Follow by Email

Monday, 3 September 2012

கூத்தாண்டவர் என்னும் நல்அரவான்


அரவான். 

பதினெட்டு நாள் நடைபெற்ற யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக தன்னையே களப்பலியாக பலி கொடுத்து கொண்டவன்தான் அரவான். 

சரி... இந்த அரவான் யார்?

சூதாடி நாட்டை இழந்த பாண்டவர்கள் காட்டிற்கு சென்றார்கள். காட்டில் இருந்து காலத்தை கழிப்பத்தை விட, அத்தருணத்தில் தங்கள் பலத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்பதற்காக ஆளுக்கு ஒரு திசையாக யாத்திரை சென்றார்கள்.

அந்த வையில் அர்ச்சுனன் வடதிசையை நோக்கி பயணம் போகிறான். 

எதற்கு?

சிவனை நோக்கி தவமிருந்து பாசுபத அஸ்த்திரத்தை பெற வேண்டும் என்ற நோக்கம்தான். 

அர்ச்சுனனின் வடதிசை பயணத்தில் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடக்க வேண்டும் என்பது காலத்தின் கணக்கு.

அதன் படி செல்லும் வழியில் உலுபியை சந்திக்கிறான்.

யார் இந்த உலுபி?

நாகலோகத்து இளவரசி. ஆதிசேஷனின் புதல்வி. நல்ல அழகி.

பார்த்தான் அர்ச்சுனன். பார்த்தாள் உலுபி. பார்த்ததும் பரவச பட்டார்கள் இருவரும். பரவசத்திற்கு இன்னொரு பெயர் காதல் தானே.

காதல் வந்தால் காமம் வருவது இயற்க்கை. காமத்தின் கடைசி நிலை கூடல்தானே.

கூடினார்கள். அதற்க்கு பரிசாக சர்வ லச்சனங்கள் பொருந்திய ஆண் மகனை பெற்றெடுக்கிறாள்.  அவன் தான் நல்லரவான்.


பேரின்ப நிலையை பெற போகும்போது சிற்றின்ப நிலை என்பது சிறு தடைதான். இருப்பினும் தான் வடதிசை நோக்கி செல்லும் நோக்கத்தை உலுபியிடம் சொல்கிறான் அர்ச்சுனன்.

கலங்கினாள் உலுபி. காலம் வரும்போது கண்டிப்பாக ஓன்று சேர்வோம் என்று தைரியமுட்டிய அர்ச்சுனன் இருவரையும் நாகலோகம் அனுப்பி விட்டு வடதிசை பயணத்தை தொடர்கிறான்.

சிவனை எண்ணி தவம் புரிந்து பாசுபத அஸ்த்திரத்தை பெற்று கொள்கிறான். 
இது நடந்து பல வருடங்கள் கழித்து விட்டது.    பாலகன் அரவான் வளர்ந்து வாலிபனாகி விட்டான்.

அதுவரை தந்தை யாரென தகவலை சொல்லவில்லை உலுபி. ஆனால் கேட்கிறான் அரவான். 

மகனே... பாண்டு புத்திரர்களில் ஒருவரான அர்ச்சுனன் தான் உன் தந்தை. இந்திரன் ஒரு வகையில் உனக்கு பாட்டனாராக வருவார். 

அவரின் உதவியை பெற்றால் அர்ச்சுனனிடம் உன்னை சேர்ப்பார் என்று உலுபி சொல்கிறாள். 

இந்திரனின் உதவியை பெற்று தந்தையோடு இணைந்தான் என்பதோடு அரவான்  கதை முடியப்போவதில்லை. இனிதான் ஆரம்பம். 

பாண்டவர்களுக்கு வனவாசம் முடிந்ததது. ஒப்பந்தப்படி நாட்டை திருப்பி தராமல் நயவஞ்சகம் செய்கிறான் துரியோதனன். யுத்தம் ஒன்றே தீர்வு. இது கிருஷ்ணர்  வாக்கு.

பொதுவாக யுத்தத்தில் வெற்றி பெற வேண்டுமானால் களதேவதையான காளிக்கு பலி கொடுக்க வேண்டும். அதற்க்கு நாளும் நச்சத்திரமும் அவசியம்.
இது துரியோதனன் தரப்புக்கும் தெரிந்தே இருந்தது.

எதிரி என்றும் பாராமல் சாஸ்த்திர நிபுணன் சகாதேவனிடம் நாள் குறித்து கேட்கிறான் துரியோதனன்.


தங்களை வெல்ல தன்னிடமே நாள் குறித்து கேட்கிறானே என்று சகாதேவன் வருந்தவில்லை. காரணம் சாத்திரவாதி  பொய்யுரைத்தல் கூடாது என்ற விதியின் பிரகாரம் நடந்தான்.

துரியோதனன் நாள் குறித்து பெற்ற விபரம் கிருஷ்ணருக்கு தெரிந்து முதலில் குழப்பமடைந்தாலும், ஒரு முடிவுக்கு வருகிறார்.

அது நரபலி தருவது.

அதுவும் எப்படி?

சர்வ லச்சனமும் பொருந்திய ஒரு ஆண் மகன் களத்தில் பலியாக வேண்டும். ஆனால் அவன் சம்மதமும் இருக்க வேண்டும். அப்படி பலி கொடுத்தால் பாண்டவர்கள் வசம் வெற்றி வந்துவிடும் என்பது அவர் கணக்கு.


அவரே சொல்கிறார். சர்வ லச்சனங்கள் பொருந்திய ஆண்மகன் என்றால் சல்லியனை சொல்லலாம். ஆனால் இப்போது கௌரவர்கள் பக்கம் இருக்கிறான்.

அடுத்து அர்ச்சுனன்.

ஆனால் பாரத போரின் பெரும்பகுதி அர்ச்சுனனை சார்ந்திருப்பதால் அது சரிப்படாது. கடைசியாக நல்லரவான்.

இந்த இடத்தில்  இத்தகவல் பொருத்தமாக இருக்கும். நாகலோகத்தில் இருந்து நல்லரவான் இந்திரனின் உதவியோடு பாண்டவர்கள் பக்கம் வந்து சேர்ந்து விட்டான்.


கிருஷ்ணர் சொன்னதும் ஒரு கணம் உலுபிக்கு உயிரே போய்விட்டது. இருக்காதா பின்னே.... பெத்த மனம் பித்தல்லவா.

அதுவும் பெற்ற மகனை காலனுக்கு காணிக்கையாக கொடு என்றால் யார்தான் சம்மதிப்பார்கள்.

ஆனால் வயதில் சிறியவனாக இருந்தாலும் அறிவில் முதிர்ந்த அரவான் அன்னையை தேற்றுகிறான்.


தாயே காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை. என் பிறப்பின் ரகசியம் எனக்கு தெரியும். நான் காளிதேவிக்காக   படைக்க பட்டவன் என்று சொல்லி உளுபியிடம் சம்மதம் பெறுகிறான் அரவான். இருப்பினும் கிருஷ்ணரிடம் இரண்டு கோரிக்கைளை வைக்கிறான்.

நான் களப்பலி ஆவதற்கு முன் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். யுத்தத்தில் நானும் பணக்கு கொள்ள வேண்டும்.


யுத்தத்தில் நான் இறக்க நேர்ந்தால், வெல்ல முடியாத ஒரு வீரனால் அது நிகழ வேண்டும். உடல் இல்லாமல் இருந்தாலும் யுத்தம் முழுவதையும் நான் பார்க்க வேண்டும். அரவானின் கோரிக்கைளை ஏற்று கொள்கிறார் கிருஷணர்.

ஆனால் சிக்கலே இங்குதான் ஆரம்பமாகிறது.

மரணத்தை தழுவ போகிறவனை யார் மணப்பார்கள்? எந்த பொன்னும் சம்மதிக்க வில்லை.

பாண்டவர்களுக்கு அபாயம் என்று வரும்போது அரவணைப்பது கிருஷ்ணர் தானே. இந்த இடத்திலும் கிருஷ்ணரே முன் வருகிறார்.

மோகினி உருவம் எடுத்து நல்லரவானை  திருமணம் செய்து  கொள்கிறார். ஓர் இரவு அரவானோடு தங்குகிறார். மறுநாள் களப்பலி கொடுக்கப்படுகிறான்.

( குருசோத்திரத்தில் காளிக்கோவிலில் அரவான் தான் அணிந்திருந்த கவசங்களை கழட்டி விட்டு வாளால் தன் கழுத்தை வெட்டிக்கொண்டு, தன்  உடலை 32 பாகங்களாக வெட்டுகிறான்.

அந்த பாகங்களை தருமர் களிக்கு படைக்கிறார் என்கிறது வில்லிபுத்துரார் பாரதம்.

தலையும் கிழே எலும்பு கூடாகவும்  இருந்த அரவானிடம் ஆதிசேஷனை வழிபடுமாறு கிருஷ்ணர் சொல்கிறார்.

அதன் படி அரவான் ஆதிசேஷனை வழிபட, ஆதிசேசன் மாயமாய் அரவானின் கழுத்துக்கு கிழே சுற்றி அவனை தாங்கி பிடித்து கொள்கிறார் )


போர் துவங்கியது. வீரனின் மகன் சூரனாக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. வில்லுக்கோர் விஜயன் என்று போற்றபடுகிற அர்ச்சுனனின் மகன் அரைகுறையாகவா இருப்பான்.

யுத்த களத்தில் அரவானின் பங்கு அதிகம். அவனால் அழிக்கப்பட்டவர்கள் வரிசையில் முக்கியமானவர்கள் விவரம் பின்வருமாறு.

முதல் நாள் போரில் சுருதாயுஸ்   மற்றும்  குரோதவாசன் ஆகியோரை வெல்லுகிறான். பின் அந்த போரில் சுருதாயுஸ் அர்ச்சுனனால் கொல்லப்படுகிறான்.

ஏழாவது நாள் போரில் அவந்தி தேச இளவரசர்கலான விந்தன், அனுவிந்தன் ஆகியோரை தோற்கடிக்கிறான்.  பின் இவர்கள் அர்ச்சுனனின் வில்லுக்கு இரையானார்கள்.


எட்டாவது நாள் யுத்தம்.

சகுனியின் தம்பிகளான கயா, கவாக்ஷ, சார்மவத் ஆகியோரை தோற்க்கடிக்கிறான். அதோடு துரியோதனின் தம்பிகள் 5 பேரை சண்டையில் வெல்லுகிறான்.

அரவான் கிருஷ்ணரிடம் கேட்டு கொண்டபடி மாவிரனான ரிஷ்ய சிருங்கரின் புதல்வன் ஆலம்புஷன் என்பவனால் தோற்க்கடிக்க படுகிறான்.

இப்போரில் அரவானின் நாகப்படைகள் தர்க்கத்து நின்ற போதும் குருடா வியூகத்தில் வந்த ஆலம்புஷன் நாகபடைகளை மிரள வைத்து அரவானை வெற்றி கொள்கிறான்.


இருப்பினும் பின் ஆலம் புஷன் கடோத்கஜனால் கொல்லப்படுகிறான்.( வில்லிபுத்தூர் மகாபாரதத்தின் படி அரவான் எட்டாம் நாள் யுத்தத்தில் ஆலம்புஷனின் வாளால் தலை இரண்டாக வெட்டப்பட்டு மடிகிறான்.

பாஞ்சாலி, கூத்தாண்டவர் மற்றும் சில பாரத கதைகளின் படி,    அரவான் அலம்புஷனால் கொள்ளப்படாமல் கிருஷ்ணரிடம் பெற்ற வரத்தின் படி 18 நாள் போர்க்களத்தையும்  பார்ப்பதாக சொல்லப்படுகிறது )


மகாபாரத போர் முடிந்தது. 18 நாள் போரையும் தன் கண்களால் பார்த்த அரவானிடம் கிருஷ்ணர் கேட்கிறார்.

இந்த போரின் உண்மையான வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்?

அதற்க்கு அரவான் சொல்கிறான்... இந்த போரில் நான் பார்த்தது இரண்டு விஷயங்கள்  தான்.

ஓன்று ...!

கிருஷ்ணரின் சக்கரங்கள் எதிரிகளின் கழுத்தை துண்டாடியது.

இரண்டு ....!

அப்போது வழிந்த ரத்தத்தை எல்லாம் அவரது சங்கு  குடித்து விட்டது.

இந்த பதில் பீமனை கொவமுட்டியதாம். முட்டாளே .... எங்கள் வீரத்தால் வரவில்லையா வெற்றி என்று அரவானை தாக்கினான்.


அதோடு நிற்கவில்லை .அரவானின் தலையை கரப்பரிகா நதியில் தூக்கி எறிந்தானாம் பீமன்.

நதியில் விழுந்த நல்அரவான் கிருஷ்ணரின் அருளால் குழந்தையாக மாறினான். அந்த குழந்தை கண்டு எடுக்கப்பட்ட இடம் கூவாகம்.


வருடம் தோறும் நடக்கும் திருவிழாவில் நலரவானை குத்தாண்டவராய் சித்தரித்து பெரும் விழா நடைபெறுகிறது.அன்று நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் ஓன்று கூடி  நல் அரவானை வணங்குகிறார்கள்.

கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்ததை நினைவு கூர்ந்து, தங்களை கிருஷ்ணராக பாவித்து நலரவானை மானசீகமாய் திருமணம் செய்து பின் மாங்கல்யம் அகற்றுவார்கள்.

தமிழகத்தில் வழி வழியாய் தெரு கூத்துககளாகவும், நாடகங்களாகவும் சொல்லப்படுகிற மகாபாரத கதைகள் அரவானை கூத்தாண்டவராய் வழிபடும்  விவரத்தை சொல்கிறது.
No comments:

Post a Comment