ஞான புலம்பல்!
சங்கரர் ஒரு சமயம் தன் சீடர்களுடன் மேற்கு திசை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்.
ஸ்ரீவல்லி என்ற கிராமத்திற்கு சங்கரர் சென்ற போது, அங்கு வசித்து வந்த பிரபாகர் என்ற பிராமணர் தன் 13 வயது மகனை அழைத்து கொண்டு சென்று சங்கரரை வணங்கினார்.
சுவாமி.. இவன் சிறு வயது முதல் பேசவராதவனாய், எதிலும் நாட்டம் இல்லாதவனாய் இருக்கிறான் என்று கலங்கி நின்றார். சங்கரர் அந்த சிறுவனை அணைத்துக் கொண்டார்.
குழந்தையாய் நீ யார்? யாருடைய மைந்தன், நீ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய்? என்று கேள்விகளை எழுப்பினார்.
அப்போது அந்த சிறுவன் சங்கரரிடம் தன்னை பற்றி சில சுலோகங்களை வடமொழியில் சொல்கிறான்.
நான் மனிதன் அல்ல. தேவனோ, யச்சனோ, அந்தனனோ,அரசனோ அல்ல.
நான் பிரம்மச்சாரியும் இல்லை. கிரகஸ்த்தணும் இல்லை. பாலபிரயத்தனும் இல்லை.கிழவனும் இல்லை. ஒட்டு மொத்த சன்யாசியும் இல்லை.
யார் ஒருவனும் இல்லை. அல்லேன், நான் ஞான சொருபமானவன் என்று அச்சிறுவன் பதில் சொல்கிறான்.
மண்ணாலான பல பானைகளில் உள்ள நீரில், பல பிரதி பிம்பங்களாக சூரியன் காணப்பட்டாலும் எல்லாம் ஒரே சூரியன்தான்.
அது போல பல சரீரங்களில் உள்ள பல்வேறு ஜீவர்களாக பிரகாசித்த போதும் அவை அனைத்தும் ஒரே விஷயம்தான்.
இப்படிப்பட்ட ஒருவனாக எவன் சுடர் விட்டு பிரகாசிக்கின்ற ஆன்மாவாக இருக்கிறானோ.... அந்த ஆன்மா நான்.
நான் இன்னது, இவள் இன்னது, அது இன்னது என்ற பிரிவு அபத்தம். ஒன்றே பல விஷயங்களாக இந்த உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. அதுவே வெவ்வேறு வித ரூபமாக இருக்கிறது.
அப்படிப்பட்ட ரூபமாக நான் இருக்கிறேன் என்பதை ஒருவன் புரிந்து கொண்டால், அவன் மற்றவரை எப்படி அணுகுவான்?
அவருக்கும் மற்றவருக்கும் என்ன வேற்றுமை, எல்லா வேற்றுமைகளையும் உடைத்து எரிந்து விட்டு எல்லாமுமாக ஒருவன் பிரகாசிக்க முடியும் என்றால், அந்த ஆன்மா நான்.
மேலே இருக்கும் சந்திரன் காற்றில் அசையும் அலைகளால் ஆடுவது போல் இருக்கும். ஆனால் சந்திரனா ஆடுகிறான்.
இல்லை இது கண் கொண்ட மயக்கம். இதே மயக்கம் தான் புத்திக்கும் இருக்கிறது.
புத்தி எதிரே இருப்பவர் அன்னியர் என்று நினைத்து கொள்கிறது. வேறு மதத்தவர், வேறு இனத்தவர், வேறு குலத்தவர் என்று நினைக்கிறது.
உயர்வு தாழ்வு என்றும் பிரித்து கொள்கிறது. இது புத்தியின் ஆட்டம். மாயையான பார்வை. ஆனால் எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிற அந்த விஷயம் பேதமற்றது.
அதுதான் உன்னிடத்திலும் சகல இடத்திலும் பரவி இருக்கிறது. இதை தெரிந்து கொண்ட ஆன்மா நான்.
சிறுவன் சொன்ன சுலோகங்களை பார்த்து தந்தை பிரமித்து விடுகிறார். புதல்வனை வெளிக்கொண்டு வந்த குருசங்கரரை பார்த்து கைக்கூப்பி கண்ணீர் மல்க நிற்கிறார்.
இவனை மகனாக அடைந்தது உங்கள் பாக்கியம். இவனால் உங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. இவன் என்னோடு இருக்கட்டும் என்று தன்னோடு அழைத்துக்கொண்டு போகிறார்.
சீடர்கள்.. சங்கரிடம் இந்த குழந்தை ஏன் இப்படி ஆயிற்று? ஏன் பேசாமல் இருந்தது என்று கேட்டனர்.
இந்த சிறுவன் குழந்தையாய் இருந்தபோது, இவனது தாய் கங்கையில் குளிக்கப்போனாள்.
அப்போது கரையில் இருந்த ஒரு சாதுவின் இடத்தில் இந்த குழந்தையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டு சென்றாள்.
கரையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, அந்த சாது பார்த்து கொண்டிருக்கும்போது தவறி கங்கையில் விழுந்து விட்டது. பதறிப்போன சாது ஓடிப்போய் குழந்தையை தூக்கினார். குழந்தையின் உடலில் உயிர் இல்லை.
சாது கலங்கிப்போனார். பெற்றவளுக்கு என்ன பதில் சொல்வது,என்ன செய்வது என்று தடுமாறிய சாது பெற்றவள் அழக்கூடாது என்று தீர்மானித்து, தன் உடம்பை விட்டு குழந்தையின் உடலுக்குள் புகுந்து கொண்டார்.
அந்த சாதுவே இந்த சிறுவன் என்று பதில் கூறினார் சங்கரர்.
சிறப்பான பகிர்வு சார்...
ReplyDeleteநன்றி...