விடியலுக்காக காத்திருக்கும் பறவைமாதிரி நல்லகாலத்திற்காக காத்திருக்கும் மனிதனுக்கு, நம்பிக்கை தருகிற ஒரு விஷயம் பரிகாரம்.
பரிகாரத்தை செய்தால் ஒரு முடிவு காலமும், ஒரு விடிவு காலமும் வந்துவிடும் என்று நம்புகிறார்கள்.
இருக்கட்டும்.
ஜாதக பலா பலன்களை சொல்லும் ஜோதிடர்கள் எல்லோருமே, சொல்கிற பரிகாரங்கள் கிட்டத்தட்ட ஒரு மாதிரிதான் இருக்கிறது.
இது என்ன கதையா இருக்கு. பரிகாரம் சொல்வதற்காக ரூம் போட்டா யோசிக்க முடியும் என்று சிலர் முணுமுணுப்பது கேட்கிறது.
அவர்களை சொல்லி குற்றமில்லை. மூல நூல்களில் அப்படித்தான் இருக்கிறது.
இது கேள்வி. இதோ பதில்.
நடப்பில் இருக்கும் சூரிய திசை அடுப்பில் போட்டு வறுத்த மாதிரி காய்ச்சி எடுக்கிறதா.. உலகத்தில் பெரிய சாமி சிவனை வணங்குங்கோ.
மந்திரம் போட்ட மாதிரி சந்திர திசை மன அமைதியை கெடுக்கிறதா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அம்மனை கும்பிடுங்கோ. நல்லதே நடக்கும்.
செவ்வாய் திசை வந்ததில் இருந்தே செயல்லிழந்து போனீர்களா? தொட்டதெல்லாம் தோல்வியா? சூரனை வென்ற வீரன் முருகனை கும்பிடுங்கோ. எல்லாம் மறையும்.
புதன் திசை வந்ததில் இருந்தே, கரையான் புற்றுக்குள் கருநாகம் குடி புகுந்த மாதிரி மனதில் கவலையா? உலகளந்த நாயகன் பெருமாளை சேவியுங்கோ. சேமமா இருக்கலாம்.
பந்திக்கு முந்தியும் பரிமாற்ற ஆள் இல்லைங்கிற கதையா,குரு திசை வந்ததில் இருந்து, எங்கும் எதிலும் ஏமாற்றமா, தில்லைநாதனை வணங்கினால் தொல்லைகள் தீரும்.
என்று சுக்கிர திசை வந்துச்சோ, அன்றில் இருந்து, எந்த தேவதையும் என்னை ஆசிர்வதிக்கவில்லை. எல்லா சாத்தான்களும் சபிக்கின்றன என்று விரத்தி கலந்த புலம்பலா, அம்பாளை கும்பிடுங்கோ அனைத்தும் சரியாகும்.
சனி திசை நடக்குது. விருந்துக்கு வைச்சுருக்கிற பணம் மருந்துக்கு செலவாகுதுன்னு புலம்பலா, காளியம்மனை வணங்கினால் சூரியனை கண்ட பனிபோல் மறையும்.
கேது வந்ததில் இருந்தே கேவலப்படுறேன். வாழ்ந்தான் என்பது மாறி, வீழ்ந்தான் என்ற அவச்சொல் வந்துவிடும் என்று மனம் தவிக்கிறதா. விநாயகரை வணங்கினால் போதும். .
இதுநாள் வரை பந்தய குதிரையில் முந்திய குதிரையா இருந்தேன். ஆனால் இப்போ நடக்க கூடாதது நடந்த மாதிரி, இழக்க கூடாததை இழந்த மாதிரி எல்லாமே தலைகீழா இருக்கிறதா, துர்க்கையை வணங்குங்கோ. பஞ்சு பஞ்சா மறைந்சுபோகும்.
இப்படித்தான் சொல்கிறார்கள். சரி நாம் விஷயத்திற்கு வருவோம்.
ராகு திசை வந்தால் ஏன் துர்க்கையை வணங்க சொல்கிறார்கள்?
ராகுவின் அதிதேவதை துர்க்கை. இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் ராகு காலம் என்பது சுப காரியங்கள் விலக்கு என்று சொல்லப்பட்டாலும், இந்த ராகுகாலம் என்பதின் விவரம் வேறு.
அதாவது ராகு தன் அதிதேவதையான துர்க்கையை வணங்கும் நேரமே ராகு காலம்.
அந்த நேரத்தில் ராகு பகவான் துர்க்கைக்கு முன் அமர்ந்து துர்க்கையை பூஜிப்பாராம்.
நாம் ராகு திசையால் பாதிக்கப்படும் போது, ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், ஒரே நேரத்தில் ராகு பகவானையும், துர்க்கையம்மனையும் வணங்கலாம் என்பதால் தான், ராகுகால பூஜை செய்ய சொல்கிறார்கள்.
இதை ஞாயிறு அன்றும், செவ்வாய் அன்றும் மட்டும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
ஒவ்வொரு நாளும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வணங்கலாம். ராகு வழியாக வரும் இடர்பாடுகள் குறையும். விலகும். எதிர்காலமே புதிர் காலமாக இருந்த நிலை மாறும். செய்து பாருங்கள்.
No comments:
Post a Comment