Follow by Email

Monday, 9 April 2012

இலங்கை - சீண்டி பார்க்கும் சின்ன நாடு

வடக்குப் பகுதியில் ராணுவத்தை வெளியேற்றி இந்தியாவுக்கா அனுப்ப முடியும்? ராஜபட்ச கேள்வி

தினமணி செய்தி. 

 
உலக நாடுகளை எல்லாம் உற்று நோக்க வைத்த இந்தியா. 

வளரும் நாடுகள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா. 

வல்றசுகளை எல்லாம் வாய் பிளக்க வைத்த இந்தியா.

ஆசிய பிராந்தியத்தில் அசைக்க முடியாத சக்தியாக  இருக்கும் இந்தியா. 

அணு ஆயுத  வல்லரசான இந்தியா.

குட்டி இலங்கையிடம் குட்டு வாங்கி கொண்டிருக்கிது.   சீண்டி பார்க்கும் சின்ன நாட்டிடம் தன் கடுத்த முகத்தை கூட காட்டாமல் இருப்பதற்கு என்ன காரணம்.

நாட்டு பிரச்சனையும், வீட்டு பிரச்சனையும்  ஓன்று தான் என்று உணராத மத்திய அரசுதான் அதற்கு காரணம்.

வீட்டுக்குள் ஒரு பிரச்சனை எழுந்தால், அது உடனடியாக களைய பட வேண்டும்.  வேற்றுமைகள் விளக்க பட வேண்டும்.  புரிந்துணர்வை அதிகபடுத்தி மனம் விட்டு பேசி தீர்க்க வேண்டும். 

நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனையும் அப்படிதான்.  இந்திய மீன்வர்கள் தாக்கப்படும் விஷயத்தில்  இதுவரை மவுன சாமியாராக இருக்கிறது மத்திய அரசு.

தொழில் நுட்பத்தில்,  தகவல் தொடர்பில்,  அறிவியல் முன்னேற்றத்தில் அமெரிக்காவிடம்  போட்டி போடும் இந்தியா,  தன் நாட்டு மக்கள்  விஷயத்தில் அமெரிக்கா  காட்டும் அக்கறையையும் கவனிக்க வேண்டும்..

அமெரிக்க நாயை சுட்டால் கூட கொந்தளிக்கும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. 

மீனவர்கள் பிரச்சனை இன்று நேற்று ஏற்பட்டதல்ல.  காலம் காலமாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  கடலுக்கு செல்லும் மீனவர்கள்  தொடர்ந்து தாக்கபடுகிறார்கள்.  

அவர்கள் உடமைகள் பறிபோகிறது. உயிர்  இழப்புகள் இருந்து கொண்டே இருக்கிறது.  

இதுவரை ஆக்கபூர்வமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? 

இன்னும்  எத்தனை  ஆயிரம்  பேர்  இறந்தால் மத்திய அரசு கண்  விழிக்கும்.  

எத்தனை கோடி பொருள் சேதம் ஏற்பட்டால் புத்தி  வரும். அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். 

ஆசிய பிராந்தியத்தில் அச்சுறுத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரியண்ணனாக இருங்கள் என்றும் சொல்லவில்லை. 

ஆனால் இந்தியா விஷயத்தில் மூக்கை நுழைத்தால் விளைவு பெரிசாக இருக்கும் என்றாவது உணர வைத்திருக்க வேண்டாமா?

குறைந்த பச்சம் இந்திய கப்பற்படையின் குட்டி கப்பல்களை கொண்டு வந்து நிறுத்தி இருந்தால்,  தாக்க படுவது தொடர்ந்தால்,  தக்க பதிலடி கொடுப்போம் என்று சொல்லி இருந்தால்,  வாலை சுருட்டி கொண்டு வழிக்கு வந்திருக்கும் இலங்கை. 

செய்தார்களா இல்லை.  எல்லை  தாண்டி போகிறார்கள் என்று நம்மையே  குற்றம் சொன்னது மத்திய அரசு.

இந்தியாவின் மெத்தன போக்கை தெரிந்து கொண்ட இலங்கை,  இந்தியா முகத்தில் கறியை  பூசுகிறது.

தற்சமயம் முன் வைக்கப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்திற்கு பிறகு  இலங்கையின் முகம் முற்றிலும் மாறிவிட்டது.  இந்தியாவை எரிச்சலூட்டும் நடவடிக்கையில் இறங்கி விட்டது.

ஆட்சி கட்டிலில் இருக்கும் அதிமேதாவிகள் இதை அறிந்து கொண்டார்களா இல்லையா என்பது புரியவில்லை.

இன்று இலங்கையின் போக்கு வரத்தில் இந்தியாவின் பங்கு முக்கிய இடம் பெறுகிறது.  சாலைகளில் ஓடும் வாகனங்களில்   இந்திய தயாரிப்புகள் தான் அதிகம்.

இதற்கு முற்று புள்ளி வைக்கும் முதல் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது இலங்கை.  இந்தியாவில் இருந்து இறக்குமதி யாகும் வாகனங்களுக்கு அதிக வரியை விதித்திருக்கிறது.

அதனால் வாகனங்கள் விலை பல மடங்கு உயரும். 

அடுத்து.... பெட்ரோல் ஆய்வு கழகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வது பற்றி அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம் ஆகிவிட்டது.  விரைவில்  அந்த அறிவிப்பு வரும், எதிர் பார்க்கலாம்.

அடுத்து ....

எங்கள் நாட்டுக்கு அருகில் இந்தியா அணு உலை அமைக்கிறது.  அங்கு ஏதாவது  அசம்பாவிதம் ஏற்பட்டால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அணு ஆய்வு கழகத்திடம் புகார் அளிப்போம் என்று அடுத்த ஆயுதத்தை  கையில் எடுத்திருக்கிறது இலங்கை.

இப்போது வடக்குப் பகுதியில் ராணுவத்தை வெளியேற்றி இந்தியாவுக்கா அனுப்ப முடியும்? என்று ராஜபட்ச கிண்டல் அடிக்கிறார்.  

இன்னும் ஊமை சாமி மாதிரி இருந்தால்,  இலங்கையின் அடாவடி. அதிகமாகி விடும்.

நான் அரசாங்கத்திற்கு அறிவுரை சொல்லவில்லை.  ஆலோசனை சொல்லும் தகுதியும் இல்லை.  மெத்த படித்த மேதாவிகள் வெளிவுறவு துறையில் இருக்கிறார்கள்.

என் கருத்து இது.

ஓன்று இலங்கைக்கு உற்ற தோழன் என்பதை உணர வைத்து,  இலங்கையை ஒத்து போக வையுங்கள்.

அல்லது சாம பேத தான  தண்டம் என்பது போல்,  கடைசி ஆயுதத்தை கையில் எடுத்து மிரட்டி பணிய வையுங்கள்.

இரண்டில் ஓன்று தான் சரியான  வழி.  

No comments:

Post a Comment