ads

Monday, 3 March 2014

சீதை சிறையிருந்த மலைக் குகை


பெறுமதிமிக்கதும், போற்றத்தக்கதுமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அவிசாவளை நகரம் சீதாவக்க அல்லது சீதாவக்கபுரம் என அழைக்கப்படுகின்றது. 

ஏ4 வீதியில் கொழும்பிலிருந்து 54 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் எல்லைகளில் அமைந்துள்ளதுடன் மலைநாட்டிற்கான நுழைவாயிலாகவும் திகழ்கின்றது. இன்றும் அவிசாவளை நகரத்தின் நிர்வாகம் சீதாவக்கபுர எனும் பெயர் கொண்ட உள்ளூராட்சி சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது.

சீதாவக்க மற்றும் சீதாவக்கபுரம் எனும் பெயர்கள் அதுவும் சீதையுடன் தொடர்புபட்ட பெயர்கள் இந்த நகரத்திற்கு வருவதற்கு காரணம் என்ன என ஆராய்த போது பல்வேறு விதமான ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் கிடைக்கப் பெற்றன. 

இவை யாவும் இப்பகுதியில் வாழும் பிரதேச மக்களின் நம்பிக்கைகளாகவும் உறுதிப் படுத்தப்படாதøவகளாகவுமே காணப்படுகின்றன.

நகரின் மத்தியில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கும் அவிசாவளை அரச தங்குவிடுதிக்கும் இடையில் சீதாöலன என்னும் வீதி ஏ4 வீதியில் இருந்து பிரிந்து செல்கின்றது. மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் இந்த வீதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யும் போது வீடொன்றில் இந்த வீதி முடிவடைகின்றது. 

வாகனத்தை இங்கு நிறுத்திவிட்டு, வீட்டின் முற்றத்தையடுத்திருக்கும் படிகளினால் பள்ளத்தாக்ககொன்றினுள் இறங்கிச் சென்றால் சீதை ஒழித்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் குகையொன்று காணப்படும். குன்றின் அடிப்பகுதியை அடைய முடியும். 

சாதாரணமாக குகையொன்றை எடுத்துக்கொண்டால் குகையின் மேற்பகுதியின் கற்பாறையிலிருந்து நீர் ஊற்றாக ஓடிக்கொண்டோ அல்லது சொட்டுசொட்டாக ஒழுகிய வண்ணமே இருக்கும். இங்கிருந்து பார்க்கும் போது குகை பற்றைச் செடிகளினால் மறைபட்டிருந்தாலும் தண்ணீர் குகையின் உட்பகுதிக்குள் செல்லாதிருப்பதற்காக பாறையின் மேற்பகுதியில் நீர் குகைக்குள் வருவதை தடைசெய்யும் வகையில் பொழியப்பட்டிருக்கும் பண்டைக் கால வடிகாலமைப்பைக் காணலாம்.

இங்கிருந்து குகையின் உட்பகுதிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. எனவே எமக்கு வழிகாட்டியாக வந்த அவிசாவளை நகர இலக்கம் 432  கிராமசேவையாளர் கே. ஏ. டி. கிறிஷ்டி ஜெயந்த என்பவரின் முயற்சியினால் வேறொரு பாதையால் மிகுந்த சிரமத்தின் மத்தியில் குகையின் உட்பகுதியை சென்றடைய முடிந்தது.

இராவணன் சீதையைக் கவர்ந்து தனது விமானத்தில் கொண்டுவந்து வரக்காபொல என்னுமிடத்தில் தரையிறங்கி (இங்குதான் இராவணனின் விமான நிலையம் இருந்ததாக இப்பகுதி மக்கள் நம்புகின்றார்கள்.) வடகிழக்குப் பக்கத்திலுள்ள வலும்தின மலையைக் கடந்து வந்து இந்த குகையில் சீதையை ஒழித்து வைத்ததாக நம்பிக்கை பிரதேச மக்கள் மத்தியில் வலுவாகக் காணப்படுகின்றது.

குகையின் பெரும்பகுதி சிதைக்கப்பட்டுவிட்டது. கற்பாறைகள் கீழேயுள்ள பள்ளத்தாக்கில் புரட்டிவிடப்பட்டு, காடுமண்டி, விச ஜந்துக்கள் நிறைந்து காணப்பட்டன. 

குகையின் உள்ளளே சிறிய ஆலயம் ஒன்று இருந்ததற்கான சாத்தியம் காணப்பட்டது. ஏனெனில் பீடமொன்று காணப்பட்டது. இங்கு விக்கிரகங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆனால் வழிபாடுகள் நடைபெற்று வந்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன. 

இக்குகையில் நீண்ட காலமாக ஒரு வயோதிபர் வாழ்ந்து வந்ததாகவும் இவரின் மரணத்தின் பின்னர் சகவிரோதிகளினால் இந்த இடம் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருவதாகவும் யாருக்கும் சொந்தமில்லாத இந்தக் காணியை மருத்துவர் ஒருவர் கைப்பற்றுவதற்கு முயற்சித்தபோது ஊர் மக்களின் எதிர்ப்பையடுத்து இம் முயற்சி கைவிடப்பட்டுள்ளதாகவும் அரச அலுவலர் ஒருவர் தெரிதவித்தார். 

குகையின் எழுபத்தைந்து சதவீதமான பகுதிகள் சிதைக்கப்பட்ட போதிலும் இந்தக் குன்றும் அதனுடன் காணப்படும் குகையும் புனரமைக்கப்பட்டு அதன் பழைமையும் பெருமையும் யாத்திரிகர்கள் மற்றும் உல்லாசப் பயணிகளின் பார்த்துச் செல்லக் கூடியவாறான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது இப்பிரதேச மக்களின் எதிபார்ப்பாகும்.

இராமர் பாதம்

அவிசாவளையிலிருந்து எட்டியாந்தோட்டை செல்லும் ஏ7 வீதியின் ஜி/7 பாலத்திற்கருகில் பிடதெனியா சந்தி வருகின்றது. இந்த சந்தியிலிருந்து திம்பிரிபொல என்ற கிராமத்திற்கு செல்லும் வீதியில் சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரம் வரையில் செல்லும் போது வீதி முடிவடைந்து சீதா கங்கை தென்படுகின்றது. ஆற்றைக் கடந்து செல்வதற்கு தொங்குபாலம் காணப்படகின்றது.

வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத ஒற்றையடிப்பாதை. மனித நடமாட்டமில்லாத ஈரலிப்பான காட்டுப்பகுதி; மனித இரத்தம் உறிஞ்சும் சிறிய அட்டைகள் இப்பகுதியில் நிறைந்திருந்தன. சில இடங்களில் ஒற்றையடிப்பாதையை அடையாளம் காணமுடியாதபடி செடிகொடிகள் நிறைந்திருந்தன. 

கீழ் சீதாகங்கை சலசலத்து அமைதியாகப் பாய்ந்து கொண்டிருந்தது. சில இடங்களில் கங்கையின் கரைக்கட்டின் விளிம்பில் நடந்துசெல்ல வேண்டிய நிலையும் இருந்தது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை தான். 

இத்தனையையும் கடந்து சென்று பார்த்த போது,  சீத்தா கங்கையைத் துருத்திக் கொண்டு ஒரு பெரிய கற்பாறை இருந்தது. அதில் பாதம் ஒன்று காணப்பட்டது. இப்பாதம், சராசரியாக 48 அங்குல நீளமும், 22 அங்குல அகலமும் கொண்டதாக காணப்பட்டது. 

பாதத்தில் நடு விரலுக்கு நேராக கற்பூரம் ஏற்றுவதற்கு வசதியாக குழி ஒன்றும் காணப்படுகின்றது. பாறையில் பதியப்பட்ட பாத வடிவத்தைச் சுற்றி அல்லது பாதத்தின் வடிவத்திற்கு ஏற்றவாறு உளியினால் செதுக்கியுள்ளமையையும் காணமுடிகின்றது. பாதத்தின் நடுவில் பௌத்த மத சின்னங்கள் பொழியப்பட்டடுள்ளன.

இப்பிரதேச மக்கள் இராமருடைய பாதம் என இதைக் குறிப்பிட்ட போதிலும் இராமர் எதற்காக இப்பகுதிக்கு வந்தார் போன்ற கேள்விகளுக்கான விடைகள் அவர்களுக்கு தெரியவில்லை. இருந்தபோதிலும் பண்டைக் காலத்தில் இந்த இடம் மகப்பேற்றிற்கு பிரபல்யமாக விளங்கியதாகவும் இதனாலேயே இந்தக் கிராமம் திம்பிரிபொல என பெயர் பெற்றதாகவும் நம்பப்படுகின்றது. 

மாயாதுன்ன மன்னனின் மகன் முதலாம் விஜயசிங்கனின் மøனவிக்கு பிரசவம் பார்ப்பதற்கு இங்கு கொண்டுவரப்பட்டார் எனவும் ஆனால் அரசி, சிவனொளி பாதமலையிலுள்ள பாதத்தைப் பார்க்க விரும்பியதாகவும், பிரசவ காலத்திலிருக்கும் அரசியை சிவனொளிபாதமலைக்கு அழைத்துச் செல்வது எவ்வாறு என ஆலோசித்த மன்னன் மேற்குறிப்பிட்ட குன்றில் பாதம் ஒன்றை வரையச் செய்ததாகவும் இதை அரசிக்கு காட்டியதாகவும் சிங்கள நூல்களில் தகவல்கள் காணக்கிடைக்கின்றன. 

பண்டைய சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மக்களுக்கும் அரசிற்கும் உண்டு. கலாசார திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய தொல்லியல் சின்னங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் இங்கு உல்லாசப் பயணிகள் விஜயம் செய்து, அருமையான சின்னமொன்றை காண்பதற்கான வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். 

வாகனம் பயணிக்க முடியாத பழுதடைந்த வீதியும், புதர்கள் மண்டிய ஒற்றையடிப் பாதையும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகளும் இங்கு காணப்படுவதினால் பயணிகள் எவரும் இப்பகுதிக்கு செல்ல விரும்பமாட்டார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி : கலைக்கேசரி

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...