Follow by Email

Friday, 8 February 2013

கமலுக்கு ஒரு பகிரங்க கடிதம்கமல் சார் வணக்கம். 

நான் நலம். நாடலும் அகுதே.  எப்படி இருக்கீங்க. நலம்தானே. 

நான் உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்.  முதலில் என்னை அறிமுகப் படுத்திக்கொள்கிறேன். 

நான் உங்களின் தீவிர ரசிகன் அல்ல. நல்ல படங்களின் வரிசையில் உங்கள் படங்கள் வருவதால் உங்களை ரசிப்பவன், அவ்வளவுதான்.

(இப்போது கூட விஸ்வருபம் சிடி மலேசியாவில் ஒரிஷினல் சிடி தரத்திற்கு கிடைக்கிறது. ஆனால் தியேட்டரில் தான் படம் பார்ப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறேன். )

எல்லோரையும் போலவே விஸ்வருபம் எப்போது வெளி வரும் என்ற ஆவலில் இருந்தேன். ஆனால் அதற்குத்தான் எத்தனை தடை. 

முதலில் தியேட்டர்காரர்கள் பிரச்சனை, பிறகு டி டி ஹெச் பிரச்சனை. எல்லாம் கடந்து படம் வரும் என்று நினைத்தால் இஸ்லாமியர் பிரச்சனை.  படத்திற்கு தமிழக அரசு தடை, பின் வழக்கு என்று அல்லாடி பின் ஒரு வழியாக படம் வெளி வந்தது. 

இது முடிந்து போன கதை.  இருந்தாலும் கொஞ்சம் பேச வேண்டும். நீதிமன்றம் படத்தை வெளியிடலாம் என்று சொன்னபோது உங்கள் பேட்டி வெளியானது.

கடுமையான மன உளைச்சலில் இருந்த நிலையில் வெளிவந்த பேட்டி அது.

நான் இந்த படம் எடுப்பதற்காக என் சொத்துக்களை எல்லாம் அடமானம் வைத்திருக்கிறேன். இந்த படம் வெளிவராமல் போனால், இதோ நான் நின்று கொண்டிருக்கும் வீடு என்னுடையது இல்லை என்றாகி விடும் என்றீர்கள்.

பதறியது உங்கள் ரசிகர்கள் மட்டும் அல்ல. நானும் தான்.  கலைக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட ஒரு கலைஞனுக்கு இப்படி ஒரு சோதனையா என்று மனம் தவித்து.

மதத்தை காரணம் காட்டி மல்லுக்கு நின்றவர்களையும், அதற்கு மறைமுகமாக துணை போன தமிழக அரசு மீதும் கோவம் வந்தது.

உங்களை மாதிரியே எனக்கும் அரசியல் தெரியாது. ஆனாலும் நான் அரசியல் பேசினேன். அதற்கு என் முந்தைய பதிவுகளே சாட்சி.

அதே பேட்டியில் இந்த படம் வெளிவரவில்லை என்றால் மதம் இல்லாத ஒரு மாநிலத்தில், தேவை பட்டால் இந்தியாவை விட்டே வெளியேறி விடுவேன் என்றீர்கள்.

பூமி பந்தில் உள்ள எல்லா நாட்டு மக்களும் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்து தானே இருக்கிறார்கள். இவருக்கு மட்டும் அப்படி ஒரு நாடு இருப்பது எப்படி தெரியும் என்று யோசித்தாலும்,  அப்போது மனம் சமாதானம் சொன்னது.

அவர் அவ்வளவு சோதனைகளை சந்தித்து விட்டார். அதனால் ஏற்பட்ட வெறுப்பு என்று.

மதத்தை பற்றி பேசுகிறவர்கள் ஓன்று அரசியல்வாதியாக இருப்பார்கள், அல்லது மதவாதியாக இருப்பார்கள், பெரும்பான்மை மக்கள் அப்படி அல்ல என்று உணர்ந்ததால், அப்படி எல்லாம் ஒன்றும் நடந்து விடாது என்றே நான் நினைத்தேன்.

உங்கள் மேல் அன்புள்ளம் கொண்டவர்கள் உங்கள் இல்லம் தேடி வந்தார்கள்.  நாங்கள் இருக்கிறோம் எதற்கும் கவலை பட வேண்டாம் என்று வெறும் ஆறுதல் மட்டும் சொல்லவில்லை.

காசோலைகளையும், ரொக்கமாக பணத்தையும், தங்கள் வீட்டு சாவிகளையும் கூட கொடுத்ததாக நீங்களே சொன்னீர்கள். அதுதான் உங்கள் மீது ரசிகர்கள் வைத்த அன்பு.

இந்த அரசியலும், மதமும்  என்னை அனாதையாக்கினாலும் எனக்கு தங்க இடம் இருக்கிறது என்று சொன்ன போது சந்தோசமாக இருந்தது.

முதல்வர் பேட்டி அவருக்கு சொந்தம் இல்லாத ஜெயா டிவி யில் வெளிவந்தது. 

படம் வெளியானால் வன்முறை வெடிக்கும் என்று உளவுத்துறை அறிக்கை சொல்கிறது.  500 க்கு மேற்பட்ட திரை அரங்குகளில் படம் வெளியானால் பாதுகாப்பு கொடுக்கும் அளவிற்கு போதிய காவலர்கள் இல்லை என்று முதல்வர் சொன்னது பேட்டியாக வெளியானது. 

அபோதும் தமிழக அரசின் மீதுதான் கோவம் வந்தது. மீண்டும் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தால், மத்திய போலிஸ் பாதுகாப்பு கொடுக்கலாமா என்று நீதிபதி கேட்டால் என்னாவது என்று கூட நினைத்தேன்.

நல்ல வேளை அப்படி எதுவும்  நடக்கவில்லை. ஒருவழியாக சமாதானம் ஏற்பட்டு படம் வெளி வந்து விட்டது. 

ஆயிரம் மதவாதிகள் தோன்றினாலும், இந்திய மக்கள் மதசாற்பற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அதில் ஒன்றும் சந்தேகம் வேண்டாம். 

அங்கொன்றும் இங்கொன்றும் லெட்டர்பேட் அமைப்புகளை பார்த்து இந்தியாவில் மதவாதம் வலுத்து விட்டது என்று நினைக்க வேண்டாம்.  இவர்கள் காலப்போக்கில் காணாமல் போய் விடுவார்கள். 

படம் வெளிவந்த பிறகு மீண்டும் உங்கள் பேட்டி.  எதிர்காலத்தில் என் படத்திற்கு இது போன்ற பிரச்சனை ஏற்ப்பட்டால் நான் வெளிநாட்டில் குடியேறி விடுவேன் என்று மீண்டும் சொல்ல காரணம் என்ன? 

ஹாலியுட் படம் எடுக்க போவதால் ஏதாவது காரணம் காட்டி, தமிழக மக்கள் மீது பழியை போட்டு விட்டு அமெரிக்கா போய்விடலாம் என்ற எண்ணமா? 

அப்படியானால் மதமும் அரசியலும் என்னை அனாதையாக்கினாலும் தங்க இடம் இருக்கிறது என்று சொன்னது பொய்யா?

நீங்கள் எங்கே இருக்க வேண்டும் என்று முடிவெடுப்பது உங்கள் உரிமை. இதை யாரும் தடுக்க முடியாது.

நீங்கள் தமிழகத்தில் இல்லாமல் போனால் ஒரு நல்ல கலைஞனை திரை உலகம் இழந்து விடும் அவ்வளவுதான். வேறு ஒன்றும் நடக்க போவதில்லை.

வெளிநாட்டிற்கு போய்விடுவேன் என்று  பேசும் போது, மதத்தை தாண்டிய மனித நேயம் கொண்டவர்களை அவமான படுத்துவது போல் இருக்கிறது. பிளீஸ் வேண்டாம் கமல்.

தொடர்புடைய கட்டுரைகள்


விஸ்வருபம் தடை - அநியாயம்


2 comments:

  1. கடிதம் அருமை . கமல் எமோஷனல் ப்ளாக்மெயில் செய்வதாகவே நினைக்கிறேன் . எனது கடிதத்தையும் படித்து விட்டு சொல்லுங்கள் . கமலுக்கு ஒரு கடிதம் ...http://pesalamblogalam.blogspot.in/2013/02/blog-post_9777.html

    ReplyDelete
  2. சக்திவேல்4 March 2013 at 15:38

    இந்த படம் வரமலே இருந்திருக்கலாம், என்ன கதையென்று புரியவில்லை, புரிகின்ற மாதிரி படம் எடுக்கவும். பல்வேறு தடைகளால் தான் இந்த படம் வெற்றி பெற்றது.

    ReplyDelete