ஒரு சமயம் படைப்பு தொழிலில் ஆர்வம் இல்லாத பிரம்மா, அதை யாரிடமாவது ஒப்படைக்க நினைக்கிறார்.
நினைத்தால் மட்டும் போதுமா...அதற்கு தகுதியான நபர்கள் வேண்டுமே. அப்படி யாரும் இருப்பதாக அவருக்கு தெரியவில்லை.
அதனால் என்ன? நாம் தான் படைப்பு கடவுளாயிற்றே.... தகுதியானவர்களை நாமே படைப்போம் என்று எண்ணி நான்கு பேரை உருவாக்குகிறார்.
அவர்கள் தான் சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர். இவர்கள் பிரமாவினால் உருவாக்கபட்டதால் பிரம்ம புத்திரர்கள் என்று அழைக்க படுகிறார்கள்.
பிள்ளைகள் பிறந்ததும் தொல்லைகள் ஒழிந்தது என்று நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.
அவர் கணக்கு சரிதான். படைப்பு தொழிலுக்கு உரிய அறிவோடு தான் பிறந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விருப்பம் அதுவல்லவே.
தங்கள் விருப்பத்தை சொல்லலாம் என்றால் முடியவில்லை. நாரதரின் யோசனை படி மகாவிஷ்ணுவை நாடி செல்கின்றனர்.
அவர்கள் சென்றது எதற்கு? இன்னும் ஆழ்ந்த ஞானத்தை பெற.
ஆனால் மகாவிஷ்ணுவோ மகாலக்ஷ்மியோடு கூடி களித்திருந்தார். இல்லறதர்மத்தை கடைபிடிப்பவரிடம் ஞானயோகத்தை பற்றி எப்படி கேட்பது? இந்த குழப்பத்தோடு கைலாயம் வருகின்றனர்.
இவர்கள் வருகையை அறிந்த சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் தவக்கோலம் பூண்டு அமர்கிறார்.
வந்தார்கள் நால்வரும். பார்த்தார்கள். அடடா.. இவர் அல்லவா.. குரு. நம் அறியாமையை விளக்க இவரை விட்டால் யாரும் இல்லை என்று முடிவு செய்து அங்கேயே அமர்ந்து விட்டார்கள்.
அவர்களின் அத்தனை சந்தேகத்திற்கும் விடை தருகிறார் தட்சினாமுர்த்தி. இவர் தென்முக கடவுள் என்று போற்ற படுகிறார்.
இவர் ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் கருவறை சுவற்றில் கோஷ்ட்டமூர்த்தியாக காட்சி அளிக்கிறார். இவர் சிவனின் அம்சம்.
இவர் நவகிரக வரிசையில் வரும் குருபகவான் அல்ல. அவர் வேறு .....இவர் வேறு.
தென் முக கடவுளான இவர் சில ஆலயங்களில் வித்தியாசமாக காட்சிஅளிக்கிறார்.
சூரியனார்கோவில், திருநெய் தானம், திருவரங்குளம், திருநாவலூர், கீழ்வேளூர், கண்டியூர் முதலிய இடங்களில் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார்.
மயிலாடுதுறை வள்ளலார்கோவில், சென்னை திரிசூலம், திருகட்ச்சனம், திருவாய்மூர், ஆகிய இடங்களில் ரிஷப வாகனத்தில் காட்சி அளிக்கிறார்.
வைதீஸ்வரன் கோவிலில் மேற்கு திசை நோக்கியும், சுக்கிரன் ஆலயமான கஞ்சனூரில் கிழக்கு முகமாகவும் காட்சி அளிக்கிறார்.
கழுகு மலையில் சடாமுகமும், இருக்கையில் தூக்கி வைத்த காலுமாய் காட்சி அளிக்கிறார்.
திருவற்றியூரில் வடக்கு மகம் நோக்கி பிரமாண்ட உருவில் காட்சி அளிக்கிறார்.
லால்குடியில் வீணையை கையில் பிடித்தபடி காட்சி அளிக்கிறார்.
கட்டபள்ளியில் அம்பிகையுடன் காட்சி அளிக்கிறார். திருவையாறில் சூலம், கபாலம் ஏந்தி காட்சி அளிக்கிறார்
No comments:
Post a Comment