Follow by Email

Thursday, 6 December 2012

நீங்களும் நானும் கோவிந்தாவா?


குண்டும் இல்லாம, மருந்தும் இல்லாம வெடி சத்தம் கேட்ட மாதிரி, உயிரை உலுக்கும் ஒரு செய்தி உலா வருகிறது இணையதளங்களில். 

நாட்கள் நெருங்க நெருங்க.. இந்த பீதி செய்தியால்  பாதிக்க பட்ட பலர், உட்காரும் இடத்தில் முள் தைத்த மாதிரி, உண்மையா என்று கேட்டு பலரிடம் அபிப்பிராயம் கேட்கிறார்கள். 

என்னிடமும் கேட்டார் ஒருவர். ஏங்க.. உண்மையா டிசம்பரில்  உலகம் அழிஞ்சிடுமா?

இந்த செய்தி வெளிவர காரணமே மாயன் காலண்டர்தான். மெக்சிகோ பகுதியில் வாழ்ந்த மாயன் என்ற இனத்தவர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக ஒரு காலண்டர் முறையை பயன் படுத்தினார்கள். 

என்ன காரணத்தாலோ அந்த காலண்டர் 2012 டிசம்பரில் முற்று பெற்று விடுகிறது. ஒரு வேளை அந்த கணிதம் தெரிந்த ஆசாமி மண்டையை போட்டு விட்டாரோ என்னவோ. 

அதையே துருப்பு சீட்டாக கொண்டு புனை கதை எழுத்தாளர்கள் புகுந்து விளையாடி விட்டார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. 

நாஸ்ட்ரடாமஸ் அது சொன்னார் இது சொன்னார் என்று ஆளுக்கு ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்ட மாதிரி இந்த மாயன் காலண்டரும் பலரால் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 

செக்காரியா செட்சினி என்றால் யார் என்று தெரியுமா உங்களுக்கு.?

இவர் ஒரு கற்பனை எழுத்தாளர்.  சுமேரியர்களின் பழங்கால ஆவணங்களில் இருந்து தன் கதை களத்தை உருவாக்கியதாக ஒரு குண்டு போட்டு ஒரு நாவலை எழுதினார் ஆங்கிலத்தில்.

அதில் நிபிறு என்ற மிகப் பெரிய விண்கல் அல்லது கோல் ஓன்று பூமியை நோக்கி வரப்போகிறது என்கிறார்.

இது 3600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி பூமிக்கு பக்கத்தில் வருமாம். அப்படி வரும் போது, பூமி தாக்கப்பட்டு அழியும் என்று தன் கற்பனை கதையில் சுவாரசியம் கூட்டி இருந்தார்.

இதை பின்பற்றி பலரும்,  பார்த்திர்களா சுமேரியர்கள் வரலாறும் அப்படித்தான் சொல்கிறது தங்கள் கருத்துக்கு வலு சேர்த்தார்கள் பலர்.

சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், நாஸா விஞ்ஞானிகளே இதை ஒப்புக்கொள்கிறார்கள்  என்று புது நெருப்பை கொளுத்திப் போட்டார்கள்.


உண்மையில் நாஸா என்ன சொல்கிறது?

இது அறிவு பூர்வமாகவும் இல்லை. அறிவியல் பூர்வமாகவும் இல்லை என்று ஒதுக்கி தள்ளி விட்டது இந்த செய்தியை. 

என் அன்பு நண்பர்  மதிவாணன்  மக்கள் டி வியில் கூட இதை பற்றி அண்டம் பகுதில்கடந்த வாரம்  விவாதம் செய்யப்பட்டதாக சொன்னார்.

நான் பார்க்கவில்லை இந்த நிகழ்ச்சியை.  ஆனாலும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என்கிற மாதிரி கருத்து சொல்லப்பட்டது என்றார்.

ஆனால் அவரே பிரம்மாவின்  ஆயுள் காலம்  முடியும் போதுதான் பிரளயம் ஏற்ப்படும். அந்த மகாபிரலயம் ஏற்படும் போது உலகம் அழியும். அதுதான் கலியுகத்தின் முடிவு. இதுதான் வேதங்கள் சொல்லும் தகவல் என்கிறார்.

அதற்கு இன்னும் 450 கோடி ஆண்டுகள் இருக்கிறது என்று அவரே சொல்கிறார். இது நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்படும் வாதம் என்றே வைத்து கொள்ளலாம்.

ஏனென்றால் பூமியின் தலைவிதி  பிரம்மாவின் கையில் இல்லை. அணுகுண்டு வைத்திருக்கும் நாட்டு தலைவர்களிடம் இருக்கிறது என்பதுதான்  உண்மை.

போகட்டும்.

உலகம் அழிகிறதோ இல்லையோ, உலகம் இருளில் முழக்கப் போகிறது என்கிறார்கள் இனையதளவாசிகள்.

அதாவது total blackout என்கிறார்கள் .டிசம்பர்  21 . 22 . 23 ஆகிய மூன்று  நாளும் உலகம் இருளாக இருக்குமாம். சூரிய ஒளி வராதாம்.

ஏன்.... இந்த சூரியனுக்கு என்ன கேடு என்கிறிர்களா?  இந்த குண்டு போடும் ஆசாமிகளைதான் கேட்க வேண்டும்.

இரவு பகல் என்பதே பூமியின் சுழற்சியால் எற்படுவதுதான்.  பூமி மூன்று நாள் முழு வேலை நிறுத்தம் செய்தால் மட்டுமே இது சாத்தியம். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது ஆராச்சியாளர்கள் கருத்து.

அல்லது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் திரை போட்ட மாதிரி ஏதாவது ஓன்று குறுக்கே வர வேண்டும். அப்படி பிரம்மாண்ட கோள்கள் எதுவும் இப்போது வரவே இல்லை. நிலைமை இப்படி இருக்க பூமி எப்படி இருளாக இருக்கும்.


ஜோதிட கருத்துக்கள் சொல்லும் பலருக்கும் கூட இந்த கால்குலேஷன் புரியவில்லை.

செவ்வாய், சனி போன்ற கிரகங்கள் தான் உலக பிரளயங்களுக்கு காரணம் என்பார்கள் அவர்கள். அப்படி ஒரு கூட்டணியும் ஜோதிட ரீதியாக ஏற்பட வில்லை.

ஆக மொத்தம் அதிசயமான ஊர்ல ஆம்பளை பிள்ளை பிறந்திச்சாம். தொப்பிள் கொடி அறுத்ததும் கப்பல் ஏறி போச்சுதாம் என்கிற கதையா உலா வருகிறது இந்த செய்தி.

ஒரு வேலை உண்மையா இருந்தால், நீங்களும் நானும் கோவிந்தாவா? என்றால் கொஞ்சம் பொறுங்கள் 24 ம் தேதி என்ன கட்டுரை எழுதலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறேன்.

ஓன்று மட்டும் நிச்சயம்.  அம்புலிமாமா கதைகள் தமிழில் மட்டும் இல்லை. உலக மொழிகள் பலவற்றிலும் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

No comments:

Post a Comment