Follow by Email

Sunday, 31 March 2013

ஆவதும் பெண்ணாலே...அழிவதும் பெண்ணாலே..!!


வனவாசம் முடிந்து திரும்பிய ராமருக்கு பட்டாபிழேக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. 

ஒவ்வொரு வீட்டிலும் குதூகலம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு வீட்டில் மட்டும் கவலை வந்து சப்பணமிட்டு அமர்ந்திருந்தது.

அது சொர்ணவல்லியின் இல்லம். வயது வந்த மகள், எட்டு வயது சிறுவனான மகன், சொர்ணவல்லியின் இல்லத்தில் இன்று அடுப்பில் உலை ஏறவும் இல்லை.அவ்வளவு வறுமை. 

அவளது கணவர் ஒரு மகரிஷி. தவம் செய்ய வனம் சென்றிருந்தவர் ஏழாண்டுகளுக்கு பிறகு இன்றுதான் திரும்பி வந்து களைப்போடு உறங்கி கொண்டிருக்கிறார்.

காய் கனிகளையாவது  பறித்து வா, உன் தந்தை பசியோடு இருக்கிறார் என்று மகனை அனுப்பி வைத்திருக்கிறாள். 

தண்ணீர் எடுக்க சென்ற மகள் மண்குடத்தை சுமந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறாள். சொர்ண விக்கிரம் போல் ஜொலிக்கும் குழந்தைகள் பாவம் பசியால் வெயிலில் வாடிய பயிர்கள் போல் கலைத்திருக்கிறார்கள். 

மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும். ஒரு போட்டு தங்கம் இல்லை. சொர்ணவள்ளி மனம் வருத்தத்தில் அழுகிறது.

சூரியகுல தோன்றலும், தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனுமான ஸ்ரீ ராமசந்திரருக்கு பட்டாபிழேகம் நடைபெறுவதை ஒட்டி, எள் தானம் செய்ய இருக்கிறார். உடன் தங்க கட்டியும் அளிக்கபடுகிறது. பெற விருப்பம் உள்ளவர்கள் தெரியப்படுத்தலாம் இது அரசு ஆணை ...அரசு ஆணை ...அரசு ஆணை.. முரசொலிப்பவன் முழங்கி கொண்டே போன சமயத்தில் சுய உணர்வுக்கு வந்தால் சொர்ண வள்ளி.

அவள் மனம் இப்போது முரசை போல் முழங்கி கொண்டிருந்தது. முனிவர் மெல்ல கண் விழித்தார். அவருக்கு பழங்களை பசிக்காக உன்ன வைத்து விட்டு மெதுவாக பேச்சு கொடுக்கிறாள் சொர்ணவள்ளி.

முரசொளிபவன் முரசு கொட்டி சொல்கிறான். ஸ்ரீ ராமர் எள் தானமும், உடன் தங்க கட்டியும் தருகிறாராம் என்று ஏக்கத்தோடு பார்க்கிறாள்.

அதற்கென்ன என்றபடி மனைவியை நோக்குகிறார் முனிவர்.

இல்லை .. நம் மகள் திருமணத்திற்கு தயாராக நிற்கிறாள். ஒரு குண்டு மணி தங்கம் கூட இல்லை.  அரசர் கொடுக்கும் தங்க கட்டியை வாங்கினால்....

அடிப்பாவி.... அதற்காக எள் தானத்தையா வாங்க சொல்கிறாய். எவ்வளவு பாவம் தெரியுமா அது. போரினால் ஏற்பட்ட உயிர் பலி பாவங்களை தீர்க்கவே ஸ்ரீராமர் எள் தானம் செய்கிறார்.

அதை யாரும் வாங்க மாட்டார்கள் என்பதால் தங்க கட்டியும் தருவதாக சொல்கிறார்கள்.

என் தவ வலிமையை இழந்து அந்த பாவங்களை என்னை சுமக்க சொல்கிறாயா? மகரிஷி என்ற புனிதம் இழந்து மாபாதகன் ஆக சொல்கிறாயா சீறுகிறார் முனிவர்.


இல்லை சுவாமி ..இல்லை... பதறுகிறாள் சொர்ண வள்ளி.

பின் எப்படி? எள்ளை மறுத்து தங்கத்தை  மட்டும் வாங்க முடியும்.

இல்லை சுவாமி நீங்கள் சம்மதித்தால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.
என்ன கூறுகிறாய்?

சுவாமி எள் தானத்தின் பாவத்தை தொலைப்போம். தங்கத்தின் பலனை அனுபவிப்போம்.

புரியும் படி சொல்.


சுவாமி ராமர் பரமார்த்த சொருபம் என்று சொல்கிறார்கள். சூரிய குல தோன்றலை தரிசித்தால் எப்பேர்பட்ட பாவமும் சூரியனை கண்ட பனி போல் விலகி விடாதோ?

சரி.

சுவாமி எள் தானம் வாங்கிய பின் வழங்கும் அவரது திரு முகத்தை பார்த்து விட்டால் பாவமெல்லாம் விளகிவிடாதோ? அதன் பின் தங்கம் நமக்கு கிட்டிடுமே. நம் மகளை திருமணம் செய்து கொடுத்துவிடலாமே.

சிங்கார முனிவருக்கு இதற்கு மனம் ஒப்பவில்லை. ஆனால் தளிர் கொடி போல். வளர்ந்து நிற்கும் மகளை பார்க்கும் போதெல்லாம் மனம் கடமையை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. மனதை தேற்றிக் கொண்டார்.

எள் தானம் வாங்க இசைவதாக அரண்மனை அதிகாரியிடம் தெரிவித்தார்.

வசிட்டரின் மனம் சிந்தனையில் மூழ்கியது. தவ முனிவர் எள் தானம் வாங்க சம்மதித்து விட்டாரா? சரி யார் வாங்கினால் என்ன? கண்டிப்பாய் எள் தானம் கொடுத்தே ஆக வேண்டும்.

யார் எள் தானம் வாங்குவது. சிங்கார முனிவரா? கேட்கிறார் ஸ்ரீராமர்.


ஆம் ஸ்ரீராமா... எள் தானம் வாங்கும் அளவிற்கு தரம் தாழ்ந்தவர் அல்ல அவர். ஆனாலும் வறுமை அவரை இதற்கு சம்மதிக்க வைத்து விட்டது என்று நினைக்கிறேன்.

சரி தங்கத்தை மட்டும் தந்து அவரது வறுமையை போக்கி விடுவோம். எள் தானத்திற்கு வேறு யாராவது வருவார்கள். அவர்களுக்கு எள்ளும் தங்கமும் அளித்து விடலாம்.

ஸ்ரீராமா...அவரை தவிர இது வரை யாரும் சம்மதிக்க வில்லை. ஆனாலும் தன் தவத்தின் பலனை இழந்து சிங்கார முனிவர் எள் தானம் வாங்க சம்மதிக்கிறார்  என்றால் இதில் யோசிப்பதற்கு ஏதோ இருக்கிறது. பார்ப்போம்.

தானம் வழங்கும் பொது பார்ப்போம் என்றார் வசிட்டர்.


தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கார முனிவர் தானம் பெற வருகிறார். குனிந்து ஸ்ரீராமரின் கையில் எள் தானம் பெற்று ஸ்ரீராமரின் முக தரிசனத்திற்காக நிமிர்கிறார்.

ஸ்ரீராமரின் திருமுகத்தை தரிசனம் செய்யும் முன் இருவருக்கும் இடையில் ஒரு திரை வந்து விழுகிறது. முனிவர் அதிர்ச்சி அடைகிறார்.

உடல் தள்ளாடுகிறது. பாவங்கள் சூழ்ந்து தவப்பயனை, தேஜசை இழந்து தடுமாறுகிறார்.

கணவர் தங்கத்துடன் வருவார் என்று ஆவலுடன் வீட்டு வாசலில் காத்திருக்கிறாள் சொர்ணவல்லி.  அரண்மனை வண்டி ஓன்று வந்து நிற்கிறது.

ஓட்டி வந்த சேவகன் கைதாங்களோடு முனிவரை இறக்குகிறான். தான போருகளையும் கொண்டுவந்து வீட்டில் வைக்கிறான்.

பொலிவிழந்த  கணவரின் உருவத்தை பார்த்து சொர்ணவல்லி திடுக்கிடுகிறாள்.கதறி அழுகிறாள்.  கணவரை கட்டிலில் படுக்க வைக்கிறாள்.

திகைத்தவாறே தந்தைக்கு சொம்பில் பால் கொண்டு வந்து தருகிறாள் மகள். பையன் தந்தையின் கால்களை பிடித்து விடுகிறான்.

என் ஆசையால் உங்கள் தவப்பயனையும் இழக்க செய்து பாவம் உங்களை சூழ்ந்து உங்கள் பொலிவிழந்து நிற்க செய்து விட்டேனே என்று கண்ணீர் வடிக்கிறாள் சொர்ண வள்ளி.

அழாதே சொர்ணவள்ளி. இது விதி. உழைக்காமல் பெரும் செல்வத்திற்கு ஆசை பட்டதால் வந்த வினை. நம் வறுமை இப்படி செயல்பட வைத்து விட்டது. இதில் யாரை நொந்து கொள்வது.

அப்போது தூரத்தில் முரசொலி கேட்டது. பட்டபிழேகம் செய்து கொண்ட ஸ்ரீராமர் ஊர்வலம் வருதாக அறிவித்தது முரசொலி.

சொர்ண வள்ளி யோசித்தால். அவள் முகம் திடீரென்று மலர்ந்தது. முதல் முரசொலியால் இழந்த மகிழ்ச்சி, இரண்டாவது முரசொலியால் கிடைத்து விடும் என்று நம்பினாள்.

சுவாமி எழுந்திருங்கள்.நமக்கு விடுவு காலம் வந்து கொண்டிருக்கிறது. என்று கணவனை தூக்கினாள்.  பிள்ளைகள் இருபுறமும் தாங்கி கொள்ள  முனிவர் வாசலில் இறங்கி வீதியில் நின்றார்.

பட்டாபிழேகம் முடிந்து மங்கள் முழக்கங்களுடன் பவனி வந்தார் அயோத்தி அரசர் ஸ்ரீராமர்.

கூட்டத்தை மெதுவாக விலக்கி மெதுவாக கணவனை முன்னே சொர்ண வள்ளி அழைத்து செல்ல, கண்குளிர ஸ்ரீராமனை தரிசித்தார் முனிவர். ராமா ராமா என்று மனம் நெகிழ்ந்தார்.

அன்பு பொங்கும் முகத்துடன் முனிவரை பார்த்தார் ஸ்ரீராமர். முனிவரின் உடல் புத்துயிர் பெற்றது. இழந்த பலம் மீண்டும் கிடைத்தது.

புத்திசாலி பெண் என்று வசிட்டரின் வாய் முணுமுணுத்தது.


--மதிவாணன் 

1 comment:

  1. அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete