இறை வழிபாடுகளில் நாம் இறைவனுக்கு படைக்கும் அதி முக்கியமானப் பொருட்களில் தேங்காயும் ஒன்றாகும். இறைவழிபாடு மட்டுமன்றி இந்து மக்களின் அனைத்து மதச் சடங்குகளிலும், மங்கல நிகழ்வுகளிலும் தேங்காய் தவறாமல் இடம் பெறுகிறது.
இறைவழிபாட்டிற்கென்றே, தென்னை மரத்தை முதன் முதலில் இப்பூவுலகில் தன் தவ வலிமையால் உற்பத்தி செய்தவர் விஸ்வாமித்திர மகரிஷி என்று கூறப்படுகிறது.
பூஜைக் கலசத்தில் தேங்காய் வைக்கும் போது, அக்கலசம் இறைவனின் உருவாய் கருதப்படுகிறது. இதில் தேங்காய் சிரசு என்ற அங்கமாய் முக்கியத்துவம் பெறுகிறது.
தேங்காயில் இருக்கும் மூன்று கண்கள் சிவனின் முக்கண்களாய் உருவகப் படுத்தப்படுகிறது.
இறைவழிபாட்டில் தேங்காய் உடைப்பதற்குத் தத்துவார்த்தமாய் விளக்கம் கூறுகிறார்கள். இறைவனை நெருங்கத் தடையாக, மனித ஆன்மாவை சுற்றி ஆணவம்,கன்மம், மாயை என்ற மும்மலங்கள் சூழ்ந்துள்ளன.
இந்த மும்மலங்களை விலக்கித் , தூய்மையான வெள்ளை மனதுடன் இறைவனைச் சரணடைந்தால்தான் அவரது அருள் என்கிற இன்னமுதம் நமக்குக் கிட்டும்.
இந்த மும்மலங்களைக் குறிப்பதே தேங்காயின் கெட்டியான மேல் தோல் பகுதி, நார்ப் பகுதி, ஓடு மூன்றும் ஆகும். இவற்றை உரித்து, உடைத்தால் உள்ளே வெண்¬மான தேங்காய் தென்படுகிறது.
மனிதன் மும்மலங்களை விலக்கும் போது தூய்மையடைகிறான் என்பதை இந்த வெள்ளைத் தேங்காய் குறிக்கிறது. உள்ளிருக்கும் இளநீர் இறையருளைக் குறிக்கிறது.
நாம் இறைவனுக்குத் தேங்காய் உடைத்து வைப்பது , மனிதன் இறையருளைப் பெறுவதற்கான தத்துவத்தையே குறிப்பதாக சான்றோர் கூறுகின்றனர்.
பசுவைப் போலவே, தென்னை மரத்தினையும் தியாகத்தின் சின்னமாகவே குறிப்பிடலாம். ஏனெனில் தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மனிதனுக்கு ஏதோ ஒருவிதத்தில் பயன்தருவதாகவே இருக்கிறது.
செயலில் ஏற்படும் தடைகளை விலக்கி வைத்து, நல் வழிகாட்ட வேண்டும், தடைகள் தூள் தூளாக வேண்டும் என்பதற்காகத்தான் விநாயகப் பெருமானுக்கு சிதறுகாய் உடைக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.
ஒரு காரியத்தைச் செய்யப்போகும் நேரத்தில் விநாயகருக்கு சிதறுகாய் உடைத்து விட்டு, அவரை வணங்கிச் சென்றால் அக்காரியம் வெற்றிகரமாய் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கக்கூடாது, சிதறுகாயும் பெண்கள் உடைக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. தேங்காய் உடைப்பதினால் ஏற்படும் அதிர்வுகள் பெண்களின் கர்ப்பப்பைக்கு பாதிப்பை உண்டாக்கி விடும் என்பதாக விளக்கம் கூறுகிறார்கள்.
எது எப்படி இருப்பினும் , வெற்றிலை பாக்கு , தேங்காய் , பழம் இம்மூன்றையும் அனைத்து இறைவழிபாடுகளிலும் நாம் தவறாமல் படைத்து வருகிறோம் என்பது உண்மை.
அகங்காரமற்ற தூய மனதுடன் ( தேங்காய் ) எங்கள் அன்பை (பழம்) செலுத்தி உன்னை வணங்குகிறோம் .உனது உறவு( வெற்றிலை பாக்கு) அதாவது உனது நல்லருள் எங்களுக்கு வேண்டும் என்பதே இந்த மூன்று பொருட்களையும் வைத்து வழிபடுவதன் தத்துவமாகும்.
MATHIVAANAN
MATHIVAANAN
விளக்கத்திற்கு நன்றி...
ReplyDelete