Follow by Email

Tuesday, 22 January 2013

புத்தாண்டு பலன்கள்!!


மேஷம் 

அது அதற்கு ஒரு கவலை. ஐயாவிற்கு பல கவலை என்று சொல்லமுடியா விட்டாலும், ஓரளவு அனுகூலமாக இருக்கும். 

 உங்கள் செயலும் சொல்லும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். மலையை கில்லி எலியை பிடிக்க முயற்சிக்கப் போவதில்லை. 

இருப்பினும் வேண்டாத சிந்தனையை அறவே  விடவே முடியாது. இதுவரை இருந்த மன உளைச்சல் மறைமுக எதிர்ப்பு குறைந்த மாதிரி இருக்கும். ஆனால் மறையாது.

புத்தாண்டு பஞ்ச் 

துரத்தி வந்த ஆபத்தொன்று தொலைவில் நிற்பதும், அருகில் வந்த அதிர்ஷ்ட  வாய்ப்பொன்று அடுத்தவர் கைக்கு போவதும் கண் கூடு.

ரிஷபம் 

அள்ளி கொடுத்தால் சும்மா... அளந்து கொடுத்தால் கடன்.  கிரகங்களின்  எண்ண ஓட்டம் இதுதான்.

அதாவது... இதனால் ரிஷப   ராசிகாரர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் கிரகங்கள் அளந்து தான் கொடுக்கும்.

இருப்பினும் முக்கியமானவர்களிடம் இருந்து முன்னேற்றமான தகவல் வரும்.புரியாமல் இருந்த பல விவகாரங்கள் புரிய வரும்.

புதிய சிந்தனையில், புதியவர் கூட்டணியில்  புது ரூட்டில் பயணம் செய்யலாம். இருந்தாலும் பைபாஸ் ரோட்டில் பயணம் அல்ல. சிக்னல்கள் நிறைந்த சிக்கலான பாதை என்பதை மறந்து விட வேண்டாம்.

                                                                      புத்தாண்டு பஞ்ச் 

உடன்பாடில்லாத ஒரு விஷயம் ஒதுங்கி போனாலும் வாக்கு கொடுத்த வகையில் வம்பு ஓன்று தேடி வரும்.


மிதுனம் 

ஆல் பழுத்தால் அங்கே அங்கே கிளி. அரசு பழுந்தால் இங்கே  கிளி என்பது போல், உங்களிடம் ஆதாயம் பெற்றவர்கள் அருகில் இருக்கப் போவதில்லை.

அன்பானவர்களின் அலச்சியப்போக்கு தொடரப் போகிறது. அதோடு தட்டிக் கொடுக்காத நிர்வாகத்தின் தலைக்கணம் ஒரு புறம், தட்டிக் கேட்க முடியவில்லையே என்ற தவிப்பு புறம் தொடரும். ஆனாலும் நல்ல பொழுது விடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

                                                                       புத்தாண்டு பஞ்ச் 


எதிர்கால லச்சியம் ஓன்று ஈடேறாமல் போவதும்,அறிமுகம் இல்லாத ஒருவரிடம் இருந்து ஆதாயம் பெறுவதும்  நடக்கும்.


கடகம் 
கறக்கிறது ஆழாக்கு உதைக்கிறது பல்லுபோகவாம்.  நான் உங்கள் பணியிட அமைப்பை சொல்றேன்.

நீங்க அமைதியா, பொறுமையா, இருக்கீங்க. இருப்பிங்க, இருக்கணும். அதையே கீபப் பண்ணுங்க.

பல்லக்கில் போன உங்களுக்கு இந்த வருடம் பல்லக்கு தூக்குகிற வருடமாக இருக்கும்.

சந்தோசத்தை தேடி தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். சந்தேகங்களுக்கு விடை தெரியாது.

அதனால் வாயை திறக்காமல் இருந்தால் வாய்ப்புகள் வாசலில் நிற்கும். அசட்டு துணிச்சலால் ஆபத்தை தேடிக்காதிங்க.

                                                                       புத்தாண்டு பஞ்ச் 

உடன் பிறந்தோரின் உதவி கிடைப்பதும், உறக்கமில்லாத இரவுகள் தொடர்வதும் இவ்வருட சிறப்பு.


சிம்மம்

வாழைப்பழம் கொண்டுபோனவன் வாசலில் இருந்தான். வாயை கொண்டுபோனவன் நடுவீட்டில் இருந்தானாம்.

அந்த கதையா எந்தனையோ ஏமாற்றங்களை சந்தித்ச்சாச்சு. உள்ளவனே நல்லது செய்யலை.

இந்த வருடம் அதை மாற்றி அமைக்கும். காணக்கிடைக்காத பொற்காலமே கண்ணெதிரே தெரியும். வாழும் கலையில் வல்லவரான  உங்களுக்கு வாழ கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வாழ்ந்து பாருங்க.

                                                                         புத்தாண்டு பஞ்ச் 

நீண்டநாள்  கோரிக்கை ஓன்று நிறைவேறுவதும், வலுவிழந்த வழக்கொன்று வாசலுக்கு வருவதும் இவ்வருட சிறப்பாக இருக்கும். 

கன்னி 

கள்ளன் செய்த சகாயமே காதை அறுக்காமல் தோட்டை கழட்டியதுதான்னு  சொல்ற மாதிரி, இழப்புகள் பலவற்றை சந்தித்தாலும் முற்றிலும் இழந்தது விடவில்லை.

வருட கடைசி  வரைக்கும் இந்த வார்த்தை மாறாமல் இருக்கும். நோயை கொடுத்து பாயில் படுக்க வைக்கிற சனி, எதிர் காலத்திற்காக எதையும் செய்ய விடமாட்டார்.

புதிய வாய்ப்புகள் வந்தாலும் அதையும் ஒரு எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்வார்.

                                                                   புத்தாண்டு பஞ்ச் 

நஷ்டத்தில் லாபமும் , கஷ்டத்தில் சுகமும், கடைசி வரை கடவுள் இருப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கும். இது மாறவே மாறாது. 

துலாம்

அரிசி கொண்டு போய் அக்கா வீட்டில் விருந்து சமைச்சு  சாப்பிட்ட மாதிரி ஆதாய விஷயங்களில் அவ்வளவு திருப்தி வராது.  

ஏமாற்றப்படுவோமா என்கிற பயம், மிரட்டும் வழக்குகள், இனம் புரியாத கவலை, எதிர்கால கேள்விக்குறி  என்று ஒரு புறம் நெருக்கடிகள் தோன்றினாலும் வாயில்லாத பூச்சியாக வாழவேண்டி இருக்காது.

கடைசி நேரத்தில் கண்டத்தில் இருந்து தப்பித்த மாதிரி திடீர் அதிர்ஷ்டக் காற்று அடிக்கும்.

                                                                      புத்தாண்டு பஞ்ச் 


சரிவுகள் இல்லை என்றாலும் உறவில் பிரிவுகள் இருக்கும். பழைய வில்லங்க விவகாரம் ஒன்றில் தீர்வு வருவதும், புதுக் கவலை ஓன்று மிரட்டிப் பார்ப்பதும் இவ்வருட விசேசம்.


விருச்சிகம்

முடிச்சவிழ்த்து கொடுத்ததும் இல்லாம இளிச்சவாயன் பட்டமும் கிடைத்தது ஆனாலும் தலை தப்பியது.

அபரீதமான வசதி வாய்ப்பும் வந்தது. விட்டுப் போன VIP அந்தஸ்தும் கிடைத்தது. 

வேண்டியதை சேகரித்து வேண்டியவரை அரவணைத்து, விரும்பிய வாழக்கையை வாழ்ந்தீர்கள். இப்போது அதற்கு ஆபத்து புத்தாண்டு வடிவில் வருகிறது. 

அலைச்சல் திரிச்சளுக்கு பிறகு ஆதாயம் கிடைத்தாலும் அதிர்ச்சியும் காத்திருக்கும். அதோடு சுபகாரியம் நடத்தல், உறவுகள் நெருக்கமாதல், தொழில் வகை முன்னேற்றம் என்பதில் எல்லாம் சிக்கல்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். 

                                                                   புத்தாண்டு பஞ்ச் 

உற்ற உறவுகள் குற்றம் சொல்வதும், சண்டைக்காரர்களுடன் சமாதானம் ஆவதும் இவ்வருட சிறப்பு.

                                                                               தனுசு 


ஏறமுடியாத மரத்தில் எண்ணாயிரம் மாங்காய் காய்த்த மாதிரி இருந்தது இதுவரை.

பெரிய கஷ்டங்களை சந்திக்கா விட்டாலும், ஏளனபிரவியாக மாறிவிடக்கூடாது என்பதில் தான் குறிக்கோளே இருந்தது. அதற்க்கு ஒரு விடிவு காலம் பிறந்த மாதிரி மாபெரும் சபையில் மாலைகள் விழும் மகத்தான ஆண்டாக இது இருக்கும்.

தேவைக்கு ஏற்ப பணம் தேடி வரும். குடும்பத்திலும் குடும்ப தலைவனாய் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை தவறாது செய்யலாம்.

உங்கள் சக்திக்கு மீறி சுப காரியம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை தேடி வரும்.

                                                                       புத்தாண்டு பஞ்ச் 

கடன் தொல்லையில் விடுபட்டாலும், உடன்பாடில்லாத விஷயங்களில்  உடன்பட வேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.


                                                                                  மகரம் 

குதிரை குருடா இருந்தாலும் கொள்ளு  திங்கிறதிலே குறை இல்லை. என்பது உண்மையாக இருக்கும்.

சில எதிர்பாராத தோல்விகளும், ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். கூடவே சில யோகங்களும் வரும் என்பதை மறுக்க முடியாது.

விருந்துக்கு போகும்போதே மருந்தும் சாப்பிட்ட மாதிரி அந்த சந்தோசங்களுக்கு இடையே சங்கடமும் தேடி வரும்.

சில விஷயங்கள் பிடிபடாது. எதிலும் துணிந்து இறங்க, துணைக்கு அழைப்பது இறை சக்தியாக இருந்தாலும் நடக்கும் போது நடக்கட்டும் என்று மனதை சமாதானம் செய்து கொள்வீர்கள்.

இருப்பினும் ஒரு கதவு மூடினால் மறுகதவு திறக்கும் என்பது போக போகப் புரியும்.

                                                                             புத்தாண்டு பஞ்ச் 

பெரிய அதிர்ச்சியில் இருந்து மீள்வதும், புதிய அதிஷ்டம் ஒன்றை சந்திப்பதும் நடக்கும்.                                                                                கும்பம் 

அவரை போட்டால் துவரை முளைத்தது. துவரை போட்டால் அவரை முளைத்த கதையில் மாற்றம் வரும்.

உங்கள் சொந்த முயற்ச்சியின் மூலம், செய்கிற தொழில் மூலம், பூர்வீக சொத்துக்கள் மூலம், பிள்ளைகளின் அந்தஸ்து உயர்வதின் மூலம், பணமும் பதவியும், உதவியும், தேடி வரப்போகிறது.

உங்களை உதாசீனம் செய்தவர்கள், நீங்கள் உயர்ந்து நிற்பதை பார்ப்பார்கள். நீங்கள் உதவாக்கரை அல்ல, உதாரண புருஷன் என்பது புரியும்.

                                                                           புத்தாண்டு பஞ்ச் 

ஒதுங்கி போன உதவி கரம் ஓன்று திரும்பி வருவதும், விரும்பிய விருப்பம் ஓன்று கசப்பில் முடிவதும் கண்கூடு.


                                                                                   மீனம்

உயிரோடு இருக்கும் போது ஒரு முத்தம் தராதவள் செத்த பிறகா உடன் கட்டை ஏறப்போரா  என்பது உண்மையாகும்.

சென்ற ஆண்டின் சோகங்கள், துரத்தி வந்த துயரங்கள், நிறைவேறாத கோரிக்கைகள், அருகில் வராத அதிஷ்ட வாய்ப்புகள், இந்த ஆண்டாவது வருமா என்பது உங்கள் எதிர்ப்பார்ப்பு.

கவலையை விடுங்கள். ஆரம்பம் என்று ஓன்று இருந்தால் முடிவு என்று ஓன்று இருக்கத்தானே செய்யும். முடிவு சுபமாக இருக்கும் நம்புங்கள்.

                                                                         புத்தாண்டு பஞ்ச் 

ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதி படுவதும், அதிஷ்ட வாய்ப்புகளால் ஆனந்த படுவதும் இவ்வருட சிறப்பு.

1 comment:

  1. பழமொழிகளை போட்டு பட்டையை கிளப்பி இருக்கீங்க. வாழ்த்துக்கள்

    ReplyDelete