தன்னை சுற்றி உள்ள சூழ்நிலையை உணராதவன் தலைவனாக இருக்கும் தகுதி இருக்காது. இது அமெரிக்காவுக்கு பொருந்தும்.
பெரும் கடன் சுமை, வேலையில்லாத திண்டாட்டம், பொருளாதார பற்றாக்குறை இவற்றோடு போராடிக்கொண்டிருந்தாலும், இன்னும் உலக வல்லரசாக உலா வருகிறது என்றால் அதன் விழிப்புணர்வே காரணம்.
நான் பெரிய ஆள் என்றில்லாமல், பெரிய ஆளாக முயற்சிக்கும் நாடுகளை கண்காணிப்பதும், அவர்களை அடக்கிப்போட வழி தேடி காய்களை நகர்த்தி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதும் அமெரிக்காவிற்கு கை வந்த கலை.
அந்த திறமையும் ஆற்றலும் இந்திய தலைவர்களுக்கு இந்திராகாந்திக்கு பிறகு இல்லவே இல்லை.
இருந்திருந்தால் அண்டை நாடுகளுக்கு மத்தியில் அதிகாரம் செலுத்தும் நாடாக இந்தியா இருந்திருக்கும். இல்லையே.
இருக்கட்டும்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு அமெரிக்க பொருளாதார புலனாய்வு நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் 2030 ம் ஆண்டில் இந்தியா உலக பொருளாதார வல்லரசாக திகழுமாம். அதற்கான சாத்தியங்கள் அதிகம்.
இப்போது வெகு வேகமாக வளர்ந்து வரும் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிவிடும் என்று அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.
கேட்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால் நாடு இருக்கும் நிலையை பார்க்க சகிக்கலையே என்ன செய்வது.
பொருளாதார வளர்ச்சியை பற்றி பேசும்போது ஊழல் மலிந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இருக்கிறதே.. என்ன செய்ய?
நாட்டுக்காக, நாட்டு வளச்சிக்காக, எதிர்கால தேவைகளை புரிந்து கொண்டு அதற்கான திட்டங்களை தீட்டும் தலைவர்கள் யார் இருக்கிறார்கள். ?
வெள்ளைக்காரர்களை வெளியே அனுப்பி விட்டு கொள்ளைக்கார்களை ஆட்சியில் அமர்த்திய மாதிரி எங்கு பார்த்தாலும் ஊழல்,..ஊழல்...ஊழல்...!
கறைபடிந்த அரசுகளால் நம்மை கரைசேர்க்க முடியுமா?
சிலருக்கு மறந்து போயிருக்கலாம். அதை மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஓபாமா இந்தியா பற்றி ஒரு கருத்தை சொன்னார்.
அமெரிக்கா எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும். அமெரிக்காவோடு போட்டிபோடக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவை சொல்லலாம். மற்றநாடுகள் எல்லாம் அமெரிக்காவிற்கு அடுத்த இரண்டாம் இடத்தை பிடிக்க போட்டிப் போடும் போதும் போது, இந்தியா முதல் இடத்தின் மீதே குறி வைக்கிறது.
எதிர் காலத்தில் அதிக்கபடியான தொழில் நுட்ப வல்லுனர்களை இந்தியா உருவாக்கினால் மற்ற நாடுகள் போட்டி போட முடியாது.
இந்த விஷயத்தில் நாம் சீனாவை அலச்சியப் படுத்த முடியாது என்றாலும், அவர்களுக்கு வேறு விதமான பிரச்சனைகள் இருக்கிறது. இளைஞர்களை விட முதியவர்கள் எண்ணிக்கை அங்கு அதிகம் என்றார்.
இந்த கருத்தை ஒப்புக் கொள்வதுபோல், சமீபத்தில் ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் இதே போன்ற ஒரு கருத்தை சொன்னார்.
இந்தியாவில் 15 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை மட்டும் 30 கோடி பேர். இது பல நாட்டு மக்கள் தொகைக்கு சமம். இவர்கள் அனைவரும் படித்தவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உழைக்கும் அறிவான மனித சக்தியை வைத்திருக்கும் இந்தியா தான் எதிர் காலத்தில் மிகப் பெரிய சவால்.
ஒரு நாடு தன்னிறைவு பெற வேண்டுமானால், உள்நாட்டு கட்டமைப்பு உருவாக்கப் படாமல், உணவு உற்பத்தியை பெருக்காமல், எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யாமல், வேலைவாய்ப்பை அதிகப் படுத்தாமல், இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரிக்காமல் வல்லரசாக முடியாது.
இந்தியா வல்லரசாக வேண்டுமானால் நல்லரசுகள் வேண்டும். அணுசக்தியை பெருக்கிக் கொள்வதால் மட்டுமே வல்லரசு என்று சொல்லிக்கொள்ள முடியாது.
இன்னும் வறுமை கோட்டுக்கு கிழே வாழும் மக்களுக்கு நிரந்தர திட்டங்கள் தீட்டப்படவில்லை. பொருளாதார மேதைகள் சொல்லும் கருத்து என்ன தெரியுமா?
ஒரு நாட்டின் மொத்த வரவு செலவில் மூன்றில் ஒரு பங்கு கல்விக்காக செலவு செய்யவில்லை என்றால், சுகாதார வசதிக்களுக்காக செலவு செய்யப்படவில்லை என்றால், அந்த நாடு வளர்ச்சி பெற முடியாது என்கிறார்கள்.
இங்கே கல்விக்காக செலவழிக்கும் தொகையை விட, ஆயுதங்களுக்காக செலவாகும் தொகை அதிகம். குடிநீர் போக்குவரத்திற்காக செலவழிக்கும் தொகையைவிட, கமிஷன், லஞ்சத்திற்காக கைமாறும் தொகை அதிகம். இதுதான் யதார்த்த நிலை.
நம்நாட்டில் நுகர்வு சக்தி அதிகரிக்காமால் மக்கள் சுபிச்சம் பெற முடியாது. ஆனால் அதற்கான திட்டங்கள் என்ன?
வறுமையை ஒழிக்கவும், வேலை வாய்ப்பை பெருக்கவும் எடுக்கப்பட்ட ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் என்ன? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இந்தியாவின் பூர்வீக வரலாற்றை எடுத்து பார்த்தால் எத்தனையோ படையெடுப்புக்களை சந்தித்திருக்கிறது. சூறையாடல்கள் நடந்திருக்கிறது. எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு செல்வங்கள் நாட்டை விட்டு வெளியே போய் விட்டது.
தைமூர், மாலிக் கபூர், கஜினி முகமது, கோரி முகமது, போர்த்திக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், கிழக்கிந்திய கம்பனிகள் என்கிற வெள்ளைக்கார்கள் வரை சுரண்டிய செல்வங்கள் கணக்கில் அடங்கா.
ஆனாலும் இந்தியா வெட்ட வெட்ட துளிர்க்கும் சூரன் தலை மாதிரி தலை நிமிர்ந்து நிற்கிறது.
காரணம் இந்தியா கர்ம பூமி, இந்தியா தர்ம பூமி, தெய்வங்கள் பிறந்து வளர்ந்த பூமி. என்றும் நிமிர்ந்து நிற்கும்.
அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. இன்றல்ல...நாளை ..நாளை இல்லாவிட்டாலும் பிறிதொரு நாள், அல்லது சில வருடங்கள் கழித்து, பல வருடங்கள் கழித்து நல்ல தலைவர்கள் வருவார்கள். இந்தியா வல்லரசாகும். நம்பிக்கை இருக்கிறது.
No comments:
Post a Comment