Follow by Email

Friday, 28 December 2012

பிள்ளை வரம் தரும் மன்மதன் தேங்காய்!

தாரகன்!

அரக்கர் குலத்து வாரிசு. அவன் முன்னோர்கள் எல்லாம் விண்ணையும், மண்ணையும் கட்டி ஆண்ட போது, வாரிசுக்கு மட்டும் அந்த ஆசை வராமலா போகும். 

வந்தது.

பொதுவாக எண்ணியதை பெற என்ன வழி? 

இறைவனை சரணாகதி அடைவது. ஆனால் அரக்கர் இனத்தை பொறுத்தவரை அறிவு வேறு விதமாக வேலை செய்யும். கெஞ்சி கூத்தாடுகிற ரகமெல்லாம் இல்லை. நேரடியாக தவம்தான். 

கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு தவம் செய்து, இறைவனே மனம் இளகி தந்தேன் வரம் என்று சொல்லும் வரை ஓயவே மாட்டார்கள். அந்த வகையில் தாரகனும் தவம் செய்ய ஆரம்பித்தான்.

யாரை நோக்கி?

பிரம்மதேவனை நோக்கி.

காலங்கள் உருண்டோடியது.  தாரகனின் தவவலிமை எட்டுக்கண் விட்டெரிக்க ஆரம்பித்து. உடம்பில் இருந்து எழுந்த உஷ்ணம் தேவலோகத்தையும் வாட்டி எடுத்தது.

ஓன்று கூடினார்கள் தேவர்கள். தாரகனின் தவம் அடுத்து வரப்போகும் ஆபத்தை விளக்குகிறது. உடன் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று மந்திராலோசனை நடத்தினார்கள். ஒரு தெளிவு பிறந்தது.

அபாயம் என்றால் அரவணைத்து பாதுகாப்பு அளிப்பது மும்முர்த்திகள் தானே? அவர்களிடமே முறையிடலாம் என்று முடிவாயிற்று. முதலில் நினைவுக்கு வந்தவர் சிவபெருமான்.

ஆனால் அவர் நிஷ்டையில் அமர்ந்து நெடுங்காலம் ஆயிற்று. அடுத்து யார் என்று யோசித்ததில் பிரம்மா தேவனிடமே சென்று சொல்வது என்று முடிவாயிற்று.

கோரிக்கை மனுக்களோடு கொடிபிடிக்காத குறையாக பிரம்மனின் கோட்டையை நோக்கி ஊர்வலம் போனார்கள் தேவர்கள். வந்தவர்களை அமர சொல்லி என்ன என்று கேட்டார் பிரம்மதேவன்.

பிரம்மதேவா... அரக்கன் தாரகன் கடும் தவம் புரிகிறான். அங்கிருந்து எழும் தீ சுவாலைகள் தேவலோகத்தையே எரித்து சாம்பலாக்கிவிடும் போலிருக்கிறது. அவன் தவத்திற்கு ஒரு முடிவு கட்டி எங்களை காத்தருள வேண்டும்.

தன்னை நோக்கி தவம் செய்பவனை எப்படி தண்டிப்பது. முதலில் வரம் தருவதுதான் முறை. தவறு  செய்தால் பின்னர் தண்டிக்கலாம் என்று எண்ணியவர், தாரகன் முன் தோன்றினார்.

தாரகா...  உன் தவத்தை மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்.

பிரபு....தாங்கள் படைத்த உயிர்களிலேயே அதிக பலம் கொண்டவனாக நான் வாழ வேண்டும்.

சரி..

எனக்கு மரணம் என்று வந்தால் சிவனின் புத்திரனால் வரவேண்டும். அதுவும் பாலகனாக இருக்க வேண்டும். அவன் சாரதியாக வந்தால் மட்டுமே எனக்கு மரணம் ஏற்பட வேண்டும்.

இப்படி ஒரு வரம் கேட்க காரணமே... உலகத்திலே பலம் பெற்றவனாக வரம் பெற்ற பிறகு, ஒரு பொடிப்பயல் வந்து நம்மை வெல்ல முடியாது என்கிற தைரியம்தான்.

ஆரம்பம் என்று வந்து விட்டால் முடிவு என்பது வராமலாப் போகும். வரும் என்பதை உணர்ந்த பிரம்மன் தந்தேன் வரம் என்று தந்துவிட்டு போய்விட்டார்.

அடுத்து என்ன.... வழக்கம் போல் வம்புதான்.அரக்கர்கள் பிறவி குணமே சின்னதை கொடுத்து பெரியதை விலைக்கு வாங்குவதுதானே.

அந்த வகையில் வலிய வம்புக்கு சென்றான். தொடை நடுங்கிய தேவர்களும் தொண்டுழியம் புரிந்தார்கள் தாரகனுக்கு.

நம்ம ஜோதிட சூரியன் சந்திரன் கூட இதற்க்கு விதிவிலக்கல்ல.  தேவேந்திரன் தன் அரியாசனத்தை காத்துக் கொள்ள மாதம் தோறும் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான்.

காலங்கள் உருண்டோடியது. குட்ட குட்ட குனிந்துக்கொண்டிருந்த தேவர்களுக்கு சட்டென யோசனை பிடிபட்டது. எத்தனை காலம்தான் இப்படி அடிமை சேவகம் புரிவது என்று ஓன்று கூடிய தேவர்கள் சென்று பார்த்தது பிரம்மனை.

அவர்தானே வரத்தை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கியது. யோசித்த பிரம்மன் பின் வருமாறு கூறினார்.

வரத்தை கொடுத்த நானே அவன் வாழ்நாளை முடித்து வைக்க முடியாது.  எனக்கு இறப்பென்று வந்தால்  சிவனின் அம்சம்தான் என்னை கொல்ல வேண்டும் என்ற வரத்தை பெற்றிருக்கிறான். அதனால் இதற்கு சிவன் தான் தீர்வு காண முடியும்.

சரி... சிவனை அணுகி முறையிடலாம் என்றால் அவர் நிஷ்டையில் அமர்ந்து நெடுங்காலம் ஆயிற்று. பார்வதி தேவியோ பக்கத்தில் அமர்ந்து பணிவிடை செய்து வருகிறாள். எப்படி போய் நம் குறைகளை சொல்வது.

திகைத்த தேவர்களுக்கு ஒரு யோசனையை கூறினார் பிரம்மன். அதன் அடிப்படையில் தேவேந்திரன் மன்மதனை அழைத்தார்.

மன்மதா.. தாரகனை அழிக்க சிவனின் வழியாக ஒரு புத்திரன் பிறக்கவேண்டும். ஆனால் சிவனோ உலக சிந்தனையே இல்லாமல் ஆழ்ந்த தவத்தில் ஆழ்ந்துவிட்டார்.

அதனால் அங்கு சென்று அவர் தவத்தை கலைத்து காமத்தை ஊட்டினால் ஒரு வழி பிறக்கும்.

கட்டளையை ஏற்றுக்கொண்ட காமன் தன் சக நண்பன் வசந்தனோடு, சிவபெருமான் தவம் செய்யும் இடத்திற்கு சென்றான். கூடவே ரதி.


அவ்விடத்திற்கு வந்ததும் வசந்தன் தன் வேலையை ஆரம்பித்தான். அவ்வளவுதான்..... அதுவரை சுட்டெரித்துக்கொண்டிருந்த கோடை வெயில் குளிர்ந்தது. கார்மேகங்கள் வானமெங்கும் சூழ்ந்தது. மரம் செடி கொடிகள் எல்லாம் துளிர்த்து பூக்க தொடங்கின.

குயில்கள் கூவியது . வண்டுகள் ரீங்காரமிட்டது. இளம் தென்றல் காற்று பூவின் நறுமணத்தை சுமந்து கொண்டு தவழ்ந்தது.

அந்த சுழல் எப்பேர்பட்ட ஆண்மகனையும், பெண்ணையும் காமம் கொள்ள வைத்துவிடும். மன்மதனும்  ரதியோடு கூடல் நடத்தியபடி கரும்பு வில்லால் சிவனை தீண்டினான்.

நடக்கும் சம்பவங்கள் எதையும் அறியாத பார்வதி குளத்திற்கு சென்று நீராடி, புத்தாடை உடுத்தி தண்ணீர் கொண்டு கொண்டிருந்தாள். திடீரென மாறிப்போன கால சுழல் அம்பாள் மனதிலும் ஆசையை வளர்த்தது.

மன்மததின் வில்லடிபட்ட சிவன் கண் விழித்தார். அருகில் ரதியும் மன்மதனும் ஆற தழுவியபடி ஆனந்த நடனம் புரிந்தனர்.

அதை கவித்த என்பெருமான் நிமிர்ந்து பார்க்க, எதிரே புத்தாடை உடுத்தி புதுக்கொலத்தில் வந்த பார்வதியை பார்த்ததும், ஒரு கணம் மனம் சலனப்பட்டுப் போனது.

ஒருகணம்தான்,  சுதாகரித்துக்கொண்ட சிவன் மன்மதா .. நீ என்னை கூட விட்டு வைக்க வில்லையா? என்று கோவமாய் பார்க்க நெற்றிக்கண்ணில் இருந்து எழுந்த பொறி மன்மதனை எரித்து சாம்பலாகியது.

இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக கிராமங்களில் காமன் தகன பண்டிகை ஆண்டு தோறும் பங்குனி மாதம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இவ்விழாவின் சிறப்பம்சமே... தேங்காய் பெறுவதுதான்.


திருவிழாவின் துவக்க நாளில் ஆழமாக குழி தோண்டி உள்ளே நன்கு முற்றிய தேங்காயை வைத்து பின் மணலை மூடிவிடுவார்கள்.

அந்த இடத்தில் கரும்பு ஒன்றை நட்டு வைத்து, கரும்பையே மன்மதனாக பாவித்து பூஜைகள் நடைபெறும்.

பதினைந்து நாட்கள் பூஜையின் நிறைவில் கரும்பு உருவில் இருக்கும் மன்மதனை ஓலைகளால் சுற்றிலும் மூடுவார்கள்.

பின்னர் சிவனின் நெற்றியில் இருந்து தீபிழம்பு வந்து மன்மதனை நினைவு கூறும் விதமாக பட்டாசு துணை கொண்டு காமன் எரி ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


பின்னர் மூன்றாம் நாள் மன்மதன் உயர்பித்து எழுந்தததை நினைவு கூறும் விதமாக புதைத்து வைக்கப்பட்ட தேங்காயை வெளியில்  எடுத்து பூஜைகள் செய்யப்படுகிறது.

பின்னர் அந்த தேங்காயை பிள்ளை இல்லாத பெண்டீர் முழு தேங்காயையும் சாப்பிட்டால் தடைப்பட்ட  புத்திரபேறு கிட்டும் என்பது ஐதீகம்.

இத் திருவிழாவின் போது இத்தேங்காயை பெற,  பிள்ளை இல்லாத பலர் முயற்சிப்பது உண்டு. ஒரே சமயத்தில் பலர் தேங்காயை கேட்டால் திருவோலை சீட்டு மூலம் தேங்காய் வழங்கப்படுகிறது.

அவர்களும் நம்பிக்கையோடு தேங்காயை வாங்கி செல்கிறார்கள். இதில் குறிப்பிட வேண்டிய அம்சமே... இப்படி தேங்காயை பெற்றவர்களுக்கு மறு ஆண்டு காமன் பண்டிகை வருவதற்குள் குழந்தை பாக்கியம் கிட்டி விடுவதுதான். என்னே மன்மதனின் திருவருள்.


No comments:

Post a Comment