Follow by Email

Sunday, 9 December 2012

இதுதான் கலியுகம் - ஆஞ்சநேயர்


துரியோதனனிடம் அனைத்தையும் இழந்து, பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம் இது.

பாஞ்சாலியின் விருப்பத்திற்காக, சவ்காந்திக மலரை கொண்டு வருவதற்காக பீமன் சென்றான்.

காடுகளையும், மலைகளையும் தாண்டிப்போன அவன், வழியில் அனுமனை சந்திக்கிறான். அவரைப்பற்றிய விவரங்களை அறிந்த பிறகு... அண்ணா.. தாங்கள் சீதா தேவியை தேடிப்போன போது, கடலை தாண்டுவதற்காக எடுத்த பிரம்மாண்டமான விஸ்வருபத்தை, நான் காண ஆசைப்படுகிறேன் என வேண்டினான்.


ஒளிவீசும் திருமேனியை கொண்ட ஆஞ்சநேயருக்கு பீமனின் வார்த்தைகளை கேட்டதும் சிரிப்பு வந்துவிட்டது. பீமா ...கடல் தாண்டும் போது நான் எடுத்த வடிவத்தை உன்னால் மட்டும் அல்ல, வேறு எவராலும் பார்க்க முடியாது.

ஏனென்றால் அப்போதைய கால நிலைமை வேறு. துவாபார யுகமான இப்போதோ பொருள்களின் சக்தி முதலானவற்றை குறைக்கிற காலம்.

(முழுமையான அவதார்ணமான கண்ணன், ஆஞ்சநேயர், பீஷ்மர், துரோணர், பஞ்சபாண்டவர்கள் போன்ற உத்தமர்கள் இருந்த துவாபார யுகத்திலேயே அப்படிப்பட்ட நிலை)

பீமா...கடலை தாண்டும் போது நான் எடுத்த பிரம்மாண்டமான வடிவம் இப்போது எனக்கு இல்லை.

யுகங்கள் தோறும் எல்லாப் பொருள்களும் காலத்தை அனுசரிப்பது போல், பூமி, நதிகள், மலைகள், மரங்கள், சித்தர்கள், தேவர்கள், மகரிஷிகள் முதலான எல்லோரும் காலத்தை அனுசரிக்கிறார்கள்.

மனிதர்களுடைய பலம், உடம்பு, புகழ் ஆகியவை எல்லாம் அந்தந்த காலத்தில் குறைவையும், வளர்ச்சியையும் அடைகின்றன. ஆகையால் நானும் இந்த யுகத்தின் காலத்தை அனுசரித்துத்தான் ஆகவேண்டும்.

எனது பிரம்மாண்டமான வடிவத்தை பார்க்க ஆசைப்படாதே, என்ற ஆஞ்சநேயர் பீமனுக்கு யுகங்களின் ஆசாரத்தையும், அறம், பொருள், இன்பம் பற்றியும் சொல்ல துவங்கினார்.

எந்த யுகத்தில் தர்மம் நிலைபெற்றிருந்ததோ, அந்த கிருத யுகமானது மிக சிறந்தது. உத்தமமான அந்த யுகத்தில் செய்யப்படவேண்டிய நல்வினைகள் எல்லாம் குறைவற செய்யப்பட்டு வந்தன.

தர்மங்கள் வாடவில்லை. மக்களும் குறைவே இல்லாமல் இருந்தார்கள். கிருத யுகத்தில் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள்,யச்சர்கள், ராச்சசர்கள், நாகர்கள் போன்றவர்கள் இல்லை.

வாங்குவதும் விற்பதும் கிருத யுகத்தில் இல்லை. சாம, ரிக், யசுர் வேதங்கள் இல்லை. மனிதர்களுக்கு உண்டான உழைப்பு என்பதே இல்லை.

அந்த யுகத்தில் நினைத்த மாத்திரத்தில் பலன் கைகூடியது. பற்றை விடுவதே தர்மமாக இருந்தது. வியாதிகள் இல்லை. இந்திரிய சக்தி குறையவில்லை.

பொறாமை, அழுகை, அகங்காரம், கபடம், சண்டை, சோம்பல், விரோதம், கோல்சொல்லுதல், பயம், தன்மீதே வெறுப்பு, பொறாமை, அருவெறுப்பு முதலான எவையும் கிருத யுகத்தில் இல்லை.

பரபிரம்ம வடிவிலான நாராயணர் அப்போது வெண்மை நிறம் உள்ளவராக இருந்தார்.  மக்கள் அனைவரும் அவரவர் கடைமைகளை பொறுப்புடன் செய்தார்கள்.

வெவ்வேறான காரியங்கள் உடையவர்களாக இருந்தாலும் மக்கள் அனைவரும் ஒரே தெய்வமான பரபிரம்மனிடம் மனதை செலுத்தி வந்தனர்.

தியானம் மட்டுமே செய்து வந்தனர். செயல்களின் பலனை எதிர்பாராமல் இருந்தார்கள். பிரம்ம வித்துக்களிடம் அணு அளவு கூட காமம் இல்லமால் இருந்தது. உத்தமமான அந்த கிருத யுகத்தில் தர்மம் நான்கு கால்களுடன் இருந்தது.

இனி திரேதா யுகம் பற்றி சொல்கிறேன் கேள். திரேதா யுகத்தில் தர்மமா தேவதையின் கால் ஓன்று குறைந்தது. மூன்று கால் உள்ளதாக ஆனது.

இன்னது செய்தால் இன்னது அடையலாம் என்று பல விதமான காரியங்களை செய்வதில் மக்கள் ஆர்வம் உள்ளவர்களாக ஆனார்கள்.

கொடை செய்வதின் மூலம் பலன் அடைந்தார்கள். தவமும் தானமுமே முக்கியமாக இருந்தது. அவரவர் தர்மம் தவறாமல் தன்கள் கடமைகளை  செய்தார்கள்.

பீமா.. குந்தியின் மைந்தனே...துவாபார யுகத்தை பற்றிய தகவல்களை சொல்கிறேன் கேள்.

இந்த யுகத்தில் தர்மம் இரண்டு கால்களுடன் நடமாடுகிறது. மாகாவிஷ்ணு பொன்மயமான நிறத்தை அடைகிறார்.

வேதம் நான்கு பிரிவுகளாக ஆனது. சிலர் நான்கு வேதங்களையும், சிலர் ஒரு வேதத்தையும் கொண்டவர்களாகவும், சிலர் வேதமே இல்லாதவர்களாகவும் ஆகிறார்கள். சாஸ்திரங்கள் பலவிதமாக பிரிந்தன.

ஜனங்களுக்கு போர்க்குணம் மிகுந்தது. தவத்திலும் தானத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்த யுகத்தில் புத்தியின் சக்தி குறைந்து போனதால், சத்தியத்தில் யாரும் நிலை பெற்றவர்களாக இல்லை. சத்தியத்தில் இருந்து விலகியதன் காரணமாக பலவிதமான நோய்களும், காமன்களும், உபத்திரவவங்களும் உண்டாயின.

துயரம் தாங்காத மனிதர்கள் தவம் செய்கிறார்கள். சிலர் வாழ்க்கை சுகங்களை விரும்பியும் யாகங்களை செய்கிறார்கள்.

சிலர் வாழ்க்கை சுகத்தை விரும்பியும், சொர்க்கத்தை விரும்பியும் யாகங்கள் செய்கிறார்கள்.  துவாபார யுகத்தில் மனிதர்கள் அதர்மத்தால் இவ்வாறு நலிய ஆரம்பித்தார்கள்.

கலியுகத்தை பற்றி சொல்கிறேன் கேள்.  கலியுகத்தில் தர்மம் ஒரே காலில் நிற்கும். அலச்சியமும், சோம்பேறித்தனமும் மேலோங்கும்.

மகாவிஷ்ணு கருமை நிறம் கொண்டவராக இருப்பார். வேதங்கள், ஆச்சாரங்கள், தர்மங்கள், யாகங்கள், நல்ல செயல் ஆகியவை அற்றுப் போகும்.

அதிகமான மழை, மழை இல்லாமை, வீட்டில் பூச்சி, எலி, தொல்லைகள் அதிகமாகும். பறவைகளால் பயிர்கள் அழியும். அரசாங்கத்தால் தொல்லை, அடுத்த நாட்டுக்காரர்களால் தொல்லை, பெரும் காற்று ஆகியவற்றால் மக்களுக்கு தாங்க முடியாத துயரம் உண்டாகும்.

வியாதிகள், தற்பெருமை, கபம், மனோவியாதிகள், பசியினால் பயம் ஆகியவை உண்டாகும் என விவரித்து முடித்தார் ஆஞ்சநேயர்.

இதன் பிறகு ஆஞ்சநேயர் பீமனின் வேண்டுகோளுக்கு இணங்கி அவன் பார்க்க கூடிய  அளவுக்கு தனி பெரும் வடிவத்தை காட்டியருளினார்.

1 comment:

  1. வியக்கவைக்கும் அருமையான அனுமன் பிரபாவம் .. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete