Follow by Email

Tuesday, 5 February 2013

வீட்டில் வைச்சு சிவனை வணங்க கூடாதாம்!!


இன்றைய காலகட்டத்தில் வள்ளுவன் வாசுகி போல், ஒற்றுமையாக, உதாரண தம்பதிகளாக வாழ்பவர்கள் குறைவுதான். 

வில்லங்கம் யாரால், எந்த ரூபத்தில் வரும் என்று சொல்ல முடியாது. 

சில குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் எந்த பிரச்சனையும் வராது. வீட்டில் இருக்கும் மாமியாருக்கு இது பொறுக்காது. மகனோடு மருமகள் சிரித்து பேசினாலே போதும், சிடுசிடுத்துக் கொண்டே இருப்பாள் மாமியார். 

பல முறை அனுபவப்பட்ட மருமகள் மாமியாரின் எண்ணம் புரிந்து மாமியாரோடு மல்லுக்கு நிற்பாள். அம்மா பிள்ளையாக இருக்கும் கணவனுக்கு சொல்ல வேண்டுமா? விரிசல் வந்துவிடும். 

கணவனின் அம்மா என்றில்லை, பெண்ணின் அம்மாவே சில சமயம் வில்லங்கத்திற்கு விதையாக இருப்பதுண்டு.

உன் புருஷனை நல்லா  கண்காணிச்சுக்கடி. எப்ப பாரு கட்டி கொடுத்த குட்டிங்க, அதான் உன் நாத்திராருங்க,  சும்மா சும்மா அம்மா வீட்டிற்கு வர்றேன்னு வருதுங்க.

எதுக்கு வருதுங்க?

உன் புருஷனை மொட்டை அடிச்சுக்கிட்டு போகத்தான். நீதான் ஏமாளியாச்சே.  பல்லை காட்டினா போதும் எமாந்திடுவே. எதுக்கும் முன்  ஜாக்கிரதையா இருந்துக்கோ.


இந்த வார்த்தைகளின் தாக்கம் போதுமே...குடும்பத்தில் குண்டு  வெடிக்க.  இதுபோல் உள்ளுக்குள் இருந்து மட்டுமல்ல, வெளியில் இருந்தும் பிரச்சனைகள் வருவதுண்டு.

அதையெல்லாம் கடந்து,  ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்க்கை நடத்துவதுதான் இனிய இல்லறம். பலருக்கு இங்கேதான் சிக்கல். பல சமயம் அவர்களே கூட ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் போகலாம்.

இதற்கு காரணத்தை கண்டுபிடிக்கும் மெத்த படித்த மேதாவிகள், அரைகுறை ஞானம் உள்ளவர்கள், சொல்கிற வார்த்தை என்ன தெரியுமா? வீட்டிலே சிவனை வச்சு சாமி கும்புடுறிங்களா?


ஆமாம்.

நாசமா போச்சு. விவரம் தெரிந்த யாராவது வீட்டிலே சிவனை வைச்சிருப்பாங்களா?

ஏங்க?

சிவன் யாரு? கட்டின பொண்டாட்டி இருக்க, தலையில் ஒரு பொம்பளையை  ஒளிச்சு வச்சிருக்கார்.

இது தெரிஞ்ச பார்வதிக்கு கோவம் வருமா வராதா? எப்ப பாரு சண்டை. அவங்களுக்குள்ளே ஒற்றுமை இருந்திச்சா... இல்லையே!

அவரை வீட்டிலே வச்சு வணங்கினா அப்படித்தான் இருக்கும். பொழுது விடிஞ்சு பொழுது பட்டா சச்சரவு தான் வரும்.

இப்ப என்னங்க செய்யணும்?

முதல்ல சிவன் படத்தை எடுத்துக்கொண்டு போய், பக்கத்திலே இருக்கிற கோவில்ல வச்சுட்டு, மத்த சாமிங்களை வச்சு கும்பிடுங்க.

இப்படித்தான் புதுசா கிளம்பின புத்திசாலிகள் புது கரடி விடுகிறார்கள். இது மாதிரியான அபத்தங்களை முற்றிலும் ஒதுக்க வேண்டும்.

இவர்கள் தான் கண்டக சனி வந்தால் கொண்டே போய்டும் என்பார்கள்.

செவ்வாய்கிழமையில் பிறந்தால் செவ்வாய் தோஷம்  என்பார்கள்.

குருவுக்கும் தெட்சனாமுர்த்திக்கும் வித்தியாசம் தெரியாமல், கோச்சாரத்தில் குரு சரியில்லை என்றால் தெட்சனாமுர்த்திக்கு கொண்டக்கடலை மாலை போடச் சொல்வார்கள்.

மானசீகமாக வணங்க வேண்டிய சண்டிகேசுவரிடம் போய் கை தட்டி, விரல் சொடுக்கி பிராத்திக்க சொல்வார்கள்.

நவகிரங்களை சுற்றும் போது முதல் ஏழு முறை கெடிகார முள்ளு சுற்றுவது போல் சுற்ற சொல்லிவிட்டு, பின் இரு முறை ஆண்டி கிளாக் வாய்ஸ், அதாவது எதிர்மறையாக சுற்ற சொல்வார்கள்.

இப்படி அபத்தங்களை அடுக்கி கொண்டே போகலாம். இது அவர்களுக்கு ஏற்ப்பட்ட ஞான குறைபாடு. விஷயபற்றாக்குறை. அதனால் மறப்போம், மன்னிப்போம்.

சரி.. நாம் விஷயத்திற்கு வருவோம்.

ஹிந்து மதத்தை பொருத்தவரை தெய்வங்கள் அனைத்துமே மனிதனை போல் குடும்ப வாழ்க்கை நடத்தியதாக புராணங்கள் சொல்கிறது.

அங்கே சந்தோசம் உண்டு. சண்டைகள் உண்டு. ஊடல்கள் உண்டு, உரசல்கள் உண்டு.

அட... மனிதனை போல் சகலமும் உண்டு. தெய்வ வாழ்வில் நடக்கும் அனைத்துமே திருவிளையாடல்கள். அதற்கு பின்னால் நிகழப்போகும் ஒன்றிற்காக நடத்தப்படும் நாடகங்கள். அவ்வளவே.

அதனால் அனைத்திலும் பெரியவன், ஆதியில் உதித்தவன், அண்டங்களை ஆள்பவரான சிவனை விட்டில் வைத்து வழிபட வேண்டாம் என்று யாராவது சொன்னால், நல்ல நகைச்சுவையாக இருக்கிறது போங்கள் என்று சொல்லிவிட்டு வாருங்கள். பாவம் புரியாதவர்கள் பிதற்றுகிறார்கள்.

1 comment:

  1. || அனைத்திலும் பெரியவன், ஆதியில் உதித்தவன், அண்டங்களை ஆள்பவரான சிவனை விட்டில் வைத்து வழிபட வேண்டாம் என்று யாராவது சொன்னால், நல்ல நகைச்சுவையாக இருக்கிறது போங்கள் என்று சொல்லிவிட்டு வாருங்கள். பாவம் புரியாதவர்கள் பிதற்றுகிறார்கள் ||

    இதைப் பெரிய எழுத்தில் போல்ட் ஃபான்ட்ல் சிவப்பு நிறத்தில் போடலாம் நீங்கள்.. நன்றி.

    ReplyDelete