கடவுள் எங்கிருக்கிறார்?
இது நாத்திக கேள்வி அல்ல. ஆத்திகர்களிடமும் அனுதினம் எழும் கேள்வி இதுதான்.
கடவுள் இருப்பதாய் சொல்லப்படும் சத்தியலோகமும்,பிரமலோகமும், சிவலோகமும், இந்திரலோகமும் எந்த திசையில் இருக்கிறது. இதுவரை எவருக்கும் தெரியாது.
வழிசொன்ன அத்தனை பேருமே வானத்தை நோக்கியே கை நீட்டுகிறார்கள். வாருங்கள் வழிதேடுவோம்.
பிரம்மம்..... பரபிரம்மம்... எல்லாம் பிரம்மமயம்.
மண் பிரம்மம், மலை பிரம்மம், கடல் பிரம்மம்,செடி பிரம்மம், கொடி பிரம்மம். அவ்வளவு ஏன்? அனைத்து ஜீவராசிகளும் பிரம்மமயம் என்னும் தத்துவ கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த ஆதிசங்கரர் காலத்திற்கு அழைத்து செல்கிறேன் வாருங்கள்.
அது ஒருவழிப்பாதை.. ஆதிசங்கரர் நடந்து போகிறார். எதிரே சில அடி தூரத்தில் ஒரு சாம்மானிய மனிதன் நடந்து வருகிறான்.
அந்த சாமானிய மனிதன் யார்?
சூத்திரன் என்று சூத்திரன் என்று சுருக்கமாக சொல்வார்கள்.
ஆச்சாரியம் மிக்கவர்கள் முன் அற்பர்கள் வரலாமா?
இது ஒன்னும் எழுத்தறிவு இல்லாதவருக்கு எழுந்த கேள்வி அல்ல. ஆதிசக்தியின் அருள் பெற்ற ஆதிசங்கருக்கே வந்தது.
அடேய் ...சண்டாளா.. புலையனே விலகிப்போ...!
கோவத்தில் வார்த்தைகளை கொட்டுகிறார் சங்கரர்.
அப்போது..சாமானிய மனிதன் பதறவில்லை. அவன் வாயில் இருந்து சத்திய வார்த்தைகள் வருகிறது.
சுவாமி... எல்லாம் பிரம்மமயம் என்கிறீர்கள். இந்த உலகம் முழுவதும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்றால், அந்த இறைவன் இல்லாத இடம் எது? இருந்தால் சொல்லுங்கள் நான் அங்கே விலகி செல்கிறேன்.
பொட்டில் அறைந்த பொறிகலங்கி போயிற்று சங்கரருக்கு. அப்போதுதான் ஆதிசங்கரருக்கே அறிவுக்கண் திறந்தது.
என்னை மன்னித்து விடு...நீதான் பிரம்மம் என்று அந்த சாமானியனின் காலில் விழுந்தாராம். சங்கருக்கு ஒழிந்தது ஜாதி துவேசமாக இருக்கலாம்.
ஆனால் சங்கரரின் பழைய வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால். புலையன் உருவத்தில்தான் இறைவன் காட்சியளித்தார்.
இதுதான் எதார்த்த உண்மை. பொதுவாக தெய்வ தரிசனம் என்பது ஞானிகளுக்கும், ரிஷிகளுக்கும் சாத்தியமாயிற்று.
காரணம்..
பற்றற்றவர்கள். தான் தன் சுகம் என்று எந்த வட்டத்திற்குள்ளும் வாழ்ந்தவர்கள் இல்லை. அதனால் சாத்தியமாயிற்று.
என்றாலும் ஞானிகள் ரிஷிகள் என்று இல்லை. சாதாரண குடியில் பிறந்தவர்களுக்கும் கூட, தெய்வ அனுகூலம் கிட்டிய வரலாறுகள் அதிகம்.
பழத்தால் பிரிந்தது பரமசிவன் குடும்பம். அதே பழம்தான் புனிதவதி அம்மையாரின் வாழ்க்கையிலும் புகுந்து விளையாடியது. சிக்கலை தீர்க்க பரமசிவனே வருகிறார்.
பறவைநாச்சியாரோடு ஏற்ப்பட்ட பிணக்கை தீர்க்க சிவபெருமானே தூது போகிறார். சுந்தரர் வாழ்க்கையில் சூனியம் விலகியது.
அதுமட்டுமா... நீலகண்டர்.. நாயன்மார் வரிசையில் இவர் நாமமும் ஓன்று. பகவானை சேவிப்பது பக்தர்கள் பணி. அன்றும் அப்படித்தான் தில்லைவாழ் நடராஜரை சேவித்து விட்டு வீடு திரும்புகிறார்.
வானம் இருண்டது. கருமேகம் சூழ்ந்தது. சற்று நேரத்தில் இடி மின்னலோடு மழை கொட்டுகிறது.
ஆபத்திற்கு பாவமில்லை என்று அருகில் இருந்த குடிசையின் ஓரம் ஒதுங்குகிறார்.
அந்த நேரம் பார்த்தா அவ்வீட்டின் ஜன்னல் திறக்க வேண்டும். அவ்வீட்டின் பெண்மணி வெற்றிலை எச்சிலை வெளியே துப்ப வேண்டும். துப்பியது என்னவோ வெளியே...விழுந்தது என்னவோ நீலகண்டரின் மீது.
கற்பிழந்த பெண் போல் கலங்கி போனாளாம் அந்த பெண். அறியாமல் செய்த பிழைக்கு அருள் கூர்ந்து மன்னிக்க வேண்டும் என்றவள், தவறுக்கு பிராயசித்தமாக ஆடைகளை துவைத்து, நீராட்டி, புது வஸ்த்திரம் அணிவித்து அனுப்பி வைத்தாளாம் நீலகண்டரை.
இந்நிகழ்வுதான் நீலகண்டரின் வாழ்க்கையில் நீங்காத கறையாகப் போனது. இச்செய்தி நீலகண்டரின் இல்லத்தரசிக்கு போனது. தவறினான் தன் கணவன் என்று தவறாக முடிவு கட்டினாள்.
அதற்க்கு என்ன விலை தெரியுமா?
வாலிபத்தில் தொடங்கிய பிணக்கு வயோதிகம் எட்டும் வரை, இல்லறத்தொடர்பு இருவருக்கும் இல்லை.
ஆனால் பிணக்கை தீர்க்கவும், தவறான கணக்கை முடிக்கவும் அந்த நீலகண்டன் தான் அந்தணர் உருவத்தில் வருகிறார்.
இது வெறும் கதைகளல்ல. கடவுள் மீது மாறாத அன்பு வைத்தால் அந்த பலன் நிச்சயம் உண்டு என்ற உண்மையை உணர்த்துகிற தத்துவங்கள்.
அனைத்து மதங்களும் போதிக்கும் அறசெய்தி ஒன்றுதான்.
அது நம்பிக்கை வை.
சரி... மதம் என்பது என்ன?
மனிதத்தை போதிப்பது மதம். அறிவை போதிப்பது மதம். அகமும் புறமும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று உணர்த்துவது மதம்.
அதற்க்கு பக்தி மார்க்கம் என்பது ஒரு வழிப்பாதை. இன்று பக்தி வளர்ந்திருக்கிறது. ஆனால் ஒழுக்கம் குறைந்து விட்டது. தனிமனித பண்பில் இருந்து தவறுகிறவர்கள் ஏராளம்.
ஆலயத்தில் தொழுகிற ஒருவன்,அருகில் நிற்கும் பெண்ணின் அங்க வளைவுகளை உற்று நோக்குகிறான் என்றால், அந்த பக்தியால் எந்த பயனும் இல்லை.
நம்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார்...பூஜை, விரதம், சாமி, கடவுள்ன்னு சொன்னாலே எரிச்சலா இருக்கு. அதுக்காக நான் நாத்திகவாதி இல்லை. நித்தியகால பூஜையை நித்தம் நித்தம் செய்தவன் நான்.
அனுஷ்டிக்ககாத விரதம் இல்லை. ஆனால் வாழ்க்கை மாறிச்சா...இல்லை. சராசரி வாழ்க்கைதான். அதில் இருந்து ஒரு சாண்கூட மேலே போகலை.
வழிபாடுகள் வாழ்க்கையை மாற்றி அமைக்கலைன்னா...எதுக்கு சாமி கும்பிடனும். விரதங்களால் எந்த பலனும் இல்லைன்னா.. உடல் வருத்த வேண்டிய அவசியம் என்ன? நடக்கிறது நடக்கட்டும் என்று இருக்காலாமே.
நான் சொன்னேன். நீங்க கடவுளை காசு அடிக்கிற மிஷினா பார்க்கிறதாலே வந்த வினைதான் இந்த விரக்தி.
கடவுள் உங்களுக்கு என்ன கொடுக்கலை. அன்பான அப்பா அம்மாவை கொடுத்திருக்கார். அங்க குறைபாடு இல்லாத உடம்பை கொடுத்திருக்கார். கற்ற கல்விக்கு என்ற மாதிரி கவுரவமான வேலையும் இருக்கிறது.
குடும்ப வாழ்க்கையும் எந்த குறையும் இல்லை.அன்பான மனைவி, அழகான குழந்தைகள் என்று அற்ப்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுத்திருக்கும் போது, கடவுள் கருணை இல்லாதவர்ன்னு நினைக்கிறது அறியாமை.
பலனை எதிர்ப்பார்க்கிறதுக்கு பெயர் பக்தி இல்லை. இவ்வளவு முதலீடு செய்தால், எவ்வளவு லாபம் வரும் என்று கணக்கு பார்க்க இது வியாபாரம் இல்லை. ஆத்ம திருப்தி.
கடமையை செய்.. பலனை எதிர்பார்க்காதே என்கிறது பகவத்கீதை. உன் கடமை பக்தி செலுத்துவது மட்டும்தான். கடவுளை நம்புவது மட்டும்தான். உனக்கு வரவேண்டியது வரும்.. அது வர வேண்டிய நேரத்தில் வரும்.
பிள்ளைகளை பார்த்தது பார்த்து வளர்க்கும் பெற்றோர், ஒரு கட்டத்தில் அந்த பிள்ளைகளின் தயவில் வாழ வேண்டிய ஒரு சூழ்நிலை வருகிறது. காரணம் முதுமை.
அப்போது அரவணைக்க வேண்டியவன், அலச்சிய படுத்திவிட்டு ருத்ராச்ச கொட்டையும், நெற்றியில் பட்டையும் போட்டுக்கொண்டு நான் பெரிய பக்திமான் என்றால் எந்த பலனும் வராது.
கடவுளின் உருவமாக காட்சியளிக்கும் பெற்றோரை தவிக்க விடுகிற எவருக்கும் கடவுளின் கடைக்கண் பார்வை கூட கிடைக்காது.
ஒரு பெரியவர் தன் மகளுக்கு நல்ல வரனை பார்த்து முடிவு செய்தார். தன் தகுதிக்கு மீறிய இடத்தில் சம்பந்தம் என்பதால் தாராளமாக டவுரி தருவதாக வாக்களித்தார்.
திருமண தேதி நெருங்கி விட்டது.உதவி செய்வதாக வாக்களித்தவர்கள் ஒதுங்கி கொண்டார்கள். பேசியபடி சீர் செய்யவில்லை என்றால் திருமணம் நின்று விடுமே என்று தவித்து போகிறார்.
தகவல் மாப்பிளையின் அப்பாவிற்கு போகிறது. அவர் என்ன சொன்னார் தெரியுமா?
எங்கள் வம்சம் தழைக்க நல்ல குணமுள்ள பெண் வேண்டும் என்று நினைத்தோம். அமைந்து விட்டது.
அவள் என்ன நகை போட்டு வருகிறாள் என்று பார்க்கப்போவதில்லை. ஆண்டவன் அருளால் வேண்டிய வசதி இருக்கிறது. அதனால் கவலையை விடுத்து ஆகவேண்டியதை பாருங்கள்.
இப்போது பெண்ணின் தந்தைக்கு மாப்பிளையின் தந்தைதான் கடவுளாக தெரிந்தார்.இதுதான் எதார்த்தம்.
உண்மையில் கடவுள் வருவார் என்றதும் கையில் சூலத்தையும், வேலாயுதத்தையும் ஏந்தி கொண்டு வருவார் என்று நினைக்க வேண்டாம். நல்லவர்கள் உருவத்தில் கடவுள் காட்சியளிப்பார்.
சுகி சிவம் சொல்வது போல், ஓடும் பஸ்ஸில் ஏறும்போது கால்தடுக்கி விழப்போன உங்களை ஒருவர் தாங்கி பிடித்தால், அந்த நேரத்திற்கு அவர்தான் கடவுள்.
தீர்க்க முடியாத வியாதியால் திண்டாடிய உங்களுக்கு சரியான மருத்துவம் செய்து டாக்டர் காப்பாற்றுகிறார் என்றால், எந்த சந்தேகமும் இல்லை. மருத்துவர்தான் கடவுள்.
தொட்டதெல்லாம் தோல்வியாகி முன்னேறவே முடியாமல் தடுமாறும் போது, ஒருவர் வழிகாட்டுகிறார் என்றால் அவர்தான் கடவுள்.
கடவுளை எங்கும் தேட வேண்டாம். நம்மை சுற்றியே இருக்கிறார்கள். வானத்தில் இல்லை. நம் வாழ்க்கையில் தேடி பாருங்கள் தெரியும்.
அருமையாக விளக்கமாக சொல்லி விட்டீர்கள்... பாராட்டுக்கள்... நன்றி...
ReplyDeleteமனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..
ReplyDeleteதங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.
ReplyDelete