புதுமைகளுக்கு பெயர் போன மனித மனம், இப்போது புதுமையான சிந்தனைக்கு வந்திருக்கிறது.
என்னவோ?
நல்ல நேரம் பார்த்து டெலிவரி.
புரியலையே...?
அட... ஞான சூனியம்... பிள்ளை பிறந்த பிறகு நேரம் காலம் எப்படி இருக்குன்னு ஜோசியம் கேட்கிறதை விட, பொறக்கிற நேரத்தையே நல்ல நேரமா பார்த்து பிறக்க வச்சுட்டா...!
கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால்.. மழைபேரும், மகப்பேறும் அந்த மகேசன் அறிந்த ரகசியம்ன்னு சொல்வாங்கலேப்பா...
அது அந்த காலம். இது கம்புட்டர் யுகம். ஆபரேசன் செய்றதுக்கு டாக்டரை பிடிச்சுட்டா.... சரியாப் போய்டும்.
அடடா.. நூதன வழியா இருக்கே.
நூதன வழியிலை. இதுதான் எதார்த்த உண்மை.
அந்த கிரகம் அங்கே இருக்கு அதனால அது நடக்கும். இந்த கிரகம் இங்கே இருக்கு அதனாலே இது நடக்கும்னு ஜோசியர் குண்டு போட முடியாது.
அதோட.. நல்ல யோக நேரத்திலே குழந்தை பிறந்திட்டா... நம்ம கஷ்டம் நம்ம பிள்ளைங்களுக்கு வராது....எப்படி?
ஓ... புராண காலத்திலேயே இது நடைமுறைக்கு வந்திட்டா.. எப்படி...கொஞ்சம் விளக்கமா சொல்லு.
ராவணனை தெரியும். பரமசிவனுக்கு ரொம்ப பிடித்தவன். அவன் இசை மீட்ட தொடங்கினால், அவர் அந்த இசையில் மயங்கி போகிற அளவிற்கு அற்புதமா வாசிப்பானாம்.
ராவணம் பிறப்பில் அரக்கர் இனத்தில் பிறந்து இருந்தாலும் வாழும் முறையில் ஒரு பிராமணத்தனம் அவனிடம் இருக்குமாம். அத்தனை வேதமும் அவனுக்கு அத்துபடி.
தர்க்க சாஸ்திரம் முதல், தர்ம்ம சாஸ்திரம் வரை அறிந்தவன். இவ்வளவு பெருமை வாய்ந்த ராவணன் தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று நினைக்கிறான்.
இதில் ஒன்றும் தவறில்லையே.
தவறில்லைதான். அந்த நேரத்தில் அவன் அரசவையில் சில ஆலோசனை சொன்னார்கள்.
ராவணா.... என்னதான் நாம் சக்தி பெற்று பலசாலிகளாக இருந்தாலும், இந்த பாழாய்ப்போன நவகிரகங்கள் தான் ஆயுளையும், ஆரோக்கியத்தையும், அவன் எதிர்காலத்தையும் நிர்ணணயம் செய்கின்றன.
அதனால் நம் நாட்டின் குலக்கொழுந்து பிறக்கும் நேரத்தை நாம் சரியாக தீர்மானிக்க வேண்டும்.
நீங்களும் நானுமாக இருந்திருந்தால் நல்ல ஜோசியரை தேடிப்போய் நேரம் குறித்து கேட்டிருப்போம். ஆனால் ராவணன் என்ன செய்தான் தெரியுமா? நவகிரங்களை குண்டு கட்டாய் தூக்கி வரசொன்னான். அனைத்து கிரகங்களும் அங்கே ஆஜர்.
படுபாவி என்ன செய்யப்போகிறானோ என்று பயத்தில் நடுங்கி கொண்டிருந்தன கிரகங்கள்.
நவகிரக நாயகர்களே... நான் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன். அவன் அகில உலகத்திலும் இல்லாத ஒரு பலசாலியாக இருக்க வேண்டும்.
அவன் என்னிலும் பலம் வாய்ந்தவானாக இருக்க வேண்டும். அதனால் அப்படி ஒரு குழந்தை பிறக்க நீங்கள் எப்படி? எந்த எந்த இடத்தில் ஜாதக நிலையில் இருக்க வேண்டுமோ, அந்த நிலையில் நீங்கள் இருக்க வேண்டும். சரியா?
பயந்து போய் கிடந்த கிரகங்கள்..உடனே அதற்கு சம்மதம் சொன்னது.
சரி.. இன்றே கர்ப்பதானம் செய்யப்போகிறேன். நீங்கள் தயாராக இருங்கள் என்று சொன்ன ராவணன்... அந்தபுரம் நோக்கிப்போனான்.
பாய்ந்து போன கிரகங்கள் பதிலேதும் சொல்லவில்லை. மறுத்து பேசினால் மாட்டிக்கொள்வோம் என்பது தெரியும்.
ராவணன் சென்ற பிறகு கூடிப் பேசின கிரகங்கள். ராவணன் அந்தப்புரம் சென்று விட்டான். இன்னும் சற்று நேரத்தில் மண்டோதரி கருவுறப்போகிறாள்.
அப்படி கருவில் உருவாகும் குழந்தைதான் சர்வ வல்லமை பெற்றவனாக பிறக்க வேண்டும் என்கிறான்.
இந்த லோகத்தில் இவன் ஒருவனையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. இவனை விட பலசாலி மகன் பிறந்து விட்டால், நம்கதி அதோகதி தான். என்ன செய்வது என்று ஒருவருக்குள் ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
அப்போது சனிபகவான் ஒரு யோசனை செய்தார். ராவணன்.. நம்மை பற்றி மட்டுமே யோசித்திருக்கிறான். என் மகன்தான் அகால மரணத்திற்கு காரணம் என்பதை அவன் மறந்து விட்டான்.
அதனால் அவனுக்கு தெரியாமல் பிறக்கபோகும் குழந்தையின் ஆயுள் பாவத்தில் என் மைந்தன் மாந்தியை நிற்க சொல்லி விட்டால், பின் அவனை நாம் அழித்து விடலாம்.
நல்ல யோசனை என்று எல்லாகிரகங்களும் ஒப்புக்கொண்டன. மண்டோதரி கருவுற்ற நேரத்தில் மாந்தி ஆயுள் பாவத்தில் நின்றதால் இந்திரஜித் அற்பாயுள் ஜாதகத்தில் பிறந்தான்.
ஆக.....சர்வ வல்லமை பெற்ற ராவனையே ஏமாற்றிய கிரகங்கள் சாமானிய மனிதனுக்கு வழிவிடுமா?
நல்ல கேள்வி.
இப்போ... ஒரு மனிதனுக்கு தேவைகள் ஆயிரம் இருக்கு. முதலில் நல்ல ஆயுளோடு பிறக்க வேண்டும். ஆயுள் மட்டும் இருந்தால் பத்தாது ஆரோக்கியமும் சிறக்க வேண்டும். கல்வியில் முதிர்ச்சி வேண்டும். அதற்கேற்ற நல்ல வேலை வேண்டும்.
அழகான மனைவி வேணும். அறிவோட நல்ல பிள்ளைகள் பிறக்கணும். வீடு வேணும், வாகனம் வேணும், அப்பறம் பிக்கல் புடுங்கல் இல்லாத வாழ்க்கை வேண்டும்.
சரிதான்.
இதை எல்லாவற்றையும் தருவது கிரகங்கள். ஒன்றை தருகிற கிரகங்கள் ஒன்றை தராமல் ஏமாற்றி விடுகின்றன. இதுதான் எல்லாருடைய வாழ்க்கையிலும் நடக்கும்.
இதுவும் சரிதான்.
என்ன சரிதான் பொரிதான்னு சொல்லிக்கிட்டு இருக்கே.
இல்லைப்பா.. நீ சொல்றது உண்மை தானே. அதான் சரின்னு சொன்னேன்.
ஓகே... இப்போ சொல்லு... சுழலும் கிரகங்கள் தங்கள் இடத்தில் இடத்தில் இருந்து மாறப்போவதில்லை.
அன்பான அப்பா அம்மா உறவு, நல்ல வேலை, வசதி வாய்ப்பு என்ற கோணத்தில் ஒரு லக்னத்தை முடிவு செய்தால், மறுபுறம் கடன், எதிரிகள் தொல்லை, எதிர்பாராத கண்டங்கள் தரும் கிரக அமைப்பு இருக்கலாம்.
நல்ல மனைவி குழந்தைகள் எதிர்காலம் என்ற கோணத்தில் பிறப்பு நேரத்ததை முடிவு செய்தால், வசதிகள் குறைவு, பிதிர் பகை என்று வேறு ஏதாவது குற்றம் அந்த ஜாதகத்தில் அமையலாம்.
அட...இது கூட சரிதான்.
இது கூட அல்ல..... இதுதான் சரி. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை ஜோதிடன் முடிவு செய்ய முடியாது.
அப்படி ஜோதிடன் முடிவு செய்கிறான் என்று நினைத்தால் அந்த குழந்தை எந்த மாதிரியான ஜாதக அமைப்பில் பிறக்க வேண்டும் என்ற விதி அமைப்பு இருக்கிறதோ, அந்த அமைப்பில் தான் பிறக்கும். இதில் ஒன்றும் மாற்றம் இல்லை. அதுதான் விதி.
No comments:
Post a Comment