* ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று சொல்லக் காரணம் என்ன?
ஆலய வழிபாடு தொன்று தொட்டு வரும் மத வழக்கமாகும். அனைத்து இன மக்களுக்குமே அது அவரவர் மத வழக்கமாக, ஆன்மீக கடமையாக இருந்து வருகிறது.
உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டு , பக்தியும் நம்பிக்கையும் கொண்டு ஆலயம் சென்று இறைவனை தொழுது மனதுக்குள் அவனிடம் பேசி முறையிட்டு குறைகளைச் சொல்லி, நல்வழிகாட்டு இறைவா! என்று வேண்டி பிரார்த்தித்து வரும்போது மனம் நிம்மதி அடைகிறது நம் பிரார்த்தனை நிறைவேறும் என்று நம்பிக்கைப் பிறக்கிறது.
அடுத்து அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது நமது ஆலயங்கள் சாஸ்திரங்கள் கூறும் ஆகம விதிகளின் படி கட்டப்படுகின்றன.
விக்கிரகங்கள் ஈர்ப்பு சக்தி மிக்க கருங்கற்களால் உருவாக்கப்பட்டு , யாகங்கள் வளர்த்து வேத மந்திரங்களால் உருவேற்றப்பட்டு சக்திமிக்கதாய் திகழ்கின்றன.
கோபுர கலசங்களுக்கு பிரபஞ்ச சக்திகளை (காஸ்மிக் கதிர்களை) ஈர்க்கும் தன்மை உண்டு. எனவே முறைப்படி நிர்மாணிக்கப்படு¢ம் ஆலயங்களில் சக்தி ஆற்றல் அதிர்வுகள் நிரம்பி இருக்கின்றன. வழிபட வரும் பக்தர்களுக்கு இத்தெய்வீக அதிர்வுகளால் நன்மைகள் விளைகின்றன.
மனம் அமைதியடைகிறது. இறைவழிபாட்டை ஒரு முகப்பட்ட மனதுடன் செய்யமுடிகிறது. ஒரு முகப்பட்ட மனதில் எண்ணக் கூடிய திண்ணிய எண்ணங்கள் நிறைவேறுகின்றன.
கோயில்களில் நிலவும் சக்தி உடலில் உள்ள நோய்களையும் குணப்படுத்துகின்றன. எனவேதான் வழிபாடு செய்து விட்டு சிறிது நேரம் கோயிலில் அமர்ந்துவிட்டு வரும் பழக்கத்தை மேற்கொள்கிறோம்.
அடுத்து நாம் மனம் விட்டு தைரியமாக நம்பிக்கையுடன் பேசக்கூடிய ஒரே நபர் இறைவன்தான். சில பிரச்சனைகளை நண்பர்களிடம் கூறலாம், சில பிரச்சனைகளை மனைவிடம் கூறமுடியும்.
சில பிரச்சனைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையிருக்கும் அவற்றை இறைவனிடம் கூறிதான் மன ஆறுதல் அடைய முடியும். அடுத்து யார் நம் கவலைகளை போக்கக் கூடிய சக்தி படைத்திருக்கிறார்களோ அவர்களிடம் நம் குறைகளை கூறுவதுதானே சரியானது.
எனவேதான் இறைவனை தேடிச்சென்று மன ஆறுதல் பெறுகிறோம். மேற்கூறிய காரணங்களையெல்லாம் வைத்துத்தான் ‘ஆலயம் தொழுதல் சாலவும் நன்று’ என்று ஔவை கூறிவைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை.
மதிவாணன்
No comments:
Post a Comment