Follow by Email

Sunday, 27 May 2012

பெண்களே உஷார்.

அவள் பேர் சுமிதா. 

பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ( என் பேஸ்புக்கில் அவளும் இருந்தாள். இப்போது இல்லை )

என் நெருங்கிய தோழி. எந்த குற்றம் குறையும் சொல்ல முடியாத குணம். அன்பானவள்,பண்பானவள் அழகானவள். திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாய்.

பாசத்தை பொழியும் மாமியார், பார்த்து பார்த்து கவனிக்கும் கணவன், அப்பறம் என்ன குறை அவளுக்கு என்பது தான் எல்லோருடைய கேள்வியும். அவளுக்கு வில்லனாக வந்து பேஸ்புக்.

தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருந்தவளுக்கு போகாத ஊருக்கு பயணம் செய்த மாதிரி வழி சொல்லியது பேஸ்புக். 

விஷயம் இதுதான். அவள் பேஸ் புக் கணக்கை துவக்கினாள். அவள் பேஸ்புக் வைத்து கொள்ள யாரும் தடை சொல்லவில்லை. 

கொஞ்சம் கொஞ்சமாக அவள் நண்பர்கள் வட்டம் பெருகியது.உங்களுக்குத்தான் தெரியுமே... எப்படி பட்ட குணம் உள்ளவர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள் என்று. 

எனக்கே அந்த அனுபவங்கள் உண்டு. ஹாட் சாட்டுக்கு அழைக்கும் நபர்கள். 

ஒரு உண்மை சொல்லனும்னா.. பேஸ்புக்கில் அதிகபடியாக நண்பர்களை பிளாக் செய்தவர்கள் பட்டியலை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டால் அனேகமாக நான் முதல் இடத்தில் இருப்பேன். 

கொஞ்சம் வார்த்தை நாகரீகம் தவறினாலும் அவர்களை பிளாக் செய்து விடுவேன். ஆனால் என் தோழி அதை செய்யவில்லை. விளைவு என்னாச்சு.

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது மாதிரி அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சு கலந்தது. 

பெரும்பாலாவர்களின் ஹாட் சாட் என்பது பச்சையாக படுக்கையறை ரகசியத்தை பகிர்ந்து கொள்வது. 

முதலில் தனிப்பட்ட தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்பவர்கள், அடுத்து உன் அனுபவம் என்ற வார்த்தையை வீசி பார்கிறார்கள். 

அதற்கு இடம் கொடுத்து விட்டால் அடுத்து அந்த அனுபவத்தை நாம் பெற்றால் என்ன என்கிற கேள்வி. 

ஆனால் இந்த அளவிற்கு சம்மந்த பட்டவரை அழைத்துவர பொறுமையாக காத்திருப்பது தான் பெரிய விஷயமே. 

இதற்கு மானே.. தேனே... பொன்மானே இதையெல்லாம் பேச்சுக்கு இடையே போட்டு இருப்பார்கள்.

என் தோழி இந்த வலையில் தான் விழுந்து விட்டாள். மிக சாதாரணமாய் ஆரம்பித்த பேச்சு வார்த்தை பச்சை மஞ்சள் கருப்பு சிகப்பு என்று கலர் கலராய் பேசும் அளவிற்கு போய்விட்டது. 

இத்துடன் நின்றிருந்தால் பிரச்சனை இல்லை. போன் நம்பர்கள் பரிமாறி போனில் பேசும் அவவிற்கு போன போதுதான் வில்லங்கம் விஸ்வருபம் எடுத்தது. 

இதை எதேச்சையாக கவனித்த மாமியார்... என்ன மருமவ பொண்ணு  போன்ல இப்படி அசிங்க அசிங்கமா பேசுறாலே என்று தான் நினைத்து இருக்கிறது. 

ஒரு வேளை மகனுடன் தான் இப்படி பேசுகிறாளோ என்று மனதை சமாதான படுத்தி கொண்டாலும், இவ்வளவு காலமும் இப்படி பேசியது இல்லையே என்ற கேள்வி மட்டும் மனதை அரிக்காமல் இல்லை.

ஒரு நாள் மகன் வீட்டில் இருக்கும் போதே மருமகள் போனில் பேச ஆரம்பித்தாள். அப்போதுதான் உண்மை தெரிந்தது. பேசுவது மகனுடன் இல்லை... வேறு யாரோ...

பிரச்னை பூதாகரமாக வெடித்த போது கொஞ்சமும் கலங்காமல் இருந்ததுதான் அதிர்ச்சியின் உச்சகட்டம்.

இனிய இல்லறம் நடத்திய கணவனை விட, அன்புடன் கவனித்த மாமியாரை விட எங்கோ இருக்கும் அவனுக்காக தன் வாழக்கையை துறக்கவும் தயார் என்றாள். 

எஸ்.... எனக்கு டைவர்ஸ் வேண்டும் என்றாள். 

பிரச்சனை பொண்ணு வீட்டுக்கு வந்த போது தான் விஷயம் எனக்கும் தெரியும். 

அவன் யார், அவன் குணம் என்ன, என்ன செய்கிறான், என்ன செய்யபோகிறான் என்ற அடிப்படை கேள்விகளுக்கு கூட விடைதேடாமல், தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட என் தோழியோடு பல முறை பேசி அவள் மனதை மாற்றி இருக்கிறேன். 


அதற்காக நான் எடுத்து கொண்ட முயற்சிகள் பல.நானே ஒரு புதிய கணக்கை உருவாக்கி அந்த நபரை நண்பராக்கி கொண்டேன். 


பின் அந்த கணக்கில் இருந்து அந்த மோசடி நபரோடு என் தோழியை பேச சொன்னேன். புதிய பெயர், புது கணக்கு. 


அந்த நபரும் ஆகா.. சிக்கிச்சுடா புதிய சிட்டு என்கிற ஆவலில் தன் முகத்தை காட்ட துவங்கினார். என் தோழியிடம் பேசிய அதே டயலாக், அதே கொஞ்சல்கள், அதே வர்ணனைகள்.  


அப்போதுதான் அவளுக்கு உண்மை புரிந்தது. இருப்பினும் பிரச்சனை அத்துடன் நின்று விடவில்லை.  அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. 


நல்ல கணவனுக்கு துரோகம் செய்துவிட்டோமே என்று மனசாட்சி உறுத்தி தற்கொலைக்கு முயன்றாள். கடைசி நேரத்தில் கண்டு பிடிக்க பட்டு காப்பாற்ற பட்டாள். 

இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள காரணமே சமிபத்திய பத்திரிக்கை செய்தி.

இந்த நேரத்திலே ஒரு வேதனையான செய்தி ஒன்றையும் சொல்ல வேண்டும். என் நண்பர்கள் வரிசையில் பல பெண்கள் இருந்தாலும் இதுவரை என்னிடம் பேசியவர்கள் யாரும் இல்லை. நான் இவ்வளவு விழயங்கள் எழுறேன். எந்த பொண்ணாவது கமான்ட் செய்திருக்கா. இல்லை... 

ஏன்...? 

இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியலை. அதுக்காக நான் வருத்தபடலை. மனசுல பட்டதை சொன்னேன்.


சரி..பத்திரிக்கை செய்திக்கு வருவோம்.

myjaffna என்ற வலை தளம் இந்த செய்தியை பிரசுரம் செய்திருக்கிறது. அது இதுதான்.

வேலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி. முருகேசனிடம் சென்னை திருவல்லிக்கேணி உலகப்பன் தெருவை சேர்ந்த சுஜித்ரா என்ற பெண் கொடுத்த புகார்.நான் கடந்த 7 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். 

அங்கு வேலை செய்யும் காயத்ரி தேவிக்கு பேஸ்புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். 

அதைத் தொடர்ந்து சதீஷ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த்பாபு ஆகியோர் காயத்ரி மூலம் எனக்கு பழக்கமானார்கள்.

கடந்த ஜனவரி மாதம் சதீசும், ஆனந்த்பாபு சென்னை வந்து எங்களை வேலூரில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்துச் சென்றனர். 

ஆனால் கோவிலுக்கு போகவில்லை. வேலூரில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர். அங்கு காயத்ரி, சதீஷ் ஒரு அறையிலும் நானும் ஆனந்தும் ஒரு அறையிலும் தங்கினோம்.

அப்போது ஆனந்த் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி சத்தியம் செய்து என்னுடன் உல்லாசமாக இருந்தார். மறுநாள் நாங்கள் சென்னை வந்து விட்டோம்.

அதைத்தொடர்ந்து நாங்கள் தொலைபேசியில் பேசி வந்தோம். பிப்ரவரி மாதம் சதீஷ் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு ஆனந்தும் நானும் ஹோட்டலுக்கு வந்து விடுகிறோம். நீயும், காயத்திரியும் வந்துவிடுங்கள் என்றார்.

நாங்களும் சென்று அங்கு அவர்களுடன் 2 நாட்கள் உல்லாசமாக இருந்தோம். 

அதைத்தொடர்ந்து சில நாட்கள் ஆனந்த்பாபு தொலைபேசியில் பேசுவதை நிறுத்தினார். மார்ச் மாதம் மீண்டும் ஹோட்டலுக்கு வருமாறு கூறினார். நான் வர மறுத்து விட்டேன்.

அப்போது ஆனந்த்பாபு நாம் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து பதிவு செய்து உள்ளேன். நீ சம்மதிக்கவில்லை என்றால் இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். 

அதனால் நான் பயந்து போய் மீண்டும் ஹோட்டலுக்கு சென்று ஆனந்த்பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.

இந்நிலையில் காயத்ரி தேவியை சதீஷ் ஏமாற்றி விட்டதாகவும், மேலும் அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாகவும் எனனை போல பலரை இப்படி ஏமாற்றியதும் தெரியவந்தது. 

எனவே ஆனந்த்பாபு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ், திலீப், லூயிஸ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

அவருடன் காயத்ரி தேவியும் எஸ்.பி. அலுவலத்துக்கு வந்து புகார் தந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். போலீசார் கூறிய யோசனையின்படி மீண்டும் சுஜித்ராவும், காயத்ரி தேவியும் ஆனந்த்பாபு மற்றும் சதீஷிடம் பேசினர்.

அவர்களை ராணிப்பேட்டை விடுதி ஒன்றிற்கு வருமாறு அழைத்தனர். அதை நம்பி நேற்றிரவு 9 மணி அளவில் இருவரும் நிரோத் சகிதமாக அங்கு வந்தனர். இருவரையும் போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.


இவர்கள் இன்னும் எத்தனைப் பெண்களை ஏமாற்றியுள்ளனரோ தெரியவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. 

மேலும் பல நண்பர்களுக்கும் பேஸ்புக் மோசடிகளில் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், அவர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது ஒரு உதாரணம் தான். இது போல் பாதிக்க பட்ட பல்லாயிரம் பேர்கள் இருக்கிறார்கள். 


வெளியே தெரிந்தால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இழுக்கு என்று மவுனமாகவே இருப்பவர்கள் பலர். என் தோழி தொடர்புடைய செய்தி கூட, இப்படித்தான் மறைக்கப்பட்டு விட்டது. 


என் நண்பர்கள் வரிசையில் இருந்தும் என்னோடு பேசாத தோழியரே வணக்கம். 


இப்போதும் எப்போதும் மாப்பிள்ளை வீரன் மாதிரி உலா வரும் நபர்கள் பேஸ்புக்கில் அதிகம். அதனால் கவனமாக இருங்கள். 


வார்த்தைகளை வளர்க்கும் நபர்களிடம் எச்சரிக்கை தேவை. நாகரிகம் தவறி பேசும் நபர்களை எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்க வேண்டாம். உடனே அவர்களை பிளாக் செய்து விடுங்கள். 


18  வயது பையன் 25  வயது பெண்ணிடம் என்னடி என்று மேஜெஸ் அனுப்புகிறான். இவர்களுக்கு மொட்டை மாடும் ஓன்று, கொம்பு மாடும் ஓன்று தான். 


என் தோழியின் நிலை வேறு. நேரடி சந்திப்புக்கள் இல்லை. வெறும் சாட்டிங், மற்றும் போன் வழி பேச்சு மட்டுமே. அதனால் கவனம்...கவனம்....கவனம்...

No comments:

Post a Comment