வாழ்க்கை வாழ்வதற்கே
கடவுள் மனிதனை படைத்து நல்லபடியாக வாழ்ந்து வா என்றுதான் அனுப்பி வைக்கிறான். நாம்தான் நந்தவனத்து ஆண்டியாக வாழ்க்கையை போட்டு உடைத்து விடுகிறோம்.
கவலை மூட்டைகளை சுமந்துக் கொண்டு வாழ்க்கையை சுமையாக்கி விடுகிறோம்.
எது நடந்தாலும், நாம் அந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்கிறபோது, எது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்கும் என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டு, சந்தோசஷமாக எதிர்கொள்வதில் என்ன நஷ்டம்.
பீஷ்மர் போர்முனையில் கூட சந்தோஷமாக இருந்தாராம். சாவின் விளிம்பிலும் அனைவருக்கும் நீதி சொல்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்கிறார்.
சண்டையின் போது சிரிக்க தெரிந்தவன் எதிரியை கொஞ்சம் கொஞ்சமாக வெல்கிறான் என்கிறது உளவியல்.
சந்தோசமான மனநிலையை வளர்த்துக் கொண்டால் கவலைகளை வென்று விடலாம். காலையில் எழுந்திருக்கும் போதே உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக என்ற சந்தோசத்தோடு எழுந்திரியுங்கள். உண்மையில் அந்தநாள் உங்களுக்கு உற்ச்சாகமாகவே அமையும்.
இந்த உலகில் பிரச்சனை இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. பில்கேட்ஸ்க்கு கூட பிரச்சனைகள் இருக்கிறது. அவர் கம்பெனிமேல் நிறைய வழக்குகள் போடப்பட்டு நடக்கிறது.
அவர் எப்போதும் தன்னை நம்பர் ஒன்னாகவே வைத்திருக்க போராட வேண்டி இருக்கிறது.
ஆனாலும் அவர் பிரச்சனைகளை பற்றியே நினைத்து கொண்டிருந்தால் அவரால் வெற்றி பெறவே முடியாது.
பல கஷ்டங்கள் நாமே உருவாக்கி கொண்டதுதான். நம்மால் அவற்றை போக்கி கொள்ளவும் முடியும். அதில் புதைந்து போகவும் முடியும். புதைந்து போன மனிதன் புலம்பிதான் திரிவான். ஆனால் சிந்திக்க தெரிந்த மனிதன் சிரித்துத்தான் வாழ்வான்.
சிரிக்க திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடும் என்கிறார் கவிபேரசு. சிரிபொலி கேட்கும் வீட்டின் திண்ணையில் மரணம் உட்காருவதே இல்லை.
ஒவ்வொரு சிரிப்பிலும் சில மில்லிமீட்டர் உயிர் நீளக்கூடும். மரணத்தை தள்ளிப்போடும் மார்க்கம் தான் சிரிப்பு என்கிறார் அவர்.
ஒரு ஜென் ஞானி இறக்கும் தருவாயில் இருந்தார். சுற்றிலும் சீடர்கள் சோகமாக நின்றுக் கொண்டிருந்தனர். அவரது தலைமாட்டில் நிற்கும் சீடரை பார்க்கிறார் ஞானி. சீடர் வெளியே ஓடுகிறார். குருவிற்கு பிடித்த இனிப்பு பலகாரத்தை வாங்கி வருகிறார்.
குருவுக்கு சந்தோசம். அதை ஆசையோடு வாங்கி சாப்பிடுகிறார். பின் அந்த சீடரை அருகில் அழைக்கிறார். கடைசியாக உபதேசம் செய்யத்தான் அழைக்கிறார் என்று நினைத்த சீடர் அருகில் சென்று குனிகிறார்.
குருவின் உதடுகள் மெல்ல அசைகின்றன. ஆஹா என்ன ருசி. சொல்லிவிட்டு முகத்தில் அந்த இறுதி சிரிப்புடன் கண்களை மூடுகிறார்.
சீடருக்கு குருவின் உபதேசம் புரிகிறது. வாழ்வின் கடைசி நிமிடம் வரை வாழ்க்கையை ருசிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பதே அந்த உபதேசம். வாழ்க்கை ஒரு சந்தோஷ சாகரம். இதை தெரிந்து கொண்டவன் முத்தெடுக்கிறான். தெரியாதவன் மூச்சு திணறுகிறான்.
உங்கள் புன்னகை தான் மற்றவரை உங்களை நோக்கி இழுத்து வரும். புலம்பல்கள் அல்ல.
நல்ல படைப்பு... நன்றி...
ReplyDeletethanks Danabalan sir
ReplyDeleteMathivanan