ஒரு உண்மை சம்பவம்.
கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்தசாரதி மைந்தனே
உனை பார்க்கவேண்டியே தவமிருந்து
- என்று பக்தி பரவசத்தில் தன்னை மறந்து பாட்டு பாடியபடி காட்டு வழி பாதையில் நடக்கிறது ஒரு ஐயப்ப பக்தர் கூட்டம்.
அதில் ஒரு பக்தர் தன தூக்கு பையில் இருந்து குளிர் பானத்தை எடுத்து குடிக்கிறார். அருகில் இருந்த ஐயப்ப பக்தருக்கும் அதேபோல தாகம்.
சுவாமி..எனக்கும் தாகமாக இருக்கிறது. கொஞ்சம் கொடுங்களேன் என்று வாய் விட்டே கேட்டுவிட்டார்.
அப்போது முதல் சாமிக்கு முகம் மாறிவிட்டது. சேரியில் பிறந்த உன்னை சேர்த்து அழைச்சுகிட்டு வந்ததே பெரிசு.
இதில் சாப்பிடும் பொருளையும் உனக்கு கொடுக்க வேண்டுமா? இப்படித்தான் அவர் என்ன ஓட்டமும் இருந்தது.
அவர் சொன்னார்..... உங்களுக்கு வேன்னும்னா வாங்கிகிட்டு வந்திருக்கணும் என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லி விட்டு நடந்தார்.
கொஞ்ச தூரம் போனதும் குளிர்பானம் தரமறுத்த சுவாமிக்கு திடீர் வயிற்று வலி.
தலைமை ஏற்று சென்ற குருசாமியை அணுகி, சுவாமி...வயிற்றை கலக்குது. நான் ஓரமாய் ஒதுங்கனும் என்றார்.
சுவாமி... இது காட்டுவழிப்பதை. கைகால் அலச தண்ணீர் இருக்காது. இன்னும் கொஞ்சதூரம் போனால் அருவிகள் இருக்கு. அங்கே ஒதுங்கலாம் என்றார் குருசாமி.
ஐயோ.. என் நிலைமை தெரியாமல் பேசுறீங்க என்றவர் குருசாமியின் பதிலுக்கு கூட காத்திராமல் காட்டுக்குள் ஒதுங்கினார்.
கடைசியில் என்னவாயிற்று தெரியுமா?
தாகம் என்று கேட்டவருக்கு தர மறுத்த குளிர்பானத்தால் கால் கழுவ வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது.
இது ஐயப்ப மகிமைதான்.இதில் சந்தேகமில்லை.
இதில் உணர்த்தப்பட்டது என்ன?
உணர்ந்து கொண்டது என்ன? என்பதுதான் கேள்வி.உண்மையான தெய்வதத்துவத்தை உணர்ந்தவர்கள் ஜாதிபாகுபாடுகள் பார்ப்பதில்லை.
தனக்கு முன்னால் வணங்கி நிற்பவன் எந்த குலத்தை சேர்ந்தவன் என்று எந்த தெய்வமும் ஆராய்ச்சியில் இறங்குவதில்லை.
அது அந்தணரா? செட்டியாரா? ரெட்டியாரா? யாராக இருந்தாலும் ஒன்றாக பார்க்கும் உயரிய குணம்தான், தெய்வகுணம்.
வேடுவகுல கண்ணப்பன் விரும்பி மாமிசம் படைத்த போது, ஏற்றுக்கொண்டு அவனை ஆட்கொண்டவர் சிவபெருமான்.
ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த நந்தன் சிவனை தரிசித்த போது நந்தி மறைக்கிறது என்று வருந்தினாராம்.
உடனே சிவபெருமான் நந்தியை நகர சொல்லி நந்தனுக்கு காட்சி அளித்ததாய் நந்தன் சரிதம் சொல்கிறது.
சேக்கிழாரின் பெரிய புராணம் ஒரு சமத்துவ பக்தி நூல்.
மெய்யான பக்தியை செலுத்தினால் கடவுளின் கருணை கட்டாயம் கிட்டும் என்பதை உணர்த்துகிறது பலரது வாழ்க்கை வரலாறு.
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் மன்னரும் உண்டு, சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களும் உண்டு.
போகட்டும். நம் கேள்வி இதுதான்.
ஆதிகாலம் தொட்டே ஜாதி துவேஷங்கள் எழுகிறதே ஏன்?
எந்த மதத்திலும் இல்லாத வேற்றுமைகள் இந்து மதத்தில் இருப்பதின் மர்மம் என்ன?
இதோ தமிழருவி மணியன் சொல்கிறார்... கேட்போம்.
வேத உபநிடங்களை நான் சாதாரணமாக கருதிவிட முடியாது. வேதங்களில் முதல் வேதமான ரிக்வேதத்திலேயே ஞான தேடல் தொடக்கி விடுகிறது.
உலகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள மனிதர்கள் சிந்திக்க தொடங்கும் முன்பே இங்கே உள்ளவர்கள், ஞான பாதையில் நடையை துவக்கி, அதன் சிகரத்தை நோக்கி செல்ல தொடங்கி விட்டார்கள் என்பதற்கு சாட்சியாக இருப்பது ரிக்வேதம்.
அந்த ரிக்வேதத்தின் பத்தாவது பகுதியில் கேள்விகளாலேயே ஒரு வேள்வி நடத்தபட்டிருப்பதை காணும் போது ஆச்சிரியமாக இருக்கிறது.
எப்படிப்பட்ட கேள்விகள்?
இன்று அறிவியல் பெரிய விஸ்வருபம் கொண்ட பின்பும், எந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தினறிக்கொன்டிருக்கிறதோ, எந்த கேள்விக்கு விடை காண முடியாமல் திண்டாடி கொண்டிருக்கிறதோ அந்த கேள்விகள்.
அந்த கேள்விகள் அந்த காலத்திலேயே ரிக் வேதத்தில் எழுப்பட்டிருக்கிறது.
பிறப்புக்கு முன் இருந்தது என்ன?
இறப்புக்கு பின் இருக்கப்போவது என்ன?
இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? இதை உருவாக்கிய ஒருவன் இருக்கிறானா?
அப்படியானால் அவன் எங்கே இருக்கிறான்?
இப்படி எல்லாம் பல்வேறு வினாக்களை தொடுக்கிறது ரிக் வேதம்.
இன்றைக்கு கூட அறிவாளிகள் இதயத்தை எல்லாம் அரித்து கொண்டிருக்கும் கேள்விகள் இவை.
இந்த கேள்வியை உலகின் மற்ற பகுதிகளில் எல்லாம், அறிவு வெளிச்சம் அறவே எட்டிப் பார்க்காத தருணத்தில் இந்திய மண்ணில் தோன்றிய ரிக் வேதம் எழுப்பி இருக்கிறது.
ஆனால் இத்தகைய ரிக் வேதத்தில் தான், வருணாசிரம தருமத்தின் முதல் வித்து ஊன்றப் பட்டிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எந்த ரிக் வேதத்தில் மனிதனை தேவநிலைக்கு உயர்த்தும் விஷயம் சொல்லப்பட்டு இருக்கிறதோ, அதே ரிக் வேதத்தில் தான் மனிதனை மிருக நிலைக்கு தள்ளப்போகும் விஷயம் என்று தெரியாமல் முதல் பிரிவினை வாதமும் வைக்கப்பட்டு இருக்கிறது.
உலகை படைத்ததாக சொல்லும் பிரம்மனை ஒரு ராட்ச்சச வடிவினனாக உருவகபடுத்தி காட்டும் ரிக் வேதம், அந்த பிரம்மனின் தலையில் இருந்து பிராமணன் பிறந்தான் என்று பேசுகிறது.
சத்திரியர்கள் பிரமனது தோளில் இருந்து பிறந்ததாக சொல்கிறது.
வைசியர்கள் அவனது தொடையில் இருந்து பிறந்ததாக வகைப் படுத்துகிறது.
சூத்திரர்கள் அவனது பாதத்தில் இருந்து படைக்க பட்டதாக ரிக் வேதம் சொல்கிறது.
இப்படி உரைப்பத்தின் மூலம் பிறப்பின் அடிப்படையில் பேதத்தை கற்பிப்பதற்கான சாத்திய கூறுகளை உருவகப்படுத்தி கொடுக்கிறது.
பின்னால் வந்த மனுவால் அது ஊதி பெரிதாக்கபட்டது.
சின்னபொறிதான் காட்டு தீய்க்கு காரணமாக அமைகிறது.
சூரியனின் மகனான கர்ணனை, இந்திரனால் உற்பத்தியான அர்ச்சுனன் இகழ்கிறான். அனைத்தும் அறிந்த கிருபர் அரங்கம் அதிர கேட்கிறார்.
கர்ணா ...அர்ச்சுனன் குந்தியின் இளைய குமரன். பாண்டு புத்திரன். கௌரவ குலத்தை சேர்ந்தவன். அவன் உன்னோடு யுத்தம் செய்ய காத்திருக்கிறான்.
ஆனால் அதற்கு முன் நீ எந்த ராஜ்ஜியத்தின் அதிபதி என்பதை அறிவிப்பாயாக. உன் குலத்தை அறிந்து கொண்ட பிறகுதான் அர்ச்சுனன் உன்னோடு யுத்தம் செய்ய முடியும்.
பெருமையற்ற பரம்பரையில் வந்தவர்களோடு அரசகுமாரர்கள் சரிசமமாக நின்று யுத்தம் செய்வதில்லை.
ஆகையால் உன்னை முறையாக அறிமுகம் செய்து கொள் என்று கேட்டாரே, அப்போதே ஏற்றதாழ்வுகள் இருந்திருக்கிறது என்பதின் அடையாளம்.
பின்னர் பீமன் ஏளனமாக சிரித்து கர்ணா..தேரோட்டியின் மகனே... அரசகுமாரனான அர்ச்சுனனோடு யுத்தம் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கிறது.
உன் குலத்திற்கு தக்கபடி கையில் சாட்டையை பிடித்து கொள். வில்லை கிழே போடு. உன்னை அர்ச்சுனன் யுத்தத்தில் கொல்ல மாட்டான்.
வேள்வி தீயில் சேர்க்கும் பொருளை உண்ண நாய் தகுதி அற்றது என்று இகழ்ந்த போதே, உயர்வு தாழ்வு புரையோடி கிடந்திருக்கிறது என்பது புலனாகிறது.
அதாவது .... உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருந்திருக்கிறது. அரசன், சாதாரண குடிமகன் என்ற பாகுபாடு. ஜாதிகள் இல்லை.
ஆனால் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டவை பின்னால் திரிக்க பட்டிருக்கிறது என்பதே உண்மை.
ஒரு நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்க வேண்டுமானால் நான்கு துறைகள் நல்லவிதமாக இருக்க வேண்டும்.
ஓன்று ஆன்மிக துறை.
இரண்டு நாட்டின் பாதுகாப்பு.
மூன்றாவது ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வாணிபம்.
நான்காவது தொழில்களை இயக்கும் தொழிலாளர்கள்.
ரிக் வேதம் பிரித்தது இதுவாகத்தான் இருக்கும். ஆன்மீக துறை பிராமணர்கள் வசமும், அரசியல் மற்றும் பாதுகாப்பு சத்திரியர்கள் புறமும், வாணிபத்தை வைசியர்களும், தொழில்களை இயக்கும் தொழிலாளர் கட்டமைப்பை சூத்திரர்களும் கையாள வேண்டும்.
இன்னும் விரிவாக சொல்லப்போனால் நம்பிக்கை, நாணயம், நல்லொழுக்கம், கருணை மிக்கவர்கள் பிராமணர்கள் என்றும், அவர்கள் அப்படித்தான் வாழவேண்டும் என்ற நியதிகளை ஏற்ப்படுத்தி, அவர்கள் ஆன்மீக பணிக்கு சிறந்தவர்கள் என்று தீர்மானிக்கப் பட்டது.
போர்த்திறன் கொண்டவர்கள், நிர்வாக திறன் கொண்டவர்கள், பலதரப்பு மனிதர்களை அரவணைத்து செல்லும் ஆற்றல் மிக்கவர்கள் சத்திரியர்கள் என்றும், அவர்களே ஆட்சி செலுத்த உரிமை உள்ளவர்கள் என்றும் முடிவானது.
பொருளீட்டல், வாணிபம், செல்வம் சேர்க்கும் ஆற்றல் மிக்கவர்கள் வைசியர் என்றும் வகைப்படுத்தப்பட்டது.
இறுதியாக தொழில்களை இயக்கும் தொழிலாளர்கள் சூத்திரர் என்றும் முடிவானது.
இது சமுதாய கட்டமைப்புக்காக ஏற்ப்படுத்தப்பட்ட முறையே தவிர ஏற்ற தாழ்வுகளை உருவாக்க அல்ல.
நாளடைவில் இந்த கட்டுபாடுகளை மீறுவோர், சட்டதிட்டங்களை புறக்கணிப்போர், அந்தந்த பிரிவுகளில் இருந்து ஒதுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
தண்டனை கடுமையாகவே அமுல் படுத்தப்பட்டது. ஒதுக்கப்பட்டவர்களோடு மற்றவர்கள் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது. ஊருக்குள் வரக்கூடாது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இதுதான் நாளடைவில் பகைமையாக மாறி, ஒதுக்கப்பட்டவன், தாழ்ந்தவன், தீண்டத்தகாதவன் என்றெல்லாம் பெயரை சூட்டி, அவர் சார்ந்த சமூகம் மற்றவரால் புறக்கணிக்க பட்டது.
அப்படி புறக்கணிக்க பட்டவர்கள் தங்களுக்குள் சிறு சிறு குழுக்களை ஏற்படுத்தி கொண்டார்கள் அதுதான் ஜாதி என்கிற வர்ணபேதம்.
No comments:
Post a Comment