ads

Monday, 18 February 2013

வந்தார் சுப்பிரமணியம் சுவாமி!



ஹெலிகாப்டர் பேர ஊழல் இவ்வளவு பரபரப்பா போய்கிட்டு இருக்கு. இதில் முக்கியமான நபர் இன்னும் வரலையே.  ஆள் எங்கே போனார், அல்லது மௌன விரதம் இருக்காரா என்று யோசித்து கொண்டிருக்கும்      போது சினிமா  போலீஸ் மாதிரி கடைசி நேரத்தில் வந்துட்டார்.   

அவர்தாங்க நம்ம சுப்ரமணியம் சுவாமி    வந்தால் போதுமா...அதிரடியாக ஏதாவது கூற வேண்டுமே… கூறிவிட்டார். இந்த ஊழலுக்கும், சோனியாகாந்தி குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த ஊழல் எந்தவகையிலும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. வி.வி.ஐ.பி.க்களின் பயணத்துக்காக முன்னர், வேறொரு நிறுவனத்தின் ஹெலிகாப்டரைதான் வாங்குவதாக இருந்தது. ஆனால், சில தொழில்நுட்ப குறைபாடுகளை காரணம் காட்டி, அந்த நிறுவனத்தை மாற்றி விட்டார்கள். இதெல்லாம் எதுக்கு?

எல்லாமே கமிஷனுக்காகத்தான்.

இந்த கமிஷனில் பெரும் பகுதியை நேரு காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர்.

இதில் சரிபாதி இத்தாலியில் வசிக்கும் சோனியா காந்தியின் இரு சகோதரிகளுக்கும் போய் சேர்ந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது.

அதனால், இந்த ஊழல் தொடர்பான உண்மைகள் வெளியே வருவதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விரும்பவில்லை. நேரு காந்தியின் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களிலும் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

இப்பத்தான் மனுஷன் உள்ளே வந்திருக்கார். இனி என்னிடம் பத்து ஆதாரம் இருக்கிறது என்று பத்திரிக்கைகளுக்கு சொல்ல வேண்டியதுதான் பாக்கி.  சீக்கிரம் சொல்லுங்க சுவாமி.

குமுதம் பத்திரிக்கை முற்றுகை!



பரபரப்பான அரசியல் செய்திகளையும், அரசல் புரசல் செய்திகளையும்  வாரம் இருமுறை வெளியிடும் குமுதம் ரிப்போர்ட்டர்  இதழில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மற்றும் அக்கட்சியின் பிரமுகர் நடிகை குஷ்பு பற்றி வெளியான கட்டுரையை கண்டித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது அனைவருக்கும் தெரியும். 

இந்த கட்டுரை தொடர்பாக, சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதா, கட்சி ரீதியான போராட்டம் அறிவிப்பதா என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்திருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, குமுதம் ரிப்போர்ட்டர் சஞ்சிகையை தி.மு.க.-வினர் யாரும் வாங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இப்போது இப்போது முடிவு எடுக்கப் பட்டு விட்டது.  குமுதம்  பத்திரிகை அலுவலகம், இன்று 2-வது நாளாக தி.மு.க.-வினரின் முற்றுகைக்கு உள்ளானது.

சென்னையில் அமைந்துள்ள குமுதம் குழும நிறுவனத்தை 2-வது நாளாக சேகர் பாபு தலைமையில் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய தி.மு.க.-வினர் 200 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

நேற்றும் குமுதம் குழும நிறுவனம் முன்பாக தி.மு.க.வினரும், தி.க.வினரும் ஒன்று கூடி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்று கைதாகினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக குமுதம் குழுமத்தை முற்றுகையிட தி.மு.க.வினர் குவிந்ததில், 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பரபரப்பு முக்கியம் தான். கொஞ்சம் பார்த்து எழுதப்படாதா? 

Friday, 15 February 2013

தேவையா இந்த காதல்?



ஆண்கள்  காதல் ஆடையை அவிழ்க்கும் வரை. 

பெண்கள் காதல் பேரன்ஸ் அழும் வரை, என்பது அனுபவ வரிகள். 

இது ஒன்றும் காதலை மட்டம் தட்ட சொல்லப்பட்ட வார்த்தை இல்லை. இதில் உண்மையும் இல்லாமல் இல்லை. 

ஆனால்  காதல் என்ற உணர்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால் மனிதன் இயந்திரமாகத்தான் இருந்திருப்பான்.  காதலிப்பதும், காதலிக்கப் படுவதும் வாழ்க்கை.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் வாழ்க்கை. யாருடைய வாழ்க்கையில் இது தங்கு தடை இல்லாமல் நடைபெறுகிறதோ அவர்கள் வாழ்க்கை சுபிச்சம் பெரும். அதுதான் உண்மையும் கூட.

ஆனாலும் காதல் கசக்கும்.....எப்போது?

காதலிக்கும் பெண் அண்ணான்னு சொல்லும்போதா...?

இல்லை.

உன் மூஞ்சிக்கு எல்லாம் காதல் ஒரு கேடான்னு கேட்கும் போதா..?

இல்லை.

சரி.. காதலி கர்ப்பமா இருக்கும் போதா?

இல்லை.

எப்படிப்பார்த்தாலும் காதல் தோல்விக்கு பிறகுதானே?

இல்லை... காதலில் தோல்வி வந்தால் இன்னொரு காதல் மருந்தாய் மாறுமாமே.

அடடா.. இப்படி ஒரு அக்கப்போரா?   அப்ப நீங்களே சொல்லுங்க.

காதலிக்கும் வயதில் பையனோ, பெண்ணோ இருக்கும் போது,  அவர்களும் காதலிக்கிறார்கள் என்று கேள்விப் படும்போதுதான், காதல் என்ற சொல்லே கசக்கும். அதுவரைக்கும் காதல் இனிமையானதுதான்.

காதலுக்கு உயரிய கவுரவத்தை பெற்று தந்ததில் கவிஞர்கள் பங்கு கணிசமானது. கவிதைகள் பாடி பாடியே காதல் என்றாலே தெய்வீகம் என்று சொல்ல வைத்து விட்டார்கள்.

இந்த  காதல் .......இன்று நேற்று ஏற்பட்டதல்ல. புராணம் காலம் தொடங்கி காதல் இருக்கிறது.

பொருத்தம் பார்த்து திருமணம் செய் என்று சொல்கிற ஜோதிட சாஸ்திரம் கூட, கந்தர்வ திருமணம் என்று காதலை அங்கீகரித்து, மன பொருத்தம் இருந்தால் தச பொருத்தம் தேவை இல்லை என்கிறது.

ஆனால் இன்று  இதே காதல்  விவாதத்திருக்கு உரிய பொருளாக மாறி விட்டது .  ஒரு புறம் ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, பண்பாடு, காலாச்சாரத்தை முன்னிறுத்தி பார்க்கும் பெரியோர்கள், இது தேவையா என்று எதிர் குரல் எழுப்புகிறார்கள். 

காதல் ..... ஜாதி, மதங்களை தாண்டியது. உணர்வு பூர்வமானது, இரு உள்ளங்கள் சம்மந்தபட்டது என்பதை பற்றி எல்லாம் ஏற்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

காதலால் குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவமானங்கள் ஒரு புறம் இருக்க,  ஒரு தலை காதல் வேறு விதமான பிரச்சனை.

அப்பாவி வினோதினிகளும், கவிதாக்களும், காயத்திரிகளும் இருக்கிறார்கள்.  இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் போது, இந்த கேடு கெட்ட காதல் தேவையா  என்ற எண்ணம் வராமல் இல்லை.

வன்முறை, அடாவடி, மிரட்டல், கடத்தல், கொலை முயற்சி என்று சிலரின் முறையற்ற போக்கால் காதலையே கண்டிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

உண்மையில் காதல் என்றால் என்ன?


காதலை  புனிதம்  என்பதை விட புரிந்துணவு என்பது சரியாக இருக்கும். ஒருவரை சந்திக்கிறோம், பேசுகிறோம், பழகுகிறோம், நம்மை அறியாமல் நமக்குள் ஏற்படும் ஒரு வித ஈர்ப்புதான் காதல்.

இவர்கள் நம் வாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே காதல். 

இவர்களோடு நம் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டால்,  இறுதி வரை வாழ்க்கை இன்பமாக இருக்குமே என்ற எண்ணம் தான் காதல்.

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகளை   தூக்கி எரிந்து விட்டு, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடுகளை மறந்து விட்டு,  உள்ளங்கள் ஒன்றினையும் ஒப்பந்த விழா தான் காதல்.

இந்த காதலை  இரு உள்ளங்கள் அங்கீகரிக்கா விட்டால் அதில் அர்த்தமே இல்லை. விருப்பங்கள் இல்லா விட்டால் விலகி செல்வதுதான் உண்மையான காதல்.

வாழ்ந்தால் என்னோடு வாழு என்று சொல்வது உண்மையான   காதலாக இருக்க முடியாது.  கட்டாயபடுத்தி வருவது காதல் இல்லை.

அது இயல்யானது, எந்த மாயமும் மந்திரமும் இல்லாமல் உள்ள கதவு மெல்ல திறந்தால் தான் காதல். ஒரு பக்கம் மட்டும் இருந்தால் அது காதல் இல்லை.


அது வரணும், தானா வரணும். வந்தால் காதல்.

இல்லாவிட்டால்.....!!!


Thursday, 14 February 2013

மீண்டும் வசந்த காலம்!.


வண்ணத்துபூச்சியின்
சிறகசைப்பின் தொடர் விளைவால்
சுனாமி ஏற்படுமா!
இது கேயாஸ் தியரி.

உன் கண்ணிமைகள் படபடப்பில்
என்
இதயத்தில் அடிக்கடி
பூகம்பம் ஏற்படுகிறதே
இது என்ன தியரி?

இனியவளே ...
உள் பக்கத்தின் ஒரு ஓரத்தில்
உன் பெயர் எழுதி இருந்தால்
அது
உன் டைரி.

உள் பக்கம் ஒவ்வொன்றிலும்
உன் பெயரே எழுதி இருந்தால்
அது என் டைரி

அன்பே...
கல்லூரி வாசலில்
நீ
காலடி வைத்தாய்
ஆரம்பித்தது அன்று வசந்த காலம்.!

விடுமுறையில்
நீ ஊருக்கு சென்றாய்
தொடங்கியது கோடைகாலம்.!

உன்னை காணாமல்
கண்ணீரோடு
தேடி வந்தேன்
அது இறந்த காலம்!

இன்று
புன்னகையோடு
என்னிடம்
நீ
சொன்னபோது புரிந்து கொண்டேன்
இது என் எதிர்காலம்
இல்லை
மீண்டும் வசந்த காலம்!.

-மதிவாணன்

Wednesday, 13 February 2013

LOVE TEST


தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே.. என்று சில ஆண்கள் குழம்பித்தான் போவார்கள். சிறு வயது முதல் பழகிய தோழியின் மேல் திடீரென்று காதல் பூத்திருக்கும். 

அதை சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வாள்? ஒரு வேளை வெறுத்து விடுவாளோ என்ற அச்சம் தலை தூக்கும். 

உங்கள் தோழியும் உங்களை நேசிக்கிறாளா? உங்களின் நட்பு அடுத்த கட்டத்தை அடைந்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள சில அறிகுறிகள் உண்டு. இதே போல் உங்கள் தோழியும் நடந்து கொள்கிறாள் என்றால், நிச்சயம் உங்களை நேசிக்கிறாள். 

உங்களை போலவே ஏதோ காரணத்திற்காக காதலை வெளிக்காட்டாமல் மூடி வைத்திருக்கிறாள். காலமறிந்து காதலை வெளியே கொண்டு வாருங்களேன்.

அடிக்கடி பரிசு 

பிறந்த நாள், சந்தித்த நாள், பாத்தேன் பிடிச்சிருந்தது, உனக்கு இப்படி எல்லாம் பிடிக்குமே, இப்படி ஏதோ ஒன்றை சாக்காக வைத்து அடிக்கடி பரிசு பொருள்களுடன் உங்களை உங்கள் தோழி சந்திக்கிறாளா?

அப்படியானால் உங்களிடம் அவளை பற்றிய நினைவுகள் அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறாள். நட்பை தாண்டிய பரிசு பொருளாக கொடுக்கிறாளா என்பதை கவனிக்கவும்.


உங்களுடன் அதிக நேரம்

முன்பெல்லாம் அரிதாகத்தான் உங்கள் சந்திப்பு நிகழும்.ஆனால் இப்போது அடிக்கடி திட்டமிட்டு உங்களை சந்திக்கிறாளா? ஏதாவது காரணத்தை சொல்லி உங்களுடன் அதிக நேரத்தை செலவழிக்கிறாளா? என்று கவனிக்கவும்.


அதீத அக்கறை 

ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால், உங்களை அதிக சிரமத்திற்கு ஆளாக்காமல் வேலையை இழுத்து போட்டுக்கொண்டு செய்கிறாளா? சின்ன சின்ன விஷயத்திற்கு கூட, சந்தேகம் கேட்கும் சாக்கில் உங்களிடம் வந்து பேசுகிறாளா? உங்கள் மீது அன்பு அதிகரித்து விட்டது.


சதோஷ நினைவுகள்

நீங்கள் சந்தித்த இடம், நீங்கள் முதலில் பேசிய வார்த்தை, முலில் கொடுத்த பரிசுப்பொருள் என்பதை பற்றியெல்லாம் கண்களின் மகிழ்ச்சி மின்ன பேசுகிறாரா? அப்போ கண்டிப்பா அதுதான்.


சின்ன சின்ன ஆச்சரியம்

உங்கள் தோழி அடிக்கடி ஆச்சரியம் கொடுக்கிறாளா? உங்களை தொட்டு பேசுவது, அடிக்கடி SMS  அனுப்புவது, மெயில் அனுப்புவது என்று சர்பிரைஸ் தருகிறாரா? அப்படியானால் நட்பை தாண்டி காதல் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம்.


அடிக்கடி மன்னிப்பு கேட்கிறாரா?

சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அடிக்கடி மன்னிப்பு கேட்கிறாரா?  அசடு வழிகிறதா? செல்லக்கோவம், செல்ல சண்டைகள் போட்டு, பின்னர் தானாக வந்து மன்னிப்பு கேட்கிறாரா? அப்போ புரிஞ்சுக்கோங்க பாஸ், அவங்க உங்களை லவ் பன்றாங்க.


எப்படி சொல்லலாம்?

உங்களை அவர் நேசிக்கிறார் என்று தெரிந்தவுடன், நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்த வேண்டாம்.காத்திருந்து தனிமையில் அந்த சந்தோஷ செய்தியை சொல்லுங்கள்.

சிலர் முகம் பார்த்து பேச கூச்சப்படுவார்கள். எனவே பேசாமல் கடிதம் கொடுங்கள். மெயில் SMS என எத்தனயோ இருக்கிறது. உங்கள் உணர்வுகளை தெளிவாக புரியவையுங்கள். ok

நன்றி மக்கள் ஓசை 

இதுதான் காதல் என்பதா?



காதலுக்கு விளக்கம் சொல்வது கஷ்டம். ஆனால் காதல் எப்படி எல்லாம் ஒரு மனிதனை மாற்றுகிறது, அது எப்படி உணர வைக்கிறது, என்பதற்கு நிறைய உதாரணங்கள் காட்டலாம். 

ஜெர்மனியை சேர்ந்த தத்துவ ஞானி பிரட் ரிச் காதலை குறித்து படு அழகான மேற்கோளை சொல்லி உள்ளார். 

அதை கொஞ்சம் படித்து பாருங்களேன்.

ஒவ்வொரு காதலிலும் ஒரு பைத்தியகாரத்தனம் இருக்கும்.  அப்போதுதானே அதை காதல் என்றே சொல்ல முடியும். ஆனால் பாருங்கள் பைத்தியகாரத்தனம் ஒவ்வொன்றிலும் ஒரு காரணம் ஒளிந்திருக்கும். அதுதான் அந்த காதலை மேலும் அழகாக்குகிறது.

ஒரு முழுமையான மனிதனை கண்டுபிடித்து காதலிப்பது நிச்சயம் சரியான காதலாக இருக்காது. ஆனால் சின்ன சின்ன குறைபாடுகள் உடைய, முழுமை இல்லாத ஒரு நல்ல மனிதனை கண்டுபிடித்து அவனை காதலித்து, அவனை முழுமையான மனிதனாக மாற்றுவதே உண்மையான காதல்.

நான் உன்னை ஒருபோதும் வெறுத்ததில்லை. ஒரு வேளை உன் மீது நான் கோவத்தை கொட்டினாலோ, வெறுப்புடன் பேசினாலோ, நிச்சயம் அது அதிருப்தியின்  அடையாளம் அல்ல.

மாறாக உன் மீது நான் எத்தனை அன்பு செலுத்துகிறேன் பார் என்பதை உணர்த்தும் ஆதங்க வார்த்தைகள் அவை.

உன்னை சந்தித்தது விதி. உன்னுடன் நட்பு கொண்டது ஒரு வாய்ப்பு. ஆனால் உன்னிடம் காதலில் வீழ்ந்தது, என்னையும் அறியாமல் நடந்தது. என்னால் கட்டப்படுத்த முடியாமல் போனது. அதுதான் காதல்.

காதல் ஆறுதல் அல்ல. அது ஒளி.  வழிகாட்டி. வெளிச்சகீற்று.  நான் இன்னும் வாழ்கிறேன். தொடர்ந்தும் வாழ்வேன். நீ என்னுள் உயிர்ப்புடன் இருக்கும் வரை. அதே காதலுடன்.

மகா குருவும், மகா சீடனும்!!


புத்தரின் பிரதான சீடர்களில் முக்கியமானவர்  மகா காஷ்யபன். அவர் ஞானம் அடைந்ததும் நாடு முழுவதும் சுற்றிவருமாறு அவரை பணித்தார் புத்தர். 

காஷ்யப்பன் திகைத்தான். உங்களை விட்டு நான் எங்கே செல்வது? 

பசித்தவர்களிடம் போ, தாகம் கொண்டவர்களிடம் போ, உனக்கு கிடைத்ததை எல்லோருக்கும் பங்கிட்டு வழங்கு. ஞானத்தை பரப்பு. 

சுவாமி... நீங்கள் என்னை ஏமாற்ற நினைகிறீர்கள். நான் ஞானம் பெறுவதற்கு முன்பு இதை சொல்லிருந்தால் உங்கள் ஆணையை தட்டாமல் போயிருப்பேன். விழிப்புர்ணவு என் இயல்பு. அதை எப்போது வேண்டுமானாலும் நான் அடைந்து விடலாம். 

ஆனால் நான் இப்போது ஞானம் அடைந்து விட்டேன். இது உங்கள் கடைசிப் பிறவி என்பதையும் நான் அறிந்து விட்டேன். நான் உங்களை விட்டு பிரிந்தால் உங்களுடன் இருக்கும் பாக்கியத்தை இழந்து விடுவேன். 

ஏன்.. என்னை தந்திரமாக விரட்டுகிறீர்கள்.  காஷ்யபன் கண்களில் நீருடன் புத்தரை பார்த்து கேட்டார். 

காஷ்யபா.. நீ இதை செய்துதான் ஆகவேண்டும். எல்லோருடைய தாகத்தையும் நான் ஒருவனே நேரில் சென்று தீர்க்க முடியுமா? 

நீயே என் கைகள், நீயே என் கண்கள், இப்போது நீயே நான்.  நான்தான் நீ. போய் வா. நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்.

சரி, நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இரு நிபந்தனைகள். எனக்கு தெரியாமல் நீங்கள் மோட்சம் எய்யக்கூடாது. 

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்  என்ற விவரத்தை  எனக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கவேண்டும்.  இதை ஏற்றுக்கொண்டால் நான் உடனே புறப்பட்டு விடுகிறேன் என்றான் காஷ்யபன். 

இது விநோதமாக இருக்கிறது. நான் போகும் இடங்களை எல்லாம் எப்படி உனக்கு தெரிவிப்பது. இது சாத்தியமா? 

அதோடு மரணத்துடன் நான் எப்படி சமரசம் செய்து கொள்வது. மரணம் வரும்போது நான் புறப்பட்டுத்தானே ஆகவேண்டும். நான் யாரிடத்திலும் எதையும் கேட்பது இல்லை. உனக்கே தெரியும்.

உனக்காக காத்திருக்கும்படி மரணத்திடம் நான் கெஞ்சமுடியுமா? என்னை சங்கடத்தில் ஆழ்த்துகிறாய் காஷ்யபா.

அப்படியானால்  நான் போக மாட்டேன் பிடிவாதமாக மறுத்தான் காஷ்யபன். வேறு வழியிலாமல் புத்தர் சம்மதிக்க வேண்டியதாயிற்று. காஷ்யபன் புறப்பட்டான்.


வாக்களித்த படி தான் தங்கியிருக்கும் இடத்தை ஒரு சீடர் மூலம் அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தார் புத்தர். 

காஷ்யபன் காலையிலும் மாலையிலும் புத்தர் இருக்கும் திசையை நோக்கி விழுந்து வணக்கினான். குரு வணக்கத்தை கண்கலங்க பரவசமாய் செய்து வந்தான். 

அதை கவனித்த மக்கள், மகாகாஷ்யபரே நீங்கள் ஞான குருதானே, ஏன் இப்போதும் ஒரு சீடனாய் இருந்து குரு வணக்கம் செய்கிறீர்கள் என்று கேட்டனர். 

புத்தர் பெருமான் தான் என் குரு. அவர் உயிர் தாங்கி இருக்கும் வரை,  நான் அவருடைய சீடன். இப்படி  இருப்பது அற்புதமான அனுபவம். குளிச்சியான நிழலில் இருப்பது போன்றதுதான் குருவின் நிழல். 

குரு போய்விட்ட பிறகு நானே குருவாக ஆகிவிடும் போது, வெயிலில் இருப்பது போல். அப்போது எனக்கு நிழல் இல்லை. 

சீடனாக இருப்பது எந்த விதத்திலும் தாழ்ந்தது ஆகாது. ஒரு வினாடி கூட குருவை மறந்து என்னால் இருக்க முடியாது என்றான் காஷ்யபன்.

புத்தரின் மரணநாள் வந்தது. புத்தர் ஆனந்த்தனை கூப்பிட்டார்.  காஷ்யபன் சென்ற பிறகு ஆனந்தந்தான் பிரதான சீடன்.

ஆனந்தா.. மகாகாஷ்யபனை உடனே வர ஏற்பாடு செய். மரணத்திடம் கொஞ்சம் காத்திரு என்று என்னால் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

நாளை காலை உதயத்திற்குள் காஷ்யபன் வரவில்லை என்றால் மரணத்திடம் நான் கெஞ்ச வேண்டியிருக்கும். அந்த நிலைக்கு என்னை உட்படுத்தி விடாதே என்றார்.

ஆனந்தன் பல சீடர்களை பல திசைகளுக்கு  அனுப்பினான்.  மகா காஷபன் வந்து விட்டான்.

புத்தருக்கு மகிழ்ச்சி.  மிகுந்த சந்தோசத்துடன் அவன் மடியில் தலை வைத்து படுத்தார்.உயிர் துறந்தார். பல்லாயிரம் சீடர்கள் அந்த காட்சியை கண்டனர்.

மகாகாஷ்யபருக்கு மட்டும் எப்படி அந்த பாக்கியம் வந்தது?

புத்தரின் பிரதான சீடர்களில் ஒருவனான சாரி புத்தன் சொன்னான்.

காஷ்யபர் ஒருவர் மட்டுமே வெளியில் சென்ற பிறகும் சீடராகவே வாழ்ந்தார். வெளியில் போனால் எல்லோரும் குருவாக மாறிவிடுவார்கள். காஷ்யபன் அப்படி இல்லை. காஷ்யபன் ஞான செல்வம் மிக்கவர். மிக சிறந்த சீடராக இருந்ததால் இப்போது ஞான குருவாகிறார்.

Monday, 11 February 2013

இதில் நியாயம் இல்லை!!


அப்சல் குரு, தூக்கிலிடப்பட்டது, இயல்பாக நடந்ததா அல்லது அதற்கு பின்னணி உள்ளதா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது, 

மும்பை தாக்குதல் சம்பவ குற்றவாளி, அஜ்மல் கசாபை தூக்கிலிட்டபோதே, அடுத்ததாக, அப்சல் குருவுக்கும், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. 

அது, இவ்வளவு விரைவாக நடக்கும் என, நினைக்கவில்லை. தற்போது, நான் அறிய விரும்புவது, ஒரே ஒரு விஷயத்தை தான். 

அப்சல் குருவுக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது, இயல்பாக நடந்ததா அல்லது அதற்கு பின்னணி இருக்கிறதா என்பதை, மாநில மக்களுக்கும், சர்வதேச சமுதாயத்துக்கும், விளக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது.

இப்படி ஒரு அதி நுட்பமான கேள்வியை எழுப்பி இருப்பவர் யார் தெரியுமா?

 காஷ்மீர் முதல்வரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும், தேசிய மாநாட்டு கட்சியின், தலைவர்களில் ஒருவருமான, உமர் அப்துல்லா தான் இந்த கேள்விக்கு சொந்தக்காரார். 

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தாக்கியதில் ஒன்பது பாதுகாப்பு வீரர்கள் உயிரிழக்கிறார்கள். 16 பேர் காயமடைகிறார்கள். 

ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்படுகிறார்கள். இதற்கு உதவியாக இருந்தது அப்சல் குரு என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபணம் ஆகியிருக்கிறது.

குற்றவாளி என்று தீர்ப்பளித்த உடனே தூக்கிலப்படவில்லை.  மேல் முறையீடு செய்வதற்கான  அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் ஆன பிறகே தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

இதில் சந்தேகம் வர காரணம் என்ன இருக்கிறது.

ஒருவன் குற்றம் செய்கிறான். குற்றத்தின் தன்மை என்ன என்று பார்க்க வேண்டுமே தவிர, அந்த குற்றத்தை செய்தவன் எந்த ஜாதி, எந்த மதம் ஆராய்ந்து, அந்தந்த இனத்துக்காரர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பிக்கொண்டிருந்தால், குற்றவாளிகளை தண்டிப்பது எப்படி? இதில் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு என்ன பதில்?  தனி மனிதனை விட தேசம் பெரிது.

பொது அமைதிக்கு  பங்கம்  விளைவிக்க மக்கள் நெரிசல் மிகுந்த ஒரு இடத்தில் குண்டு வெடிக்கிறது என்றால், அந்த குண்டு வெடிப்பில் இறப்பவர் குறிப்பிட்ட  இனத்தை சார்ந்தவர் மட்டும் இல்லை. அந்த இடத்தில் இருக்கும் அப்பாவிகள் அத்தனை பேரும்தான்.

இரக்கமற்ற மனிதர்களுக்கு மதச்சாயம் பூசி, தியாகியாக்கும் செயல் தவறானது மட்டும் அல்ல கண்டிக்கத்தக்கதும் கூட.

Sunday, 10 February 2013

அருந்ததி!!


மூவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்களும் ஆசிர்வதிக்க, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, அக்னி சாட்சியாக திருமணம் செய்யப்படுகிறது என்பது திருமண சடங்கு. இதில் அருந்ததி பார்த்து என்று வருகிற அவள் கதை தெரியுமா? இதோ...

பிரம்மாவின் மகளாக பிறந்தவள் சந்தியா. அழகின் இலக்கணமாய் அமைந்தவள். இளமை பருவத்தில் அவளது அழகு பார்ப்பவர்களை ஈர்த்தது. 

வயது வித்தியாசமின்றி அனைவரும் அவளை ரசித்து பார்த்தனர். அவளது சகோதர்களான பிராஜாபதிகளின் கண்களில் தெரிந்த உணர்வுகள் அவ்வளவு கண்ணியமானதாக தெரியவில்லை.  இதை உணர்ந்த சந்தியாவின் உடல் கூசியது. அவர்கள் முன்வரவே தயங்கினாள்.

ஒரு முறை தன்  தந்தையுடன் அவள் பேசும்போது அவரின் பார்வை தன் உடலில் சாதாரணமாக படித்ததை தவறாக உணர்ந்த  சந்தியா.. தன் அழகை எண்ணி நொந்து கொண்டாள்.

அவளது அழகு அவளுக்கு அசிங்கமாக தெரிந்தது. வேதனையில் உள்ளம் எரிந்தது. உடலை எரித்து விடவும் நினைத்தாள்.

சந்திப்பாகா மலைக்கு சென்று விஷ்ணுவை மனதில் நிறுத்தி கடும் தவத்தை மேற்கொண்டாள். தவம் தொடர்ந்தது. சுற்றுபுறமெங்கும் தவத்தின் செம்மை தகித்து வைகுண்டத்தை அடைந்து மகாவிஷ்ணுவை இழுத்தது. 

விஷ்ணு நேரில் தோன்றினார். உன் தவம் என்னை மகிழ்ச்சி படுத்துகிறது. உனக்கு என்ன வரம் வேண்டும்? 

சுவாமி.... ஒருவனுக்கு ஒருத்தி என்ற பதிவிரதா தர்மத்துடன் வாழ்வதையே நான் விரும்புகிறேன். ஆனால் என்னை சுற்றி உள்ளவர்கள் பார்வை என்னை எரிக்கிறது.  என் உடல் கூசுகிறது.  

பலாராலும் மாசுபட்ட இந்த உடல் எனக்கு தேவையில்லை. இதை எரித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் என் கணவனை தவிர எந்த ஆணையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்ககூடாது.

எந்த ஆண்மகனும் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது.  எளிமையும் அமைதியுமாய் என் வாழ்க்கை இருக்கவேண்டும் என்பதே நான் கோரும் வரம் என்றாள் சந்தியா.

சந்தியா... நீ கேட்ட வரத்தை தந்தேன். நீ கொண்டிருக்கும் எண்ணப்படி உன்னுடைய இந்த தேகம் எரிய வேண்டும் என்பதே விதி.


மேதாநிதி என்ற முனிவர் ஜோதிஷ்ட ஹோமம் என்ற யாகத்தை செய்து கொண்டிருக்கிறார். அது பன்னிரண்டு ஆண்டுகளில் முடியக்கூடிய யாகம்.  அது இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது.

சந்திரபாகா நதியின் கரையில்தான் அந்த யாகம் நடைபெற்று வருகிறது.  யாகத்தை நடத்திக்கொண்டிருப்பவர்களின் கண்ணில் படாமல் நீ யாக அக்னி குண்டத்தில் விழ வேண்டும்.

என் ஆசியால் நீ மேதாநிதி முனிவரின் மகளாக அவதரிப்பாய். நீ கேட்ட வரத்தின் படி உன் வாழ்க்கை அமையும் என்று விஷ்ணு கூறினார்.

சந்தியா அவ்வாறே செய்கிறாள்.

விஷ்ணு அக்னி பகவானிடம் நெருப்பில் விழுந்த சந்தியாவின் உடலை சூரிய மண்டலத்தில் வைக்க சொன்னார்.

சூரிய பகவான் அவளது உடலை இரண்டாக பிரித்து தன் ரதத்தில் வைத்தார். உடலின் மேல் பாகம் பாரதாஸ் சந்தியா என்னும் விடியற்காலையாகவும், கீழ்பாகம் ஸாயம் சந்தியா என்னும் மாலை பொழுதாகவும் ஆயின.

அதே சமயம் சந்திரபாகா நதிக்கரையில் யாகம் நிறைவினை அடையும் பொழுது யாக குண்டத்தில் இருந்து நெருப்பு சுடராய் ஒரு பெண் குழந்தை தோன்றியது.

மேதாதிதி அந்த பெண் குழந்தைக்கு அருந்ததி என்று பெயரிட்டு தன் ஆசிரமத்தில் வளர்த்து வந்தார். சந்திரபாகா நதிக்கரையில் அருந்ததி வளர்ந்தாள்.

ஐந்தாவது வயதில் தன் மகளை மேதாதிதி முனிவர் கல்வி கலைகளை பயில சூரிய பகவானின் மகளான சாவித்திரியிடம் அனுப்பி வைத்தார்.

கல்வி கற்கும் பருவத்தில் ஒருநாள் அங்கெ வந்த வசிட்டரை பார்த்தாள் அருந்ததி.  இளமையான வயதில் வலிமையான உடற்கட்டுடன் காவி உடையில் எளிமையாய் காட்சியளித்த வசிட்டரே தன் கணவனாக வரவேண்டும். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவரே தனக்கு கணவனாக அமைய வேண்டும் என்று மனதார எண்ணினாள் அருந்ததி.

விஷ்ணுவிடம்  அவள் வேண்டிய வரமும் அதுதானே. சாவித்திரியின் ஆசிர்வாதத்துடன் அனைத்து தெய்வங்களின் முன்னிலையிலும் வசிட்டர் அருந்ததி திருமணம் நடைபெற்றது.

வசிட்டருடன் அவரது ஆசிரமம் சென்ற அருந்ததி கணவரின் மனமறிந்து அன்பான முகத்துடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

அருந்ததியின் பணிவிடையால் வசிட்டர் பெரிதும் மகிழ்ந்தார். இனிவரும் பிறவியெல்லாம் வசிட்டரே தன் கணவனாக வரவேண்டும்.

அவரை விட்டு பிரியாமல் எப்போதும் அவருடன் இருந்து சேவை புரிய வேண்டும் என்பதே அருந்ததியின் வேண்டுதலாய் இருந்தது.

அது போலவே வானில் நட்சத்திரமாய் வசிட்டருடன் பதியை விட்டு பிரியாத பத்தினியாய் இருந்து ஒளி வீசி  வருகிறாள் அருந்ததி.


சிறந்த இல்லத்தரசியாய் விளங்க அருந்ததியின் ஆசிர்வாதம் வேண்டும் என்பதற்காகத்தான் திருமண சடங்கின் போது, மணப்பெண் அருந்ததியை பார்க்க வானத்தை நோக்கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது.

Saturday, 9 February 2013

மந்திரங்களின் மகிமை.

மேகங்களற்ற இரவு என்ற வானத்தை, தனிமையில் மொட்டை மாடியில் படுத்த வண்ணம் ரசித்த அனுபவம் உண்டா? பிரமிக்க வைக்கிறது பிரபஞ்ச வெளி. 

கோள்களும், நட்சத்திரங்களும் உலவுகின்ற இந்த அகண்ட பிரபஞ்சம் எவ்வளவு அற்புதமானது. 

இந்த தொலைவானில் எங்கேனும் ஒரு கிரகத்தில் இருந்து ஏதேனும் ஒரு உயிர் நம்மை போலவே, இந்த பூமியை பார்த்து வியந்து கொண்டிருக்குமோ. 

இறைவனின் படைப்பில்தான் எத்தனை  ரகசியங்கள். எத்தனை அதிசயங்கள்.

ஒரு பைத்தியகாரியை போல் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதோடு சூரியனையும் சுற்றி வருகிறது இந்த பூமி.

சத்தியத்திற்கு கட்டு பட்டது போல், காலம் காலமாக ஒரே மாதிரியாக சுற்றிக் கொண்டிருக்கிறது பூமி.  பூமி மட்டுமா? கிரகங்களும்தான். தலைவனாய். நடுவில் வீற்றிருக்கும் சூரியன் ஒளிவீசி சிரிக்கிறான்.

ஓன்று தெரியுமா? இந்த பூமி இப்போது இருப்பதை விட ஒரு பத்து சதவீத தூரம் சூரியனுக்கு நெருக்கமாய் இருந்தால் எப்போதோ எரிந்து போயிருக்கும்.

இல்லை இப்போது இருப்பதை விட பத்து சதவீத தூரம் விலகி இருந்தால் குளிரால் உறைந்து போயிருக்கும். பூமி என்ன ...சந்திரன் இப்போது இருப்பதை விட ஐந்தில் ஒரு பங்கு தூரம் அருகில் இருந்தால் தினசரி இரண்டு சுனாமிகள் பூமி சந்த்திருக்கும்.

இந்த பிரபஞ்சத்தை படைத்த கடவுள் எவ்வளவு கருணை உள்ளவர்.  மனிதர்களுக்கு எவ்வளவு சௌகரியங்களை செய்து தந்திருக்கிறார்.

இந்த பூமியில்தான்  எத்தனை எத்தனை ஜீவராசிகள். மனிதன் மட்டும் இயற்கையை ரசிக்கிறான். நேற்றை பற்றி நினைத்து பார்க்கிறான்.

நிகழ்காலத்தில் வாழ்க்கையை அனுபவிக்கிறான். எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறான்.

கடவுளின் ரகசியத்தை அறிய கடவுளிடம் நெருங்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டே இருக்கிறான்.

நம் முன்னோர்கள் நம்மை விட அதிகமாகவே சிந்தித்திருக்கிறார்கள். யோசித்திருக்கிறார்கள். பிறப்பு இறப்புக்கு உட்பட்ட இந்த மனித வாழ்வின் ரகசியத்தை அறிய முயன்றிருக்கிறார்கள்.

இறைவனை நெருங்கும் வழியை அறிந்திருக்கிறார்கள். தியானத்தில் தங்கள் ஸ்தூல உடம்பில் இருந்து வெளிப்பட்டு சூச்சும உடலின் மூலம் மனோ வேகத்தில் பயனபட்டிருக்கிரார்கள்.

இந்த பிரபஞ்சத்தை சுற்றி பார்த்திருக்கிறார்கள். கிரகங்களின் தன்மையை அவற்றின் சஞ்சார மாற்றத்தினால் ஏற்படும் ஈர்ப்பு சக்தியால் பூமியில் உண்டாகும் அதிர்வுகளை கண்டறிந்திருக்கிறார்கள்.

அவை தனி மனித வாழ்வில் எந்த அளவு விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.  இந்த கிரகங்களை வைத்துக் கொண்டு  சூரியன் ஆடும் விளையாட்டு மனிதனின் பிறப்பில்  இருந்து இறப்பு வரையிலான வாழ்க்கை சூழலை நிர்ணயிக்கிறது.

என்பதை அறிந்து அதை நமக்கு ஜோதிட சாஸ்த்திரமாக தந்திருக்கிறார்கள்.  இந்த பூமியில் மனிதர்கள் தலைமுறை தலைமுறையாக பிரச்சனை இன்றி வாழ வழிமுறைகளை கண்டறிந்து வேதங்களாக, உபநிடதங்களாக, சடங்குகளாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.

வார்த்தைகளின் அதிர்வால் இயற்கையை வசப்படுத்தும் வித்தையை, தெய்வ சக்திகளை ஈர்க்கும் ரகசியங்களை அறிந்து மந்திரங்களாக நமக்கு தந்திருக்கிறார்கள்.

இந்த மந்திரங்களை முறையாக குரு வழி உபதேசம்   பெற்று சொல்லிவந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபட மார்க்கம் கிடைக்கும்.

வாயில் நுழையாத சம்ஸ்கிருத மந்திரமா என்று நீங்கள் மலைக்க வேண்டாம். கந்த சஷ்டி கவசம் சொன்னால் கூட போதும். சொல்லி பாருங்கள். 

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...