Follow by Email

Sunday, 5 January 2014

ஏன்?

* இல்லத்தில் எந்தெந்த நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். 

அதிகாலை சூரிய உதயத்திற்கு சற்று முன்னும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்னும் விளக்கேற்றி வந்தால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

 * கன்னி மூலை என்றால் என்ன?

வடக்கிழக்குப் பகுதி கன்னி மூலை எனப்படும். 

* உறங்கும் போது எத்திசை நோக்கி தலை வைக்கக்கூடாது?

வடதிசை நோக்கி  தலை வைத்து உறங்குவது சரியில்லை. இந்த பூமியை வடக்கு தெற்காக ஒரு காந்தவளையும் சுற்றி வருகிறது அது வடக்கில் மையம் கொள்கிறது.   

நமது உடலிலும் அவ்வாறே  ஒரு காந்தச் சுழல் இருந்து கொண்டிருக்கிறது அது சிரசில் மையம் கொள்கிறது.  வடதிசையில் நாம் தலை வைத்துப் படுக்கும் போது இந்த இரு மையங்களும் ஒன்றுக் கொன்று எதிராக செயல்புரிவதால் மனம் அமைதியற்ற அலைபாயும். உறக்கம் கெடும். உடல் பாதிப்பும் ஏற்படும் இதனால் வடதிசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.

* நித்ய பூஜை என்றால் என்ன?

தினசரி செய்து வரும் பூஜைகளே நித்ய பூஜையாகும். 

* நைமித்திக பூஜை என்றால் என்ன?

சிறப்புத் தினங்களில் செய்யப்படும் சிறப்புப் பூஜை நைமித்திக பூஜை எனப்படும்.

* மலர்களைத் தவிர்த்து எந்தெந்த பத்ரங்களை அர்ச்சனை பூஜைக்குப் பயன்படுத்தலாம்?

துளசி, வில்வம், வேப்பிலை, அருகு.

* ‘துவஜ ஸ்தம்பம்’ என்றால் என்ன?

துவஜ ஸ்தம்பம் என்றால் கொடி மரம்.

* கோபுர தரிசனம் என்றால் என்ன?

ஆலய கர்ப்பகிரகத்திற்கு மேலே இருப்பது கோபுரம். இறைவனின் ஸ்தூல உருவமாக கருதப்படுவது கோயில் அமைப்பு. இதில் சிரசு கர்ப்பக்கிரகததின் மேலுள்ள  கோபுரமாகும். 

இராஜ கோபுரம் இறைவனின் பாத கமலமாகும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். எனவே திருக்கோவில் அருகே வந்ததும் கோபுரத்தை நிமிர்ந்து நோக்கி வணங்குகிறார்கள். 

* நைவேத்யம் என்றால் என்ன?

நைவேத்யம் என்பது திரு அமுது படைத்தல். சமைத்த சைவ உணவு, பொங்கல் வகைகள் , பலகாரங்கள் இவற்றிற்கு நெய் விட்டு இறைவனுக்கு அன்புடன் படைப்பது நெய் வேத்யமாகும்.

* மூலஸ்தான விக்கிரகம் கருங்கல்லில் அமர்ந்திருப்பது ஏன்? 

பிரபஞ்சத்திலுள்ள சக்தியை ஈர்ப்பதற்காகவே மூலஸ்தான விக்கிரகம் கருக்கல்லில் அமைந்துள்ளது. கருங்கல்லில் சிலிகான் எனப்படும் ஒலி அதிர்வுகளை ஈர்க்கும் தாதுப்பொருள் உள்ளது. 

இவைதான் தற்போது தொலைக்காட்சி, கணிணி, கைபேசி போன்றவற்றில் உபயோகப்படுகிறது. ஒலி அதிர்வுகளை ஈர்க்கவும்  அனுப்பவும் இந்த சிலிகான் பயன்படுகிறது.  

பிரபஞ்சத்திலுள்ள அதிர்வுகளை ஈர்க்கவும், மந்திர ஒலி அதிர்வுகளை பிரபஞ்ச வெளிகளுக்கு அனுப்பவும் கருங்கல்லுக்கு ஆற்றல் அதிகம் இருப்பதை வெகுகாலத்திற்கு முன்பே நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால் கருங்கல்லால் மூலஸ்தான விக்ரகத்தை அமைத்தார்கள். 

* இறைவனுக்குத் திரை போடப்படுவதன் காரணம் என்ன?

மாயை என்கிற திரை இறைவனை மறைத்துக் கொண்டிருக்கிறது. அதை விலக்கினால் இறைவன் காட்சி கிடைக்கிறது. இறைவனை வழிபட முடிகிறது.

மனதின் மாசுகளை விலக்கினால் நம் மாயை விலகி ஆத்ம தரிசனம் கிடைக்கிறது. ஆத்ம தரிசனம் ஞானத்தை அளிக்கிறது. 

* இந்து என்ற சொல் எவ்வாறு ஏற்பட்டது?

பரத கண்டம் என்ற பெயரிலேயே அக்காலத்தில் இந்தியா அழைக்கப்பட்டது. வெளி நாட்டிலிருந்து வருகை புரிந்த அந்நியர்களும் படையெடுப்பாளர்களும் இமய மலையில் உற்பத்தியாகும் ஆங்கிலத்தில் இந்து நதி என்றழைக்கப்பட்ட,  சிந்து நதிக் கரையோரமும், அதற்கு தெற்கேயும் வாழ்ந்த மக்களை குறிக்கும் பொருட்டு இந்துக்கள் என்று அடையாளமிட்டு அழைத்தனர். 

அம்மக்கள் கடைபிடித்த கொள்கைகளே இந்து மதம் என கூறப்படலாயிற்று என்பது ஆய்வார்களின் கருத்தாகும்.  உலகில் பிற மதங்கள் அனைத்தும் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பே நம் மக்கள் கடைபிடித்த இறை, மற்றும் நன்னெறிக் கொள்கைகளுக்கு தோற்றம், கால வரம்புத் தெரியவில்லை. 

இன்று இந்து மதம் என்றே அழைக்கப்படுகிறது. நாம் இந்துக்கள் என அழைக்கப்படுகிறோம். நாடு இந்தியா என்று அழைக்கப்படுகிறது. ‘இமய மலைக்கும் இந்து மகாசமுத்ர பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி இந்தியா எனவும் அங்கு வாழும் மக்கள் இந்துக்கள் எனவும், அவர்களின் கலாச்சாரம் இந்து சமயம் எனப்படுகிறது.’ என்று கூறுவோரும் உண்டு.

* இந்து மதம் சனாதன தர்மம் என ஏன் வழங்கப் படுகிறது?

எப்பொழுது யாரால் தொடங்கப்பட்டது என்றறிய  முடியாத அளவு தொன்மை வாய்ந்த,  பழமையான நெறி, சனாதன தர்மம் என வழங்கப்படுகிறது. 

* இந்து மதத்தின் சிறப்பம்சம் என்ன?

1. இறைவன் ஒருவனே, அவனைப் பல உருவங்களில் வழிப்படுகிறோம். எம்முறையில் வழிபட்டாலும் இறையருளைப் பெற முடியும். 

2. இறைவன் உருவமில்லாதவன், நம் மனத்தில் அவனை நிலை நிறுத்த ஒரு அடையாளம் தேவைப்படுவதால் உருவ வழிபாடு ஏற்பட்டது. இறைவனை அடையும் வழியில் முன்னேற்றம் காணக் காண உருவ வழிபாடு தேவையற்றதாகி விடுகிறது. அதை உணர்த்தவே அருவ வழிபாடாகிய ஜோதி வழிபாடு ஏற்பட்டது. 

3. ஆத்மா மனிதனாக பிறவியெடுக்கிறது. பல பிறவிகள் எடுத்தெடுத்து மறைந்தாலும்,  ஆத்மாவிற்கு அழிவில்லை. அது முடிவில் பரம் பொருளோடு ஒன்றிவிடுகிறது. அப்போது பிறவிப் பயணம் முடிவுறுகிறது. 

4. செய்கின்ற பாவ புண்ணியங்களுக்கேற்ப ஒருவனின் அடுத்த ஜென்மம் அமைகிறது. ஒருவனின் உயர்நிலை, தாழ்நிலைகளை அவனது முன் ஜென்ம வினைகளே தீர்மானிக்கிறது. 

5. அன்பே இறைவன். அனைத்துயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும். தன்னை நேசிப்பது போலவே அனைவரையும் நேசிக்க வேண்டும். இதுவே இறைவனை அடையும் எளிய வழி.

* ரிஷி என்பவர் யார்?

மந்திரங்களை உணர்ந்தவர் ரிஷி எனப்படுவர். வேதங்கள்,  ஒலி ஒளிவடிவமாக  வான் வெளியில் நிறைந்துள்ளது. தவ வலிமையால் அவ் வொலி அலைகளை தரிசித்து ஒலிகளை உணர்ந்து அவற்றை உரைத்தவர்களை ரிஷிகள் என்று அழைக்கிறோம்.

--மதிவாணன்  

No comments:

Post a Comment