ads

Sunday, 10 February 2013

அருந்ததி!!


மூவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்களும் ஆசிர்வதிக்க, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, அக்னி சாட்சியாக திருமணம் செய்யப்படுகிறது என்பது திருமண சடங்கு. இதில் அருந்ததி பார்த்து என்று வருகிற அவள் கதை தெரியுமா? இதோ...

பிரம்மாவின் மகளாக பிறந்தவள் சந்தியா. அழகின் இலக்கணமாய் அமைந்தவள். இளமை பருவத்தில் அவளது அழகு பார்ப்பவர்களை ஈர்த்தது. 

வயது வித்தியாசமின்றி அனைவரும் அவளை ரசித்து பார்த்தனர். அவளது சகோதர்களான பிராஜாபதிகளின் கண்களில் தெரிந்த உணர்வுகள் அவ்வளவு கண்ணியமானதாக தெரியவில்லை.  இதை உணர்ந்த சந்தியாவின் உடல் கூசியது. அவர்கள் முன்வரவே தயங்கினாள்.

ஒரு முறை தன்  தந்தையுடன் அவள் பேசும்போது அவரின் பார்வை தன் உடலில் சாதாரணமாக படித்ததை தவறாக உணர்ந்த  சந்தியா.. தன் அழகை எண்ணி நொந்து கொண்டாள்.

அவளது அழகு அவளுக்கு அசிங்கமாக தெரிந்தது. வேதனையில் உள்ளம் எரிந்தது. உடலை எரித்து விடவும் நினைத்தாள்.

சந்திப்பாகா மலைக்கு சென்று விஷ்ணுவை மனதில் நிறுத்தி கடும் தவத்தை மேற்கொண்டாள். தவம் தொடர்ந்தது. சுற்றுபுறமெங்கும் தவத்தின் செம்மை தகித்து வைகுண்டத்தை அடைந்து மகாவிஷ்ணுவை இழுத்தது. 

விஷ்ணு நேரில் தோன்றினார். உன் தவம் என்னை மகிழ்ச்சி படுத்துகிறது. உனக்கு என்ன வரம் வேண்டும்? 

சுவாமி.... ஒருவனுக்கு ஒருத்தி என்ற பதிவிரதா தர்மத்துடன் வாழ்வதையே நான் விரும்புகிறேன். ஆனால் என்னை சுற்றி உள்ளவர்கள் பார்வை என்னை எரிக்கிறது.  என் உடல் கூசுகிறது.  

பலாராலும் மாசுபட்ட இந்த உடல் எனக்கு தேவையில்லை. இதை எரித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் என் கணவனை தவிர எந்த ஆணையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்ககூடாது.

எந்த ஆண்மகனும் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது.  எளிமையும் அமைதியுமாய் என் வாழ்க்கை இருக்கவேண்டும் என்பதே நான் கோரும் வரம் என்றாள் சந்தியா.

சந்தியா... நீ கேட்ட வரத்தை தந்தேன். நீ கொண்டிருக்கும் எண்ணப்படி உன்னுடைய இந்த தேகம் எரிய வேண்டும் என்பதே விதி.


மேதாநிதி என்ற முனிவர் ஜோதிஷ்ட ஹோமம் என்ற யாகத்தை செய்து கொண்டிருக்கிறார். அது பன்னிரண்டு ஆண்டுகளில் முடியக்கூடிய யாகம்.  அது இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது.

சந்திரபாகா நதியின் கரையில்தான் அந்த யாகம் நடைபெற்று வருகிறது.  யாகத்தை நடத்திக்கொண்டிருப்பவர்களின் கண்ணில் படாமல் நீ யாக அக்னி குண்டத்தில் விழ வேண்டும்.

என் ஆசியால் நீ மேதாநிதி முனிவரின் மகளாக அவதரிப்பாய். நீ கேட்ட வரத்தின் படி உன் வாழ்க்கை அமையும் என்று விஷ்ணு கூறினார்.

சந்தியா அவ்வாறே செய்கிறாள்.

விஷ்ணு அக்னி பகவானிடம் நெருப்பில் விழுந்த சந்தியாவின் உடலை சூரிய மண்டலத்தில் வைக்க சொன்னார்.

சூரிய பகவான் அவளது உடலை இரண்டாக பிரித்து தன் ரதத்தில் வைத்தார். உடலின் மேல் பாகம் பாரதாஸ் சந்தியா என்னும் விடியற்காலையாகவும், கீழ்பாகம் ஸாயம் சந்தியா என்னும் மாலை பொழுதாகவும் ஆயின.

அதே சமயம் சந்திரபாகா நதிக்கரையில் யாகம் நிறைவினை அடையும் பொழுது யாக குண்டத்தில் இருந்து நெருப்பு சுடராய் ஒரு பெண் குழந்தை தோன்றியது.

மேதாதிதி அந்த பெண் குழந்தைக்கு அருந்ததி என்று பெயரிட்டு தன் ஆசிரமத்தில் வளர்த்து வந்தார். சந்திரபாகா நதிக்கரையில் அருந்ததி வளர்ந்தாள்.

ஐந்தாவது வயதில் தன் மகளை மேதாதிதி முனிவர் கல்வி கலைகளை பயில சூரிய பகவானின் மகளான சாவித்திரியிடம் அனுப்பி வைத்தார்.

கல்வி கற்கும் பருவத்தில் ஒருநாள் அங்கெ வந்த வசிட்டரை பார்த்தாள் அருந்ததி.  இளமையான வயதில் வலிமையான உடற்கட்டுடன் காவி உடையில் எளிமையாய் காட்சியளித்த வசிட்டரே தன் கணவனாக வரவேண்டும். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவரே தனக்கு கணவனாக அமைய வேண்டும் என்று மனதார எண்ணினாள் அருந்ததி.

விஷ்ணுவிடம்  அவள் வேண்டிய வரமும் அதுதானே. சாவித்திரியின் ஆசிர்வாதத்துடன் அனைத்து தெய்வங்களின் முன்னிலையிலும் வசிட்டர் அருந்ததி திருமணம் நடைபெற்றது.

வசிட்டருடன் அவரது ஆசிரமம் சென்ற அருந்ததி கணவரின் மனமறிந்து அன்பான முகத்துடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

அருந்ததியின் பணிவிடையால் வசிட்டர் பெரிதும் மகிழ்ந்தார். இனிவரும் பிறவியெல்லாம் வசிட்டரே தன் கணவனாக வரவேண்டும்.

அவரை விட்டு பிரியாமல் எப்போதும் அவருடன் இருந்து சேவை புரிய வேண்டும் என்பதே அருந்ததியின் வேண்டுதலாய் இருந்தது.

அது போலவே வானில் நட்சத்திரமாய் வசிட்டருடன் பதியை விட்டு பிரியாத பத்தினியாய் இருந்து ஒளி வீசி  வருகிறாள் அருந்ததி.


சிறந்த இல்லத்தரசியாய் விளங்க அருந்ததியின் ஆசிர்வாதம் வேண்டும் என்பதற்காகத்தான் திருமண சடங்கின் போது, மணப்பெண் அருந்ததியை பார்க்க வானத்தை நோக்கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...