Follow by Email

Saturday, 22 December 2012

சொர்க்கத்தின் திறப்பு விழா!!

பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மன் வனவாச காலத்தின் போது. ஒரு காட்டுப் பாதை வழியாக நடந்து சென்றாராம். 

அப்போது அவரை தாண்டி ஒரு குதிரை விரைந்து செல்கிறது. அந்த குதிரையின் மேல் ஒரு இளம் வயது வாலிபனும், அவனுக்கு அருகில் இளம்வயது பெண்ணும் இருப்பதை தருமன் பார்க்கிறான். 

அவனுக்கு வேறுபாடாக எதுவும் தோன்றவில்லை. காட்டுப்பாதை வழியே நடந்து கொண்டிருந்தான்.

கொஞ்ச தூரம் சென்றதும், ஒரு வயதான மூதாட்டி தட்டு தடுமாறி, தலையில் சிறு மூட்டை முடிச்சுகளுடன் நடந்து வந்தாள்.

இயற்கையாகவே இளகிய மனம் கொண்ட தருமன், அந்த மூதாட்டியை அணுகி தாயே.... இந்த தள்ளாத வயதில் தனித்து வருவதின் காரணம் என்ன? உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா? இருந்தால் அவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்கலாமே...என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாராம்.

அதற்கு அந்த மூதாட்டி ஐயா... நான் பக்கத்து கிராமத்தில் இருந்து வருகிறேன்.  அங்கு கடும் பஞ்சம். அதனால் பிழைப்பு தேடி அயலூர் சென்றுக் கொண்டிருக்கிறோம்.

எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனும் அவன் துணையாலும் சற்று முன்னர்தான் இதே பாதையில் குதிரையில் சென்று விட்டார்கள். நான் நடந்து போகிறேன் என்றாள்.

அடக் கடவுளே ...அந்திம காலத்தில் இப்படி நடக்க விட்டுவிட்டு குதிரையில் போய் விட்டானா....என்ன கொடுமை என்று யோசிக்கும் போது, வானத்தில் இருந்து அசரீதி கேட்டதாம் தருமா...கலியுகம் பிறந்து விட்டது. இது செவி வழி செய்திதான். 


இது இருக்கட்டும் இதே நேரத்தில் அல்லது கலியுக காலகட்டத்தில்  வைகுண்டத்தில் என்ன நடந்தது தெரியுமா? வைகுண்டத்தின் கதவை இழுத்து மூடினார்கள்.

ஏன்...என்ன காரணம்? வைகுண்ட கதவை மூடும் அளவிற்கு தைரியசாலிகள் யார்?

ஜெயா.. விஜயர்கள்தான் அவர்கள். அவர்களை தைரியசாலிகள் என்று சொல்வதை விட, காவல் பணியில் இருந்தவர்கள் தங்கள் கடமையை செய்தார்கள் என்று சொல்லலாம்.

வைகுண்டம் என்பது பாவங்கள் இல்லாமல் பரிசுத்தமாக வாழ்பவர்கள் மட்டுமே இருக்கக்கூடிய இடம்.

ஒரு சந்தேகம்?

என்னவோ?

சிவலோகம் என்றும், அங்கு செல்பவர்கள் சிவோலோக பதவி எய்கிறார்கள் என்றும், வைகுண்டம் என்றும் அங்கு செல்பவர்கள் வைகுண்ட பதவி எய்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இது இரண்டும் இல்லாமல் சொர்க்கம்  நரகம் என்றும் சொல்கிறார்களே என்ன அது?

சிவன் வழி செல்பவர்களை சைவம் என்கிறோம். பெருமாளை துதிப்பவர்களை வைணவர் என்கிறோம்.

இதில் எந்த பிரிவில் ஆழமான நம்பிக்கை இருக்கிறதோ, அதன் அடிப்படையில்,  இறப்புக்கு பிறகு சிவலோகம் செல்வார் என்றும், வைகுண்டம் செல்வார் என்றும் சொல்வது வழக்கமாகி விட்டது.

சொற்கள் வேறாக இருந்தாலும் சொர்க்கம் என்பது ஒன்றுதான். அவர் கொண்ட  நம்பிக்கையின் அடிப்படையில் சிவன் அல்லது பெருமாளின் திவ்ய தரிசனம் பெற்ற பிறகு செல்லும் இடம் சொர்க்கம்.


சரி நாம் விஷயத்திற்கு  வருவோம்.  ஜெய விஜயர்கள் வைகுண்ட கதவை மூடினார்கள் இல்லையா? அதை கவனித்த திருமால் திருவாய் மலர்ந்து ஜெய விஜயர்களே... வைகுண்ட கதவை மூடியதின் காரணம் என்ன என்றார்.


ஐயனே.. கலியுகம் பிறந்து விட்டது. இனி புண்ணிய ஆத்மாக்களின் எண்ணிக்கை பூலோகத்தில் குறைந்து விடும். பாவாத்மாக்களின் எண்ணிக்கை பல்கி பெருகி விடும்.

பொய்யும் களவும், பூசலும் துவேசமும், ஏய்த்து பிழைப்பவர்களுமாய் மானிடர்கள் இருப்பார்கள். பதி தர்ம வழியில் இருந்து ஆணும் பெண்ணும் மாறுவார்கள். கொலை, கொள்ளை கூடிப்போகும்.

மக்களை நல்வழிப் படுத்த வேண்டிய அரச தர்மங்கள் அழியும். சட்ட திட்டங்கள் மீறப்படும். எனவே இங்கு யாரும் வரப்போவதில்லை. அதனால் வைகுண்ட கதவை மூடினோம்.

ஜெயவிஜயர்களே.. கலியுகத்தில் சுயநலம் பெருகும் என்றாலும் பக்தியும் பெருகும்.

வாழ்க்கையில்  விரக்தி கொண்டோருக்கு பற்றிக்கொள்ள  பக்தி ஒன்றே வழி.  அப்படி பக்தி செலுத்துவோருக்கு முக்தி கிடைக்க மார்கழி மாதம்  வளர்பிறை ஏகாதசி அன்று என்னை சேவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வைகுண்ட பதவி நிச்சயம் உண்டு என்றார்.

வைணவ  புராணங்கள் வேறு சில தகவல்களையும் சொல்கிறது.


கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு  முன்பு வைகுண்டம் செல்வோர் யாரும் இல்லாததால் கதவுகள் மூடி   கிடந்ததாகவும், நம்மாழ்வாருக்காக கதவு திறக்கப்பட... எனக்கு மட்டும் திறந்தால் பத்தாது. என்னை தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைவருக்கும் இந்த கதவு திறக்கப் பட வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டினார் என்றும், அப்படி வேண்டிய நாள்தான் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி  திதி என்றும், அன்று தான் வைகுண்ட எகாதசியாக சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது என்றும் சொல்வார்கள்.


மாதத்தில் இரண்டு, வருடத்தில் 24 முதல் 25 ஏகாதசிகள் வரும். அதில் ஆனி மாதம் வரும் ஏகாதசியை சயன ஏகாதசி என்றும், அக்காலத்தில் திருமால் படுத்த நிலையிலும், கார்த்திகை மாதம் வரும் ஏகாதசியை உத்தான ஏகாதசி என்றும், அக்காலத்தில் பெருமாள் உட்கார்ந்த நிலையிலும், மார்க்கழி மாதம் வரும் ஏகாதசியில் நின்ற   நிலையிலும் பெருமாள்  அருள் புரிவார், அதற்கு  வைகுண்ட ஏகாதசி என்றும் பெயர். 


இந்நாளில் விரதம் இருந்து பெருமாளை சேவிப்பவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் நிச்சயம் உண்டு.

No comments:

Post a Comment