Follow by Email

Tuesday, 8 January 2013

என்னதான் சொல்கிறது ஹிந்துமதம்?


வாழ்க்கையே நம்பிக்கையில்தான் நகர்கிறது. நம்பிக்கை...அதுதான் அச்சாணி. அதுதான் ஆணிவேர்.

நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை, நல்லது கிடைக்கும் என்ற நம்பிக்கை, நல்லதை பெறுவோம் என்ற நம்பிக்கை.  

அந்த நம்பிக்கைக்கு மதம் என்பது ஒரு அடித்தளம் மட்டும் அல்ல, ஏறிச் செல்லும் ஏணியும் கூட.

அது 

சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாகவும், பூஜை புனஸ்காரங்களாகவும், யாகம் வேள்வி, யக்னம் ஹோமம் என்று விரிந்து கொண்டே போகிறது. 

நண்பர்களே எனக்கு அவ்வப்போது தோன்றும் கருத்துக்களை இதே தலைப்பில் தொடர்ந்து எழுதப்போகிறேன். இத் தொடர் மூலம் உங்களை நம்ப வைப்பதில்லை என் நோக்கம். சிந்திக்க கற்று கொடுப்பதுதான்.

இதை நம்பு, இதை ஏற்றுக்கொள், இதை கடைபிடி என்று எந்த கட்டளையும் பிறப்பிக்க போவதில்லை.

சிந்திக்க வைப்பதுதான்.

புகை வருகிறது. அந்த இடத்தில் புகை இருக்கிறது என்பதை விட, அந்த புகைக்கு காரணமான நெருப்பும் இருக்கிறது என்பதை உணர்த்துவதுதான் என் நோக்கம்.


வாருங்கள் ஹிந்துமஹா சமுத்திரத்திற்குள் இறங்குவோம்.

ஹிந்து மதத்தை பற்றி எல்லோராலும் எழுப்பப்படும் கேள்வியே இதுதான்.

ஹிந்து மதத்தின் திருஷ்டிகர்த்தா யார்?

இயேசுவை போல், புத்தனை போல், நபிகள் நாயகத்தை போல் ஹிந்து மதத்தின் மூல ஆதாரம் யார்? யாரால் தோற்றிவிக்க பட்டது.

இந்த கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. பதில் சொன்ன பலர் சனாதன தர்மம்  என்றார்கள்.

அதாவது ஆதி அந்தமில்லாத மதம் என்று பொருள்.

ஆனால் என் பதில் இதுதான்.


ஹிந்துமதம் என்பது தெய்வ மதம். இறைவனால் சொல்லப்பட்ட கருத்துக்களின் மீது செங்கல் செங்கலாய் அடுக்கி  எழுப்பட்ட மதம் ஹிந்து மதம்.

ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், யோகிகளும், சித்தர்களும் ஞான கருத்துக்களை வழிநடத்த வந்த சாரதிகள்.

முதலில் வைதீக மதமாய் தோன்றி, சைவமாக வளர்ந்து, வைணவமாக பிரிந்தாலும் ஹிந்து மதம் தெய்வமதம்தான்.


ஹிந்து மதத்தில் இல்லாத கருத்துக்கள் இல்லை. சொல்லாத விஷயங்கள் இல்லை. வாழ்க்கையில் எது நடத்தாலும் கண்ணதாசன் சொல்வது போல் ஹிந்து மதத்தின் எதிரொலி கேட்கிறது.

நல்லவனை பார்த்தால் ராமன் நினைவுக்கு வருகிறான். கெட்டவனை பார்த்தால் துரியோதனன் மனதில் வந்து போகிறான்.

மாற்றான் மனையாளை பெண்டாள நினைக்கும் சண்டாளனை பார்த்தால் ராவணன் சாட்சியாய்  நிற்கிறான்.


நட்புக்கு கர்ணன், கற்புக்கு சீதை, எளிமையிலும் பெருமையாக வாழ விதுரர் இப்படி ஹிந்து மதத்தின் எதிரொலி அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களிடம்  கேட்கிறது.

திருதிராஷ்டிரனை எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் அறிந்தவன். அரசானாக வீற்றிருப்பவன், தர்மத்தின் பக்கம் நிற்காமல் தலை சாய்கிறான்.

ஏன்?

பிள்ளை பாசம் கண்ணை மறைக்கிறது. தம்பி பிள்ளைகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்க வேண்டியவன், தாயைப்போல் அரவணைக்க வேண்டியவன் அறநெறி தவறுகிறான்.

விளைவு?


நூறு பிள்ளைகளை பெற்றும் பெயர் சொல்ல ஒருவர் இல்லாமல் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிந்தார்கள்.

அங்கே விதி சிரித்தது. செய்த வினை சிரித்தது. ஹிந்து மதம் சிரித்தது. தெய்வம் நின்று கொள்ளும் என்ற தத்துவம் சிரித்தது.


இன்றும் நம்மிடையே எத்தனையோ திருதிராஷ்டிரன்கள் இருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்த பெரியவர் அடிக்கடி சொல்வார். நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் படக்கூடாது.  அதற்காக சொத்துக்கள் சேர்த்தார். மாட மாளிகை கூடகோபுரங்களை கட்டினார். அத்தனையும் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த பாட்டுபட்டதா?

இல்லை.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது போல் கடல் கடந்து போய் தேடி வந்தாரா?

இல்லை.

வட்டி ... வட்டி.. வட்டி .. அநியாய வட்டி. கந்து வட்டி, வட்டிக்கு வட்டி.

கடன் வாங்கியவர்களை கசக்கி பிழிந்தார். வட்டி கட்ட தவரியர்கள் மீது மிரட்டல், உருட்டல், என்று சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தினார்.


வாங்கிய கடனை திருப்பி தர முடியாதவர்களிடம் சொத்தை எழுதி வாங்கினார்.  ஆனால் அத்தனையும் நிலைத்ததா? இல்லையே.. அவர் காலத்திலேயே சொத்து அழிந்தது.

விதி பிள்ளைகளின் உருவத்தில் இருந்தது.

ஒருவன் குடித்தே அழித்தான்.

ஒருவன் கூத்தியாளிடம் கொடுத்தே அழித்தான்.

ஒருவன் ஒன்றுக்கும் அற்றவன். ஊதாரியாய் ஊர் சுற்றினான்.


ஒருவன் சூதாடினான்.

ஏழைகளின் வயிற்றில் அடித்து சேகரித்த சொத்து சீட்டு கட்டு கோபுரம் போல் சரிந்தது.

கடைசி காலத்தில் உண்ண உணவின்றி, உடுக்க துணியின்றி, அனாதையாய் தெருவில் கிடந்தார்.

இங்கேயும் விதி சிரித்தது. விநாசகாலே விபரீத புத்தி என்ற தத்துவம் சிரித்தது.

நாலு பிள்ளைகளை பெற்றவனுக்கு நாயோட்டில் சோறு என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.

ஹிந்து மதம் சொல்லும் உயரிய தத்துவமே இதுதான்.

எதை விதைக்கிறாயோ அதை வட்டியும் முதலுமாய் அறுவடை செய்வாய்.

வினை விதத்தால் வினை
திணை விதித்தால் திணை.

தொடர்ந்து சொல்வேன். 

3 comments:

 1. நண்பரே

  அற்புதமான கட்டுரை. அருமையாக வடித்திருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள். இதுபோன்று ஒரு கட்டுரையைத்தான் தான் நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் .

  தங்களுடைய தொடருக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தங்களுடைய வாசகன்.

  கோ.நந்தகோபால்

  ReplyDelete
 2. நண்பரே

  அற்புதமான கட்டுரை. அருமையாக வடித்திருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள். இதுபோன்று ஒரு கட்டுரையைத்தான் தான் நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் .

  தங்களுடைய தொடருக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தங்களுடைய வாசகன்.

  கோ.நந்தகோபால்

  ReplyDelete