Follow by Email

Saturday, 16 March 2013

பரதேசி திரை விமர்சனம்


வெள்ளையர்கள் ஆட்சியில் நம்மக்கள் விடுதலைக்காக போராடியது பற்றி நமக்கு தெரியும். அந்த காலகட்டத்தில் அன்றாட வாழ்க்கை நடத்தவே போராடிய நம் பாட்டன்கள் பற்றியும், அவர்கள் அறியாமையை, ஏழ்மையை பயன்படுத்தி எப்படி எல்லாம் மனித வள சுரண்டல்கள் நடந்தன என்பதை பற்றியும் கண்ணீர் கலந்த காவியத்தை படம் பிடித்து காட்டிருக்கிறார் பாலா.

1939 ல் சாலூர் என்ற தமிழக கிராமம்தான் கதைகளத்தின் துவக்கம். முன்பகுதியில் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் மனோநிலை, வாழ்க்கை சூழல், கலாச்சாரம், பழக்க வழக்கங்களை பற்றி தெளிந்த நீரோடையாய் பேசுகிறது படம். 

மிக எதார்த்தமான வசனங்கள்.  

அந்த கிராமத்தில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் முரசு அடித்து அறிவிக்கும் பாத்திரம் தான் அதர்வாவுக்கு. நான் தான் ராசா வந்திருக்கேன் என்று  கிராமத்து மக்களிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டாலும், ஓட்டுபொறுக்கி என்றுதான் அதர்வாவை அழைக்கிறது அந்த கிராமமே. 

ஊர் பெண்களிடம் வயது வித்தியாசம் இல்லாமல் முறை வைத்து அழைப்பதும், எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா வேலைகளையும் செய்து கொடுத்து விட்டு அந்த கிராமத்து மக்கள் தரும் அரிசியையும், பழைய சோற்றையும் கூலியாக  பெரும் பரதேசி வேடத்தில் வாழ்ந்திருக்கிறார் அதர்வா.

அதே கிராமத்தில் அங்கம்மாவாக வரும் துடுக்கு பெண் வேடம் வேதிகாவுக்கு.  அதர்வாவுக்கும், வேதியாவுக்கும் இடையில் காதல் வருவதும், வெளியில் தெரிந்து,  வீட்டுக்கு வீடு பொருக்கி திங்கிற நாயிக்கு என் பொண்ணு கேட்குதா என்று வேதிகாவின் அம்மா பஞ்சாயத்து கூட்டுவதும் எதார்த்தத்தின் உச்சம்.

அதர்வாவின் பாட்டியாக வந்திருக்கும் கூன கிழவி என்னமாய் பிரமாதபடுத்துகிறார்.  வேதிகாவுடன் காதல் வந்ததும், கனவு கண்டு புலம்பும் அதர்வாவிடம், ’எனக்கு கூட நீங்க ரெண்டு பேரும் பிச்சை எடுக்குற மாதிரி கனவு வந்தது’ என்று சொல்லுகிற காட்சியில் தியேட்டரே அதிருது. 

தன்ஷிகாவுக்கு நல்ல அழுத்தமான பாத்திரம். ஒரு கை குழந்தைக்கு தாயாக வரும் விதவை பெண் வேடம்.  அடாடா.

ஏழை மக்களின் வாழ்க்கையில் விளையாட விதி கங்காணி உருவத்தில் வருகிறது.

இங்கன கிடந்து கஞ்சிக்கு படாத பாடு படாதிங்க.  வேலைக்கு தக்கன கூலி. தங்குறதுக்கு வீடு, கூதலுக்கு கம்பளி, கறிச்சோறு, ஞாயிற்று கிழமையானா விடுப்பு என்று ஆசை வார்த்தை காட்டுவதும், அதை நம்பி அந்த கிராமத்து அப்பாவி மக்கள் பஞ்சம் பிழைக்க போவதும், அங்கு நடக்கப் போகும் விபரீதத்தை  வைரமுத்து ரத்தத்தால் எழுதியிருக்கிறார். 

செங்காடே ......... என துவங்கும் பாடலில் கங்காணி பேச்ச கேட்டு சனம் போகுதே, நண்டுகளை கூட்டிக்கொண்டு நரி போகுதே என்ற வரிகள் அங்கு நடக்க போகும் விபரீதத்தை சுளீரென்று உணர்த்துகிறது.  

48 நாட்களாய் நடந்து டீ எஸ்டேட்டுக்கு போகும் அந்த பயணம்,  அதனைத் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த ஒவ்வொரு நிமிடமும் நம்மை உலுக்கும் காட்சிகள்.

சரியான உணவு இல்லாமல், தங்குமிட வசதிகள் இல்லாமல் சங்கு ஊதினா வேலைக்கு புறப்பட்டு போகும் அடிமைகளாக நடத்தப்படும் கொடுமை கல் நெஞ்சையும் கரைய செய்யும்.

ஒரு வருட ஒப்பந்தம் முடிந்துவிட்ட நிலையில், ஊருக்கு போகலாம் என்று அப்பாவி  ஜனங்கள் சம்பளப்பணத்திற்காக கையேந்தி நிற்பதும், சட்டி பானை வாங்கியது,  கம்பளி,  சாப்பாட்டு செலவு, மருத்துவ செலவு, மந்திரவாதி தாயத்து கட்டியது    என பணத்தை எடுத்துக் கொண்டு, மிச்ச  கடனைத் தீர்க்க இன்னும் நீ பல வருஷம் வேலை செய்யணும்’னு அப்பாவி அடிமைகளிடம் கங்காணி செய்கிற சூழ்ச்சி கொடுமையின் உச்ச கட்டம்.

யாருமே எதிர்பாராத கிளைமாக்ஸ்.  சத்தியமா சொல்றேன் எனக்கு அழுகையே வந்துட்டு. 

பாடலில் மட்டும் அல்ல, பின்னணி இசையிலும் மிரட்டுகிறார் ஜி வி பிரகாஷ். 

வெள்ளைக்காரனை தவிர வெள்ளை சட்டை போட்டது கங்காணி தான் படத்தில். 

கிராமத்து பாத்திரங்களாக வரும் அத்தனை முகங்களும் இதுவரை தமிழ் சினிமா அறியாத முகங்கள். ஆனாலும்   வெகுளியான பாத்திரத்தில் வெளுத்து வாங்குகிறார்கள். 

கொத்தடிமைகள் வாழ்வில் விளக்கேற்ற வந்தவர்கள் போல வரும் டாக்டரும் அவர் மனைவியும் எப்படி சத்தமில்லாமல் மதம் மாற்ற முயல்கிறார்கள் என்பதை தெளிவாய் சொல்கிறது படம்.

இந்த படத்தில்  சில குறைகள் இருக்கிறது. ஆனால் அதை பற்றி எழுத மனம் இல்லை. 

வெல்டன் பாலா. தமிழ் சினிமாவை  உலக தரத்திற்கு கொண்டு சென்றதற்கு. விருது நிச்சயம். 

No comments:

Post a Comment