கற்பூர தீபம் காட்டுவது ஏன் ?
பரம் பொருள் ஒளிமயமானவர். அதைக்குறிக்கவே தீபாரதனை வழிபாடு. தீபாரதனை ஒளியில் இறைவனின் திருவுருவம் கண்களுக்கு பிரகாசமாய் தெரிகிறது. மனதில் பக்தி ஒளிரும்போது தான் இறைவனை தரிசிக்க முடியும் என்று கொள்ளலாம்.
கற்பூரம் என்பது வாசனைகள் ஒன்று சேர்ந்த பொருள். கற்பூரத்தைக் கொளுத்தி இறைவனுக்கு முன் காட்டி எரிய விடும்போது நமது உணர்வுகளைப் பற்றும் வாசனைகள் எரிந்து உருவமழிந்துப் போகிறது என்பதையே பாவனையாகக் காண்கிறோம்.
மூலஸ்தானம் என்ற கருவறை எப்போதும் இருட்டாக இருக்கும் பகுதி, காற்றும் ஒளியும் வெளியிலிருந்து அங்கே செல்ல முடியாது. பிற எண்ணங்களுக்கு இடம் தராத நம்முடைய உள் மனதையே இந்த கர்ப்பக்கிகரம் பிரதிபலிக்கிறது.
அத்தகைய உள்மனதில் உறையும் இறைவன் சாதாரணமாக நமக்குப் புலப்படுவதில்லை. நடைதிறந்து , திரை விலகி மணி ஓசையுடன் தீபாரதனை நடைபெறும் போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தில் தூய்மையான ஓளிப்பிழம்பில் இறைவனை நாம் காண்கிறோம்.
அதுபோலவே ஞானம் பிரகாசிக்கும் போதும் நம் உள்ளத்தில் அறியாமை இருள் மறைந்து உள்ளே ஒளிரும் இறைவனின் தரிசனம் நமக்கு கிட்டும் என்பதையே தீபாராதனை மூலம் நமக்கு சொல்லப்படும் செய்தி.
கற்பூரம் தன்னை முற்றிலும் அழித்துக் கொண்டுவிடுகிறது. பூரணமாய் கரைந்து போய்விடுகிறது. அதைப் போலவே இறைவன் முன் நம்மை நாம் பூரணமாய் கரைந்து போய்விட வேண்டும்.
இறைவனுக்கு அவன் தந்த அனைத்தையும் அர்ப்பணித்து, தன்னையே ஆத்ம சமர்ப்பணம் செய்வதையே, கற்பூர தீபாரதனையும் அதனைக் கண்களில் ஒற்றிக்கொண்டு இறைவனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் நிகழ்வும் நமக்கு உணர்த்துகின்றன.
* இறைவழிபாட்டில் மணியடிப்பதன் காரணம் என்ன?
ஓங்கார நாதத்தையே மணி ஒலிக்கிறது. ஓம் எனும் பிரணவ மந்திரம் சொல்லியே இறைவனை வழிபடுகிறோம். இறைவழிபாடு நடைபெறுகிறது என்பதை குறிக்கவும், பக்தர்கள் அமைதியுடன் இறைதரிசனம் செய்யவேண்டும் என்பதை அறிவிக்கவும் மணியோசை எழுப்பப்படுகிறது. மணியின் அதிர்வலைகள் தீய சக்திகளை விரட்டுகிறது என்றும் கூறுவர்.
* இல்லத்தில் பூஜை மாடம் எத்திசையில் அமைக்கலாம்?
பூஜை மேடை கிழக்கு திசையை நோக்கி அமைவது சிறப்பு. அறையின் நடுப்பகுதியிலும், மூலை ஓரமாகவும் பூஜை மாடத்தை வைக்கக்கூடாது என்பர். கிழக்கு திசை நோக்கியே திருவிளக்கையும் வைப்பது நல்லது.
* பூஜை மாடத்தில் தெய்வத் திருவுருவப் படங்களை எப்படி வைக்க வேண்டும்?
பூஜை மேடையின் மத்தியில் அவரவர் இஷ்ட தெய்வத்தின் திருவுருவப் படங்களை வைத்து, வலது இடது புறங்களில்வேறு தெய்வங்களின் திருவுருவப் படங்களை வைக்கலாம். இஷ்ட தெய்வத்தின் படம் சற்று பெரிதாகவும் வைக்கலாம்.
* திருவிளக்கை ஏற்றுவதன் பொருள் யாது?
இறைவன் ஜோதிமயமாக எங்கும் நிறைந்திருப்பவர் என்பதைக் குறிப்பிடவே திருவிளக்கை ஏற்றுகின்றோம். திருவிளக்கை மகாலட்சுமியின் அம்சமாக நாம் கருதுகின்றோம்.
* திருவிளக்கை அணைக்கும் முறை என்ன?
வழிபாட்டிற்குப் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஒரு மல்லிகை பூவினால் தீபத்தை அணைக்கலாம் அல்லது திரியை எண்ணெயில் அமிழ்த்தி அணைக்கலாம்.
* ஈரத் துணியுடன் பூஜை செய்யலாமா?
இல்லத்தில் ஈரத்துணியோ, ஈர துண்டினையோ அணிந்துக் கொண்டு பூஜை செய்யக் கூடாது. ஆனால், குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வரலாம். பெண்கள் குளித்துவிட்டு தலையில் ஈரத்துண்டினைச் சுற்றி முடிச்சுப் போட்டு வழிபாடு செய்யக்கூடாது.
* கிரகப் பிரவேசத்திற்குப் பசுமாடும் கன்றும் வீட்டிற்குள் பிரவேசிக்கச் செய்வது ஏன்?
கிரகப் பிரவேசத்தின் போது பசுவும்,கன்றும் வீட்டினுள் பிரவேசிக்கச் செய்வதன் மூலம் லட்சுமி கடாட்சம் வீட்டில் ஏற்படுகிறது. அருட் செல்வமும் பொருட் செல்வமும் வீட்டில் பெருகுமாம்.
பசுமாட்டை லக்ஷ்மியின் அம்சமாகவே குறிப்பிடுகிறோம். பசுமாட்டில் அனைத்து தெய்வங்களும் வசிப்பதாகவும் ஐதீகம்.
* வீட்டு வாசலில் துளசிச் செடியை வளர்ப்பது ஏன்?
வீட்டு வாசலில் துளசிச் செடியை வைப்பதினால் ¢நம் முன் ஜென்ம பாவங்கள் அகல்கின்றது. தீய எண்ணங்களை போக்கும் தன்மையும், தீய சக்திகளை, விஷ ஜந்துக்களை விரட்டும் தன்மையும் துளசிக்கு உண்டு.
* வீட்டு வாசலில் தெய்வங்களின் படங்களை வைக்கலாமா?
வீட்டு வாசலில் திருஷ்டி விநாயகர் படம் வைத்தால் சிறப்பு.
-Mathivaanan
ஒவ்வொரு கேள்விக்கான விளக்கமான பதில்களும் அருமை... நன்றி...
ReplyDelete