ads

Tuesday, 5 June 2012

சிந்திக்க சில நிமிடம்


மனிதனாக பிறந்திட்டாலே தான், தன, சுகம்னு ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்க்கை அமைந்து விடுகிறது. 

யாராவது எனக்கு சுயநலமே இல்லை, எப்ப பார்த்தாலும் பொது நலத்தை பற்றிதான் சிந்திக்கிறேன்னு சொன்னால், அதில் எள் முனை அளவு கூட உண்மை இல்லை. 

ஏன்னா...எப்போ தான், தன் வீடு, தன் மனைவி, தன் மக்கள் ஏற்ற சிந்தனை வெளிப்படுகிறதோ, அப்போதே சுயநலம் இருக்கிறது என்று பொருள்.

இதில் தவறு காண்பதோ, குற்றம் சொல்வதோ அல்ல நோக்கம். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அன்பு என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிற்கிறதே என்பதுதான் நம் முன்னால் உள்ள கேள்வி. 

இதிகாசங்கள் சொல்கிறது. அள்ள அள்ள குறையாதது அமுதசுரபியாம். 

ஏன்? அன்பு கூடத்தான். அதை எல்லாருக்கும் தாராளமாக  தருகிறோமா இல்லையே. 

வேண்டியவர்கள், வேண்டாதவர்கள்,சொந்தக்காரன், ஜாதிக்காரன் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கி விடுகிறது அன்பு. 

வீசுகிற காற்று வேறுபாடு பார்ப்பதில்லை. பெய்கிற மழை அனைவருக்கும் பொதுவாகத்தான் பெய்கிறது. ஆனால் மனிதர்கள்?

என் வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டு வருவே.. உன் வீட்டிற்கு வந்தால் என்ன தருவே ... சுயநல போக்குகள் தலை தூக்குவதால் உறவுகள் விரிவடைவதில்லை. 

ஒருவர் அலுவல் நிமித்தம் வெளியில் போகிறார். ரொம்ப நாளா சந்திக்க முடியாத ஒரு நண்பர் எதேச்சையாக ரோட்டில் நின்று கொண்டிருக்கிறார். பார்த்ததும் பரவசம்.

கிட்டே நெருங்கி என்னப்பா எப்படி இருக்கே என்ன செய்றேன்னு கேள்வி கேட்கிறார். அவரும் பதில் சொல்கிறார். 

அப்படியே சிமிமாவில் வர்ற பிளாஷ்பேக் மாதிரி பழைய நினைவுகளில் மூழ்கி விடலாம் என்று பார்த்தால், பாம்பை பிடிச்சு கையில் சுத்தி வச்ச மாதிரி கெடிகாரம் டயம் ஆகுது என்று சொல்லி பயம் காட்டி கொண்டிருக்கிறது. 

நண்பரோடு அதிக நேரம் செலவிட முடியலை. அன்பை அவசரமாக முட்டை கட்டி வச்சுட்டு அப்பறம் பார்க்கலாம் என்று புறப்பட வேண்டிய சூழல். 

இதில் சிலர் விதிவிலக்காய் இருக்கிறார்கள். மற்றவர்களோடு பழக ஒரு எல்லைகோடு வைத்திருப்பார்கள். 

எதற்காக? 

தான் பணபலம் படித்தவன், அதிகார வர்க்கத்தை சேர்ந்தவன் என்கிற எண்ணம். அதனால் தன்னை சுற்றி ஒரு வெளியை போட்டு வைத்திருப்பார்கள். 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.எந்தவிதமான எதிர்விளைவையும் தராத அன்பை மற்றவர்களுக்கு தர மறுப்பது கதையில் வரும் பணக்காரரின் செய்கை மாதிரி இருக்கிறது.

அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர். வீட்டிலே விலை மதிக்க முடியாத அளவிற்கு பொன்னும் பொருளும், தங்கமும் வைரமும் இருந்தது. 

நாட்டில் திருடர்கள் தொல்லை அதிகம். அதனால் அதை பத்திரமாக பாதுகாக்கணும் என்று முடிவு செய்தார். உடன் தன் உதவியாளரை அழைத்து இந்த நகை மற்றும் ஆபரணங்களை வைக்க, உடனே ஒரு பெட்டகத்தை தயார் செய் என்று கட்டளை இட்டார். 

மறுநாளே கணமான இரும்பு தகட்டில் பெட்டி தயாராகி வந்தது. வந்தது கோபம் பணக்காரருக்கு. 

ஏண்டா அறிவு கெட்டவனே... இந்த பொருள்கள் எவ்வளவு மதிப்பானது. அதன் தகுதிக்கு தகுந்த மாதிரி பெட்டகம் தயார் செய்ய வேண்டாமா? தங்கமும் தகரமும் ஒன்றாகுமா? தங்கத்தில் பெட்டி தயார் செய்ய சொல் பூட்டு சாவி கூட தங்கத்தில் தான் இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டார்.

அடுத்த சில நாட்களில் தங்கத்தால் ஆன பெட்டி தயாரானது. தங்கத்தை வைத்து பாதுகாக்க, தங்கத்தால் ஆன பெட்டி.


திருடர்களுக்கு ரொம்ப வசதியாகி விட்டது. உடைத்து கொண்டிருப்பதை விட தூக்கி கொண்டு போவது சுலபம்.

இந்த பணக்காரரின் செய்கை போலத்தான் நாமில் பலர் அன்பு காட்டுவதில் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறார்கள். அன்பு மிக பெற ஆயுதம்.

அதனால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எவரிடம் வேண்டுமானாலும் அன்பு காட்டி பெற்று விடலாம்.

சரி இன்னொரு கதையை பாப்போம்.


ஊரின் கடைக்கோடியில் ஒதுக்கு புறமாக ஒரு மகான் ஒருவர் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். எப்போதும் இறை சிந்தனையில் வேலை தவறாமல் வேதம் ஒதிகொண்டிருந்தார்.

ஒரு நாள் இரவு குடிலின் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் ஒரு இளைஞன் கடும் குளிரில் நடுங்கியபடி பரிதாபமாக நின்றான்.

யாரப்பா நீ...என்ன வேண்டும். இந்த இடத்தில் நள்ளிரவில் தனியாக நிற்கிறாயே? என்று கனிவாக கேட்டார்.
சுவாமி...நான் ஒரு வழிப்போக்கன்.  இந்த பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள்   யாரும் இல்லை. எனவே.. இரவு பொழுதை இங்கேயே கழித்துவிட்டு போகலாம் என்று வந்தேன்.தங்களை சிரமபடுத்தியதற்கு மன்னிக்கவும்.

சுவாமிஜி...எல்ல உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவர் ஆயிற்றே. இவனுக்கு மட்டும் உதவாமல் போய் விடுவாரா என்ன? தாராளமாக தங்கிகொள் என்றார். பின் தன்னிடம் இருந்த உணவு பதார்த்தங்களை வழங்கி ஓய்வு எடுத்து கொள்ள சொன்னார்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. காலை சிற்றுண்டி உணவு வழங்கி உபசரித்தார். இவ்வளவு கனிவாக உபசரித்த மகானிடம் தான் யார் என்பதை சொல்லாமல் போவது பாவம் என் நினைத்த அந்த வழிப்போக்கன் மனம் திறந்து பேசலானான்.


சுவாமி உயர்ந்த உள்ளம் படைத்த உங்களிடம் உண்மையை சொல்லாமல் போக மனம் இடம் தரவில்லை.

நான் ஒரு திருடன். நேற்றிரவு திருடிவிட்டு ஓடிவரும் போது தப்பித்து கொள்ளவே உங்கள் குடிலுக்குள் தஞ்சம் புகுந்தேன். என்னை மன்னித்து அருள வேண்டும் என்று கூறி விட்டு தன் வழியே போய் கொண்டிருந்தான் அந்த வழிப்போக்கன்.

அந்த மகான் மிகுந்த துயரத்திற்கு ஆளானார். மற்றவர்களிடத்தில் அன்பு பாராட்டுகிற அவர், தகுதியல்லாத ஒருவனுக்கு உதவிகள் செய்து உபசரித்து விட்டோமே என்று ஆண்டவனை தொழுதார்.

இறைவா.. என்னை ஏன் சோதிக்கிறாய். மற்றவர்களை துன்பபடுத்தி அவர்கள் பொருள்களை எல்லாம் அபகரித்து செல்லும் திருடனுக்கு தங்க இடம் கொடுத்து உன்ன உணவளித்து உபசரிக்கும் இழிசெயலுக்கு ஆளாக்கி விட்டாயே... ஏன்? என்று இறைவன் முன் கேள்வியை எழுப்பினார்.

அப்போது இறைவன் அவர் முன் தோன்றி அவனுக்கு வயது 35 ஆகிறது.  இத்தனை ஆண்டுகளில் அவன் யாருக்குமே எந்த நம்மையும் செய்தது இல்லை.

இருப்பினும் 35  ஆண்டுகாலம் இந்த பூமியில் தங்கி இருக்கவும்,  உன்ன உணவும், உடுக்க உடையும் அளித்து மனிதனாக நடமாட விட்டிருக்கிறேனே என் மனநிலையை நீ யோசித்து பார்த்தாயா?

அவன் பிறப்பின் கர்மா அத்தகையது. அவன் அனுபவிப்பான்.  அதற்காக நீ அன்பு செலுத்துவதை நிறுத்தி விடாதே. பிறந்த எல்லா உயிர்களுக்கும்  பூமியில் வாழ உரிமையுண்டு. அவன் செயலை பார்த்து நீ வருந்தாதே.

அன்பு காட்டுவதும், உதவி செய்வத்தும் உன்கடமை. அதை தவறாமல் செய். என்று சொல்லி இறைவன் மறைந்தார்.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அன்பு கட்டுவதில் பாகுபாடு தேவை இல்லை. அன்பே சிவம்.






No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...