வானம் பொழிகிறது, பூமி விளைகிறது மக்களுக்கு என்ன குறை என்கிற மாதிரி ராஜபக்ஷ்சே வசனம் பேசுகிறார்.
ஜெனிவா தீர்மானம் ஒரு தலைபச்சமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது, யுத்த நிறுத்தத்திற்கு பின் நடந்த புனரமைப்பு பற்றி அவர்கள் கருத்தில் கொள்ள வில்லை என்கிறார்.
முள்ளு கம்பிகளுக்கு பின்னால் முடங்கி போன தமிழர்கள் ஒரு புறம் இருக்க, தினம் தோறும் நடக்கும் ஆள் கடத்தல் தான் அதிகம் இலங்கையில். இதோ தொடர்கிறது கட்டுரை.
அரசே எங்கள் மகள் காணாமல் போனது எவ்வாறு... பதில் கூறு அரசே.... பதில் கூறு.., வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்... காணாமல் போவதும் அரசாலே.. கடத்திச் செல்வதும் அரசாலே.., குற்றம் செய்திருந்தால் கோட்டுக்கு கொண்டு வா.., எங்கள் பிள்ளைகளை மீண்டும் எங்களிடம் தா... தடுத்து வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடு.
எனது அப்பா எங்கே? அவரை பார்ப்பதற்கு அனுமதி தா.., அனுமதி தா..., எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தந்துவிடு... இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு...,எங்கள் வாழ்க்கை இன்னும் தெருவில் தானா!!! இனியாவது எங்களை நிம்மதியாக வாழவிடு. ..
இந்தப் புலம்பல்கள் எல்லாம் எதற்காகவென்று நினைக்கின்றீர்களா.... வோறொன்றும் இல்லை. காணாமல் போன உறவுகளின் உள்ளக் குமுறல்களே இவை.
ஆம், இன்னும் முற்றுப்புள்ளி பெறாத தொடர்கதையாக நீண்டுகொண்டிருக்கின்றன இந்தக் கடத்தல், காணாமல் போதல், கைது செய்தல் போன்ற மர்ம நிகழ்வுகள்.
இவற்றின் பின்னணியில் யார்?,
யார் இவற்றை செய்கின்றார்கள்?,
எதற்காக செய்கின்றார்கள்?,
தமிழர்களை மாத்திரம் குறிவைப்பது ஏன்?,
காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா?,
கைது செய்யப்பட்டு காணாமல் போனது எவ்வாறு?, கைது செய்யப்பட்டு உயிருடன் இருந்தால் ஏன் அவர்களை விடுதலை செய்யமுடியாது?
ஏன் அவர்களின் விபரங்களை வெளியிட முடியாது? என்ற கேள்விகள் இன்னமும் எம்முன் கேள்விக்குறிகளாகத்தான் இருக்கின்றன.
எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் இருந்தும் இந்த கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்காமல் இருப்பது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
இறந்தபின் தான் சுடுகாடு தெரியும் என்பார்கள், அந்த வகையில் தமது உறவை இழந்தவர்களுக்குத்தான் அதன் வலியும், வேதனையும் புரியும். இதை எப்படி எடுத்துச் சொன்னாலும் மனிதாபிமானம் இல்லாதவர்கள் புரிந்துகொள்ளவே மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.
கால காலமாக தலைநிமிர்ந்து நடந்த தமிழர்கள் இன்று காணாமல் போன தமது உறவுகளுக்காக நடுவீதிக்கு இறங்கி யார் யாரோ கால்களில் மண்டியிட்டு புலம்பி அழும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜனநாயகம், மனித உரிமை, சுதந்திரம் என அடித்தொண்டை கிழிய கத்தும் அரசியல்வாதிகள் இதனைக் கண்டும் காணாது இருப்பது ஏன்? அல்லது ஏதோ ஒரு பதிலைக் கூறிவிட்டு தம் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்?
ஆனால் எமது உறவு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கம் ஒன்றே காணாமல் போன உறவுகளுக்கு மீதமாகவுள்ளது.
இந்நிலையில் 2012இல் சர்வதேச செஞ்சிவைச் சங்கத்தின் அறிக்கையின்படி 12000 ற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
2012 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள் 5803 இதில் விதவைகள் 3713 என கணக்கிடப்பட்டுள்ளது.
'எந்தவொரு நாட்டிலும் அதன் எல்லைக்குள் சுதந்திரமாக பிரயாணம் செய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு." என அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தின் உறுப்புரை 13 இல் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நாட்டில் நடந்தேறும் கடத்தல், காணாமல் போதல், கைது என்பது மேற்கூறப்பட்ட உரிமைக்கு ஏட்டுச் சுரைக்காய் போன்றே உள்ளது.
முழத்துக்கு முழம் சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் சிவிலுடை தரித்த பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பு இவ்வாறான அதிஉயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் எவ்வாறு கடத்தப்படுகின்றனர் அல்லது காணாமல் போகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.
மனிதாபிமானம் பற்றி, மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புக்கள் செயற்பட்டாலும் இப்பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியாதுள்ளது. இதற்குக் காரணம் அன்றைக்கு மட்டும் கதறி அழுது விட்டு அதன் பின்னர் ஓரிரு நாட்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் நாம் பின்னர் அவை பற்றி சிந்திப்பதும் உரிய தரப்பினர் அதற்கு நடவடிக்கை எடுப்பதும் இல்லை.
கடந்த முப்பது வருடகாலமாக இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்திருக்கின்ற போதிலும் ஏன் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உள்ளது.
குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என்று பலர் பல காரணங்களுக்காக கடத்தப்படுகின்றனர், காணாமல் போகின்றனர்.
யுத்த காரணங்களுக்காகவும், அரசியல் நோக்கம் மற்றும் பாலியல் நோக்கத்திற்காகவும் பழிவாங்கல் நோக்கத்திற்காகவும் கப்பம் பெறும் நோக்கத்திற்காவும் கடத்தப்பட்டனர். தொடர்ந்து கடத்தப்பட்டுக்கொண்டும் இருக்கின்றனர்.
மேலும் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களும் காணமல் போயும் உள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்களில் சிலரின் தகவல்கள் பற்றிய தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
மேலும் சிலர் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சடலமாக பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும் சிலர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட, கைது செய்யப்பட்ட உறவுகளை மீளவும் தமக்கு ஒப்படைக்க அதன் உறவுகள் ஜனநாயக வழியில் போராட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டு காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி கொழும்பில் கடந்த 6ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வடபகுதியிலிருந்து புறப்பட்ட பெருமளவிலான பொதுமக்களும், காணாமல் போனோரின் உறவினர்களும் வவுனியாவில் திட்டமிட்டு பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டனர்.
வவுனியாவிலிருந்து பயணிக்கும் முதியோர்கள், பெற்றோர் மீது வழியில் தாக்குதல் நடத்தப்படலாம் என தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், இதனாலேயே கொழும்புக்கு செல்வதை அனுமதிக்கவில்லை என தெரிவித்த பொலிஸார் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் தான் இரவில் பயணம் செய்ய அவர்களை அனுமதிக்க முடியாது என கூறி கொட்டும் மழையில் வீதியிலேயே மறித்து வைத்தனர்.
கொழும்பு - விகாரமாதேவி பூங்காவில் காணாமல் போனோரை மீட்டுத்தருமாறு கோரும் பாரிய ஆர்ப்பாட்ட நிகழ்வு நடத்தப்பட்டு, பொது நூலகத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்துவதற்கும், கூட்டத்தின் முடிவில் ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்றினை கையளிப்பதற்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி 12 பஸ் வண்டிகளில் புறப்பட இருந்த பொதுமக்களை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்து பொலிஸார் டிரக் வண்டிகளை வீதியின் குறுக்கே நிறுத்தி தடுத்து வைத்தனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற முடியாத நிலை தோன்றியதால் மக்கள் வவுனியாவில் நடுவீதியில் மெழுகுவர்த்திகளை ஏந்திப் போராட்டம் நடத்தினர்.
சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் அத்தியாயம் 9 இல் 'எவர் ஒருவரையும்; நியாயமற்ற விதத்தில் கைது செய்யவோ தடுத்து வைக்கவோ நாடு கடத்தவோ முடியாது"
பொது மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அத்தியாயம் 9 (1) : 'அனைவரும் தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உரிமையை உடையவராகின்றார். எவரும் தன்னிச்சையான கைது மற்றும் தடுத்துவைத்தலுக்கு உட்பட முடியாது. சட்டத்தில் கூறப்பட்டவாறாக அல்லாது எவருடைய தனிநபர் சுதந்திரமும் பறிக்கப்படலாகாது"
பொது மற்றும் அரசியல் உரிமை தொடர்பான ஐ.நா. சாசனம், அத்தியாயம் 19 : (1) 'ஒவ்வொருவரும் எந்த விதமான குறுக்கீடுகளும் அற்ற முறையில் தனது கொள்கையைப் பேணும் உரிமையை கொண்டிருக்கின்றார்"
அத்தியாயம் (2) "அனைவரும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கொண்டிருக்கின்றனர்.
குறுக்கீடற்ற முறையில் நாட்டின் எல்லைகளைக் கடந்தும் தமக்குத் தேவையான தகவல்களை தேடுதல் பெறுதல் மற்றும் தாம் விரும்பும் ஊடகத்தினைப் பயன்படுத்தி வாய்மொழி மூலமாகவோ எழுத்து மூலமாவோ கலை வடிவங்களினூடாகவோ தகவல்களைப் பெற்றுக்கொள்ளல் வெளியிடல் என்பவற்றிற்கான உரிமையூம் இதிலடங்குகின்றன.
இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் காணப்படும் உரிமைகளில் இலங்கையும் கைசாத்து இட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் மாத்திரம் ஏன் இதனை செயற்படுத்த முடியவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாகும்.
அதாவது கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் குறித்த வடக்கிலிருந்து வந்த காணாமல்போனோரின் உறவுகளை கலந்து கொள்ள விடாது தடுப்பதன் மூலம், ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைத்து சர்வதேச கவனம் பெறுவதை தடுத்துவிடுவதற்காகவே மேற்கொள்ளப்பட்ட சதியோ என எண்ணத்தோன்றுகின்றது.
ஜனநாயக நாட்டில் ஒரு பிரஜை தனது கருத்து சுதந்திரத்தை கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை வேதனையான விடயம்.
ஆர்ப்பாட்டத்தின் மூலமோ கருத்து வடிவின் மூலமோ தனது கருத்தை வெளியிட பிரஜைக்கு உரிமை உண்டு. ஆனால் ஜனநாயக ரீதியில் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த வந்த உறவுகளை நியாயமற்ற விதத்தில் தடுத்து வைத்தமை சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அத்தியாயம் 9இல் கூறப்பட்ட உரிமையை முற்றாக மீறியுள்ளது.
எமது நாட்டில் யாரும் இரண்டாம் பிரஜை அல்ல. யாவரும் சமமானவர் எனக் கூறும் இந்த அரசில் மேற்கூறப்பட்ட சம்பவம் இதற்கெல்லாம் அப்பால் பிரஜைகள் ஒரு அடிமைக்கு ஒப்பாக நடாத்தப்பட்டுள்ளனர்.
இந்த செயற்பாட்டுக்கு அமெரிக்கா தமது அதிருப்தியையும் வெளியிட்டிருந்தது. அதாவது காணாமல் போன தமது உறவுகளை தேடித்தருமாறு கோரும் போராட்டத்துக்காகவே அவர்கள் வவுனியாவில் இருந்து கொழுப்புக்கு சென்றனர்.
எனினும் அவர்களை தடுத்து நிறுத்தியமை நியாயமான செயலல்ல. அத்துடன் குறித்த பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு மதிப்பளித்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் காணாமல் போனார் தொடர்பாக பெயர் வெளியிடப்படாத பட்டியலினை வெளியிட போவதாக சர்வதேசத்திற்கு அரசாங்கம் பல முறை கூறியுள்ளது.
ஆனால் இன்றுவரை அரசாங்கம் அவ்வாறு எந்தவொரு பட்டியலையும் வெளியிடவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் அசமந்தமாக இருப்பது உறவுகளை இழந்த உறவுகளை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்குவதோடு விரக்தி நிலைக்கு இட்டுச்செல்கின்றது.
யார் தான் எதனையும் சொன்னாலும் இந்நாட்டின் அரசு ஒரு கனம் சிந்தித்தால் இந்நிலையே மாறிவிடும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார்.
சரணடைந்தவர்கள் விடுவிக்கப்படுவர், காணாமல் போகச் செய்தல் இடம்பெறாது. ஆனால் இதெல்லாம் நிறைவேறுமா என்பது சந்தேகமே...
அதுவரை 'எங்களிடமிருந்து பறித்த எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள்", 'ஏதுமறியா எங்கள் பாலகர்கள் எங்கே? ", "தவறு இருந்தால் நிரூபியுங்கள் இல்லையேல் விடுதலை செய்யுங்கள்" என கண்ணீரோடு வானத்தை நோக்கிய கதறல்கள் மாத்திரமே தொடர்ந்து கொண்டிருக்கும்.
-எம்.டி. லூசியஸ்
இலங்கை நெற்
No comments:
Post a Comment