Follow by Email

Sunday, 14 April 2013

இலங்கைப் பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும்?


இந்தியா அக்கறை காட்டவில்லை என்றால் சீனா ஆக்கிரமித்துவிடும் மற்றும் செல்வாக்கு செலுத்திவிடும் என்பதெல்லாம் அடிக்கடி நம்மீது ஏவும் பூச்சாண்டியேயாகும். 

சீனர்கள் மிகவும் மதிநுட்பம் உடையவர்கள். இந்தியா போன்று அவர்களும் பொருளாதாரம் மற்றும் வணிக வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளவே முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.  

இலங்கையில் நம்மால் குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ள முடியாத பல வணிகத் திட்டங்களை அவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கமானது,  தங்கள் நாட்டின் தமிழ்க் குடிமக்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தவில்லை எனில், இந்தியா இலங்கை தொடர்பாக மாற்றி சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தியாவின் அயல்துறைக் கொள்கையில் முடிவுகள் மேற்கொள்ளப்படுவது என்பது ஆட்சியாளர்களின்  எதார்த்த உண்மைகளின் அடிப்படையிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டன. 

இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறை மற்றும் மனித  உரிமைக் கவுன்சிலில் அது வாக்களித்த விதம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

1956இல் இலங்கையின் ஆட்சிமொழி சிங்களம் மட்டுமே என்று சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ்பண்டாரநாயகே சட்டம் இயற்றியதிலிருந்து பிரச்சனை தொடங்கிவிட்டது.  

அப்போது இந்தியாவில் புதுதில்லியிலிருந்த அரசியல் வர்க்கத்தில் சில பிரிவினர் இதனை வரவேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

இது ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வினை ஒருமுகப்படுத்துகிறது என்று இதற்கு அப்போது அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளில் தமிழ் மக்கள் இரண்டாம்தரக் குடி மக்களாக மாற்றப்பட்டார்கள். 

தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு என்பது படிப்படியாக ஆனால் உறுதியாக நிறுவப்பட்டது.  யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பிரட் துரையப்பா இளைஞர் பிரபாகரனால் கொல்லப்பட்டதை அடுத்து,  தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் கொழும்பில் வெடித்தன. இது தமிழ் தீவிரவாதம் வளர்வதற்கும் இட்டுச் சென்றது.

அடுத்து, சிங்களவர்கள் மத்தியில், பெரும்பான்மையான சிங்களவர்கள், ‘‘தமிழ் தீவிரவாதத்திற்கு, (பலர் இதனை பயங்கரவாதம் என்றே கருதினார்கள்) பாக் நீரிணைப்புக்கு அப்பாலிருந்து வரும் ஆதரவைத் துண்டித்து விட்டோமானால் அதனால் வெற்றி பெற முடியாது’’ என்று கருதினார்கள். 

பிரதமர் ராஜிவ் காந்தி நிலைமையைச் சரிசெய்ய விரும்பினார். இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் இந்தியா  நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.   

இதன் பொருள், இலங்கையைத் துண்டாட முயற்சிப்பவர்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்காது என்பது மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவதற்கும் இந்தியா ஒத்துழைத்திடும் என்பதுமாகும். 

ஆயினும் இந்தியா தரப்பில் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது, தமிழ்ச் சிறுபான்மையினர், கண்ணியத்தோடு, இலங்கையின் பன்முகக் கலாச்சார (multicultural), பல்வேறுஇன (multiple ethnic), பல்வேறுமொழிகளின் (multilingual) சம அந்தஸ்து உள்ளவர்களாக, நடத்தப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும்.

தீர்மானம் மிகவும் சுருக்கப்பட்டுவிட்டது

எல்டிடிஇ-இனருக்கு எதிராக அல்லது மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக கொழும்புவின் ராணுவ நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. 

மாறாக,  எல்டிடிஇ-இனருக்கு எதிரான சண்டையில் கடைசி நூறு நாட்களில் மிகவும் தெள்ளத் தெளிவாகத் தெரியவரும் அது புரிந்த யுத்தக் குற்றங்கள் குறித்துத்தான் கேள்வி கேட்கின்றன. 

எல்டிடிஇ-இனரை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக வெற்றிக்களிப்பில் மிதந்தபோது அவர்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட உரையாடல்களும்,காணொளிகளும் ஆவணப்படுத்தப்பட்டு, உலகம் முழுதும் ஒலி மற்றும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. 

இவற்றிற்கு இலங்கை அரசாங்கத்தை மிகவும் இக்கட்டிற்குள் தள்ளி இருக்கின்றன.

 2012 மார்ச்சில் மனித உரிமைகள் கவுன்சிலின் 19ஆவது அமர்வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்பது மிகவும் சுருக்கப்பட்ட ஒன்றேயாகும். 

அது என்ன கோருகிறது. இலங்கை அரசாங்கம் தானே அமைத்திட்ட, தன் சொந்த  கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் சமரச ஒற்றுமை ஆணையம் (Lessons Learnt and Reconciliation Commission) அளித்திட்ட பரிந்துரைகளை அமல்படுத்துக என்பதே அத்தீர்மானத்தின் வாசகமாகும். 

இதற்கு இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டால் அதனை நிறைவேற்றுவதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது. 

ஆனால், இலங்கை அரசாங்கம் இதனை நேரடியாக ஏற்காமல் தட்டிக்கழிக்கும் விதத்திலேயே நடந்துகொண்டு வருகிறது.  

இலங்கை அரசாங்கம் புரிந்திட்ட அட்டூழியங்கள் தொடர்பாக அதிகமான அளவிற்குக் காணொளிகள் வெளிவரத்தொடங்கியுள்ளதை அடுத்து, அவற்றிற்கு இலங்கை அரசாங்கம் பதில்சொல்ல வேண்டிய கோரிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

 இலங்கைக்கு எதிராகவும் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 2012 மார்ச்சில் வாக்களித்த இந்தியாவிற்கு, 2013 மார்ச்சில் மாற்றி வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.  

குறிப்பாக இலங்கை அரசாங்கம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணக்கூடிய விதத்தில் உருப்படியான நடவடிக்கைகள் எதையும் எடுக்காத நிலையில் இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டியிருந்தது.

இந்திய அரசாங்கத்தின் மீதும் இலங்கை அரசாங்கத்தின் மீதும் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காண இரு நாடுகளுமே விரைந்து விடை காண வேண்டும். இது இரு நாட்டின் நலன்களுக்குமே அவசியமாகும். இல்லையெனில் இருக்கும் ரணங்கள் சீழ்பிடிக்க அனுமதித்தது போலாகிவிடும்.

இனப்படுகொலைகள், இனத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுதல், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை மூடி மறைப்பதன் மூலம் இறையாண்மை எந்தக்காலத்திலும் வெற்றி பெற்றதில்லை. 

இன்னொரு நாடு சம்பந்தப்பட்ட தீர்மானங்களை இந்தியா ஆதரிக்காது என்று கூறுவதெல்லாம் அபத்தமான ஒன்றாகும். இதன் மீது நாம் கொள்கைரீதியாக தீர்மானகரமான நிலை இதற்கு முன்பு எடுத்திருக்கிறோம். 

1983இல் கொழும்பில் தமிழர்களுக்கு எதிராகக் கலவரங்கள் வெடித்த சமயத்தில், இலங்கைக்கு எதிராக பாகுபாடுகளைத் தடுத்தல் மற்றும் சிறுபான்மையினரைப் பாதுகாத்தல் உதவி-ஆணையத்தில் (Sub-Commission on Prevention of Discrimination and the Protection of Minorities) இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை  இந்தியா போதுமான துணிவுடன் கொண்டு வந்தது.  

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பாலஸ்தீனியர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மோசமாக நடந்துகொள்ளும் இஸ்ரேலுக்கு எதிராகவும் இதேபோன்ற தீர்மானங்கள் வந்தபோது அவற்றிற்கு ஆதரவாக நாம்  வாக்களித்திருக்கிறோம். 

நம்முடைய நாட்டின் நலன் பாதிக்கப்படுமானால், இதுபோன்று பல நாடுகளின் பிரச்சனைகளிலும் அது கொரிய ஜனநாயக மக்கள் குடியரசாக (DPRK) இருந்தாலும் சரி, அல்லது ஈரானாக இருந்தாலும் சரி, நாம் எவ்விதத்தயக்கமுமின்றி  சரியான நிலை எடுத்திருக்கிறோம்.

அரசியல்வாதிகளின் வஞ்சம்நிறைந்த திட்டங்கள் என்று கூறி தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள உணர்வுகளை புறந்தள்ளுவது என்பது ஆட்சியாளர்கள் நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை என்பது மட்டுமல்ல, வருவதற்கு முன் காக்காவிட்டால் எரிமுன்னர் வைத்த வைக்கோல்போல எரிந்து சாம்பலாகிவிடுவோம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.  

2009 ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மதித்து நடக்காது முரண்டு பிடிக்கும் இலங்கையை இந்தியா ஏன் பொறுப்பாக்கக் கூடாது?

13ஆவது திருத்தம்

இந்தியா, எல்டிடிஇ-க்கு எதிராக இருக்கலாம், ஆனால் தமிழர்களுக்கு எதிராக இருப்பதை அனுமதிக்க முடியாது.  

பிரச்சனை என்னவெனில், இலங்கையிலிருந்த தமிழ்ச் சிறுபான்மையினர் மத்தியிலும் மற்றும் இந்தியாவில் உள்ள தமிழ் மக்களில் பெரும்பான்மை பிரிவினர் மத்தியிலும், சிங்களவர்களின் அடக்குமுறைக்கு எதிராக உண்மையான கேடயமாக இருந்து வெற்றிகரமான முறையில் அதனை எதிர்கொண்டது எல்டிடிஇ இயக்கம் மட்டுமே என்கிற கருத்து அழுத்தமாக இருக்கிறது.   

இந்த உணர்வினை நாம் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட முடியாது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரே பாதுகாப்பு, ஆட்சியாளர்கள் உறுதியளித்துள்ளபடி 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அமைந்த அதிகாரப் பரவலேயாகும்.

இலங்கைப் பிரச்சனையின் மீது, தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் பலவற்றுடன் இணைந்து அஇஅதிமுகவும் திமுகவும் ஒரே பக்கத்தில்தான் நிற்கின்றன. 

இலங்கை அரசாங்கம் தன் உள்ளத்தை  உளப்பூர்வமாக மாற்றிக் கொள்ளவில்லை எனில் பிரச்சனை சீழ் பிடித்து அழுகும் வரை தொடரும்.  2013மார்ச் 27 அன்று இலங்கைப் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாயா ராஜபக்சா, ‘‘தேசியத் தலைமைக்கு எதிராக எப்போதும் குறிவைத்துக் கொண்டிருப்பவர்களிடம், மாகாண நிர்வாகத்தை எப்படி ஒப்படைக்க முடியும்? 

மாகாண நிர்வாகங்களின் தயவில் இருக்க நாங்கள் விரும்பவில்லை,’’ என்று கூறியிருக்கிறார்.  தற்போது இருந்துவரும் மாகாண கவுன்சில்களையேக் கலைத்துவிடக்கூடிய அளவிற்கு பாதுகாப்பு செயலாளர் பரிந்துரை செய்திருப்பதுபோலத் தோன்றுகிறது. இந்த நிலையில் இவர்கள் எங்கே 13ஆவது திருத்தத்தை அளிக்கப் போகிறார்கள்?

இந்தியாவுக்கு அவர்கள் என்ன உறுதிமொழிகள் அளித்திருந்த போதிலும்,  இலங்கையில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ‘‘சகோதரர்கள்’’, அரசியல் சமரசத்திற்கோ அதிகாரப்பரவலுக்கோ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எள்ளளவுகூட இருப்பதுபோல் தோன்றவில்லை.   

சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கவேண்டும், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சிற்றும் இல்லாத இத்தகைய ‘‘பெரும்பான்மைவாதம்’’(“majoritarianism”)  சிங்கள நாடாளுமன்ற வலுவைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகவும் குறுகிய, குணக்கேடான அரசியல் சிந்தனையேயாகும்.

புத்த பிக்குகளின் தலைமையில், சிங்கள இனவெறியர்கள் கொழும்பில் முஸ்லீம் வர்த்தகர்கள் மீது சமீபத்தில் புரிந்துள்ள தாக்குதல்கள், மொழி, மதம் மற்றும் கலாச்சார சிறுபான்மையினர் உரிமைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள  தடித்தனமான, பண்பாடற்ற இழிசெயல்களேயாகும். 

இலங்கை, இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடு என்பது மட்டுமல்ல, கலாச்சார ரீதியாகவும்,உணர்வுரீதியாகவும் நம்மோடு மிகவும் நெருக்கமாக இருந்து வந்த நாடுமாகும்.   இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் படிப்படியாக ஆனால் பலமாகக் கட்டப்பட்டவையாகும்.  

இலங்கை, தமிழ் மக்களை கண்ணியத்துடனும், கவுரவத்துடனும் நடத்தவில்லை என்றால், இந்தியாவு, இலங்கைக்கு எதிராகக் கடுமையாக நடந்துகொண்டுதான் ஆகவேண்டும். வேறு வழி கிடையாது. 

அவ்வாறு நடந்திடாமல், ஏதேனும்‘‘சாக்குப்போக்குகள்’’ சொல்லுமானால், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக வலுவாகக் குரல் கொடுக்கவில்லை என்றால், அதற்கு எதிராக வீசப்படும் செங்கற்கட்டிகளை எதிர்கொள்ள அது தயாராகிக்கொள்ள வேண்டியதுதான்.

(கட்டுரையாளர்,நியூயார்க்கில் ஐ.நா.மன்றத்தில் இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்தவர்.2013 ஏப்ரல் 9 அன்று தி இந்து நாளிதழில், வெளியான கட்டுரை).

ஹர்தீப் எஸ்.பூரி 

4 comments:

 1. tamizar pirachinai mudalil india mulutumaga unarappada vendum.india muzu manasodu ulaga arangukku kondu sella vendum congeress ethil mattri sintikka vendum

  ReplyDelete
 2. tamizar pirachinai mudalil india mulutumaga unarappada vendum.india muzu manasodu ulaga arangukku kondu sella vendum congeress ethil mattri sintikka vendum

  ReplyDelete
 3. Dhuriythanan faced defeat in mahabharatham for not giving due share to Pandavar.The same fate will be ready not far away for sinhalis.

  ReplyDelete
 4. ithai thaan iyya naam thamil naadukum 60 varushama solli / kathhy/aluthu varukirom.

  ReplyDelete