Follow by Email

Sunday, 28 October 2012

பிதிர் தர்ப்பனம் அவசியமா?நான் ஹிந்துவா பிறந்ததில் பெருமைப்படுகிறேன். இங்கே இல்லாத விஷயம் இல்லை. சொல்லாத தர்ம நியதிகள் இல்லை.

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு உரிய வழிவகைகளை,  உலகிற்கு சொன்ன முதல் மதம்.... ஹிந்து மதம்.

ஆனாலும் சில விஷயங்கள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.  ஏற்றுக்கொள்ள இயலாதவையாக இருக்கிறது. இது தேவையா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது - ஒரு அன்பரின் வினா.

அப்படி என்னதான் சொல்லவருகிறார்?  அவரே தொடர்ந்து பேசுகிறார் கேளுங்கள்.

இந்த பிதிர் தர்ப்பணம் என்பது தேவைதானா?  இது அவசியமில்லாத வெற்று சுமையாக தெரிகிறது.

இல்லாத ஒருவருக்காக எதற்கு எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டும்? மோச்ச தீபம் ஏற்ற வேண்டும்? சொல்லுங்க!

நல்ல கேள்விதான். இந்த சந்தேகம் வந்ததின் காரணம் என்ன?

அப்பறம் என்னங்க.  மறுபிறவி என்பதிலேயே எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

சரி.. உண்மை என்று  வாதத்திற்காக வைத்து கொண்டாலும், அடுத்த கருத்து அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறதே.

என்ன?

பிறப்பும், பிறப்பிற்கு பின் இறப்பும், இறப்புக்கு பின் பிறப்பும் வருகிறது என்பது ஹிந்து தர்ம கொள்கை.

இது உண்மையானால் இறந்த பின் அவர் மறு பிறவி எடுத்து விடுகிறார். உடனே இல்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இது நிகழ்ந்து விடும்.

அப்படி இருக்க இந்த பிதிர் தர்ப்பணம் என்ற விஷயமே  அடிபட்டு போகிறதே.

இது அந்த அன்பருக்கு மட்டும் இல்லை. பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. அதனால் இதை பற்றி ஆராய்வோம்.


ஹிந்து மதத்தில் விஞ்சி நிற்பது விஞ்ஞானமா மெய்ஞானமா என்று பட்டிமன்றம் வைத்தால்,  தீர்ப்பு சொல்லும் நடுவர் திருதிருவென விழிக்க வேண்டிவரும். 

அதற்கும் காரணம் இருக்கிறது!

வேத ஆகமங்களாக இருந்தாலும் சரி, சடங்கு சம்பிரதாயங்களாக இருந்தாலும் சரி, பூஜை புனஸ்காரங்களாக இருந்தாலும் சரி, ஆராய்ந்து பார்த்தால் அறிவியல் என்னும் அஸ்த்திவாரத்தில் இருந்து எழுப்பப்பட்டதாக இருக்கும் ஹிந்து மதம்.

அன்று ஆன்மீகம், இன்று அது அறிவியல்.


உண்மையில்  அறிவியலை அடிப்படையாக கொண்டதுதான் ஹிந்துமதம்.  அதில் சொல்லப்பட்ட  மறுபிறவி என்பதிலேயே எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு என்கிறார் நண்பர்.

அவர் சிந்தனைக்கு ஒரு கேள்வி. அங்கொன்றும், இங்கொன்றும்மாக, முன் பிறவி நினைவுகளை பற்றி பேசுகிறார்கள் என்கிற செய்தி ஊடகங்களில் வந்ததே, வருகிறதே தெரியுமா? இதை கூட மனச்சிதைவு என்று ஒதுக்கி விட்டாலும், நமக்கே பல அனுபவங்கள் வரும்.


நாம்  ஒருவரை பார்த்திருக்க மாட்டோம், பேசியிருக்க மாட்டோம், பழகியிருக்க மாட்டோம், ஆனால் பார்த்த அந்த கணத்தில் உள்மனம் சொல்லும்...! இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று.

சில இடங்களுக்கு வாழ்நாளில் முதல் தடவையாக போவோம். ஆனால் பல நாள் பார்த்து ரசித்த இடம் மாதிரி, வாழ்ந்த இடம் மாதிரி, ஒரு நினைவு வருகிறதே பலருக்கு ஏன்?

அப்படியானால் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களுக்கும், அதுவரை பார்த்திராத இடங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அதுதான்  முன்பிறவியா?

யோசித்து பாருங்கள். ஒரு மனிதனுக்கு முன்பிறவி நினைவுகள்  பின்தொடர்ந்தே வருகிறது என்றால், அவரால் இயல்பாக வாழ முடியுமா? சந்தோஷமாக இருக்கமுடியுமா?

நார்க்கூட்டு சாலையில் நான்கு சிக்னல்களும் பச்சையாக எறிந்த மாதிரி ஒரு குழப்பம் வந்து விடாதா? அதனால் தான்  நம் முன்  பிறவி நினைவுக்கு முற்று புள்ளி விழுந்து விடுகிறது.

ஆனால் பிறந்த குழந்தைக்கு ஒரு வயது வரை முன் ஜென்ம நினைவுகள் இருக்குமாம்.

அதனால்தான் தொட்டிலில் இருக்கும் குழந்தை தனக்குத்தானே சிரித்து கொள்கிறது, பழைய நினைவுகளை நினைத்து அழுகிறது என்கிறார்கள்.

அதே போல் பிறவி நினைவுகள் என்பது ஞானிகளுக்கு உண்டு, மகான்களுக்கு உண்டு, ரிஷிகளுக்கு உண்டு, சித்தர்களுக்கு உண்டு.  காரணம் அவர்கள் பற்றற்றவர்கள்.

நாம் மனிதர்கள். பந்த பாசத்தில் உழல்கிறோம், ஆசைகளில் வாழ்கிறோம்.

சரி.. நண்பரின் கேள்விக்கு விடை தேடும் முன் சிறு விளக்கம். தர்ப்பனம் செய்வதின் நோக்கம் என்ன?

விந்து விழுந்த நேரத்தில் வந்துதித்த வாழ்க்கை. பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்க்கையின் இறுதியில் மரணதேவன் கவர்ந்து செல்கிறான்.

அத்துடன் பூலோக வாழ்க்கை நிறைவு பெறுகிறது. அதன் பின் வேறு லோக வாழக்கை ஆரம்பம் ஆகிறது. அப்படித்தான் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

அவரை விதைத்தால் அவரை, துவரை  விதைத்தால் துவரையை அறுவடை செய்வது போல், எப்படி வாழ்ந்தோமோ... அதற்கு தகுந்த பலனை பெறுகிற பயணம்.

குற்றம் செய்யும் போது கடவுள் உன்னை பார்க்கிறார்,  தண்டனை பெறும்போது கடவுளை நீ பார்க்கிறாய் என்று சொல்லும் தர்மசாஸ்திர நியதிகளை உறுதிப்படுத்தும் பயணம்.

கருடபுராணம் சொல்கிறது.

உடலில் இருந்து உயிர் பிரிகிறது. பிரிந்த உயிரை எமகிங்கர்கள் கவர்ந்து செல்கிறார்கள் எமபட்டினத்திற்கு.

போகும்பாதை என்பது நல்லவர்களுக்கு துன்பம் இல்லாமலும், தீயவர்களுக்கு பாதை கடினமாகவும் இருக்குமாம்.

இதில் உச்சகட்டமாக வைதரணி என்ற நதியை கடக்க வேண்டிவரும். இங்கும் அவரவர் கர்ம வினை படி கடந்து செல்ல வேண்டிவரும்.இந்த பாதையை, நதியை கடந்து செல்ல பல மாதங்கள் ஆகுமாம்.

இந்த பாதையை கடந்து செல்லும் போது பெரும் துன்பம் வரக்கூடாது. அவர்கள் வாழ்நாளில் செய்த எந்த பாவமாக இருந்தாலும், அதற்கு பரிகாரம் தர வேண்டும் என்பதற்காகவே கரும காரியங்கள் செய்யப்படுகிறது.

எட்டு, பதினாறு அல்லது கருமாதி.

நாம் விஷயத்திற்கு  வருவோம்.  இவருக்கு மறுஜென்மம் ஏற்படுகிறது. சிலருக்கு சற்று தாமதமாகலாம்.

எப்படி இருப்பினும் அவரது வழிதோன்றல்கள் வருடம் தோறும் தர்ப்பனம் செய்கிறார்கள். அதனால் அவர்களின் பாவக்கணக்கு குறைக்கப்படுகிறது என்கிறது ஹிந்து மதம்.

இது எப்படி சாத்தியம். மறுபிறவி எடுத்து விட்டாதாக வைத்து கொண்டால் தர்ப்பனம் செய்வதற்கான அவசியம் இருக்காதே?

இருக்கு. அவசியம் இருக்கு. அமெரிக்காவில் இருக்கும் மகனுக்காக அம்பத்தூரில் இருக்கும் அவரது அம்மா கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்கிறார். அப்படி செய்வதின் பலன் அமெரிக்காவில் இருப்பவருக்கு  போய் சேர்கிறதா இல்லையா?

அதுதானே நம்பிக்கை.

அதை போலத்தான்.  நாம் இப்போது எடுத்திருப்பது மறு பிறவியாக இருந்தாலும், நம் முன் பிறவி வழிதோன்றல்கள் எங்காவது இருந்து, நமக்காக தர்ப்பனம் செய்தால், அந்த பலன் நம்மை வந்து சேரும்.

அதனால் நம் கடந்தகால பாவங்கள் குறைந்து, இப்பிறவியின் நன்மை அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. அதனால் தர்ப்பனம் செய்யுங்கள்.  சரியா?

1 comment:

  1. விளக்கமான தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete