Follow by Email

Tuesday, 19 March 2013

ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்


ஒரு காலத்தில் கிராமத்து கோவில் பூசாரிகளே பெரும்பாலும் வைத்தியர்களாக இருந்திருக்கிறார்கள். 

உடல் நிலை சரியில்லை என்றால் திருநீறு மந்திரித்து கொடுப்பதில் இருந்து, பாடம் போடுவது, காஷாயம் கொடுப்பது எல்லாம் பெரும்பாலும் இவர்களே. பின் ஒவ்வொரு ஊரிலும் நாட்டு வைத்தியர் என்பவர் இருந்தார்.

மூலிகைகளை கொண்டு மருந்து தயாரித்து நோய்களுக்கு ஏற்ப வைத்தியம் செய்வார்.  பல வகையான ஆற்றல் மிக்க மூலிகைகள் இருந்தன. 

வெட்டிய கைகளை கூட ஓட்ட வைத்துவிடும் மூலிகைகள் இருந்தன என்று படித்திருக்கிறோம்.

பண்டைய காலத்தில் வைத்திய துறையில் இந்தியர்கள் மிகவும் சிறப்பான இடத்தில் இருந்திருக்கின்றனர்.

அறுவை சிகிச்சை, அவயமாற்று சிகிச்சை என்கின்ற பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றை இந்திய சித்த வைத்தியர்கள் செய்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் சித்தர்கள் என்று அழைக்கப்பட்ட அனைவரும் இந்த வைத்திய சாஸ்திரம் தெரிந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

தன்வந்திரி, போகர், தேரையர் போன்ற சித்தர்களை பற்றியும், சுஷ்ருதா, சர்க்கா போன்ற வைத்தியர்கள் பற்றியும், அவர்களின் நூல்கள் பற்றியும் இன்று நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

இவ்வுலகில் அதிக அளவில் மக்கள் மடிந்து விழுந்தது நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போரினால் அல்ல. கிராமம் கிராமாக லட்ச்சக்கணக்கான மக்கள் மடிந்து மறைந்தது அவர்களை தாக்கிய நோய்களாலேயே என்று கூறுகிறது வரலாறு.அம்மை, பேதி, கொள்ளை போன்ற நோய்களினால் மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்திருக்கின்றனர்.

சுமார் 12,000 வருட காலத்திற்கு முன் ஒரு மனிதனுக்கு நோய் வந்தால் அவனை பேய் பிடித்திருக்கிறது என்று மக்கள் நம்பினார்களாம். அவன் மண்டை ஓட்டை துளை செய்து ஓட்டை போட்டால் பேய் ஓடிவிடும் என்று கூர்மையான ஆயுதத்தால் ஓட்டை போடுவார்களாம்.

நோயாளி ரத்தம் வழிந்து செத்து போவாராம்.  உலகின் பெரும்பான்மையான நோயாளிகளுக்கு மிகவும் மோசமான, கடுமையான சிகிச்சை முறைகளே நடந்து வந்திருக்கிறது.

கிருஸ்து  பிறப்பதற்கு சுமார் நானூரு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹிப்போ கிராட்டஸ் என்பவர்தான் நோய் நொடிகளுக்கு பேய் பிசாசுகளின் மேல் காரணத்தை போடுவது முட்டாள்த்தனம் என்று சுட்டிக் காட்டிய மருத்துவர்.

இறந்த உடல்களை அறுத்துப் பார்த்து எதனால் அவர்கள் இறந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க அந்த காலத்தில் வழியில்லை. அப்படி செய்தால் மதத்துரோகம் என்று சொல்லப்பட்டதால் மதத்தலைவர்களை எதிர்க்கும் துணிவு யாருக்கும் வரவில்லை.

துருக்கியை சேர்ந்த கேலன் என்ற மருத்துவர்தான், நம் உடலில் ரத்தம், பித்தநீர், சளி என்ற திரவங்கள் இருக்கின்றன. இவை குறைந்தாலோ, கூடுவதாலோ நோய்கள் உருவாகின்றன என்றார்.

கிட்டத்தட்ட இவரது கூற்று நம் சித்தர்கள் உடலில் நோய் ஏற்படுவதற்கு வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற நாடிகளின் துடிப்புகள் குறைவதும், கூடுவதும்தான் என்று சொன்னதை போலவே இருக்கிறது.

உடம்பில் இருக்கும் கார அமில தன்மை கொண்ட திரவங்களின் ஏற்ற இறக்கங்களே நோய்களுக்கு காரணம் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. கேலன் அறிவாளி என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்ததால் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள்.

மதத்தலைவர்களின் அதிகாரங்கள் சரியாய் ஆரம்பித்த காலத்திற்கு பின்தான் இறந்து போன உடலை வைத்து உடல் கூறுகளை பற்றி (அனாடமி) படிக்க வழி பிறந்தது.

அக்காலத்தில் வைத்தியர்கள் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போதும், அறுவை சிகிச்சை செய்யும் போதும் மிக கடுமையான முறைகளை கையாண்டனர்.

நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டால் சத்தம் வெளியில் கேட்காதவாறு அமைக்கப்பட்ட அறையில், அந்த நோயாளியை படுக்க வைத்து, மருத்துவ மனையின் ஊழியர்கள் ஒன்றாய் சேர்ந்து நோயாளி முண்டி திமிர முடியாமல் இறுக பிடித்துக் கொள்வார்களாம். அதன் பின் மருத்துவர் அறுவை சிகிச்சையை ஆரம்பிப்பாராம்.

1791இல் லண்டன் மருத்துவமனையில் இந்த முறைதான் பின்பற்றபட்டு வந்தது. பல நாடுகளிலும் இதே முறைதான்.

அதன் பிறகு மூலிகையை பயன்படுத்தி முகர செய்து மயக்கமடைய செய்து அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர்.

1591இல் எடின்பர்க் நகரில் கியுபொன் மேக் அயனே என்ற அம்மையார் பிரசவ காலத்தில் வலி தாங்க முடியாமல், எனக்கு வலிக்காமல் இருக்க மருந்து கொடுங்கள் என்று கேட்டாராம்.

ஆனால் மதவெறியர்கள்...... கடவுள் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்த தண்டனைதான் வலி. அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் தண்டனை தருவோம் என்று கூறி, அப்பெண்ணை இழுத்து வந்து உயிரோடு புதைத்து விட்டார்களாம்.

பிற்காலத்தில் முதலாம் எலிசபத் அரசி தன் பிரசவத்தின் போது மயக்க மருந்து தாருங்கள் என்று கேட்டாராம். கிரேக்க நாட்டு ராணுவ அறுவை சிகிச்சை நிபுணர் டயோஸ் கார்டிஸ் என்பவர்தான் மயக்க மருந்து என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தினார்கள் என்கிறார்கள்.

1275இல் ரேமான்ட் லல்லியஸ் என்பவர் சலப்பூரிக் ஆசிட்டில் ஆல்கஹாலை கலந்து ஒரு  மருந்து கண்டுபிடித்தார். 

இதனை 1695இல் பாரா செல்சஸ் என்ற சுவிஸ் நாட்டு மருத்துவர் வலிநிவாரணியாக பயன்படுத்தி சிகிச்சை செய்திருக்கிறார். 

1772இல் இங்கிலாந்தை சேர்ந்த ஜோசப் பிரிஷ்டிலே என்பவர் நைட்ரஸ் ஆக்ஷ்சைடு என்ற மயக்க மருந்தை கண்டுபிடித்து பயன்படுத்திருக்கிறார்.


இவர்தான் பிராணவாயு, கரியமில வாயுவை கண்டுபிடித்தவர். இவர் மத துரோகம் செய்ததாக புகார் கூறப்பட்டதால் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து விட்டார்.

1815 இல் ஜியார் சியாவில் பிறந்த கிராம்போர்ட் லாங் என்ற மருத்துவர் தன் 26ஆவது வயதில் அறுவைசிகிச்சைக்கு முதன் முதல் மயக்க மருந்தை உபயோகித்தார்.

ஈதர் மயக்க மருந்தை மூக்கில் முகர வைத்து மயக்கம் பெற வைத்து அதன் பின் அறுவை சிகிச்சை செய்தார். பிரசவத்திற்கும் மயக்க மருந்தை உபயோக்கிய ஆரம்பித்தவர் இவர்தான்.

ரத்தம் இதயத்தில் சுத்தகரிக்கப் பட்டு ரத்த குழாய் மூலம் உடல் முழுவதும் செல்கிறது என்பதை எல்லாம் அக்காலத்தில் யாரும் நம்பவில்லை. ரத்தம் உடலில் தேங்கி இருக்கிறது என்றே நினைத்தனர்.

1628 இல் வில்லியம் ஹார்வி என்ற அறிவியல் மேதை தான் ரத்த ஓட்டம் பற்றியும் அதனால் ஏற்ப்படும் இதய துடிப்பை பற்றியும் உலகிற்கு அறிவித்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூச்ச சுபாவம் கொண்ட ரேனே என்ற பிரஞ்சு மருத்துவர் பெண்களின் மார்பில் காதை வைத்து அவர்களின் இதய துடிப்பை கேட்க மிகவும் கூச்சப்பட்டார். தனது சௌகரியர்த்தாக இவர் கண்டுபிடித்ததுதான் ஸ்டெதாஸ்கோப்.


பிறகு ராண்ட்ஜன் என்பவர் எக்ஸ்ரேயை கண்டுபிடித்தார். 1928இல் ஸ்காட்லாந்தை சேர்ந்த அலக்ஸ்சான்டர் பிளமிங் என்ற மருத்துவர் பென்சிலின் மருந்தை கண்டுபிடித்தார். அது கிரிமி கொல்லியாக செயல்படுவதை அறிந்தார்.


தொடர்ந்து இன்னும் சில மருந்துவர்களும் இதில் தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டனர். முடிவில் நோய்களுக்கு எதிராக போர்புரிய மனிதனுக்கு பென்சிலின் என்ற ஆயுதம் கிடைத்தது.

இன்று மருத்துவ துறை அபாரமான வளர்ச்சியை பெற்று திகழ்கிறது. கிட்னி, இதயம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு செலலிழந்து போனவர்களும் மாற்று உறுப்புகளை, இறந்து போனவர்களிடம் இருந்து சில மணி நேரங்களுக்குள் எடுத்து பொருத்தி நோயாளிகளின் உயிர்களை காத்து விடுகின்றனர்.

இப்போது செயற்கை ரத்தத்தை உருவாக்கி விட்டோம் என்று அறிவித்துள்ளனர். எதிர் காலத்தில் செயற்கை இதயம், செயற்கை கிட்னி போன்றவைகளும் கிடைக்கலாம்.


அறிவியல் முன்னேறி கொண்டிருந்தாலும் புது புது நோய்களும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஆய்வாளர்களும் அதற்க்கான மருந்தினை காணும் முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஆனாலும் மருந்துகள் கண்டுபிடிப்பதற்குள் சில ஆயிரம் உயிர்கள் காப்பாற்றபடாமல் போகின்றன.

-மதிவாணன்
1 comment: