ஒவ்வொரு நாளும் பொழுது புலர்கிறது. விடிந்ததும் மனதில் எழும் கேள்வி...
இன்று எத்தனை பேர் செத்திருப்பார்கள்?
எத்தனை பேருந்துகள் எரிக்கப்பட்டிருக்கும்?
உடைக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை எத்தனையாக இருக்கும்?
செயலிழந்து போன மாவட்டங்கள் எத்தனை?
இந்த கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
காரணம் சாதி...!!
இந்த சாதி மனிதனின் பாதி அறிவை தின்று விட்டதால், மிருக நிலைக்கு உயர்ந்து போன கொடுமை.
தமிழனென்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா.. என்ற வரிகள் தூக்கு கயிற்றில் தொங்கி கொண்டிருக்கிறது.
அரசியல்.
இந்த கேடுகெட்ட அரசியல் தான் அத்தனைக்கும் காரணம்.
அரசியலில் நல்லவர்களை இழந்தோம், நல்லவர்களை உருவாக்க தவறினோம். தவறானவர்களுக்கு தலைமை பொறுப்பை கொடுத்தோம், தலைவர்கள் என்று கொண்டாடினோம். அதற்கு கொடுக்கும் விலைதான் இந்த சாதி கலவரங்கள்.
தீவிர கம்னியூஸ்ட்டுகள் சொல்வது மாதிரி அரசியல் பிழைப்புவாதிகள்.
இவர்களுக்கு யாரை பற்றியும் கவலை இல்லை. ஊரைப்பற்றியும் கவலை இல்லை. நாட்டைப்பற்றியும் கவலை இல்லை. வாழ்க்கையோடு போராடும் மக்களை பற்றியும் கவலை இல்லை.
அரசியலில் இவர்கள் பிழைத்திருக்க வேண்டும். அதற்காக எதையும் செய்வார்கள், என்பதற்கு நேற்றும்...இன்றும்... நமக்கு தரும் பதில்கள்.
பதில்கள் இருக்கட்டும். முடிவுதான் என்ன?
இந்த நாட்டில் எது நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொது ஜனம்.
சூரையாடப்படுவது மக்களின் பொது சொத்து.
எழவு விழுந்தாலும் எரிக்கப்படுவது பேருந்து.
இது என்ன நடைமுறை?
இந்த நாட்டில் யாருக்குமே பொறுப்பில்லை.
இந்த தேசத்தின் மீதும், தேசத்தின் வளர்சியின் மீதும், தேசத்தின் கவுரவத்தின் மீதும் அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் அக்கறை இல்லமால் இருக்கலாம். காரணம் ...அவர்கள் செய்வது பண அரசியல். அதற்கு தேவை பிணம். அதற்காக எதையும் செய்வார்கள்.
ஆனால் ... அப்பாவி மக்களே..அறியா சகோதரர்களே... கற்றுணர்ந்த தம்பிகளே ஒரு நிமிஷம்.
யார் சரி? யார் தப்பு என்று வாதம் செய்ய வரவில்லை.
இன்று நடப்பது, நடந்து கொண்டிருப்பது சரியா? என்பது மட்டும் தான் என் கேள்வி!!
ஏன் இந்த வெறியாட்டம். எதன் பொருட்டு இத்தனை ஆர்ப்பாட்டம்?
மனிதன் மனிதனாக வாழ வேண்டும். சக மனிதர்களை நேசிக்க வேண்டும். சகிப்பு தன்மையை வளர்க்க வேண்டும். சகோதரத்துவம் மலர வேண்டும். இதைதான் அறம் வளர்த்த பெரியோர்கள் நமக்கு சொல்லி தந்தார்கள்.
ஆனால் நடப்பது என்ன?
நீங்கள் இன்று பகடைக்காயாக உருட்டப்படுவது தெரியுமா? யாரோ மெத்தையில் படுத்துக்கொண்டு, பென்ஸ் காரில் பவனி வர, உங்கள் உயிரோடும், ஒன்றும் அறியாத அப்பாவிகள் உயிரோடும் விளையாடி கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியுமா?
நீங்கள் நாளைய இந்தியாவின் விடி வெள்ளிகள். நீங்கள் தான் நம்பிக்கை நட்சத்திரங்கள். உங்களை நம்பித்தான் இந்த தேசம் காத்திருக்கிறது.
உங்களில் ராமதாஸ்கள் வேண்டாம், திருமாவளவன்கள் வேண்டாம், கிருஷ்ணசாமிகள் வேண்டாம், சேதுராஜ்கள் வேண்டாம், ஸ்ரீதர்வாண்டையார்கள் வேண்டாம், ஜான் பாண்டியன்கள் வேண்டாம், தமிரசன்கள் வேண்டாம்... !! இன்னும் விடுபட்டு போன ஜாதி தலைவர்கள் வேண்டாம்.
உங்களில் இருந்து எதிர் பார்ப்பது கல்வி கண் திறந்த காமராஜ்கள் , ஏழை மக்கள் இதயம் புரிந்த M G .ராமசந்திரன்கள், எளிமையின் சின்னம் ஜோதிபாசுகள் நல்லிதயம் படைத்த வாஜ்பாய்கள்.
வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை.
இதே நிலை நீடித்தால் இந்தியன் என்று சொல்லவே வெட்கப்படுவேன்.
வெட்கப்பட வேண்டிய விஷயம்...
ReplyDeleteஅதை இன்னும் சப்தமா சொல்லுங்க
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete