசங்களில் மகாபாரதம் முடிவில் ஒருவித சோகத்தை வெறுமையை நம் நெஞ்சில் நிழலாட வைக்கிறது. ராமாயணம் ராமனின் பட்டாபிழேகத்துடன் சுபமாய் முடிந்து ஒரு நிம்மதி பெருமூச்சை எழுப்புகிறது. 

இந்த கதைகளை பற்றி நாம் பேச காரணமே.... அன்பு மகத்தானது. உறவுகளை ஒன்றிணைக்க வல்லது. எத்தனையோ நம் குடும்பங்களில் அண்ணன் தன்பிகள் எதிரிகள் போல் பிரிந்து கிடக்கின்றனர்.

சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் வெறுப்புடன் நடந்து கொள்கின்றனர்.

இப்படி வெறுப்பினால், சண்டையினால் உடைந்து பிரிந்து போன உள்ளங்களை ஒட்டவைக்கும் சக்தி அன்பிற்கு மட்டுமே உண்டு.


இந்த பிறவியில் நாம் அவர்களோடு ஒன்றாக வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. இறந்த பின் யாருக்கு யாரோ....

ஒரு தாயின் கருவறையில் பிறந்து, ஒன்றாய் வளர்ந்த உள்ளங்களுக்குகிடையே வெறுப்பினை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன். மன்னிக்க  தெரிந்தவன் அதைவிட பெரிய மனிதன் என்பார்கள்.

நம்மால் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் பலர் இருப்பார்கள். நாம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் அதைவிட அதிகமாக இருப்பார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

சந்தர்ப்பம் வரும்போது சரி செய்து  கொள்ளுங்கள். உறவினை புதுப்பித்து கொள்ளுங்கள்.

நான் மனிதர்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் இருத்திக் கொள்வோம். உயர்ந்த மனிதராக வாழ்வோம்.

-  மதிவாணன்

Thursday, 22 November 2012

கசாப்பிற்கு மரணதண்டனை சரியா?கசாப்பிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு விட்டது.  

கசாப் யார் என்பது தெரியும். அவரின் குற்ற பின்னணி என்ன என்பது தெரியும். இருப்பினும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது  போல், ஈவு இரக்கமற்ற முறையில் மரணதண்டனை விதிப்பது தவறு. 

மனிதநேயத்தை விரும்பும் எவரும், நாகரீக சமூகத்தை விரும்பும் எவரும், இது போன்ற கொடூர தண்டனையை விரும்ப மாட்டார்கள் என்று சிலர் வாதிடுகிறார்கள். 


நல்லது. 

நல்ல கருத்து தான்.  நாமும் இதை வரவேற்போம். மனிதன் மனிதனை கொல்வது தவறுதான். 

தவறு செய்தவர்களை தண்டிக்க சட்டத்தில் எத்தனையோ வழிகள் இருக்கிறது என்பதும் உண்மைதான். 

பெரும் குற்றம்  செய்தவர்களை வாழ்நாள் முழுவதும் கூட, தனிமைச் சிறையில்  வைத்து தண்டிக்கலாம் என்பதும் உண்மைதான். 

ஆனால் இந்த  மனித நேய   காவலர்கள் ஒரு விஷயத்தை   உணர மறுக்கிறார்களே ஏன்? 

மனித உயிர்களின் மகத்துவத்தை பற்றி பேசும் போது, மறக்கப்படுவது மனிதநேயம் என்பதை ஏன் மறந்து விடுகிறார்கள். 

இறந்து போனவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு என்று குடும்பம் இல்லையா? 


ஒரு உயிர் பிரிகிறது என்றால் அவரை நம்பி இருக்கும் எத்தனை பேர் ஆதரவற்று போகிறார்கள்.  அந்த அவலத்திற்கு என்ன பதில்?

இந்த சம்பவத்தை கண்டிக்கிறோம். வன்மையாக கண்டிக்கிறோம் என்று அறிக்கை விட்டு விட்டு போய்விட்டால் போதுமா. யாருக்கு வேண்டும் உங்கள் அனுதாபம். கொண்டுபோய் குப்பை கூடையில் போடுங்க. 


இது என்ன எதேச்சையாக நடந்த ஒரு சம்பவமா?

கல்குவாரிக்கு வெடிமருந்து கொண்டு செல்லும்போது எதிர் பாராமல் வெடித்த கதையா?

திடிரென நடத்து விட்ட ஒரு விபத்தா? 

இல்லையே... பலவருடம் திட்ட மிட்டு, குழுவாக செயல்பட்டு நடத்தப்பட்ட கொடுரம்தானே இது.  அதுவும் அந்நிய நாட்டில் இருந்து ஊடுருவி.

அதே சமயம்.......இன்னொரு பக்கம் வேறு விதமான செய்திகள் வருகிறது.  அவர் ஹீரோ.  அவர் வரலாற்றில் இடம் பெற்று விட்டார். புனித போரின் போராளி என்றெல்லாம் புகழாரம் சூட்டுகிறார்கள். எல்லைக்கு அப்பால் இருந்து. 

மனிதநேய புனிதர்கள் பதில் சொல்வார்களா? இன்னும் மனித உயிர்களை கொல்ல இப்போதே பலரை தயார்  படுத்துகிறார்களே   இதற்கு உங்கள் பதில் என்ன? 

அதற்கும் கண்டிக்கிறோம், வன்மையாக கண்டிக்கிறோம் என்பது தான் உங்கள் பதிலா?

கசாப் யார்?

அந்நிய நாட்டு கைக்கூலி.  இந்திய நாட்டின் இறையாண்மைக்கு சவால் விட வந்தவர்.  இந்த தேசத்தின்  பாதுகாப்பை உலக அரங்கில் கேள்வி குறியாக்கியவர்.

ஒன்றும் அறியாத அப்பாவிகளை கொன்று குவித்து வெறியாட்டம் போட்டவர். இதுபோன்ற குற்றவாளிகளை இவ்வளவு நாள் வைத்திருந்ததே தவறு. இந்தியா போன்ற ஜனநாயக  நாட்டில் மட்டும் தான் இது நடக்கும்.

பாகிஸ்தானை விட்டு வரும்போதே  கசாப்பிற்கு தெரியும் . நாம் சாகப்போகிறோம் என்று.

மூளைசலவை செய்து, மனநோயாளியாக்கி கொல்... கொல்... என்று கட்டளையை பெற்று வந்து கொடூர தாண்டவம் ஆடிய கசாப்பை கசாப்பு கடைக்கு அனுப்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அப்போதுதான் உயிர் வலி என்ன என்பது புரிந்திருக்கும். கண நேரத்தில் கண் மூடிய கசாபிற்கு கொடுக்கப்பட்டது தண்டனையே இல்லை.

இன்றும் தீவிரமான மத சட்டங்களை கடைபிடிக்கும் அரபு தேசங்களில் குற்றத்தின் தன்மை கருதி மரண தண்டனை நிறைவேற்றப் படுகிறது.

காரணம்... மனித நேயமற்ற செயல் அல்ல. குற்றத்தின் தீவிரத்தை குறைக்க. மீண்டும் இது போன்ற குற்றங்களை யாரும் செய்யக்கூடாது என்பதற்காக.

கசாப்பிற்கு வழங்கப் பட்ட தண்டனை கூட அந்த ரகம் தான்.

Wednesday, 21 November 2012

கசாப்புக்கு தூக்கு சரியா?நாட்டின் வர்த்தக தலைநகர், மும்பைக்குள் நுழைந்து, ஈவு இரக்கமின்றி, 166 பேரை கொன்று குவித்த, பாகிஸ்தானின், லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகளில், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்புக்கு, 25, புனே நகரின், எரவாடா சிறையில் நேற்று முடிவுரை எழுதப்பட்டது.- செய்தி. 

நாகரிகமான மனித சமுதாயத்தை விரும்பும்  உலகில் ஈவு இரக்கமற்ற மரணதண்டனைகள் தேவையா என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஒரு சாரார். 

இதை பற்றி ஒரு விரிவான கட்டுரை இன்று இரவு  வெளிவரும். 

சின்ன சின்ன யோசனைகள்!


புக் செல்ப்புக்ளில் பூச்சிகள் தொல்லயா? பாச்சா உருண்டைதான் போடவேண்டும் என்பதில்லை.  வீட்டில் கர்ப்பூரம் இருந்தால் போட்டு வையுங்கள். பூச்சிகள் மாயமாய் மறைந்து போகும். 

என்னதான் பல் துலங்கினாலும் பற்களில் கரை போகவில்லையா? புதினா, எலுமிச்சை தோல் இது இரண்டில் எதையாவது ஒன்றை நன்கு காய வைத்து  பொடி செய்து, அந்த பொடியுடன் உப்புத்தூளுடன் சேர்த்து பல் துலக்கி பாருங்கள். பற்கள் பளிச்...

மல்லிகை, முல்லை செடிகள் நன்கு செழித்து வளர வில்லையா? அவற்றின் இலைகளை உருவி அந்த செடிக்கே உரமாக போட்டால் செடி செழித்து வளரும். 

கைக்குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுது கொண்டிருந்தால் 1 /2 மேசைக்கரண்டி தேன் கொடுத்தால் நன்கு தூங்கும்.

அருகம்புல்லை சுத்தமாக கழுவி வாயில் போட்டு நன்றாக மென்று பல்வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்து கொண்டால் பல்வலி குறையும்.


பெண்களுக்கு ஏற்ப்படும் பல நோய்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும், வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  ஆண்கள் வாழைத்தண்டை சமைத்து உண்ண வேண்டும்.

அதிக நார் சத்த்துள்ள வெங்காயத்தை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வதால், ரத்த அழுத்தம் வராமல் தடுத்து கொள்ளலாம். உடலில் வெப்பத்தை குறைக்கிறது. மலச்சிக்கல்  வரமால் தடுக்கும்.

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சண்ட காய்ச்சி பால் சக்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு நீங்கும்.

அடிக்கடி நாவறட்சி ஏற்ப்பட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருக்கிறதா.  கொஞ்சம் துளசி இலையை பறித்து நன்றாக மென்று விடுங்கள். நாவறட்சி மட்டுப்படும்.

வாழை தண்டை சுட்டு அதன் சாம்பலை எண்ணையில் கலந்து தீப்புண், சீழ்வடிதல், மற்றும் ஆறாத காயங்கள் மீது தடவி வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.

உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒட்டு கொய்யா, மா, சப்போட்டா போன்றவை வாங்கி வளர்க்கிறிங்களா? முதல் வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டு விடுங்கள். அடுத்த வருடம் அமோகமாய் காய்க்கும்.


Tuesday, 20 November 2012

வைரமுத்து காதல் கவிதை
பன்னிரண்டு பாலைவன 
வருஷங்களுக்குப் பிறகு
அவளை 
அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் 
செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!


உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.


நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"
நீயும் என்னைக்
காதலித்தாயா?

-