Follow by Email

Monday, 24 December 2012

வதந்திகளுக்கு யார் பொறுப்பு?


ஒருவர் தன் நண்பரை பார்க்க சென்றிருந்தார். வந்த வேலை முடிந்தது. கிளம்பும்முன் அந்த நண்பரிடம் கேட்டார்..ஏம்பா... இப்படி வீட்டு ஓரத்திலே குப்பைகளை போட்டு வச்சிருக்கே. பாம்பு, பூச்சிகள் வந்து வந்து சேர்ந்திடும். உடனே அப்பறப்படுத்துன்னு சொன்னார். 

இதை காதில் வாங்கி கொண்டே ரோட்டில் போன ஒரு ஆசாமி டீ கடைக்கு போனார். அங்கே டீ குடித்துக்கொண்டே பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னார். 

நம்ம தெற்கு தெரு முனிசாமி வீட்டிலே மொரட்டு நாகப்பாம்பு வந்துடுச்சாம். ஆளுவச்சு தேடிக்கிட்டு தேடிகிட்டு இருக்காங்க என்றார். 

அந்த டீ குடித்துக் கொண்டிருந்த ஆசாமி தன் விட்டுக்கு போற வழியில் இன்னொரு நபரை பார்த்தார். 

அவரிடம் உனக்கு சேதி தெரியுமா? பழனியாண்டி மச்சான் முனுசாமி இருக்காருல்ல அவர் வீட்டுல பத்து  நாகப்பாம்பு  அடிச்சாங்களாம். அடிக்க அடிக்க வந்துகிட்டே இருந்திச்சாம். கேட்கவே பயமா இருக்குப்பா என்றார். 

இதை கேட்ட அந்த நபர் ...அடுத்து இரண்டு கிலோமிட்டார் துரம் சென்றதும் வேறு ஒருவரிடம் சொன்னார்... அடேய்.. முத்துபேட்டை  மாரியம்மன் கோவில் பக்கத்திலே இருக்கிற ஒரு வீட்டுலே  அஞ்சுதலை கருநாகம் படம் எடுத்து ஆடிச்சாம். அங்கே இதே பேச்சுதான். 

சாதாரண குப்பை கதை எப்படி ரெக்கை முளைத்து அஞ்சுதலை நாகமாக மாறியதோ,  அந்த மாதிரி இப்போதேல்லாம் பொய்யும் புரளியும் சர்வசாதாரணமாக உலாவருகிறது. 

யார் எதற்காக .. இப்படி புரளிகளை பரப்பி விடுகிறார்கள் என்றே தெரியவில்லை.

நீங்கள் அடிக்கடி சந்தித்த ஒரு அனுபவம் இருக்கும். வெங்கடாஜலபதி மகிமை என்ற பிட்டு நோட்டிஸ்.

ஒரு பக்தர் வெங்கடாஜலபதி   மகிமையால் தீராத நோய் தீர்ந்து  பூரண குணமானார். அதற்கு  நன்றி கடனாக பிட்டு நோட்டிஸ் போட்டு வெளியிட்டார்.

அந்த நோட்டிசை அவர் நண்பர் 1000 காப்பிகள் பிரிண்ட் செய்து மீண்டும் வெளியிட்டார். அவருக்கு இருந்த கடன் தொல்லை ஒழிந்தது.

நீங்களும் 1000 பிரிண்ட் போட்டு இந்த மகிமையை வெளியிட்டால் உங்கள் பிரச்சனைகள் தீரும்.

இதை ஏளனமாக பேசிய ஒருவர் கார் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் உள்ளார்..... இப்படி பொய் செய்திகளை தாங்கி வரும் துண்டு பிரசுரங்கள் மக்கள் மத்தியில் அவ்வப்போது உலாவரும்.


அப்படித்தான் இப்போது மாயன் காலண்டர் வந்தது. உலகம் அழியப்போகிறது என்ற திடுக்கிடும் செய்தியை தாங்கியபடி.

முன்பெல்லாம் இணையதளங்களில் வரும் செய்திகள் உண்மையாக இருக்கும் என்ற நிலை மாறி, இணையதளங்கள் என்றாலே புருடா செய்திகளை வெளியிடும் சாதனமாக மாறி விட்டது. 

பத்திரிகை, ரேடியோ, டெலிவிசன் மாதிரி செய்திகளை சொல்லும் இணையதளங்கள் கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்கும் ஒரு சென்சார் தேவையோ என்று யோசிக்க வைக்கிறது.

ஒரே செய்தி வேறு வேறு வரி வடிவங்களில் வரும்போது அட உண்மையாக இருக்குமோ என்று மக்கள் பீல் பண்ண ஆரம்பித்து விடுகிறார்கள். இதுதான் இந்த பொய் செய்திகளின் வெற்றி. 


அறிவியலை காரணம் காட்டி சிலர் அக்கப்போர் செய்கிறார்கள் என்றால், இன்னும் சிலர் ஆன்மிகத்தை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.

இந்த வருட பிறப்பு சரியில்லை. வருஷத்தின் நிறம் கருப்பாக இருப்பதால்,  ஆண்களுக்கு ஆகாத வருஷம். அதனால் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைக்க வேண்டும் என்று ஒரு குண்டு.

இது நல்லதங்காள் பிறந்த வருஷமாக இருப்பதால், அக்காள் தங்கை உள்ளவர்கள் தங்கள் அக்காள் தங்கைக்கு பச்சை கலர் சேலை எடுத்து தரவேண்டும்.  என்று ஒரு புது கரடி.

சிவன் நஞ்சுண்ட திதியில் புது மாதம் பிறந்திருப்பதால் பெண்களின் மாங்கல்யத்திற்கு  ஆபத்து.

அதனால் சுமங்கலி பெண்கள் மஞ்சள் சேலை உடுத்த வேண்டும் என்று கட்டளை.

இப்படி ஆயிரம் புரளிகள்  அவ்வப்போது வருகிறது. இதை உண்மை என்று நம்பும் ஒரு அப்பாவி கூட்டம், அதை அப்படியே  பின்பற்றுகிறது. அதனால் பலருக்கு பல வகையில்  லாபம்.


தங்கம் வாங்க சொல்லும் அட்சய திருதியிலேயே எனக்கு உடன்பாடு இல்லை.  எங்கேயும் இல்லாத செய்தி எப்படி இத்தனை பிரபலம் ஆனது என்றே தெரியவில்லை. இருந்தாலும் வாங்குவது தங்கம் தானே வாங்கட்டும் என்று மனம் சமாதானம் ஆகிறது.

நண்பர்களே எந்த செய்தியாக இருந்தாலும் உடனே நம்பி விடாதீர்கள். சிலர் தங்கள் சுய லாபத்திற்காகவும், வெறும் விளம்பர நோக்கத்திலும் வதந்திகளை பரப்புவதை  வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

என் புளுகு அவ்வளவுதான் என் அப்பன் புளுகு கப்பலில் வருது என்று சொன்ன மாதிரி எதையாவது உளறி கொட்டுகிறார்கள்.  அந்த செய்திகளை ஒதுக்கி தள்ளுங்கள்.

செய்தி ஊடகமாக திகழும் இணையதள நண்பர்களே இது போன்ற பரபரப்பு செய்திகளை வெளியிடும் முன், சரியான செய்தியா என்று உறுதிபடுத்திக்கொண்டு வெளியிடுங்கள்.

நாம் ஏமாற்றுகிறராகவும் இருக்க வேண்டாம். ஏமாறுகிறராகவும் இருக்க வேண்டாம்.


No comments:

Post a Comment