பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த, இளம்பெண் ஒருவரை, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில், வீட்டு வேலையாள் பணிக்கு சேர்த்து விடுவதாகக் கூறி, சிலர் அழைத்துச் சென்றனர். அங்கு உறுதி அளித்தபடி, வேலை தராமல், விபசாரத்தில் தள்ளினர்.
எப்படியோ, விபசார கும்பலிடமிருந்து தப்பி, சொந்த ஊர் திரும்பிய அந்தப் பெண், தன்னைப் போல, துபாய் மற்றும் ஷார்ஜாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அழைத்துச் செல்லப்பட்ட, கேரளாவைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், விபசாரத்தில் தள்ளப்பட்டு, கொடுமை அனுபவிப்பதாக தெரிவித்தார்.
அந்தப் பெண்களை விபசார கும்பலிடம் இருந்து மீட்டு, கேரளாவுக்கு அழைத்து வரும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, கேரள ஐகோர்ட்டில், அந்தப் பெண் மனு தாக்கல் செய்தார். - செய்தி
வறுமை, குடும்ப நிலவரம், எதிர்கால தேவைகள் இவற்றை கருத்தில் கொண்டு கடல் கடந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
தங்களுக்காகவும், தங்களை சார்ந்தவர்களுக்காவும் ஒளிமயமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள எந்த வேலையும் செய்ய தயாராக கடல் கடந்து வருகிறார்கள்.
இதில் குறை காண முடியாது. படித்தவர்கள், முறையான குடியுரிமை அனுமதி பெற்று நல்ல வேலையில் அமர்ந்து விடுகிறார்கள். படிக்காதவர்கள் நிலைதான் கேள்விக் குறியாகி விடுகிறது.
நல்ல வேலை கிடைக்காமல், 14 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்ய வேண்டிய நிலையிலும், பலருக்கு அந்த சம்பளமும் உரிய நேரத்தில் கிடைக்காமல் போவதும், அல்லது ஏமாற்றப் படுவதும் ஒரு தொடர்கதை.
இது ஆண்கள் நிலை. பெண்கள்?
படிப்பறிவு இல்லாமல் வீட்டு வேலைக்காக வரும் பெண்கள் பற்றிய கட்டுரை தான் இது.
சந்திப்பின் காரணம் ஜாதகம் பார்க்க.
ஒருவருக்கு வயது 40, மற்றவருக்கு வயது 26. இவர்கள் இருவரும் மயிலாடுதுறையை சேர்ந்தவர்கள்.
நாற்பது வயது பெண் ஹிந்து. இருபத்து ஆறு வயது பெண் முஸ்லிம். நான் ஜாதக பலனை சொல்லும் முன்பே நாற்ப்பது வயது பெண் பேச தொடங்கினார்.
நான் பத்து வருஷத்திற்கு முந்தி ஊர்ல ஒருத்தர்கிட்டே ஜாதகம் பார்த்தேன். அப்பவே சொன்னார். நீ பலா பழம். உன்னை சுத்தி ஈ மொய்க்கிற மாதிரி ஆம்பளைங்க மொய்ப்பாங்க அப்படின்னு.
இந்தாளு லூசு ஏதோ உளர்ரான்னு நினைச்சேன். அவரும் செத்து தெய்வமா போய்ட்டார். அவர் சொன்னது தான் இப்ப நடக்குது. நீங்களும் ஜாதகம் பார்த்தா கண்டுபிடிச்சுடுவீங்க.
இது உங்களுக்கு பிடிச்சிருக்கா?
பிடிக்கலைதான் என்ன செய்ய? குடும்பத்தை காப்பத்தனுமே.
ஊர்லேயும் இதேதானா?
சீ சீ... ஊர்ல எந்த தப்பும் செய்ய மாட்டேன். இங்கே வந்தாதான்.
இது நான் மலேசியா வர்றது மூனாவது முறை. முதல் முறை வந்தப்ப ஒரு ஹோட்டலில் வேலை செய்தேன். 600 வெள்ளி சம்பளம். பெரிசா ஒன்னும் சம்பாதிக்க முடியலை. ரெண்டு வருஷத்திலே ஊருக்கு போயிட்டேன்.
மறுபடி ஒரு வருஷம் கழிச்சு வந்தேன். அப்பத்தான் இந்த தொழிலுக்கு வந்தேன். நாலு வருஷம் இருந்தேன். என் ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். பெரிய வீடு கட்டினேன்.
இப்ப இது மூனாவது முறை. தொழில் நல்லாத்தான் போய்கிட்டு இருந்திச்சு. அரியலூர் காரி ஒருத்தி வந்தா. இங்கே இருக்கிற ரௌடி ரெண்டு பேரை கையில் வச்சுகிட்டு, நாங்க தொழிலுக்கு போற இடத்திற்கு போலிசை வரவச்சுடுரா. அதனால வெளியே போக முடியாம பயந்து சாகுறோம்.
இப்ப போலிஸ் கிட்டே மாட்டிக்குவோமா? நேரம் காலம் எப்படி இருக்கு?
ஜாதக பலன் சொல்வது ஒருபுறம் இருக்க, நம் ஊர் பெண்கள் இப்படி நாடு கடந்து வந்து நாசமாக போகிறார்களே என்று மனது வலித்தது. புத்திமதிகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை.
அடுத்து .....அவர்கள் சொல்லிய தகவல் தான் அதிர்ச்சியின் உச்சகட்டம்.
தமிழ் நாட்டில் இருந்தும், அதை விட அதிகமாக கேரளாவில் இருந்தும் தான், வீட்டு பணிப்பெண் என்ற போர்வையில் வந்து, வீடு எடுத்து தங்கி கொண்டு இந்த அவமான தொழிலை செய்கிறார்கள்.
( அவர்கள் தங்கி இருக்கும் பகுதியில் எந்த தப்பும் செய்ய மாட்டார்களாம். ஏதோ ஆபிஸ் வேலைக்கு போவது மாதிரி தொலை தூரத்திர்க்கு சென்றுதான் தங்கள் தொழிலை நடத்துவதாக சொல்கிறார்கள்)
அரசாங்கம் இதில் கவனிக்க வேண்டிய விஷயமே இதுதான். வெளி நாடுகளுக்கு செல்லும் பெண்கள் விசா நடைமுறை கடுமையாக்க பட வேண்டும்.
அதிலும் படிப்பறிவில்லாத இளம் பெண்கள் வீட்டு பணிப் பெண் வேலைக்காக செல்லும் நடைமுறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
அப்படி வரும் பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நாட்டின் மானத்தை நடுத்தெருவில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலர் சந்தர்ப்ப வசத்தால் ஏஜண்டுகளால் ஏமாற்றப் பட்டு இந்த இழி நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதயும் மறுப்பதற்கில்லை.
அரசு உடனடியாக இதை தடுப்பதற்கு போர்க்கால அடிபடையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்குமா?
No comments:
Post a Comment