Follow by Email

Monday, 19 December 2011

குரு சிஷ்யன்


அனந்தபுரி.....

இயற்கை அன்னை செயற்கை இல்லாமல் செய்த அற்புதமான இடம். அந்த இடத்தில்தான் ஒரு ஆசிரமம் அமைத்திருந்தது.  அங்கு பல மாணவர்கள் தங்கி பல்வேறு வித்தைகளை கற்று வந்தார்கள்.

இவ் வேலையில் ஒரு நாள்.  குருகுல வாசம் முடிந்து மாணவர்கள் அனைவரும் குருவிடம் ஆசி பெற்று தங்கள் ஊருக்கு புறப்பட தயாரானார்கள். ஒவ்வருவராக குருவிடம் ஆசி பெற்று சென்ற பிறகு கடைசியாக ஒருவன் குருவிடம் வந்தான். 

அவன் சிவனந்தன்.

குருவின் பாதம் பணிந்து எழுந்தான்.  அவனுக்கு ஆசி வழங்கிய குரு அசையாமல் நிற்பதை கண்டார். அனைவரும் புறப்பட ஆயத்தமான பிறகும் இவனிடம் எந்த அறிகுறியும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்.

சிவனந்தன் பேராசையும், பெரும் கோபமும், அவசர புத்தியும் கொண்டவன் என்பதை குரு அறிவார். எனவே ஒரு கணம் குழப்ப அலைகள் எழுந்து ஓய்ந்தன. மெதுவாக பேச்சை துவங்கி நேரடியாக அந்த கேள்வியை கேட்டார். 

என்ன சிவானந்தா என்னிடம் ஏதாவது எதிர் பார்கிறாயா?

சிவனந்தன் தயங்கியபடியே பேச துவங்கினான்.  ஆம் சுவாமி.... நான் மேலும் சில காலம் உங்களுக்கு பணிவிடைகள் செய்து, தங்களிடம் இருந்து கூடு விட்டு  கூடு பாயும் கலையை கற்று கொள்ள விரும்புகிறேன். 

அதற்கு நிறைய பக்குவம் வேண்டுமப்பா.  இப்போதைய சூழ்நிலையில் அது உனக்கு சரியாக வராது.  காலம் வரும்போது கற்று கொள்ளலாம் போய்வா என்றார். 

சிவநந்தனோ விடாமல் பிடிவாதம் செய்தான். குரு சிறிது நேரம் யோசித்தார். ஆத்திரகாரனாகவும், அவசரக்காரனாகவும் இருந்தாலும், குருவுக்கு செய்யும் பணிவிடைகளில் எந்த பங்கமும் செய்யாதவன் என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது. 

சரி... ஒரு வார காலம் என்னுடன் இரு. கற்று தருகிறேன் என்றார். மகிழ்ச்சியோடு  ஒத்துக் கொண்டான். 

ஒரு வாரம் ஓடியது. ஆனால் குருவோ எதையும் கற்று தரவில்லை. குழப்பமடைந்த சிவனந்தன் குருவிடம் அதை பற்றி நினைவு படுத்தினான். 

அவரோ முன்பு கூறியது போல் ஒரு வாரம் பொறு என்றார்.  மறு முறையும் ஏமாற்றம். குரு எதையும் கற்று தரவில்லை. மீண்டும் அதே கேள்வி, அதே பதில். 

இப்போது சிவனந்தனுக்கு இயற்கை குணம் விழித்து கொண்டது. கோபம் தலைக்கு ஏறியது.  ஒரு நாள் குருவிடம் பேசுகிறோம் என்ற நினைவே இல்லாமல் கோவமாக இதைப்பற்றி கேட்டான். ஆனால் குருவோ சிரித்துகொண்டே  நிதானமாக பேச துவங்கினார். 

நீ இன்னும் பக்குவப்படவில்லை என்பதை இப்போது உணர்கிறாயா? 

அணிமா? லகிமா? கரிமா? பிரகாம்மியம்? பிராப்தி. வசித்துவம், ஈசத்துவம் என்னும் அஷ்டமா சித்திகளின் வரிசையில் கூடு விட்டு கூடு பாயும் கலையும் ஒரு சித்தியே. 

பக்குவமற்ற ஒருவனுக்கு இவ்வித்தை வசப்பட்டால் அது இந்த சுமுதாயதிற்கும், ஏன் கற்று கொண்டவனுக்கும் கூட பயன் இல்லை.  எனவே ஊர் திரும்பும் ஏற்பாடுகளை செய் என்று அறிவுரித்தினார். உடனே சிவனந்தன் திடுக்கிட்டு போனான். 

அப்போதுதான் குரு இதுநாள்வரை சோதித்து பார்த்த விபரம் புரிய வந்தது. எங்கே வித்தையை கற்று கொடுக்காமல் விரட்டிவிடுவாரோ என்று பயந்தவன்  அவர் காலில் விழுந்து மன்றாடினான்.

குருவே தங்களிடம் பேசிய முறை தவறுதான். ஆனால் என் கோபத்திற்கான நியாயமான காரணத்தை உணர்ந்து மன்னித்து அருள வேண்டும் என்று கெஞ்சினான்.

சிவனந்தா நெருப்பில் நியமான நெருப்பு, அநியாயமான நெருப்பு என்று பாகுபடுத்தி பார்க்க முடியுமா.  விளக்கில் இருக்கும் சாந்தமான நெருப்பு, தவறி குடிசையில் படுமானால் ஆக்ரோசமாய் பற்றி எரிந்து குடிசையை சம்பலாக்கவே  செய்யும். கோபமும் நெருப்பு போன்றதுதான்.

இல்லறம் மேற்கொள்ளபோகும் உனக்கு இந்த வித்தையால் எந்த பயனும் இல்லை.  மாறாக உனக்கும் மற்றவர்களுக்கும் தீமையை அளித்து விடும்.

எனவே இப்போது திரும்பி செல்.  உரிய காலம் வரும்போது இது போன்ற வித்தையை கற்று கொண்டு சுமுதாயதிற்கு நன்மை செய் என்றார்.

ஆனால் சிவனந்தன் குருவின் கருத்தை ஆமோதிக்காமல் தன் மனக் கருத்தை அவரிடம் எடுத்துரைக்க துவங்கினான்.

சுவாமி... நீங்கள் உங்களின் உடலை விட்டு வெளியேறி அடிக்கடி விண்ணுலகம்  சென்று வருவதை பார்த்திருக்கிறேன். அப்படி அறிந்து  கொண்ட நாள் முதலே எனக்கும் அதுபோல் விண்ணுலகம் சென்று வரும் விருப்பம் வந்துவிட்டது .  எனவே தான் அந்த கலையை கற்றுக் கொள்ளும் ஆவல் வந்து விட்டது.

மெதுவாக கண்களை மூடி தியானித்த குருவின் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தன.  கண் விழித்து குழப்பத்துடன் பேசினார்.

அப்பனே...உனது ஜனன ஜாதகப்படி உனக்கு கேது பகவானின் தசை இந்த வினாடி முதல் துவங்கி விட்டதாக அறிகிறேன். உனக்கு கேது தசை அசுப பலனை அளிக்கும் என்றே கருதுகிறேன்.

என்ன நடக்கும் என்பதை அறிய முடியாதபடி கேது என் ஞான திருஷ்டியை மறைக்கிறார்.  அதனால் நான் உணர்வது என்னவென்றால்,  பெரிய ஆபத்து உனக்கு காத்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

அதோடு கேது பகவான் என் போன்ற சன்னியாசிகளை உருவாக்குபவர். பாம்பாட்டிகளை   உருவாக்குபவர், செப்பிடு வித்தை காரர்களை உருவாகுவது,  குஷ் ட ரோகிகளை உருவாக்குவது என்று பல்வேறு காரக பலன்கள் அவருக்கு இருக்கிறது.

இந்த நேரத்தில் இது போன்ற ஆபத்தான வித்தைகளை கற்று கொள்ள நினைப்பது ஆபத்தானது. சொல்வதை கேள்.

குரு எவ்வளவு எடுத்துரைத்தும் சிவனந்தன் கேட்பதாக இல்லை. திரும்ப திரும்ப அந்த கலையை கற்றுக் கொள்ளும் மன போக்கிலேயே பேசினான்.

சரி.... நீ விண்ணுலகம் சென்று வர வேண்டும் அவ்வளவுதானே, அதற்கு கூடு விட்டு கூடு பாயும் கலையைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

என்னுடைய தவ வலிமையால் உன்னை விண்ணுலகம் அனுப்புகிறேன். ஆனால் ஒரு எச்சரிக்கை  என்று நிறுத்தினார்.

சொல்லுங்கள் சுவாமி....
விண்ணுலகம் செல்லும் நீ... அங்கு யாரிடமும் பேசக்கூடாது. எதையும் தொடவோ, எந்த செயலையும் செய்யவோ முற்பட கூடாது. எந்த சந்தேகம் வந்தாலும் கிழே வந்து என்னிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்.

முக்காலம் உணரும் என் ஞான திருச்ட்டியை கேது பகவான் மறைக்கிறார் என்றால், உனக்கு ஏதோ விபரிதம் நடக்கப் போகிறது என்றுதான் உள்மனம் சொல்கிறது. ஆனால் நீயோ பிடிவாதம் பிடிக்கிறாய்.

அதனால் நீ சென்றதும் உடனே திரும்பி வந்துவிட வேண்டும் என்று கூறினார். எப்படியோ விண்ணுலகம் போக வேண்டும் என்ற ஆவலில் இருந்த சிவனந்தன் உடனே ஆமோதித்தான்.

உடலில் இருந்து உயிரை பிரித்து விண்ணுலகம் செல்லும் வலிமையை கொடுத்ததோடு இல்லாமல், அங்கிருந்து திரும்பி வரும் மந்திரத்தையும் உபசேசித்து அனுப்பி வைத்தார். உடலை விட்டு பிரிந்த சிவனந்தன் விண்ணுலகம் சென்றடைந்தான்.

அங்கே.....

கோடிக்கணக்கான விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் கண் கொள்ள காட்சியை கண்டான். உண்மையில் வியப்படைந்தான்.  அவனுக்கு அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டானது.

அந்த சமயம் அவ்வழியே ஒரு இளம் துறவி வந்தார். ஆர்வ துடிப்பில் இருந்த சிவனந்தன் அதை பற்றி அவரிடம் கேட்டான்.

அதற்கு இளம் துறவி இப்படி சொன்னார். இது தேவரகசியம். இருந்தாலும் சொல்கிறேன், இங்குள்ள ஒவ்வொரு விளக்கும் பூலோகத்தில் வசிக்கும் மனிதர்க்குரியது.

விளக்கில் என்னை தீர்ந்து அணையும் போது அவ்விளக்கிற்குரிய மனிதன் இறந்து விடுவான் என்றார் அந்த இளம் துறவி.

உடனே சிவனந்தனுக்கு பேராசை குணம் விழித்துக் கொண்டது.  இளம் துறவியை  பார்த்து கேட்டான்.... இதில் என் விளக்கு எனது சுவாமி.

மகனே பொறு.  மகத்தான தவவலிமை பெற்றவர்கள் மட்டுமே வரக்கூடிய இவ்விடத்திற்கு, மானிட பிறவியான நீ வந்திருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.  அது உன் குருவின் திருவருள் என்பதும் புரிகிறது.

என்றாலும் மேல் விவரங்களை கேட்காமல் உடனே பூலோகத்திற்கு செல்.  இதுதான் நல்லது. இளம் துறவி சிவனந்தனுக்கு புத்திமதிகள் கூறினார்.  சிவனந்தன் வழக்கம் போல் பிடிவாதம் செய்தான்.

மகனே நீ தும்பை சித்தரின் மாணவன் என்று அறிகிறேன்.  அவர் மீதுள்ள மதிப்பால் கூறுகிறேன், வேண்டாம் உடனே திரும்பி செல்.

மீண்டும் மீண்டும் தனக்கு உரிய விளக்கு எது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலிலேயே பிடிவாதம் பிடித்ததால்,  அவனுக்கு உரிய விளக்கை அடையாளம் காட்டிவிட்டு பொய் விட்டார்.

விளக்கின் அருகில் போய் பார்த்த சிவனந்தனுக்கு அதிர்ச்சி.  காரணம் அவ்விளக்கில் எண்ணெய் தீரும் நிலையில் இருந்தது.  விளக்கில் எண்ணெய் தீர்ந்து அணைத்தால், அவ்விளக்கிற்குரிய மனிதன் இறந்து விடுவான் என்று அந்த இளம் துறவி கூறினாரே.  அப்படியானால் நானும் வெகு விரைவில் இறந்து விடுவேனா.

இதை பற்றி குருவிடம் கேட்டால் ஏதாவது தர்ம நெறிகளை கூறி தடுத்து விடுவார். அதனால் அதற்கு இங்கேயே எதாவது உபாயம் தேடவேண்டும், என குறுக்கு வழி சிந்தனை செய்தான்.

உடனே ஒரு யோசனை தோன்றியது, அருகில் இருந்த விளக்கில் நிறைய எண்ணெய் இருந்தது.  உடனே அதில் இருந்த எண்ணையை எடுத்து தன் விளக்கில் ஊற்றிவிட்டு, உடனே பூலோகம் திரும்பினான்.

பின் தன் உடலில் புகுந்து கொண்டான்.  அதன் பிறகு சிறிது நாழிகையில் அவன் விரல்கள் சிவந்து அரிக்க தொடங்கியது.  பயந்து போனவன் குருவிடம் சென்று விபரம் கூறினான்.

அவரும் நடந்த விபரங்களை தன் ஞான திருஷ்டியால் நடந்த விபரங்களை அறிந்து கொண்டு பரிதாபமாக பார்த்தார்.

நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி செய்து விட்டாயே, விண்ணுலகில்  துறவி உருவில் வந்த கேதுபகவான் கூட முதலில் உன்னை எச்சரிக்கை செய்யவே செய்தார்.

எப்போதுமே கிரகங்கள் கெட்ட காலம் வரும் போது நல்லவர்கள் உருவில் புத்திமதிகள் சொல்லவே செய்யும்.  ஆனால் அதை உதறி தள்ளி விட்டு அவஸ்த்தையில் சிக்கி கொள்வது மானிட குலத்திற்கே உள்ள மாண்புதானே.

கேதுபகவான் எச்சரித்தும் கேட்காமல் ஒரு குஷ்ட ரோகி விளக்கில் இருந்து எண்ணையை எடுத்து உன் விளக்கில் ஊற்றி விட்டாய்.  விளைவு.... அவன் எவ்வளவு காலம் நோயால் பாதிக்க பட வேண்டும் என்ற விதி அமைப்பு இருக்கிறதோ அத்தனை ஆண்டு காலம் நீயும் இந்த நோயால் துன்பப்பட வேண்டி வரும்.

இனி என்னால் செய்வதற்கு ஒன்றும் இல்லை. நீ கேதுபகவானை வணங்கி துன்பத்தில் இருந்து விடு பட வழி இருக்கிறதா என்று யோசி என்று அவனை அனுப்பி வைத்தார்.

குருவை அடைவது முக்கியமல்ல.  குருவின் சொல்லை கேட்க வேண்டும்.  அதோடு அவசரம் கூடாது.  இது ஒரு படிப்பினை.

 

1 comment: