அனைத்து முதலாளி நண்பர்களுக்கும் வணக்கம்.
தொழிலாளர் தினத்தில் முதலாளி வாழ்த்தா?
என்ன அதிர்ச்சியா இருக்கா?
பின்னே என்னங்க. மற்றவர் பார்வையில் தான் நீங்கள் தொழிலாளி. உங்களுக்கு நீங்கள் தானே முதலாளி.
நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நீங்கள் தான் எஜமான். உங்கள் வாழ்க்கையின் சகலத்திற்கும், சந்தோசத்திற்கும் நீங்கள் தான் போஸ். இதில் மாறுபட்ட கருத்து இருக்கா?
இருக்காது. அதனால் சொல்கிறேன் முதலாளி தின வாழ்த்துக்கள்!!
சரி... இன்று உலகம் முழுவதும்127வது சர்வதேச மே தினம் அதாவது தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த கொண்டாட்டத்தின் பின்னணியை நீங்கள் தெரிந்து வைத்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு மட்டும் இந்த பதிவு.
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மிக வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் முதலாளிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
ஒவ்வொரு தொழிலாளியும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
கசக்கி பிழிந்த முதலாளிகளுக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்பு குரல்கள் எழத் துவங்கியது. ஆங்காங்கே என்பது பல்வேறு நாடுகளில்.
இருப்பினும் இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் போராடதொடங்கியது. தங்கள் போராட்டத்தில் ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே நடத்தியது. அதில் முக்கியமானது 10 மணி நேர வேலை கோரிக்கை.
1830ம் ஆண்டுகளில் பிரான்சில் துணி நெய்யும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் வேலை செய்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர்.
இந்த நிலையை மாற்ற அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தையும் நடத்தினர்.
சின்ன சின்ன போராட்டங்கள் பெரிதாகி 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அசைந்து கொடுக்க வில்லை முதலாளிகள். கடைசியில் இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
அதன் பிறகு 26 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர்.
இதுதான் உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. இது நடந்தது 1856இல்.
ரஷ்யத் தொழிலாளிகள் அந்நாட்டின் மன்னன் சார் ஆட்சியின் கீழ் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். ஆனாலும் இடைவிடாது போராட்டங்களை நடத்தினார்கள்.
1896 ஏப்ரல் மாதத்தில் லெனினின் பெரும் முயற்ச்சியின் பேரில் தொழிலாளர் போராட்டம் திசை மாறி அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொண்டது. அதுதான் ரஷ்யப் புரட்சிக்கு அடித்தளமாக மாறியது.
1886இல் போராட்ட வடிவம் ஒருமுகப் படுத்தப்பட்டது. இது நடந்தது அமெரிக்காவில்.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற புது இயக்கம் ஓன்று உருவாக்கப்பட்டது.
இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது.
அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த அறைகூவல் தான் மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
அக்காலகட்டத்தில் அமெரிக்காவின் தொழில் நகரங்கள் சம்பித்தன.
அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது.
இந்த வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இரயில் போக்குவரத்து தடைபட்டது. ஒரே வரியில் சொல்லப்போனால் அமெரிக்காவே சம்பித்தது.
மே 3, 1886 அன்று 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்தினர்.
அந்த கூட்டத்தில் நடந்த கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள்.
2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. கடைசியில் அது வன்முறையில் முடிந்தது.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரால் நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு போலிஸ்காரர் பலியானார்.
இது தொடர்பாக தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர் காவல்துறையினர் . இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. வழக்கின் இறுதியில் 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது.
1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.
நானும் என்னமோ நினைத்து வந்தேன்...
ReplyDeleteசரியாகச் சொல்லி உள்ளீர்கள்...
விளக்கங்களுக்கு நன்றி...
இன்றைய பகிர்வை வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...
Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html