ads

Thursday, 30 May 2013

அம்மா என்னும் தெய்வம்!!



ராஜஸ்த்தானில், நீதிகேட்டு நீதிமன்ற படியேறுகிறாள் ஒரு தாய். என் மகனும், மருமகளும் என்னை துன்புறுத்துகிறார்கள் என்பது அவரின் குற்றசாட்டு. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  வீட்டுக்குள் நடப்பவற்றை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலோட்டமாக இந்த செய்தியை பார்த்துவிட்டு ஒரு வீடியோ தொகுப்புக்குள் போனேன். அங்கே திலிப் மேத்தாவின் THE FORGOTTEN WOMAN என்ற என்ற ஆவணப்படத்தை பார்க்க நேர்ந்தது



பொட்டில் அடித்த மாதிரி இருக்கிறது. இது பழைய படம்தான். ஆனால் ஒரு சமூகஅவலத்தை  கேமரா மொழியில் பேசுகிறது.

உத்திரபிரதேச மாநிலம் மதுராவுக்கு அருகில் உள்ளது விருந்தாவனம். புராண காலத்தோடு தொடர்புப்படுத்தி  பேசப்படும் ஊர். பகவான் கிருஷ்ணர் குழந்தை பருவமாக இருந்த காலத்தில் கோபியர்களுடன் கொஞ்சி விளையாடிய இடம் என்ற சிறப்பு இவ்வூருக்கு உண்டு. இங்கே இறந்தால் நேரடியாக சொர்க்கம்தான் என்ற ஆழமான நம்பிக்கையும் இருக்கிறது.

அந்த நம்பிக்கையின் அடிப்படையிலும், வயதான தாயை கவனிப்பதை பாரமாக நினைக்கும் பிள்ளைகளும் விதவை தாயை இங்கே விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள்

தனித்து விடப்படும் விதவை தாய்கள், எங்கே போவது? தங்குமிடம் எது? சாப்பாட்டிற்கு என்ன வழி என்று தெரியாமல் அலைமோதுவதை பார்க்கும் போது, இரும்பு மனமும் இளகிப் போகும்.

ஏனிந்த அவலநிலை

வாழ்க்கையே நம்பிக்கையில்தான் சுழல்கிறது. நம்பிக்கை என்பது தன்னம்பிக்கையை குறிக்கும் சொல் அல்ல. உற்ற உறவுகளின் மேல் உள்ள நம்பிக்கை. இந்திய சமூகத்தில் பெண்களுக்கான வாழ்க்கை கட்டமைப்பே உறவுகளின் பின்னணியில் அமைந்திருக்கும்

முதல்வர் ஜெயலலிதா சொன்னது போல், ஒரு பெண்  இளம் வயதில் தாய் தந்தையர் அரவணைப்பில் வாழ்கிறாள். பருவத்தில் கணவனின் துணையோடு வாழ்கிறாள். முதுமையில் பிள்ளைகளின் பாதுகாப்பில் வாழ்கிறாள்.

இந்த உறவுகள் பொய்த்துப் போகும்போது, இருந்தும் இல்லாமல் ஆகும் போதும் என்னாகும் என்பதுதான் விருந்தாவானக் காட்சிகள்

ஒவ்வொரு தாயும் பத்து மாத தவத்திற்கு பின் பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள். தன் இறுதி காலத்தில் பிள்ளைகளால் பாதுகாக்கப் படுவோம் என்ற நம்பிக்கைதான்,   குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்க்க தூண்டுகிறது

வம்சம் தழைக்க வந்த வாரிசாகவும், வாழ்க்கையின் இறுதியில் காக்கும் நம்பிக்கை சுடராகவும் பிள்ளைகளை  பேணி வளர்த்த தாயிக்கு முதுமை என்பது இன்னொரு குழந்தை பருவம்.

இது அனைவருக்கும் பொதுவான நிலைதான். தான் வளர்த்த பிள்ளைகள் தன்னை காக்கும் என்ற நம்பிக்கையை நசுக்கும் போது, யாரை நொந்துக் கொள்வது?

தேவதைகள் ஆசிர்வதித்ததில்லை. எல்லா சாத்தான்களும் சபித்திருக்கின்றன என்ற மேத்தா வரிகள்தான் நினைவுக்கு வருகிறது

இருக்கட்டும்

முன்பு மாதிரி இல்லை விருந்தாவனம். படத்தில் காட்டப்படுவது  போல் உணவுக்கும் உடைக்கும்  அலையும்  அவலநிலை இன்றில்லை. தங்குமிடம் இல்லாமல் தவிக்கும் நிலையும் இன்றில்லை. பொட்டி பொட்டியான அறைக்குள் முடங்கிப் போகும் பரிதாப நிலை   மாறியிருக்கிறது. உதவும் உள்ளம் கொண்டோர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், மாநில அரசாங்கமும் அவர்களை அரவணைத்துக் கொள்கிறது என்பது ஆறுதலான அம்சமே.



ஆனால் மரத்துப் போன மனிதம்தானே,  தாயின் புனிதம் அறியாமல் வீதிகளில் விட்டிருக்கிறது. எந்தவொரு குடும்பத்திலும் பெண்தான் ஆணிவேர். அட்சாணி. கோடிகளை தேடுவது ஆணாக இருந்தாலும், குடும்ப தேர் குடைசாயாமல் இருக்க பெண்ணே  காரணம், அவள் தான் சர்வமயம். சக்திமயம்

இந்தி உணர்ந்தவர்கள் குறைவு. பெண்களை அடிமைகளாக பார்த்த ஒரு சமூகத்தின் பார்வையில் இன்னும் மாற்றம் இல்லை என்பதற்கு விருந்தாவனம்  ஒரு சாட்சி



திருவாரூரில் பிறந்தால் மோட்சம். சிதம்பரத்தை தரிசித்தால் மோட்சம். திருவண்ணாமலையை நினைத்தால் மோட்சம். காசியில் இறந்தால் மோட்சம் என்பது நம்பிக்கை. முதியர்கள் சிலர் உறவுகளை துறந்து  மோட்சகதிக்காக காசிக்கு வருகிறார்கள்

இவர்களில் பலர் உறவுகளால் ஒதுக்கப்பட்டவர்களும்  இருக்கிறார்கள். வாழும் வரை வாழ்க்கை. வாழ்க்கைக்கு பின் மோட்சம் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள்.  

இந்த நம்பிக்கையின் கடைசி வரிதான் விருத்தாவனத்தில் இறந்தால் சொர்க்கம் என்பதும்

ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் தாங்களாகவே தனிவழி தேடுகிறார்கள். ஆனால் பெண்கள் அப்படியில்லை என்பது தான் உண்மை



இந்த அபலை தாய்கள்,  எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது மாதிரி யாரோ ஒருவருக்கு சகோதரி, யாரோ ஒருவருக்கு மனைவி, யாரோ ஒருவருக்கு தாய்

துரத்தும் உறவுகளும், தூக்கியெறிந்த  பந்தங்களும், எந்த ஒரு குற்ற உணர்சியும் இல்லாமல் வாழ்கிறார்கள். குடும்பம் நடத்துகிறார்கள். குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களில் நாளை முதிய தாய்களும் இருக்காலாம். இதுதான் யதார்த்தம்.


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...